Search This Blog

Sunday, March 04, 2012

அருள் மழை ---- 45


மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள்.
 
இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு வாடகை பிரச்னை இல்லை.

கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

"
பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார் "அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே' என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே....பெரியவாள்.
வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி.

"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம். என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே. அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே. என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?"

பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?" "சொன்னேனே! பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!" பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும் பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்" ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்; அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"
"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"

அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள். பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில் ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.

பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால் பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றக்கு என்ன,இப்படி? அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக் காக்க வைக்கலாமா? ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது. பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள். "திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீநிவாசனுக்கு திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீநிவாச கல்யாணம் நடக்கணும்..." பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள் குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.

அரை மணி ஆயிற்று. "சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு. "ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.

"
முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...." உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருககும் ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?

"
பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது. முதுகில் சுளீரென்று சாட்டையடி
இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.

"
கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார். 'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார். "சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."

"
அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா? புத்திரிக்குக் கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?" பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

"...
மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி... பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.

"
பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,அண்ணா சந்தோஷப்படுவார்..." தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு. இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன.
'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"
எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி' என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.
தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு வைத்துக் கொண்டால் போதும்.!

திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி
மகா பெரியவா திருவடிகள் சரணம்  
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

இதமளிக்கும் வெந்நீர்!


* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Saturday, March 03, 2012

மோதலில் சொதப்புவது எப்படி? - ஓ பக்கங்கள் , ஞாநி

சினிமாவில் காதல், காமெடி, சோகம், குடும்பம், வரலாறு, இசைச் சித்திரம் என்று பல வகைகள் இருப்பது போல போலீசின் ஒடுக்குமுறையில் ஒரு புதிய வகையாக ‘மோதல் கொலைகள்’ இந்தியாவில் உருவாகிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக 1975-76 நெருக்கடி காலகட்டத்தில் இந்த மோதல் கொலைக்கு அரசின் முழுமையான ஆசிகள் தரப்பட்டன. தமிழகத்தில் சுமார் 30 வருடங்களாக ‘மோதல் கொலைகள்’ நடைமுறையில் இருக்கின்றன.வேளச்சேரியில் பிப்ரவரி இறுதியில் ஐந்து வடமாநிலத்தவர்களை, குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் போலீசார் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி பற்றிய போலீஸ் தரப்புச் செய்திகளில் இருக்கும் ஓட்டைகளை தமிழ் சினிமாவில் புத்தம்புதுசாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற துணை இயக்குனர் கூட எளிதாகப் பட்டியல் இட்டுவிடமுடியும். சந்தேகத்துக்குரிய நபரின் வீடியோ என்று ஒன்றை போலீஸ் விளம்பரப்படுத்திய பத்தே மணி நேரத்தில் அந்த நபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே போய் அவரையும் இன்னும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுவிடவே முடிந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிவராஜன், சுபா படங்களை ஊர் ஊராக போஸ்டர் அடித்து ஒட்டி, தினசரி டி.வி.யில் காட்டியும் மாதக் கணக்கில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்ததுடன் ஒப்பிட்டால், காவல் துறையின் திறமை பல்லாயிரம் மடங்கு உயர்ந்துவிட்டதாகவே நம்பவேண்டியிருக்கிறது.முதல் ஓட்டை வீடியோவில் காட்டிய காட்சி. பணம் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு வங்கிகளிலும் கேமராக்கள் இயங்கவில்லை. இந்த வீடியோ சென்னையில் இருக்கும் இதர நூற்றுக்கணக்கான கொள்ளையடிக்கப்படாத வங்கிகளில் இயங்கிய கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பல மணி நேரம் பார்த்து துருவி எடுத்ததாம். வங்கி கவுன்ட்டர்களுக்கு எதிரே மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடமாடும் காட்சி. அதில் சுற்றிலும் இருக்கும் மக்களை மறைத்து விட்டு இந்த நபரை மட்டுமே காட்டியிருக்கிறது. நானும் நண்பரும் வெளியே சினிமாவுக்குப் போகிற வழியில் நண்பர் பாங்க்கில் ஒரு சின்ன வேலையை முடித்து விட்டு போகலாம் என்றால் நானும் கூடப் போவேனல்லவா. அப்போது நண்பர் கவுன்ட்டரில் தன் வேலையை முடிக்க மும்முரமாக இருக்கும்போது, வெட்டியாக இருக்கும் நான் என்ன செய்வேன்? அந்தக் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும்தான் உலாத்துவேன். யாராவது ஒருவரை கொஞ்சம் வேடிக்கை பார்ப்பேன். திடீரென்று ஏதாவது சத்தம் என் கவனத்தை ஈர்த்தால் அந்த கவுண்ட்டரை நோக்கி உற்றுப் பார்ப்பேன். வங்கி கேமராவில் பதிவான காட்சியில் என்னை மட்டும் பிரித்துப் பார்த்தால், நான் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடுவதாகத்தான் தோன்றும்.இந்த மாதிரி வீடியோ நறுக்குகளைத் தேர்ந்தெடுப்பதானால், ஒவ்வொரு வங்கியிலும் தினசரி பத்து பேராவது சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடுவதாகவே தோன்றும். 
 
