Search This Blog

Saturday, November 02, 2013

தீபாவளி திருக்கதைகள்!

ஸ்ரீராமனும் தீபாவளியும்!
14 வருடங்களாக பரதன் ஸ்ரீராமனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஸ்ரீராமன் வருவதாகக் குறிப்பிட்டிருந்த நாளும் வந்துவிட்டது. ஆனால் ஸ்ரீராமனோ வந்தபாடில்லை. 'இனி யோசனைக்கு இடமில்லை. என் சங்கல்பத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது’ என்று எண்ணியவன், முக்கியஸ்தர்களையும் ராஜப் பிரதானிகளையும் அழைத்து ''எனது சங்கல்பப்படி இன்று அக்னிப்பிரவேசம் செய்யப் போகிறேன்'' என்று அறிவித்தான்; 'ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்று சத்ருக்னனை வற்புறுத்திப் பணித்தான். அக்னி குண்டமும் வளர்க்கப்பட்டது.

அவன் அக்னியை வலம் வந்து முடிக்கும் தறுவாயில் ஒரு குரல், ’வந்துவிட்டான் ராமன்...’  என்று! ஆமாம், அனுமன்தான் விரைந்து வந்து ஸ்ரீராமனின் வருகையை அறிவிக்கிறான். அப்போது பரதனின் நிலை எப்படி இருந்ததாம்?

வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத் தொழும் தன்னை யே தொழும்
ஏதும் ஒன்று அறிகிலான் இருக்கும் நிற்குமால்
காதல்என் றீதுமோர் கள்ளின் தோற்றிற்றே! என்கிறார் கம்பர்.


ஆமாம்! ஆனந்தப் பெருக்கில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாதவனாக, எல்லோரையும் வணங்கி தன்னையும் வணங்கி நிற்கும் பரதனின் நிலை இப்படி என்றால், அயோத்தி மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! பெரிதும் மகிழ்ந்தனர். சீதாவுடன் ஸ்ரீராமனும் வந்துசேர்ந்தார். ''இத்தனை நாட்கள் நீங்கள் இல்லாமல் இருளோ என்றிருந்த அயோத்தி இனி ஒளி பெற, விளக்கேற்றி வை, சீதா!'' என்று கோசலை பணிக்க, சீதா தீப ஒளி ஏற்றினாள். அயோத்தி மக்களும் இல்லங்கள்தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள்.தீபாவளிக்கான காரணக் கதைகளில் இதுவும் ஒன்று என்பர்.


 திருமகளின் திருமண நாள்!

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.


ஆனால் திருமகள் சலனமோ, ஆசைகளோ இல்லாமல் இருந்த திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், 'நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும்’ என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது தவ வலிமையால் அவளைப் பரிசுத்தப்படுத்து வதாகவும் கூறி மூத்தாளை மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார்.

இருள் போன்ற மூதேவியை ஏற்றுக்கொண்ட உத்தாலகரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள்.


மகாபலி பெற்ற வரம்!

பக்த பிரகலாதனின் பேரன் மகாபலி. பண்பும் பரிவும் கொண்டவன். ஆனாலும், தான் செய்யும் புண்ணிய காரியங்கள் குறித்து கர்வமும் இருந்தது அவனுக்கு. அதேநேரம், அவன் பெற்றிருந்த வரங்களால் இந்திர பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்று தேவர்களும் அச்சத்தில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். மகாபலியை தடுத்தாட்கொள்ள நினைத்த பரம்பொருள் வாமன அவதாரம் எடுத்தார்.


மகாபலி இந்திர பதவி வேண்டி யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். 'அவ்வளவுதானே! தந்தால் போச்சு’ என்று இறுமாப்புடன் ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் வந்திருப்பது யார் என்பதை அறிந்த அசுரகுரு சுக்கிராச்சாரியர் மகாபலியைத் தடுத்தார். ஆனால், மகாபலி அவர் கருத்தை ஏற்கவில்லை. வாமனருக்கு மூன்றடி நிலம் தானமாகக் கொடுப்பதாகக் கூறி, தாரை வார்த்துக் கொடுத்தான். மறுகணம் வாமனர் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்தார். முதல் நாள், தம் ஒரு திருவடியால் பூமியை அளந்தார். அடுத்த நாள், தம் மற்றொரு திருவடியால் விண்ணை அளந்தார். 3-வது நாள், இன்னும் ஓர் அடியை எங்கே வைப்பது என்று பகவான் கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, பகவான் அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்தபடி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.

