Search This Blog

Saturday, January 10, 2015

சர்ச்சை - தோனி!

 
புயலின் மையம் எப்போதும் அமைதியாக இருக்கும் என சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இறுதியில் தோனி ஓய்வு அறிவித்ததும் அதைச் சுற்றி ஒரு மீடியா புயல் வீசியது. கோலியின் நடவடிக்கைகள், அதிகாரத்தை நோக்கிய நகர்வு தோனியை எரிச்சல்படுத்த அவர் அதிரடியாக ஓய்வு அறிவித்தாரா? தொடர்ந்து டெஸ்ட் தொடர் தோல்விகள் பற்றி தோனி மீது குற்றச்சாட்டுகள் குவிய, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள டெஸ்டிலிருந்து விலகினாரா? இப்படி பல கேள்விகள். ஆனால் இந்தப் புயலுக்கு மத்தியில் தோனியின் மனம் அமைதியாக, சஞ்சலப்படாது இருப்பதை நாம் கவனிக்கவில்லை.
 
2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்ற பின் மொத்த கவனத்தையும் சச்சின் மீது திருப்பி விட்டு, அந்த வெற்றி உற்சாகத்தில் பட்டுக் கொள்ளாமல் விலகி இருந்த தோனி இப்போது ஒரு இளம் நட்சத்திர வீரரைப் பார்த்து அஞ்சுகிறார் என்றோ தோல்வி பற்றிய குற்றச்சாட்டுகளினால் பதறுகிறார் என்றோ கருதுவது அபத்தம். வெற்றியினால் மிகுதியாக எக்களிக்கும் மனிதன் தம் தோல்வி கண்டு அஞ்சிக் கலக்கமடைவான். இரண்டிலும் பட்டுக் கொள்ளாத தோனி போன்றோர் அல்ல. தோனியின் ஓய்வு ஒரு பட்டும் படாத, நடைமுறை தேவையைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு.  தோனி புத்தர் அல்ல. வெற்றியின் போது அவர் நிச்சயம் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைவார். ஆனால் அதை பெரிதுபடுத்தாமல், எளிய விஷயமாக எடுத்துக் கொண்டு நகர்ந்துவிடுவார். வெற்றிக்கு பின்னர் நடக்கும் மீடியா சந்திப்புகளில் தாம் பேசாமல் தம் அணியின் மற்றொரு வீரரைப் பேச வைப்பார். இது வேறெந்த அணியிலும் நடக்காதது. அதேநேரம் தோல்வி அடைந்தால் அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்வார். இதுபோன்ற ஒரு தன்னலம் கடந்த பொறுப்புணர்வுதான் தோனியின் சிறப்பு. அவர் டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்ட தும் கூட தன்னலமற்ற செயல்தான். அடிப்படையில் தோனி டெஸ்ட் வீரர் அல்ல. அவருக்கு அதற்கான பொறுமையோ தொழில்நுட்பமோ இல்லை. 290க்கு மேல் கேட்ச்/ஸ்டம்பிங்களை செய்துள்ள போதும் கூட ஒரு கீப்பராகவும் அவரது விளையாட்டு குறைபட்டதுதான். ஆனால் அவர் ஒரு சிறந்த ஒருநாள் அணி வீரர் மற்றும் தலைவர். நியாயமாக கடந்த ஆறு வருடங்களில் அவருக்கு பதில் டெஸ்ட் அணியில் சாஹா ஆடியிருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ஒரே அணி இரண்டு வடிவங்களிலும் விளையாடுவதால் இரண்டு அணித் தலைவர்கள் அதிகார சமகுலைவை, குழப்பத்தை அணிக்குள் ஏற்படுத்தும். டெஸ்ட் அணியில் தோனி ஆடினது ஒரு சமரசம்தான். ஆனால் அதனால் இந்திய டெஸ்ட் அணி மேம்படவில்லை என்றாலும் ஒருநாள் அணி மிகவும் பயனடைந்தது.
 
