Search This Blog

Monday, March 03, 2014

கடல் நீரில் தங்கம்!


கடல் நீரில் தங்கம் இருக்கிறது! நீங்கள் ஏராளமான அளவுக்கு கடல் நீரை எடுத்து வந்து, அதைக் காய்ச்சினால் இறுதியில் மிஞ்சும் உப்புகளிலிருந்து மிகச் சிரமப்பட்டு தங்கத்தைப் பிரித்து எடுக்க முடியும்.

ஆனால் இதில் லாபமில்லை. நீங்கள் பிரித்து எடுக்கிற தங்கத்தின் அளவு ஒரு கிராம் என்று வைத்துக் கொள்வோம். இதில் உங்களுக்கு ஆன செலவு பத்தாயிரம் ரூபாயாக இருக்கலாம். அல்லது அதற்கு அதிகமாகவும் இருக்கலாம். இப்படிப் பாடுபடுவதற்குப் பதில் நகைக்கடைக்குச் சென்று ரூ. 2800 கொடுத்தால் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும்.

செலவு கட்டுபடியாகாது என்ற காரணத்தால்தான் யாரும் கடல் நீரிலிருந்து தங்கம் எடுக்க முற்படவில்லை.

ஆனால் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகுதான் நிபுணர்களுக்கே இந்த விஷயம் தெரிய வந்தது.

ஐரோப்பாவில் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை முதல் உலகப் போர் நடந்தது. போரை ஆரம்பித்த நாடான ஜெர்மனி இறுதியில் தோற்றுப் போயிற்று. இந்தப் போரினால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய ஜெர்மனி தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என பிற நாடுகள் நிபந்தனை விதித்தன. அதுவும் இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை தங்க நாணயங்கள் வடிவில் அளிக்க வேண்டும் என்று கூறின.

இது ஜெர்மன் அரசுக்குப் பெரும் சுமையாகியது. கடல் நீரிலிருந்து எளிதில் தங்கம் எடுக்க முடியும் என்றால் அப்படித் தங்கம் எடுத்து மற்ற நாடுகளுக்கு அதை நஷ்ட ஈடாகக் கொடுத்து விடலாமே என்று ஜெர்மனியில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரிட்ஸ் ஹேபர் கூறினார்.அவருக்கு இப்படி நம்பிக்கை ஏற்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. 1872ம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி எஸ்.சோன்ஸ்டாட் கடல் நீரில் தங்கம் அடங்கியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து வேறு சில விஞ்ஞானிகளும் இதை உறுதிப்படுத்தினர். ஆனால் கடல் நீரில் அடங்கிய தங்கத்தின் அளவு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தைக் கூறியிருந்தனர்.ஹேபர் கணக்குப் போட்டதில் ஒரு மெட்ரிக் டன் கடல் நீரிலிருந்து 65 மில்லி கிராம் தங்கம் கிடைக்கலாம் என்று தோன்றியது. உடனே ஜெர்மன் கப்பல்கள் நாலா புறமும் கிளம்பி 1925ம் ஆண்டு வாக்கில் உலகின் கடல்களில் ஆங்காங்கு கடல் நீர் சாம்பிளைச் சேகரித்துக் கொண்டு வந்தன. சுமார் 4000 சாம்பிள்களை ஆராய்ந்தபோது கடல் நீரில் மிக அற்ப அளவுக்கே தங்கம் இருப்பது தெரிய வந்தது. தாம் போட்ட கணக்கில் பெரிய பிசகு இருந்ததை ஹேபர் அப்போதுதான் உணர்ந்தார்.

