Search This Blog

Monday, March 02, 2015

OLA ஆட்டோஸ்

கால் டாக்ஸி சந்தை, இப்போது கால் செய்து அழைக்கும் டாக்ஸி சந்தையாக இல்லை. ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் வரவால், சில ‘டச்’களில் நச்சென்று நம்மைத் தேடிவருகிறது டாக்ஸி. இப்போது டாக்ஸி மார்க்கெட்டைத் தாண்டி, ஆட்டோ மார்க்கெட்டுக்குள் இறங்கியிருக்கின்றன கால் டாக்ஸி நிறுவனங்கள்.

பெங்களூரூ, சென்னை, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் சோதனை முறையில் கால் ஆட்டோ சேவையைத் துவக்கியிருக்கிறது Ola நிறுவனம். ஆனால், இதை கால் ஆட்டோ என்று சொல்ல முடியாது. காரணம், இதை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம்தான் அழைக்க முடியும்.
 
எப்படி இருக்கிறது ola ஆட்டோ?

ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் என மூன்று பிளாட்ஃபார்ம்களிலும் Ola அப்ளிகேஷன் இருக்கிறது. அப்ளிகேஷனைத் திறந்து, முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், உங்களுடைய இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் எடுத்துக்கொள்கிறது ஆப். இதில், செடான், மினி, ப்ரைம் ஆகியவற்றுடன் ‘ஆட்டோ’ ஆப்ஷனும் இருக்கிறது. உடனடியாகப் பயணிப்பதற்கு மட்டும்தான் ஆட்டோ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க முடியும். ஒவ்வொரு வகையான வாகனமும் நமக்கு அருகே, எங்கெங்கு இருக்கின்றன என்பதையும் மேப்பில் காட்டுகிறது அப்ளிகேஷன். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை மேப்பில் செலெக்ட் செய்ய முடியாது. இடத்தை டைப் அடித்து உறுதிப்படுத்தியவுடன், 1 நிமிடம் வரை அருகில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் நம் பயணத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என சோதனை செய்கிறது.

முதலில் இந்த அப்ளிகேஷனை டெஸ்ட் செய்தோம். சென்னை அண்ணா சாலையில் இருந்து, சாந்தோமுக்குச் செல்ல ஸ்மார்ட்போனில்  டச் செய்தோம். உடனடியாக ஒரு ஆட்டோ டிரைவரின் பெயர், புகைப்படம், ஆட்டோ எண் நம் திரையில் வந்தது. மேலும், இவருடைய ஆட்டோ எங்கு இருக்கிறது என்பதையும் மேப்பில் பார்க்க முடிந்தது. அடுத்து வந்த எஸ்எம்எஸ்-ல் ஆட்டோ டிரைவரின் மொபைல் போன் எண்ணும் இருந்தது. அந்த எண்ணை அழைத்தோம்.
 

‘‘சார். Ola-ல ஆட்டோ புக் பண்ணினேன். இப்போ எங்க இருக்கீங்க?’’

‘‘க்ரீம்ஸ் ரோடு பக்கத்துல இருக்கேன் சார். நீங்க எங்க இருக்கீங்க?’’

‘‘ஸ்பென்ஸர் பக்கத்துல நிக்கிறேன் வாங்க!’’

பத்து நிமிடங்களில் வந்தது ஆட்டோ. அப்ளிகேஷனில் வந்த ஆட்டோ பதிவு எண் சரியாக இருந்தது. நம்மை ஏற்றிக்கொண்டு மீட்டர் செட் செய்தார். அவருடைய போனில் ‘பயணி ஏறிக்கொண்டாரா’ என்று அழகாக தமிழில் காட்டியது. ‘ஆம்’ என்ற பட்டனை அழுத்திவிட்டு அவரே தொடர்ந்தார்.

‘‘இந்த அப்ளிகேஷன்ல லேண்ட் மார்க் வசதி கிடையாது சார். நீங்க சாந்தோம் போறீங்கன்னு மட்டும்தான் செட் செய்ய முடியும். ஆனா, சாந்தோம் சர்ச்சுக்குப் போறீங்களா, வேற எங்கேயாவது போறீங்களான்னு எல்லாம் செட் செய்ய முடியாது. அட... இது பரவாயில்லை. நீங்க கரெக்ட்டா எங்க இருக்கீங்கன்னு நீங்க கால் பண்ணி, இல்ல நான் கால் பண்ணி தெரிஞ்சுக்கிட்டாதான் உண்டு’’ என்றார். சாந்தோம் வரவும், மீட்டர் சார்ஜ் ப்ளஸ் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிக்கொண்டார். இந்த கூடுதல் 10 ரூபாயை ‘கன்வீனியன்ஸ் சார்ஜ்’-ஆக கொடுக்க வேண்டும் என்கிறது Ola.

அடுத்து ola அப்ளிகேஷனில் சாந்தோம் to சைதாப்பேட்டை ரூட்டைப் போட்டோம். ஆட்டோ டிரைவரே லைனுக்கு வந்தார்.

இவரிடம் விசாரித்தோம். Ola ஆட்டோஸ்-ன் பிஸினஸ் மாடல், இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. ஆட்டோ டிரைவர்களுக்கு மாதத்துக்கு 6,000 ரூபாய் ola கொடுத்துவிடுகிறது. தவிர, ஒவ்வொரு சவாரிக்கும் 30 ரூபாய் தருகிறது Ola.



‘‘ஆட்டோ ஸ்டாண்டுக்கு Ola ஏஜென்ட்டுகள் வந்து, Ola-ல் சேர்றீங்களான்னு கேட்டாங்க. என் லைசென்ஸ், ரேஷன் கார்டு, ஆட்டோ டாக்குமென்ட் எல்லாத்தையும் பார்த்துட்டு, சேர்ந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. கால் டாக்ஸி மாதிரி ஆட்டோவுக்கு வெளியில, Ola-ன்னு எந்த அடையாளமும் ஸ்டிக்கரும் ஓட்டலை. இது டெஸ்டிங்தானாம்.

ஆட்டோல வந்ததுக்கு நீங்க மீட்டர் சார்ஜ் தர்றீங்க. கூடுதலாக 10 ரூபாயும் தர்றீங்க. எனக்கு ஒவ்வொரு சவாரிக்கும் Ola 30 ரூபா தர்றாங்க. மேல, மாசத்துக்கு 6,000 ரூபாய் தர்றாங்க. இது தவிர, ஒருநாளைக்கு 12 மணிநேரம் போனை ஆஃப் பண்ணாம Ola-வுக்கு சவாரி ஓட்டினா, 100 ரூபாய் தர்றாங்க.  ஆனால், Ola-வுக்கு யாருமே காசு கொடுக்கலியே சார். இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களால எங்களுக்குக் காசு கொடுத்துக்கிட்டு இருக்க முடியும்னு தெரியலை!” என்றார்.

‘‘Ola அப்ளிகேஷன் மூலமாக ஆட்டோ புக் செய்யும் வசதி, ஆட்டோ ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களிடையே இப்போது பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை, பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் 30,000 ஆட்டோக்கள் Ola-ல் இணைந்துள்ளன. முன்பைவிட அதிகமாக வாடிக்கையாளர்கள் கிடைப்பதால், ஆட்டோ டிரைவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது’’ என்கிறது Ola நிறுவனம்.

ஆட்டோ டிரைவர்களுக்கும் வாடிக்கை-யாளர்களுக்கும் நன்மையளிப்பதாக இந்தத் திட்டம் இருந்தாலும், இன்னும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம். 

ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: தி.ஹரிஹரன்

No comments:

Post a Comment