ஆரம்பத்தில் அவர் கங்குலி மற்றும் திராவிட் ஆகியோரால் உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட அணியை எளிதாக வழிநடத்தி டெஸ்ட் அணி வரிசையில் முதலாவதாக கொண்டு சென்றார். ஆனால் இதே மூத்த வீரர்களின் அணி பின்னர் சறுக்கத் தொடங்க, அவர்களிடத்தில் இளம் வீரர்கள் வந்து அனுபவமின்றி ஆட இந்திய அணி தோனியின் கீழ் நான்கு தொடர்களை வெளிநாட்டு மண்ணில் இழந்தது. அணி முதலிடத்தைப் பிடித்தபோது எப்படி தோனி அதை தம் சாதனையாகக் கருதவில்லையோ தொடர்ந்து ஒவ்வொரு தொடரையும் வெளிநாடுகளில் இழந்தபோதும் அவர் அதைத் தம் தோல்வியாகக் கருதவில்லை.அவர் பார்வையில் இத்தோல்விகளைத் தவிர்க்க இயலாது. வேறு யார் தலைவராக இருந்தாலும் இப்படித்தான் தோற்போம். இத்தோல்விகளின் பொறுப்பை தாம் ஏற்பதன் மூலம் ஒரு தியாகம் செய்தவராக தோனி நினைத்திருக்ககூடும். இதனால் அணியையோ ஆட்டத் திட்டத்தையோ அவர் மாற்ற முனையவில்லை.இந்தப் போக்கு மீடியா மற்றும் ரசிகர்களைக் கடுமையாக எரிச்சலூட்டியது. தோனியின் பட்டும் படாத குணம் ஒரு டெஸ்ட் அணியை அதன் சவால்களை எதிர்கொள்ள தூண்டவோ புதிதாய் கட்டமைக்கவோ உதவவில்லை. தோனி அடிப்படையில் சம்பிரதாயமான மனிதர். சராசரி இந்தியனைப் போல் விதியை நம்புபவர். இந்த மிதவாதப் போக்கு எதிர்மறையாக முடிந்தது. நியூசிலாந்தின் பிரண்டன் மக்கெல்லம் போல் அவர் சோதனை முயற்சிகளை செய்து பார்க்க விரும்பவில்லை. ஜடேஜாவை ஆல்ரவுண் டராக்க பார்த்தது, ஆட்டத்தை விட்டுப் பிடிக்கும் பாணி ஆகியவை அவரது டெஸ்ட் தலைமை வாழ்வில் படுதோல்வியானது. இதையெல்லாம் தோனி நம்மை விட நன்றாகவே உணர்ந்திருந்தார்.
 
2013இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என அவர் உலகக்கோப்பை முடிந்ததும் அறிவித்தார். ஆனால் 2015இல் அவர் உலகக் கோப்பையின் போது வழி நடத்த வேண்டுமென்றால் டெஸ்டில் இருந்து அதற்கு முன் ஓய்வுபெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. இப்போது தோனி இருதலைக்கொள்ளி மனநிலையில் இருக்கிறார். டெஸ்ட் அணியின் கடுமையான தோல்விகளால் தமது நற்பெயர் கெடப் போகிறது என இரண்டு வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்தார். அதை அவரால் தடுக்க முடியாது. அதேநேரம் அவரது ஒருநாள் அணி தொடர்ந்து வெற்றியைக் குவித்து பேர் வாங்கும். கெட்டபெயர் வேண்டாம் என்றால் நல்லபெயரும் சேர்ந்து கிடைக்காது. தோனி ஒரு முடிவெடுத்தார். அந்த முடிவுதான் இந்த டெஸ்ட் கிரிட்கெட் ஆட்டங்களில் இருந்து விலகல்.அயல்நாட்டில் பெற்ற தோல்விகளால் அவர் சற்றும் பாதிக்கப்படவில்லை என்றில்லை. உள்ளூர் டெஸ்ட் தொடர்களைப் பெரும் வித்தியாசத்தில் வெல்வதற்குச் சாதகமான ஆடுதளங்கள் அமைக்க அவர் தள அமைப்பாளர்களை வற்புறுத்தினார். அவ்வாறு அவர் ஆஸ்திரேலியா, மே.இ தீவுகளூக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை வெல்லவும் செய்தார். ஆனால் அவை தற்காலிக தீர்வுகள்தாம். கோலி முதல் டெஸ்டை வென்றிந்தால் அவரால் தோனி அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார் என கூறுவதில் நியாயம் இருக்கும். தோனி நினைத்திருந்தால் உலகக்கோப்பைக்கு பின் மே.இ தீவுகள், நியூசிலாந்து, வங்கதேசம் போன்ற ஒரு கரகாட்ட அணியை இந்தியாவுக்கு அழைத்து சுலபமாக தோற்கடித்து கொண்டாட்டமா விடைபெற்றிருக்கலாம். ஆனால் அவர் தலைமைப் பதவியை ஒரு பொறுப்பாக பார்த் தார். உலகக்கோப்பைக்கு பின் அடுத்த டெஸ்ட் தொடர் நடக்க எட்டுமாதங்கள் ஆகும். அதுவரை அவர் எப்படியும் தலைவராக இருக்கப் போவதில்லை. இடையில் ஒரே ஒரு டெஸ்ட். அதை அவர் கோலிக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். உண்மையில் நாம் இதற்காக தோனியை கொண்டாடி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென்று விலகியதற்கு மேலும் பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.. இணையத்திலும் பத்திரிகைகளிலும் சொல்லப்படும் ஊகங்களுக்கு எந்தவொரு நிரூபணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், புயல் ஓந்தாலும் சர்ச்சைகள் ஓயவில்லை. தோனி தன் வழக்கமான அமைதியை இங்கேயும் நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறார்.
 
ஆர்.அபிலாஷ்

No comments:

Post a Comment