Search This Blog

Thursday, September 18, 2014

அலசியா மொன்டானா - 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் அது. முன்னணி வீராங்கனைகள் பலர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பெண்ணைவிட மற்றொரு பெண்ணைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் அதிசயித்தனர். காரணம், அந்தப் பெண் ஓடியது, தனது எட்டு மாதக் கர்ப்பத்தோடு!

அந்தப் பெண், அலசியா மொன்டானா.  அமெரிக்காவின் அதிவேகப் பெண்மணி.

அலசியாவுக்கும் தடகள ஓட்டத்துக்கும் அமெரிக்காவில் ஒரே அர்த்தம்தான். நான்கு வருடங்களில் 800 தேசியப் பதக்கங்கள் பெற்றவர். தெற்கு கலிபோர்னியாவில் 1986-ம் ஆண்டு பிறந்த அலசியா, பள்ளிப் படிப்புக்காக கென்யான் பள்ளியில் சேர்ந்தார். அங்கு நடந்த போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு பரிசுகள் வெல்ல ஆரம்பித்ததும், தடகளத்தின்மீதான காதல் அரும்ப ஆரம்பித்தது. சுவாசப் பயிற்சி மற்றும் கட்டுக்கோப்பான உடற்பயிற்சி என இரண்டிலும் சரியாக இருந்தால் மட்டுமே பிரகாசிக்கக்கூடிய 800 மீட்டர் தொடர் ஓட்டத்தை, அலசியா சின்ன வயதிலேயே தேர்ந்தெடுத்தார்.  


2007-ம் ஆண்டு அமெரிக்கத் தடகள வீராங்கனைகளுக்கான போட்டியில் கலந்துகொண்டு தங்கம் தட்டியபோது, அமெரிக்கா எங்கும் பிரபலம் ஆனார். அமெரிக்கத் தேசியச் சாதனையான 1:57:34 விநாடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து, 2010-ம் ஆண்டு உலகப் பிரபலம் ஆனார்.

2008-ம் ஆண்டு பயிற்சியின்போது கீழே விழுந்ததில் அலசியாவுக்குக் கால்களில் கடும் பாதிப்பு. நிற்கவே முடியாத நிலைமை. இனி போட்டிகளில் எப்படிக் கலந்துகொள்வார் என எல்லோருக்கும் சந்தேகம். அலசியா, ஸ்டேடியத்துக்குச் சக்கர நாற்காலியில் வந்தார். ''நான் இதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்!'' என்று அவர் அறிவித்தபோது, அமெரிக்காவே உணர்ச்சிவசப்பட்டது. அடுத்த தேசியப் போட்டியிலேயே மீண்டும் தங்கம் வென்று காட்டியபோது, அத்தனை பேரும் அண்ணாந்து பார்த்தார்கள். அலசியாவின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்று... அவர் தலையில் சூடும் டெய்சி பூ. எந்தவொரு போட்டியில் அலசியா பங்கேற்றாலும், தலையில் நிச்சயம் பெரிய சைஸ் டெய்சி பூ ஒன்றைச் சூடியிருப்பார். இதனால் அமெரிக்கர்கள் அவரைச் செல்லமாக  'பறக்கும் பூ’ என்றே கூப்பிடுகிறார்கள்.

அலசியா 2011-ம் ஆண்டு லூயிஸ் என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தாலும், கடந்த ஜூன் மாதம் வயிற்றில் குழந்தையோடு ஓடிய அந்த 800 மீட்டர் ஓட்டம், அலசியாவை உலகப் பிரபலம் ஆக்கிவிட்டது. ''வயிற்றில் குழந்தையுடன் போட்டியில் பங்கேற்றது, நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல.. என் பயிற்சியாளர் மற்றும் கணவர் இருவரும் நம்பிக்கையுடன் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். கருவில் இருக்கும் எட்டு மாதக் குழந்தையோடு ஓடியதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதற்கு நான் எடுத்த பயிற்சிகள்தான் காரணம். சரியான உடற்பயிற்சியின் மூலம் எனக்கும், என் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் வராத அளவுக்கு உடலைப் பார்த்துக்கொண்டேன். அதனால், என்னால் இதைச் சாதிக்க முடிந்தது. மற்ற தாய்மார்களும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவர்களும் கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்!' என அலசியா மெசேஜ் சொல்ல, இப்போது அமெரிக்க ஜிம்களில் கர்ப்பிணிகளின் கூட்டம். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி குழந்தையை ஆரோக்கியமாகப் பிரசவித்துவிட்டார் அலசியா. தன் குழந்தையின் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர, உலகமே சந்தோஷமாக வாழ்த்தியது. நீங்கள் இந்தச் செய்தியைப் படிக்கும் சமயம், அந்தப் பறக்கும் பூ, அமெரிக்காவின் ஏதேனும் ஒரு களத்தில் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ரியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சிகளில் வியர்வையைச் சிந்திக்கொண்டிருக்கும்!


1 comment:

  1. ஆனந்த விகடன் // 24.9.14 - பக்கம் 34 & 35 பக்கங்களில் வந்த கட்டுரை - 8 மாத கர்ப்பத்துடன் ஓடிய வீராங்கனை அலசியா மொண்டானா பற்றிய கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி: ஆனந்த விகடன் - நன்றி: மழைக்காகிதம்

    ReplyDelete