Search This Blog

Wednesday, November 06, 2013

மேரி க்யூரி - சர் சி. வி. ராமன் - அமர்த்தியா சென்


மரியா ஸ்லொடஸ்கா 1867, நவம்பர் 7 அன்று போலந்து தலைநகர் வார்சாவில் பிறந்தார். இவரது செல்லப் பெயர் மான்யா. போலந்து அப்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அனைத்துப் பாடங்களும் ரஷ்ய மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. மேலும் பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மரியாவுக்கு இயற்பியல் விஞ்ஞானியாக விருப்பம். எனவே 1891ல் போலந்தை விட்டு வெளியேறி, தனது சகோதரி மருத்துவராகப் பணியாற்றும் பாரிஸுக்குச் சென்றார். பெயரை ‘மேரி’ என்று மாற்றிக் கொண்டார். 

சோர்போன் பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கணிதமும் கற்றுத் தேர்ந்தார். 1894ல் பிரெஞ்ச் வேதியியல் விஞ்ஞானி பியரி க்யூரியைச் சந்தித்தார். ஆய்வுப் பணிகளில் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருந்ததால் வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து, திருமணம் செய்து கொண்டனர். 

தம்பதியாகக் கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளின் முடிவில் உலோகம் பிட்ஸ்பிளெண்ட் மற்றும் தோரியம் ஆகியவையும் யுரேனியத்தைப் போலவே ஊடுகதிர்களை வெளிப்படுத்தும் என்று கண்டறிந்தனர். 1898ல் கூட்டுப் பொருட்களான பொலேனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். எக்ஸ்ரே கருவியில் இந்தக் கதிர்வீச்சுகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளுக்காக 1903ல் மேரி க்யூரி, பியரி க்யூரி, ஹென்றி பெக்வேரெல் மூவருக்கும் கூட்டாக ‘நோபல்’ பரிசு வழங்கப்பட்டது. 1906ம் ஆண்டு பியரி க்யூரி மறைவைத் தொடர்ந்து சோர்போன் பல்கலைக்கழகத்தில் அவர் வகித்த பதவியை ஏற்றுக்கொண்டார். 1911ல் பொலேனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தமைக்காக இரண்டாவது முறையாக ‘நோபல்’பரிசு பெற்றார். 


1914 ல் முதல் உலகப் போர் வெடித்தது. போரில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க இவர் கண்டுபிடித்த ரேடியம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. ரேடியம் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் உடல் நிலை மோசமாகி 1934 ஜூலை 4ல் மரணமடைந்தார் மேரி. தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஏழைகளுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காக அவற்றைக் காப்புரிமை செய்ய மறுத்துவிட்டார் மேரி. அவரது மகள் ஐரினும் நோபல் பரிசு பெற்றவர்!

திருச்சி அருகே திருவானைக்காவலில் 1888, நவம்பர் 7 அன்று சந்திரசேகர ஐயர் - பார்வதி அம்மாளுக்குப் பிறந்தார் ராமன். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டங்களுடன் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். அதே கல்லூரியில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார். இயற்பியல் ஆர்வலராக இருந்தாலும் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

கொல்கத்தாவில் நிதித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஒலி/ஒளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக வேலை கிடைத்தது. ஒளிச்சிதறல் தொடர்பான இவரது கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. இவரைக் கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு 1929ல் ‘சர்’ பட்டம் அளித்தது.

ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கப்பலில் சென்று கொண்டிருந்தபோது கடல் நீரும் வானமும் ஏன் நீல நிறமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க, தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒரு பொருளின் மீது ஒளிபட்டு, அது பல திசைகளில் சிதறுவதே ஒளிச்சிதறல். காற்றிலுள்ள தூசுகள் மற்றும் ஒளியின் ஒழுங்கற்ற பிரதிபலிப்பே ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஊடகத்தின் வழியாகச் செல்லும்போது ஒளிச்சிதறலுக்கு உள்ளாகிறது. பெரும்பான்மையான ஒளி அதே அலை நீளத்துடன் இருந்தாலும் மிகச்சிறிய பகுதியின் அலை நீளம் மாறிவிடுகிறது. இவருடைய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்புக்காக 1930ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சூரிய ஒளியிலுள்ள ஏழு வண்ணங்களுள் நீலநிறம் மட்டுமே அதிக ஒளிச் சிதறலுக்கு உள்ளாவதால் அதுவே பிரதிபலிக்கப்படுகிறது. எனவேதான் கடல் நீரும் வானமும் நீல நிறமாக உள்ளன. 

1934ல் பெங்களூரு அறிவியல் நிலையத் தலைவராகப் பொறுப்பேற்று, 1948 வரை பணியாற்றி ஒய்வு பெற்றார். பிப்ரவரி 28 ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதால் அதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினமாகக்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 

1954ல் இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது. 1957ல் ‘லெனின் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டது. இயற்பியல் துறை தொடர்பாக இவர் எழுதிக் குவித்த ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை 475. 1970 நவம்பர் 21, தனது 82வது வயதில் பெங்களூருவில் மறைந்தார்.
அசுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதிக்கு 1933, நவம்பர் 3 அன்று, மேற்கு வங்கம் சாந்திநிகேதனில் பிறந்தவர் அமர்த்தியா சென். 

அமர்த்தியா சென் மூதாதையர் சொந்த ஊர் இன்றைய பங்களாதேஷ் தலைநகர் டாக்கா. அமர்த்தியா சென் தனது ஆரம்பக் கல்வியை ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். பின்னர் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், தத்துவம் துறைகளில் மேற்படிப்புகளை நிறைவு செய்தார். இந்தியா திரும்பிய பிறகு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும் பொருளாதாரக் கல்வித்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் ஒருவர் நியமிக்கப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. 

1963, தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1970ல், அவரது முதல் புத்தகம் ‘கலெக்டிவ் சாஸ் அண்ட் சோஷியல் வெல்ஃபேர்’ என்ற படைப்பை வெளியிட்டார். 1971ல் மனைவியின் உடல்நிலை மோசமானதால், டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். அவரது மனைவியின் மறைவைத் தொடர்ந்து 1972ல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 1977வரையும் அதன் பிறகு ஆக்ஸ் ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் வேலை செய்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் இவரே. 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

1981ல் இவர் எழுதிய ‘பாவர்ட்டி அண்ட் ஃபேமின் (வறுமை மற்றும் பஞ்சம்), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட ‘ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப் போர்ட்’ (மனித அபிவிருத்தி அறிக்கை) ஆகிய கட்டுரைகள் பிரசித்தம். 1990ல் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், தனது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான ‘மோர் தேன் எ ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்’ கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட், ஹார்வர்ட் உட்பட உலகின் 90க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்குக் கௌரவப் பட்டங்களை வழங்கி உள்ளன. 1998ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 1999ல் இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்தது. 

No comments:

Post a Comment