அத்தோடு கடல் நீரிலிருந்து தங்கம் எடுக்கும் முயற்சியை ஜெர்மனி கைவிட்டது.ஆனால் உலகின் கடல்கள் அனைத்திலும் உள்ள கடல் நீரில் இரண்டு கோடி டன் தங்கம் இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடலில் கரைத்த பெருங்காயம் போல என்று ஒரு பழமொழி உண்டு. கடல் நீரில் தங்கம் அந்த மாதிரிதான் கரைந்திருக்கிறது. ஆனாலும் நவீன முறைகளைப் பின்பற்றி கடல் நீரில் உள்ள தங்கத்தை எடுப்பது குறித்து இப்போதும் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. கடல்களில் அதுவும் குறிப்பாகக் கரையையொட்டி உள்ள கடல் பகுதிகளில் தங்கத்தை விட உயர்ந்த பொருள் ஒன்று கிடைக்கிறது. அதுதான் குரூட் எண்ணெய்.இந்த குரூட் எண்ணெயிலிருந்துதான் பெட்ரோல், டீசல், கெரசின் முதலான பொருட்கள் எடுக்கப்படுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இவற்றைப் பிரித்து எடுக்கும்போதுதான் நாம் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் காஸ் கிடைக்கிறது.உலகில் பல இடங்களில் கரையோரக் கடல் பகுதியில் கடலடித் தரைக்கு அடியில் ஊற்று போல குரூட் எண்ணெய் தேங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் கடலில் இரண்டு கிலோ மீட்டர் ஆழம் உள்ள கடல் பகுதியிலும் கடலடித் தரையில் துளையிட்டு குரூட் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்கு ராட்சத யந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை துரப்பண மேடைகள் என்று அழைக்கப்படுகின்றன.

மேற்காசிய நாடுகளை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் தான் கடலடியில் பெரிய எண்ணெய் ஊற்றுகள் உள்ளன.இந்தியாவில் மும்பைக்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் கடலுக்கு அடியிலிருந்து குரூட் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆந்திரத்துக்கு கிழக்கே உள்ள வங்கக்கடலில் கடலுக்கு அடியிலிருந்து எரிவாயு எடுக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் உலகில் பல இடங்களில் எரிவாயு ஊற்றுகள் உள்ளன. இதல்லாமல் உலகில் இந்தோனேசியா போன்று சில நாடுகளில் கரையோரக் கடல் பகுதியில் ஈயம் எடுக்கப்படுகிறது. இதுவரை நாம் குறிப்பிட்ட அனைத்தும் கடலிலிருந்து எடுக்கக்கூடிய ஆழத்தில் உள்ளன.ஆனால் மனிதனால் எளிதில் எட்ட முடியாத ஆழத்தில் அதாவது ஆறு கிலோ மீட்டர், ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் கடலடித் தரையில் மூட்டை மூட்டையாக உருளைக் கிழங்கைக் கொட்டி வைத்தாற்போல உலோக உருண்டைகள் கிடக்கின்றன. இந்த உலோக உருண்டைகளில் பல அரிய உலோகங்கள் அடங்கியுள்ளன. சிறிதளவு தங்கமும் உள்ளது.இந்தியா பல ஆண்டுகளாக இந்தக் கடலடி உலோக உருண்டைகள் மீது கவனம் செலுத்தி வருகிறது. இந்திய ஆராய்ச்சிக் கப்பல்கள் சாம்பிளாக இந்த உலோக உருண்டைகளை எடுத்து ஆராய்ந்துள்ளன. நவீன முறைகள் உருவாக்கப்பட்டால்தான் இந்த உலோக உருண்டைகளைப் பெரிய அளவில் எடுத்துப் பயன்படுத்த முடியும்.

சென்னைக்குக் கிழக்கே அந்தமான் தீவு அருகே கடலுக்கு அடியில் உறைந்த நிலையில் மீதேன் வாயுக் (எரிவாயு) கட்டிகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தக்க முறையில் எடுக்க முடியுமானால் இவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். உரங்களைத் தயாரிக்க முடியும்.எனினும் கடலிலிருந்து மிக ஏராளமான அளவுக்கு எடுக்கப்படுகிற பொருள் ஒன்று உண்டு. அதுதான் உப்பு. கடல் நீரிலிருந்து உப்பு எடுக்க அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை. நல்ல வெயில் அடிக்கிற நாடுகளில் கடலோரமாக உள்ள இடங்களில் கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வைப்பர். வெயிலின் விளைவாக நீர் ஆவியாகி கடைசியில் அந்தப் பாத்திகளில் உப்பு மிஞ்சும். இப்படி உப்பு எடுக்கப்படும் இடங்களை உப்பளங்கள் என்று கூறுவர். தமிழகத்தின் கரையோரமாக நிறையவே உப்பளங்கள் உள்ளன. கடல் நீரிலிருந்து தங்கம் கிடைக்கிறதோ இல்லையோ உப்பு நிறையவே கிடைக்கிறது. தங்கம் இல்லாமல் வாழ முடியும். உப்பில்லாமல் முடியாது.

என்.ராமதுரை

No comments:

Post a Comment