 
எனவே இந்தக் குறிப்பிட்ட நபரை வீடியோ க்ளிப்பில் தேர்வு செய்ய போலீசிடம் முன் தகவல் ஏதாவது இருந்தாக வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளில் கொள்ளையர்களைப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளங்களின் அடிப்படையில் இந்த நபரை சரியாக பல மணி நேர வீடியோ க்ளிப்புகளிலிருந்து சலித்து எடுத்திருக்க முடிந்ததா? முன்தகவல்கள் பற்றி போலீஸ் எதுவும் சொல்ல வில்லை. கொல்லப்பட்ட ஐந்து பேரின் பிணங்களைப் போய் பார்த்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த ஐந்து பேரும்தான் எங்கள் வங்கியில் வந்து கொள்ளையடித்தார்கள் என்று அடையாளம் சொன்னதால் அது மட்டும்தான், இந்த வழக்கில் அந்த ஐவர்தான் கொள்ளையர்கள் என்பதற்கு ஒரே சாட்சியம்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இருந்த வீட்டிலிருந்து சில லட்சம் பணம் மட்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொல்லியது. ஆனால் தரையில் கிடக்கும் பிணங்கள், ரத்தக் கறை, துப்பாக்கிகள், வீடியோவில் காட்டியவர் அணிந்த சட்டை ஆகியவற்றையெல்லாம் படம் எடுத்துக் காட்ட அனுமதித்த போலீஸ், பணத்தை இதுவரை காட்டவில்லை. பொதுவாகக் கைப்பற்றிய நகைகள், பொருட்கள், பணம் இவற்றையெல்லாம் நிருபர்கள் முன்பு காட்சிக்கு வைப்பது போலீஸ் வழக்கம்.குடியிருப்புப் பகுதியில் தரை தளத்தில் தங்கியிருந்த ஐவரை விசாரிக்கத்தான் இரவு 12.30க்குச் சென்றோம் என்று போலீஸ் சொல்கிறது. கதவைத் தட்டியதும் திறக்காமல், ஐவரும் உள்ளிருந்து ஜன்னல் வழியே சுட்டதாகவும் அதில் இரு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதன்பின்னர் எச்சரித்தும் சரணடையாததால், வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு போய் சுட்டதில் ஐவரும் செத்ததாகவும் போலீஸ் கதை நீள்கிறது. பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தங்களைக் காத்துக் கொள்ளவும் சுட வேண்டியதாயிற்றாம். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்களுக்கு எங்கே ஆபத்து வந்தது? தூங்காமல் எட்டிப் பார்த்த ஓரிரு வீட்டினரையும் போலீஸ் வந்த உடனே எச்சரித்து உள்ளே போகச் சொல்லிவிட்டது. இனி போலீஸ் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே போலீசை நோக்கி ஐவர் சுட்டார்கள் என்ற கதையைப் பார்ப்போம். டி.வி.யில் காட்டப்பட்ட அந்த வீட்டுக் கதவுகள், ஜன்னல், சுவர்கள், எதிர்ப்பக்கம் இருக்கும் சுவர்கள் எதைப் பார்த்தாலும் இருதரப்புக்கும் இடையே பெரிய துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான அடையாளங்களே இல்லை. 
 
வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை திட்டமிட்டுப் பட்டப் பகலில் போய் துணிச்சலுடன் கொள்ளையடிப்பவர்கள்தான் உள்ளே இருந்தவர்கள் என்றால், அவர்களுக்கு அடிப்படை காமன்சென்ஸ் கூட இருக்காதா என்ன? வந்திருப்பது போலீஸ். அதை ஜன்னல் வழியே சுட்டுவிட்டு தாங்கள் தப்பித்துப் போவது எப்படி என்று யோசிக்க மாட்டார்களா? ஜன்னல் வழியே ஒருவன் சுட்டபடி போலீஸ் கவனத்தை ஈர்க்கும்போதே, அதைப் பயன்படுத்தி மற்றவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து இன்னொரு பக்கத்திலிருந்து தாங்களும் போலீசை நோக்கிச் சுட்டபடி தெருவுக்கு ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பார்கள்? எந்த மசாலா சினிமா பார்த்திருந்தாலும் இந்த அறிவு அவர்களுக்கு இருந்திருக்குமே? அப்போது போலீஸ் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஐவரும் இறந்திருந்தால், ஒவ்வொரு பிணமும் வீட்டுக்கு வெளியே, நடையில், வாசற் கதவருகில் அப்படித்தானே விழுந்திருக்க முடியும்? ஆனால் ஐவரும் உள்ளே ஒரே அறையில் செத்துக் கிடந்ததாகக் காட்டப்பட்டது. அப்படியானால், உள்ளிருந்துகொண்டு ஜன்னல் வழியே சுட்டுக் கொண்டே இருந்தால், போலீஸ் கொஞ்ச நேரம் கழித்துப் போய்விடும், அப்புறம் நாம் போகலாம் என்று நினைத்துச் சுட்டார்களா? அவ்வளவு முட்டாள்களாக இருந்தால் அவர்களால் எப்படி பட்டப்பகலில் வங்கியைக் கொள்ளையடிக்க முடிந்திருக்கும்? உள்ளேயிருந்து வெளியேறவும் வாய்ப்பில்லை, தப்பவும் முடியாது என்று உணர்ந்திருந்தால் ஏன் ஜன்னல் வழியே சுடப் போகிறார்கள்? ஒன்று சரண்டைவார்கள். அல்லது தற்கொலை செய்துகொள்வார்கள்.போலீஸ் சொன்னதாக பத்திரிகைகளில் வந்த இன்னொரு செய்தியின்படி அன்றிரவே அவர்கள் ஊரை விட்டு ஓட திட்டமிட்டிருந்தார்களாம். வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் ஊருக்குப் போகிறோம். அட்வான்சை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார்களாம். சுமார் 40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து வைத்திருக்கிறவன் வீட்டை காலி பண்ணுகிறேன் என்று ஏன் சொல்லிவிட்டுப் போக வேண்டும்? அட்வான்ஸ் பணம் வெறும் 20 ஆயிரத்தை திரும்ப வாங்குவதற்கா?வங்கிக் கொள்ளையர்கள் வேளச்சேரி வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல் உறுதியானதும் போலீஸ் அவர்களை உயிருடன் பிடிக்கத்தான் முயற்சித்திருக்க வேண்டும். அது கடினமானதல்ல. வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே உள்ளிருந்து சுட்டிருந்தால், போலீஸ் செய்திருக்க வேண்டிய எளிய வழி அதே ஜன்னல் வழியே ஏழெட்டு கண்ணீர்ப்புகை குண்டுகளை உள்ளே வீசுவதுதான். நிச்சயம் ஐவரையும் உயிரோடு கைது செய்திருக்க முடியும். தொடர்ந்து சந்தேகத்துக்குரியதாகவே ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலையும் இருக்கிறது. இதனால்தான் தெளிவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் என்கவுண்ட்டர் டெத் நடந்தால், சுட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தாக வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன. நிச்சயம் தவிர்க்க முடியாத சூழலில், தற்காப்புக்காகவும் பிற உயிர்களைக் காப்பாற்றவும்தான் போலீஸ் சுடவேண்டி வந்தது என்று நிரூபிக்காதவரை அதுவும் கொலைதான் என்பதே உச்ச நீதிமன்றக் கருத்து.வங்கிக் கொள்ளைகளின் பின்னணி என்ன? தனி நபர் கொள்ளையர்களா? தீவிரவாத இயக்கங்களா? இந்த ஐந்து பேர் மட்டும்தான் சம்பந்தப்பட்டவர்களா? அல்லது இன்னும் பலர் இருக்கிறார்களா? கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதிதானே மீட்கப்பட்டது ? மீதி எங்கே யாரிடம் போயிற்று ? இவையெல்லாம் கண்டறியப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். ஆனால் ஐவரும் கொல்லப்பட்டதால், பல தகவல்களும் அவர்களோடே மறைந்துவிடும். அப்படி மறைப்பதற்காகத்தான் கொல்லப்பட்டார்களா? இந்தக் கேள்விகள் எல்லாமே முக்கியமானவை. மனித உரிமை காப்புக் குழுவினர் பலரும் கோருவது போல ஒரு சி.பி.ஐ விசாரணை நடந்தால் மட்டுமே இதிலெல்லாம் கொஞ்சமாவது தெளிவு கிடைக்கும்.
 
