Search This Blog

Monday, September 15, 2014

ஞான விளக்கு!

லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளக்கெண்ணெயாகத்தான் தோன்றும். ஆனால், அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். ‘பல் விளக்குவது’, ‘பாத்திரம் விளக்குவது’ என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது.

ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கிவிட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளைத் தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது.

கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங்காடாகத்தான் இருந்ததாம். ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேச்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம் காடு ஊராயிற்று. புண்ய ஸ்தலமாயிற்று. ஆமணக்கின் கீழ் இருந்து ஸ்வாமி வந்ததால் அதற்கு கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.

இந்த ஊரில்தான் அந்த ஓகு பஹபூ காலமாகத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அதனால் ’கொட்டையூர்க்காரர் என்றே அர்த்தம் தருகிற ’ஏரண்டகர்’என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த பெயர் அவருக்கு இன்னொரு விதத்திலும் பொருந்தி விட்டது. ஆமணக்கு எப்படி தன்னையே பிழிந்துகொண்டு எண்ணெயாகி ஜனங்களுக்கு உபகரிக்கிறதோ அப்படித் தன்னையே லோகோபகாரமாக இந்த ஏரண்டக ரிஷியும் தியாகம் செய்துகொண்டார். அந்தக் கதையைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். உயிர்த் தியாகிகள், Martyrs என்று ஏதேதோ சொல்கிறார்களே, அந்தத் தத்வம் ஸமீப காலத்து தேசபக்தியில்தான் தோன்றியதென்றில்லை; ததீசியிலிருந்து எத்தனையோ மஹரிஷிகள் கூட ஆதியிலிருந்து ஜனஸமூகத்தின் கே்ஷமத்துக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட நினைத்துத்தான் ஏரண்டகர் கதை ஆரம்பித்தேன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment