Search This Blog

Monday, March 31, 2014

நரேந்திர மோடி: காத்திருக்கும் சில சவால்கள்!

மானியச் சுமை! 

எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப்போதுதான் சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும்,  இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசாங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக மத்திய அரசாங்கம் செலவு செய்யும் தொகை ஆண்டொன்றுக்கு 85,000 கோடி ரூபாய்; 2004-05-ல் 76,096 கோடி ரூபாயாக இருந்த விவசாய மானியம், 2010-2011-ல் 1,42,254 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதுபோக, உணவு பாதுகாப்புத் திட்டத்துக்காக வழங்கப்படும் மானியம் 75,000 கோடி ரூபாய் என மானியச் செலவு மட்டுமே ஓர் ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்குமேல் செல்கிறது.


அரசின் இந்த மானியச் சுமையைக் குறைக்க வேண்டுமெனில், எதற்கு எவ்வளவு மானியம் தந்தால்போதும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு கண்டுபிடிக்கும் முறையை மோடி உருவாக்க வேண்டும். இன்றைக்கு விவசாயத்துக்கு தரப்படும் மானியமானது பணக்கார விவசாயிகளுக்கும், செயற்கை உரங்களைத் தயாரிக்கும் உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்குமே அதிகம் செல்கிறது.  டீசல் போன்ற எரிபொருட்களுக்குத் தரப்படும் மானியத்தினால், சாதாரண மக்கள் அடையும் நன்மையைவிட, அவற்றை அதிகம் பயன்படுத்தும் செல்வந்தர்களே நிறைய நன்மை பெறுகின்றனர்.

இந்த மானியத் தொகையைக் குறைத்தால், மக்களின் ஆதரவை மோடி இழக்கவேண்டியிருக்கும். குறைக்கவில்லை எனில், அரசு அந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் மோடி என்ன செய்யப் போகிறார்?    

பல்வேறு சீர்திருத்தங்கள்! 

நம் பொருளாதாரம் 2000-க்குப் பிறகு அதிவேகமாக வளரக் காரணம், 1991-க்குப்பின் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே! ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் எந்தச் சீர்திருத்தங்களும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

தொழில் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அந்நிய முதலீட்டை பெருமளவில் பெற முடியும். தொழிலாளர் பிரச்னையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் இன்னும் அதிக நிறுவனங்களை தொழில் தொடங்கவைக்க முடியும். இன்ஷூரன்ஸ் துறையில், நிதித் துறையில், ரீடெயில் துறையில் எனப் பல துறைகளில் முக்கியமான பல சீர்திருத்தங்கள் கிடப்பிலேயே இருப்பதால், பொருளாதாரம் வளர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  

இந்தச் சீர்திருத்தங்களை கொண்டுவர மோடி கடுமையான எதிர்ப்பை சந்திக்கவேண்டியிருக்கும். இந்த எதிர்ப்பை மோடி எப்படி சமாளிக்கப் போகிறார்?

ஊழல்! 

காங்கிரஸ் ஆட்சியின் முதல்பாதியில் பொருளாதார வளர்ச்சியானது ஓரளவுக்கு இருந்தாலும், அந்த ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நடந்த பல ஊழல்கள்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்து, அதுகுறித்த வழக்கு இன்றளவும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்து, இதுகுறித்து சிபிஐ இன்றும் விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரே அடிபட்டது பெரிய அதிர்ச்சி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் வீடு கட்டித் தரும் திட்டத்தில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான ஊழல் தகவல்களே இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்படச் செய்தது.

எனினும், மோடி ஆட்சிக்கு வந்தால், இந்த ஊழல் பூதத்தை எப்படி ஒழித்துக்கட்டப் போகிறார் என்பது முக்கியமான விஷயம். காரணம், காங்கிரஸில் சில ஊழல்வாதிகள் இருப்பதுபோல, பா.ஜ.க.வில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. லோக் ஆயுக்தாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளான எடியூரப்பா பா.ஜ.க.வில்தான் இருக்கிறார். பெல்லாரியில் இரும்புத் தாதுவினை இஷ்டத்துக்கு வாரி விற்ற ரெட்டி சகோதரர்களுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. குஜராத்தில்கூட லோக் ஆயுக்தா இதுவரை சரியாகச் செயல்படவில்லை என்கிற புகாரும் உண்டு. ஆக, ஊழல் என்கிற ஓட்டையை சரிசெய்யாதவரை வளர்ச்சி என்கிற கப்பல் மூழ்கவே செய்யும். ஆனால், இந்த ஊழல் ஓட்டையை அடைக்க மோடி என்ன செய்யப் போகிறார்?  

உள்கட்டமைப்பு!  

சாலை வசதிகள் தொடங்கி, மின்சக்தி உற்பத்தி செய்வதுவரை உள்கட்டமைப்பு என்கிற தலைப்பில் வரும் விஷயங்கள் பலப்பல. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண வேண்டுமெனில், உள்கட்டமைப்புக்குத் தேவையான அடிப்படை வேலைகளை நாம் செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் எந்தவகையிலும் வளர்ச்சி பெறவில்லை. போதிய நிதி வசதி இல்லை, சாலை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதில் சிக்கல் எனப் பல பிரச்னைகளில் சரியான முடிவு எடுக்காததினால், கெட்ட பெயரையே சம்பாதித்து இருக்கிறது காங்கிரஸ். மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, துறைமுகங்களைக் கட்டுவது, அணை கட்டுவது போன்ற பல விஷயங்களை அதிக அளவில் செய்வதற்கான பணம் நம்மிடம் இல்லை.செய்வதற்கான பணம் நம்மிடம் இல்லை.

என்றாலும், குஜராத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்தியா முழுக்கவும் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு  மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், இதைச் செய்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

வேலைவாய்ப்பு!  

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டுகளில், குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் குறைந்துள்ளதாகத் திட்ட கமிஷன் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2010, 2011-ம் ஆண்டு களில் வேலைவாய்ப்பின்மை 10.2% உயர்ந்துள்ளது. 2001 முதல் 2005 வரையில் 1.20 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், 2005 - 2010-ல் உருவாக்கப்பட்ட வேலை வெறும் 60 லட்சம் மட்டுமே. (பார்க்க 31-ம் பக்கத்தில் உள்ள அட்டவனை!) இதுபோதாது என்று 2012 - 2017 வரையிலான காலத்தில் புதிதாக 6.30 கோடிபேரும் இன்னும் 15 ஆண்டுகளில் 18.3 கோடிபேரும் புதிதாக வேலைவாய்ப்பைத் தேடி வரப்போகிறார்களாம். இத்தனை பேருக்கும் வேலை தருகிற புதிய திட்டங்களைத் தீட்டினால் மட்டுமே, இந்தியா வல்லரசாக மாறும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது மோடியின் முன் உள்ள இன்னொரு பெரிய சவால்! 

இந்தச் சவால்களையெல்லாம் மோடி எப்படி சந்திக்கப்போகிறார் என்பதில்தான் அவரது  எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமும் இருக்கிறது!

ஏ.ஆர்.குமார் 

 No comments:

Post a Comment