மகாபலி 'நான் தங்களுக்கு தானம் கொடுத்த மூன்று தினங்களில் நடுவில் வரும் சதுர்த்தசி திதியில் மக்கள் எல்லோரும் அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும்’ என்று வரம் கேட்டான். பகவானும் அப்படியே அனுக்கிரஹம் செய்தார். இது, மகாபலிக்கான தீபாவளித் திருக்கதை!


வனவாசம் முடிந்தது!
சகுனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை சூதாட அழைத்தான் துரியோதனன். அதில் கலந்துகொண்ட தருமர் நாடு, நகரம் அனைத்தையும் இழந்தார். அதன் காரணமாக பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்யும் நிலை. பாண்டவர்கள் வனம் செல்ல, அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தின் மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்திரபிரஸ்த நகரமே இருண்டு போனது.

காலம் கழிந்தது. பல்வேறு சோதனைகளைக் கடந்து வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்து நாடு திரும்பினார்கள் பாண்டவர்கள். அவர்களது வருகையை அறிந்த இந்திரபிரஸ்த மக்கள் பேரானந்தம் அடைந்தனர்.


அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது. தென்னை, வாழை, பாக்கு, கமுகு மரங்களால் தோரணங்கள் அமைத்து, வீதியெங்கும் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு அலங்கரித்தார்கள். எங்கும் மங்கல ஒலி முழங்கின. அதுமட்டுமா? வீட்டுக்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து மகிழ்ந்தார்கள் மக்கள்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், பாண்டவர்கள் நாடு திரும்பியது ஒரு தீபாவளித் திருநாள் என்றும் கூறுவார்கள்.

தீய எண்ணங்களை ஒழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ வேண்டும். ஆனால், அதற்கான முயற்சியில் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும்; பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது வரும். இதை பாண்டவர்கள் மூலம் உணர்த்தி, அவர்கள் துன்பங்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதையை, தீபாவளித் திருநாளில் நினைவுகூர்வது சிறப்பாகும். அப்போது, நமக்கும் தீமைகளை அணுகாத திடசிந்தையும், கடவுளின் அணுக்கமும் வாய்க்கும்.காசியும் வியாசரும்!

காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?’ என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கைஅப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.

வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.


இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.பார்வதியின் விரதக் கதை!
பிருங்கி என்றொரு  முனிவர், சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மட்டுமே பரம்பொருளாகக் கருதி வழிபடுபவர். ஒருநாள் கயிலைக்குச் சென்றார். அங்கே, ஸ்வாமியுடன் பார்வதியம்மையும் இருந்தாள். 'ஸ்வாமியை மட்டுமே வணங்கிச் செல்லும் பிருங்கி இன்று நம்மையும் வணங்கட்டுமே’ என்று, ஸ்வாமிக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் அம்மை.

ஆனால், பிருங்கி முனிவர் வண்டின் உருவமெடுத்து, ஸ்ரீபரமேஸ்வரனை மட்டும் வலம் வந்து வணங்கி வழிபட்டார் (இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் சக்தியைப் பறித்ததும், அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து அருளிய கதையும் நாமறிந்ததே).


அம்பிகை மனம் வருந்தினாள். தான் வேறு, சிவம் வேறு இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்த எண்ணினாள். அதற்காக தவம் செய்ய பூலோகம் வந்தாள். பூமியில் கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தவள், முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன் பலனாக உமையவளுக்கு ஸ்ரீபரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத் தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு தீபாவளித் திருநாளில்தான் என்பர்.

அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகௌரி விரதமாகக் கடைப்பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...
தீபாவளி தினத்தில் தீபச்சுடரின் வெளிச்சம் படும் இடங்களில் எல்லாம் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் எனச் சொல்லும் ஞானநூல்கள், இதற்குக் காரணமான ஒரு கதையையும் விவரிக்கின்றன.


