Search This Blog

Tuesday, March 25, 2014

நரேந்திர மோடி - பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகிறார் ?

தேர்தல் கணிப்புகள் அப்படியே நடந்துவிடக்கூடியவை அல்ல என்றாலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பல கணிப்புகள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்கின்றன. பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனியாக (அல்லது சில கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்) ஆட்சி அமைத்தால், நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

நூறு புதிய நகரங்களை உருவாக்குவேன்; இந்தியாவின் நான்கு திசைகளையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பேன்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களை தொடங்குவேன் என பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார் மோடி. இதை எல்லாம் அவர் செய்வாரோ, இல்லையோ... அவர் பிரதமரானால், குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்ததுபோல, இந்தியப் பொருளாதாரத்தையும் அதிவேகத்தில் முன்னேற்றம் காண வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் நிறையவே இருக்கிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேற்றிவிடக்கூடியதுதானா? உலகப் பொருளாதாரம் என்கிற சிக்கலான வலையில் சிக்கியிருக்கும் நம்மால் தனித்து செயல்பட்டு, அதிவேக வளர்ச்சி காண்பது சாத்தியமா? இன்றைய காங்கிரஸ் ஆட்சி, அடுத்துவரும் ஆட்சிக்கு பல பொருளாதாரப் பிரச்னைகளை உருவாக்கிவிட்டுச் செல்லும்போது, அதிலிருந்து மீண்டு, வேகமான வளர்ச்சியை நாடு அடைய வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் முக்கியமானவை. மோடி பிரதமரானால் பொருளாதார ரீதியில் சந்தித்தாக வேண்டிய சவால்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.


1. ஜி.டி.பி. வளர்ச்சி! 

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிதான் ஜிடிபி வளர்ச்சியாகும். விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய முப்பெரும் துறைகளின் மொத்த உற்பத்தி மதிப்பே ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மூன்று துறைகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?

நம் விவசாயத் துறையில் மிகப் பெரிய பிரச்னை, நீராதாரம். மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்கும் நீராதாரத்தை விடுவித்து, விவசாயத்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் நீர் கிடைக்கச் செய்வதற்கான திட்டங்களை மோடி தீட்ட வேண்டும். குஜராத்தில் நர்மதா அணை கட்டியதுபோல, இந்தியா முழுக்க பல பெரிய அணைகளைக் கட்ட வேண்டும். இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தவிர, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து மிகப் பெரிய எதிர்ப்பும் கிளம்பும். நீராதாரப் பிரச்னைக்கு முதலில் முடிவு கண்டால் மட்டுமே, விவசாயம் தொடர்பான அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு கண்டு, குஜராத்தில் 10 சதவிகிதத்துக்கு  மேல் விவசாய வளர்ச்சி கண்டதுபோல, இந்திய அளவிலும் காண முடியும்.

அடுத்து, தொழில் துறை. 2006-07-ல் தொழில் துறையின் வளர்ச்சி கடந்த 15 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு 12.17 சதவிகிதமாக இருந்தது. இதுவே 2012-13-ல் 0.96 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் குறைந்து, 2013-14-ல் 0.65 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு தொழில் துறையின் முக்கியமான பிரச்னைகள் பல. போதிய முதலீடு இல்லை; வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், கடன் வாங்க முடியவில்லை; ஏற்றுமதி ஆர்டர் அதிகம் இல்லாத இந்த சமயத்தில், உள்ளூரிலும் பொருட்களுக்கான தேவை குறைவாக இருப்பது; மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால், விலையும் அதிகமாக இருக்கிறது. போதிய அளவு மின்சாரம் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தொழில் கொள்கையில் ஆயிரம் ஓட்டை.

மேலும், சிசிஐ \கடந்த 15 மாதங்களில் மொத்தம் 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில், வெறும் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்லி இருக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களில் 25% மட்டுமே மத்திய அரசின் கட்டுபாட்டுக்குள் வருகிறது. மீதமுள்ளவை சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி, தேவை போன்ற காரணங்களால் தாமதமாகி வருகின்றன.  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நம் நாட்டுக்குள் வராததும் முக்கிய காரணம்.

இந்தப் பிரச்னைகள் எல்லாமே ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிடக்கூடியவை அல்ல. இவற்றை எல்லாம் சரிசெய்தால் மட்டுமே மோடியால், தொழில்துறை வளர்ச்சியில் சாதிக்க முடியும்.

மூன்றாவதாக, சேவைத் துறை. 2005-லிருந்து 2011 வரை சுமார் 10 சதவிகித வளர்ச்சி அடைந்த சேவைத் துறை, 2012-13-ல் 6.96 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. சேவைத் துறையில் முக்கிய பங்களிப்பது, ஐ.டி நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் வளர்ச்சியானது வெளிநாட்டுப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மத்திய அரசாங்கமானது ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு ஓரளவுக்கு மட்டுமே உதவ முடியும். தவிர, இந்தத் துறையின் வளர்ச்சி தற்போது ஓரளவு நன்றாகவே இருக்கிறது. எனவே, மத்திய அரசினால் இந்தத் துறைக்கு எந்த வகையில் இன்னும் உதவ முடியும் என்பது முக்கியமான கேள்வி!இந்த மூன்று விஷயங்களிலும் உள்ள முட்டுக்கட்டைகளுக்கு மோடி எப்படி முடிவு காணப்போகிறார் என்பது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்!

2. நடப்புக் கணக்கு பற்றாக்குறை!
ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான், இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை. நம் ஏற்றுமதி 1000 கோடி ரூபாய்;  இறக்குமதி 500 கோடி ரூபாய் எனில், நம்மிடம் 500 கோடி ரூபாய் மீதமிருக்கும். இது பாசிட்டிவ்-ஆன விஷயம். ஆனால், நம் பிரச்னையோ ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதே. இதனால், நம்மிடம் இருக்கும் வெளிநாட்டுப் பணமான டாலரையும் யூரோவையும் விற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு சரிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலை தந்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கணிசமாக குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  


எக்கச்சக்கமான வெளிநாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வந்ததாலும், நம் ஏற்றுமதி இறக்குமதியைவிட அதிகமாக இருந்ததாலும், 2000-04 வரையிலான நான்கு ஆண்டுகளில் நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சுமார் 2.3% வரை ப்ளஸ்-ல் இருந்தது. 2006 முதல் சரியத் தொடங்கிய இது, 2013-ல் 4.6 சதவிகிதத்துக்கு மேல் சென்று, நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கடையாக மாறி, நந்திபோல நடுவில் வந்து நிற்கிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறையை நாம் கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும். இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை குறைவாக இருப்பதால், ஏற்றுமதியை ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

சரி, இறக்குமதியையாவது குறைக்கலாம் என்றால், அதுவும் முடியாது என்பதே நிதர்சனம். காரணம், நம் இறக்குமதியில் பெரும்பங்கு வகிப்பது தங்கமும் கச்சா எண்ணெயும். தங்கத்தின் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டிருப்பதால், அதன் இறக்குமதி தற்போது குறிப்பிட்டுச் சொல்கிற அளவு குறைந்திருக்கிறது. எனினும், இந்த வரிகள் நீக்கப்பட்டால் மீண்டும் தங்க இறக்குமதி  கணிசமாக அதிகரிக்கும்.  

 அதேபோல, கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யவில்லை எனில், இங்கு எந்த வண்டியும் ஓடாது. வண்டிகள் ஓடவில்லையெனில், பொருளாதாரம் முன்னேறாது. எனவே, நடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது இரண்டாவது பெரிய சவால்!  

3. பணவீக்கம்! 

விலைவாசி உயர்வைத்தான் பொருளாதார பாஷையில் பணவீக்கம் என்கிறோம். இந்த பணவீக்கம் என்பது சாப்பாட்டில் சேர்க்கும் உப்பு மாதிரி. சாப்பாட்டில் உப்பு இருந்தால்தான் உணவு சுவைக்கும். பணவீக்கம் ஓரளவுக்கு இருந்தால்தான், பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். இதனால் அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் விலை அபரிமிதமாக உயராமல் இருக்கும்.  