அரிய வரங்கள் பல பெற்றிருந்த நரகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் பெரிதும் கொடுமைப்படுத்தினான். அவனால் பெரும் துன்பத்துக்கு ஆளான அனைவரும், துவாரகாபதியாம் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சரண் புகுந்தனர். நரகனை அழித்து தர்மத்தை நிலைநாட்டும்படி வேண்டிக்கொண்டனர். பகவானும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, ஆறுதல் கூறியதுடன், சத்யபாமாவின் துணையோடு அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டார். இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த பாணாசுரன் முதலான வேறு பல அசுரர்கள், பாற்கடலில் இருக்கும் திருமகளை எப்படியாவது கவர்ந்து செல்ல திட்டமிட்டார்கள். இதை அறிந்த திருமகள் என்ன செய்தாள் தெரியுமா? அருகிலிருக்கும் தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாளாம். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். ஆகவே, அன்று திருவிளக்கு முதலாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து, லட்சுமிதேவியை தீபலட்சுமியாக வழிபடுவார்கள். அப்போது, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்

கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வழிபட, நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
நமோ (அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
  நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபராயை
  நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயைகங்கை... நம்பிக்கை!

தீபாவளி அன்று காலை எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று 'கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வழக்கம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம். தண்ணீரில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள் என்று நம்பிக்கையுடன் நீராடினால், நமது பாவங்கள் அனைத்தும் நசித்துப்போகும்.


ஒருமுறை, பார்வதிதேவி ''எல்லோரும் கங்கையில் நீராடி பாவங்களைத் தொலைத்துக் கொண்டால், நரகத்துக்கு அவசியம் இல்லையே'' என்று சிவ பெருமானிடம் கேட்டாள். ''உண்மைதான்! ஆனால் கங்கையால் ஏற்படும் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது'' என்ற சிவபெருமான், நாம் இருவரும் கிழத் தம்பதியாக கங்கைக் கரைக்குச் செல்வோம். நீ அங்கு வருபவர்களிடம் என்னைத் தூக்கிச்சென்று கங்கையில் நீராட்டினால், பொன் - பொருள் பரிசு தருவதாகக் கூறு. ஆனால், அப்படி என்னைத் தூக்கினால் எனது பாவங்கள் அவர்களைச் சேரும் என்று கூறு'' என்றார். பார்வதியும் அப்படியே கங்கையில் நீராடி வருபவர்களிடம் மன்றாடினாள். ஒருவரும் முன்வரவில்லை.

கடைசியில் திருடன் ஒருவன் முன்வந்தான். அவனிடம், ''இவரைத் தூக்கினால் இவரது பாவம் உன்னைச் சேருமே'' என்றாள் மூதாட்டியக இருந்த பார்வதி.  அதற்கு முரடன், ''அதனால் என்ன... அப்படியே பாவங்கள் சேர்ந்தாலும் அதைக் கரைப்பதற்குத்தான் கங்கா மாதா இருக்கிறாளே!'' என்றான் நம்பிக்கையுடன். அவ்வளவில் அவனுடைய பாவங்கள் தொலைந்ததுடன் அவனுக்கு சிவ-பார்வதி தரிசனமும் கிடைத்தது. வழிபாட்டில் நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம்.கிணற்றுக்குள் கங்கை!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர்.  இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.

ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத் தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.


சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். 'தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்றார். 'எனில் கங்கையில் குளித்து வாரும்!' என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்!


குபேர யோகம்!

விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.


அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். ''தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'’ என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.

இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.


மன்னர்களும் தீபாவளியும்!

மும்பையில் பல பகுதிகளில் தீபாவளி தினத்தை சுவாரஸ்யமாக அனுஷ்டிக்கிறார்கள். அன்று தங்கள் வீட்டு வாசலில் மண்ணாலான சிறிய கோட்டையைக் கட்டுகிறார்கள். கோட்டை கட்டும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்பதுதான் இதன் சிறப்பம்சம். ஏன் இந்த மண் கோட்டை கொண்டாட்டம்?

சத்ரபதி சிவாஜி தன் படைகளுடன் சென்று தீரத்துடன் போரிட்டு, பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்றியது ஒரு தீபாவளித் திருநாளில்தான். இதை ஞாபகப் படுத்தும் விதமாகவே, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் மண் கோட்டை கட்டி வைத்து, வீரசிவாஜியின் வீரதீரத்தை நினைவுகூர்கிறார்கள்.


* அதேபோன்று மௌரியப் பேரரசர் அசோகர் தனது திக்விஜய யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய நாள் அசோக தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

* உஜ்ஜயினி மன்னனான விக்ரமாதித்தன் தன்னுடைய பகைவர்களான ஷாகாஸ் என்பவர்களை வென்று, முடிசூட்டிக்கொண்டதும் ஒரு தீபாவளித் திருநாளில்தான்.

* சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங்கையும், 52 ராஜபுத்ர அரசர்களையும் சிறையிலடைத்தது, அன்றைய மொகலாயப் பேரரசு. குரு கோவிந்த சிங் அந்தச் சிறையிலிருந்து தப்பியதுடன், தன்னுடன் சிறைப்பட்டிருந்தவர்களையும் தப்பிக்கவைத்து காப்பாற்றினார். விடுதலையான அவர்களுக்குப் பொற்கோயிலில் விளக்கேற்றி வைத்து வரவேற்பு கொடுத்ததுடன், வீடுகளிலும் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடினார்கள் என்கிறது வரலாறு.


அன்பெனும் அகல் விளக்கு!

முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து, அவர்கள் மூலம் உலகை உய்விக்க எம்பெருமான் திருவுளம் கொண்டார். அதன்படி மூவரும் திருக்கோவிலூர் தலத்தை அடைந்தனர்.


அங்கே, வைணவர் ஒருவரது இல்லத்தில் இருந்த இடைகழியில் தங்கியிருந்தார். பொய்கையாழ்வார். அப்போது பூதத்தாழ்வாரும் அங்கு வந்தார். 'இந்த இடத்தில்  ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்’ என்று பொய்கையாழ்வார் சொல்ல, இருவரும் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்தார். 'இங்கு இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்று கூறி, மூவரும் நின்றுகொண்டனர். மூவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக் களித்திருந்தனர். அப்போது நான்காவதாக ஓர் நபர் உட்புகுந்தது போன்று நெருக்கம் ஏற்பட்டது. இருள் சூழ்ந்துவிட்ட அந்த வேளையில் புதிதாக வந்திருப்பது யார் என்று தெரியவேண்டாமா?

எனவே பொய்கையாழ்வார், 'வையம் தகழியா...’ என்று துவங்கி தமது பாசுரத்தால், பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தாழ்வார், 'அன்பே தகழியா...’ எனத் துவங்கி அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையைத் திரியாகவும் கொண்டு ஞான தீபம் ஏற்றினார். பேயாழ்வார் 'இந்த இரண்டு ஒளியினாலும் இருள் அகன்றதால் எம்பெருமானைக் கண்டேன்’ என்று பாசுரம் பாடுகிறார்.

நாமும் நம் மனத்துள் அன்பெனும் விளக்கேற்றி, மாசுகள் எனும் இருளகற்றி, உள்ளே பரம்பொருளைக் குடியிருத்தி, நாளும் நல்லதே செய்து, உள்ளளி பெருக்கி மகிழ்வோம்!பூமிக்கு வந்த பாகீரதி!

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்று நடத்தினார். யாகக் குதிரை திக் விஜயம் புறப்பட்டது. விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தனர். குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆசிரமத்தில் அதைக் கண்டுபிடித்தனர். கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதி, முனிவரைத் தாக்க முயன்றனர். ஆனால், கபில முனிவரின் ஒரு பார்வையிலேயே எரிந்து சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.

 

அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்சத்தின் சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பலவாறு முயற்சித்தனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கை பூமிக்கு வந்தால் அவள் மூலம் முன்னோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதை அறிந்து, அவளை நோக்கி தவம் செய்தான். கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தி, சிவனாரைக் குறித்து தவமியற்ற அறிவுறுத்தினாள். பகீரதன் சிவனாரைக் குறித்து கடும் தவம் இருந்தான். சிவனார் மனம் கனிந்தார்; பகீரதனுக்கு அருள் புரிந்தார்.

அதன்படி, கங்கையை சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர். அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு 'பாகீரதி’ என்றும் ஒரு பெயர் உண்டு!


பூமாதேவியின் புதல்வன்!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம்தானே? ஒவ்வொருமுறை போரிடும்போதும், இறையருளால் தேவர்களே ஜெயித்தனர். இந்த நிலையில், 'பூலோகத்தில் நிகழும் யாகங்களும், அந்த யாகங்களில் அளிக்கப்படும் உணவுகளுமே தேவர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனில், பூலோகத்தை இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன’ என்று விசித்திர எண்ணம் உதித்தது இரண்யாட்சன் என்ற அசுரனுக்கு.

சற்றும் தாமதிக்காமல் பூமிப்பந்தைக் கவர்ந்துகொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்துகொண்டான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். அவர் வராஹ அவதாரம் எடுத்தார். கடலுக்கு அடியில் சென்று அசுரனுடன் கடும் போரிட்டு, அவனை அழித்து பூமிப்பிராட்டியை மீட்டுவந்தார். இப்படி வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கும் பூமிப்பிராட்டிக்கும் பிறந்தவனே நரகாசுரன்.


அவன் நலம் வேண்டி, ''ஸ்வாமி, என் மகன் மரணம் அடையாமல் இருக்க வரம் தாருங்கள்'' என்று பிரார்த்தித்தாள். ''அது இயலாத காரியம். அவனது மரணம் என்னால் நிகழும். நீயும் அருகில் இருப்பாய்'' என்றார் ஸ்ரீவிஷ்ணு. அந்த பூமாதேவியின் அம்சமே சத்யபாமா. இன்னொரு தகவலும் சொல்வர். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அப்படியான வரத்தைத் தர இயலாது என்று மறுத்தார் பிரம்மன். ''எனில், எனது மரணம் என் அன்னையால் நிகழ வேண்டும்'' என்று வரம் கேட்டான். பெற்ற தாயே மகனைக் கொல்ல மாட்டாள் என்ற எண்ணத்தில் இந்த வரத்தைக் கேட்டான். பிரம்மனும் வரம் தந்தார். அதன்படியே அவன் முடிவும் அமைந்தது. பூமிதேவியின் மகன் என்பதால்தான் நரகாசுரனுக்கு பௌமன் என்றும் பெயர் உண்டு!அசுரன் கேட்ட வரம்!
வருண பகவானின் வெண்குடை, தேவேந்திரனின் குண்டலங்கள் என தேவர்களின் உடைமைகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நிம்மதி யும் பறிபோனது நரகாசுரனால். துயரத்தில் தவித்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் சரண்புகுந்தார்கள்.


சத்தியத்தின் துணையோடு புறப்பட்டார் பகவான். ஆமாம்! சத்யபாமா தேரோட்ட நரகாசுரனின் தலைநகர் ப்ராக்ஜோதிஷபுரத்தை நோக்கிக் கிளம்பினார். கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய கோட்டைகளை அழித்து நகருக்குள்ளும் புகுந்தார். கணப்பொழுதில் நரகனின் படைகள் அழிக்கப் பட்டன. கடைசியில் நரகாசுரனே போர்க்களம் வந்தான். ஆனால், அவனது ஆயுதங்கள் எல்லாம் கண்ணனின் முன்னால் வலுவிழந்து போயின. நரகன் வீழ்த்தப்பட்டான். அப்போது பூமிப்பிராட்டி ''இந்த மரண காலத்தில் இவனுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினாள். அதன்படியே கண்ணனின் கருத்தும் கண்களும் நரகாசுரனின் பக்கம் திரும்பி அருள் மழை பொழிந்தன.

தெளிவு பெற்ற நரகாசுரன், ''பரந்தாமா! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். அன்று எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காவும் வாசம் செய்ய வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, விளக்கேற்றி வழிபட்டு, நல்லுணர்வைப் பெற வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் நீங்கள் அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தான் (இந்த வரத்தை பூமிதேவி கேட்டதாக பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது). கண்ணனும் வரம் தந்தார். நரகாசுரன் முக்தி பெற்ற அந்த நாளே தீபாவளி. நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே இந்தக் கதை உணர்த்துகிறது.


ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்
ஸ்ரீ சக்ரமத்யே வசந்தீம் - பூத
ரக்ஷ : பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்
ஸ்ரீ காமகோட்யாம் ஜ்வலந்தீம் - காம
ஹீனைஸ்ஸு காம்யாம் பஜே தேஹிவாசம்
கருத்து: ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் வசிப்பவளும், பூதம், பிசாசம் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளும், ஸ்ரீகாமகோடியில் ஜொலிப்பவளும், காமம் அற்றவர்களால் எளிதில் அடையக்கூடியவளுமான உன்னை பூஜிக்கிறேன். ஓ காமாக்ஷி... வாக்கு முதலான வரங்களைக் கொடுக்க வேண்டும்.

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாக்ஷி அம்மையைப் போற்றும் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும்.

No comments:

Post a Comment