ஆனால், சாப்பாட்டில் உப்பானது அளவுக்கு மிஞ்சி இருந்தால், அதை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிற மாதிரி, பணவீக்கம் அளவுக்கு மிஞ்சி இருந்தால், மக்களால் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்படியே வாங்க வேண்டும் எனில், கையில் இருக்கும் காசையெல்லாம் தரவேண்டிய நிலை உருவாகும். இதனால் மக்களின் சேமிப்பு குறையும். சேமிப்பு குறைந்தால், கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். கடனைத் திரும்பத் தரமுடியவில்லை எனில், பொருளாதாரம் திவாலாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தைத் தாண்டிச் சென்று, நம்மை எல்லாம் பயமுறுத்திய நுகர்வோர் பணவீக்க குறியீடு (சிறிமி), 2013 பிப்ரவரியில் 8.79 சதவிகிதத்தை அடைந்து, 2014 பிப்ரவரியில் 8.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த பணவீக்கத்தை சுமார் 5 சதவிகிதத்துக்குள் மோடி கொண்டுவந்தால் மட்டுமே மக்களின் சேமிப்பைப் பெருக்கி, மிகப்பெரிய வளர்ச்சியைக் காண வைக்க முடியும்.

பணவீக்கத்தினைக் குறைக்க பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டும். மக்களின் வருமானத்தைப் பெருக்க வேண்டும். முக்கியமாக, கச்சா எண்ணெயின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மூன்று முக்கியமான விஷயங்களில் முதலிரண்டு விஷயங்களைச் செய்வதற்கே மோடி மிகவும் கஷ்டப்பட வேண்டும். (கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவது மோடியின் கையில்  இல்லை. அதை உற்பத்தி செய்யும் நாடுகளே அதன் விலையை நிர்ணயம் செய்யும்!) இந்த மூன்று விஷயங்களிலும் காங்கிரஸ் அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யத் தவறியதால்தான் இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. அந்த நிலை தனக்கு வராமல் பார்த்துக்கொள்வது மோடியின் முன்பு இருக்கும் மூன்றாவது பெரிய சவால்! 

4. வட்டி விகிதம்! 

பணவீக்கத்தை ஒரு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதைச் செய்ய வேண்டிய வேலையை  ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்கிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி முயற்சி செய்கிறது. கடனுக்கான வட்டியை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுத்து, பொருட்களின் விலை உயராமல்  பார்த்துக் கொள்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், மக்களிடம் இருக்கும் பணம், வங்கி லாக்கருக்குள் முடங்குகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணம் கிடைக்காமல் திண்டாடுகின்றன. கடனுக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி உயர்த்திவிடுவதால், தொழில் நிறுவனங்களால் அதிக வட்டியில் கடன் வாங்க முடிவதில்லை. அப்படியே வாங்கினாலும் கிடைக்கும் லாபமெல்லாம் வட்டி கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது.

நம் நாட்டில் உள்ள நடைமுறையின்படி, கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்படியோ அல்லது குறைக்கும்படியோ மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக  கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவுக்கும் இடையே நடந்த பனிப்போர் எல்லோருக்கும் தெரியும். இப்போதிருக்கும் கவர்னர் ரகுராம் ராஜனும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்பவர் அல்ல. எனவே, இந்த பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது அவர்முன் உள்ள நான்காவது பெரிய சவால்.  


உள்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான தட்டுப்பாடு கடுமையாக இருக்கும்போது, வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினைப் பெறவேண்டிய கட்டாயம் ஒரு அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது. 1991-ல் தாராளமயமாக்கல் அறிமுகமானபிறகு ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டுக்குள்வரும் அந்நிய  முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதே காலகட்டத்தில் சீனா பெற்ற அந்நிய முதலீட்டுடன் ஒப்பிட்டால், பத்தில் இரண்டு பங்கு அளவுகூட நம்மால் அந்நிய முதலீட்டைப் பெற முடியவில்லை.

மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய முதலீட்டை குஜராத்தில் கொண்டுவந்து குவித்ததுபோல, இந்திய அளவிலும் குவித்தால் மட்டுமே தொழில்துறை அதிவேகமாக வளர்ச்சி காணத் தொடங்கும். ஆனால், அந்நிய முதலீடு நம் நாட்டுக்குள் வந்து குவிய வேண்டும் எனில், நமது தொழில் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரு மாநில அளவில் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்துவிட முடியும். ஆனால், அதையே இந்திய அளவில் செய்யும்போது, பல பிரச்னைகள் வரும்.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால், வணிகர்களின் வெறுப்புக்கு மோடி ஆளாக வேண்டியிருக்கும். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகிறார் என்பது மோடி முன் உள்ள ஐந்தாவது சவால்!






No comments:

Post a Comment