இந்த மோதல் கொலைகளையடுத்து நடக்கும் சில ஆபத்தான போக்குகள் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்பட வேண்டியவை. முதலாவது போலீசார் கொள்ளையர்களைக் கொன்று மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திவிட்டார்கள் என்று வரிசையாக வங்கி அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என்ற பெயரில் சில குழுக்கள் பாராட்டு அறிக்கை வெளியிடுவதும் கமிஷனரை சென்று பாராட்டுவதும், கடற்கரையில் போர்டு வைத்துக் கையெழுத்திடுவதும் செய்யப்பட்டது. எந்தக் குற்றவாளியையும் கொலை செய்யும் அதிகாரம் எந்தச் சட்டத்தின் கீழும் போலீசுக்கு இல்லை. சட்டம் தரும் விதிவிலக்கையே சட்டமாக்கிவிட முடியாது. குற்றவாளியை நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்துவதுதான் போலீசின் திறமை. தானே கொன்று தண்டனை தருவது திறமையின்மையின் அடையாளமேயாகும். உண்மை நிலையைக் கண்டறிய வந்த பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான குழுவினரை பொது மக்கள் என்ற போர்வையில் சிலர் தடுத்தது அராஜகமானது. எண்பதுகளிலும் இதே போலத்தான் திருப்பத்தூர் பகுதியில் நடந்த நக்சலை-போலீஸ் மோதல்கள் பற்றி விசாரிக்க வந்த கிளாட் ஆல்வாரிஸ், வி.எம்.தார்குண்டே ஆகியோர் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டார்கள்.  இரண்டாவதாக வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வந்து இங்கே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக இங்கே வாழும் வட இந்தியர்களுக்கு, குறிப்பாக ஏழைத்தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வெறுப்புக் கருத்தை சில ஊடகங்களும் சில பத்திரிகைகளும் சில அமைப்புகளும் பிரசாரம் செய்கின்றன. இதன் விளைவாக மனநிலை சரியில்லாத ஒரு ஆந்திர இளைஞரை, பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் நிலை ஏற்பட்டது. உண்மையில் இங்கே வரும் இந்தியத் தொழிலாளிகள் நம்மால் சுரண்டப்படுகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரசு கட்டிய அத்தனை மேம் பாலங்கள், அண்ணா நூலகம், சட்டமன்றக் கட்டிடம் அனைத்துக்கும் வடமாநிலங்களிலிருந்து கட்டடத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை செய்ய வைக்கப்பட்டு தங்குமிடம், கழிப்பிடம் முதலிய வசதிகள் ஒழுங்காக இல்லாமல் சுரண்டப்பட்டார்கள். (சட்டமன்ற தண்ணீர் தொட்டி கட்டடம் முடிந்ததும் கடைசி நாள் கருணாநிதி அவர்களுக்கு அரசு செலவில் பிரியாணி விருந்து போட்டு ஹிந்திப் பாடல் இசை நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பிவைத்தார்!) இதேபோல பிற மாநிலங்களுக்கு பல ஏழைத் தமிழர்கள் சென்று பிழைக்கிறார்கள். ஒரு இன மக்களுக்கு இன்னொரு இன மக்கள் மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பது தொலைநோக்கில் மிக மிக ஆபத்தானது. ஒரு சில கொள்ளையர்கள் வட இந்தியர்களாக இருக்கலாம். அவர்களைச் சுட்டுக் கொன்ற சென்னை போலீஸ் துறையின் கமிஷனரும் வட இந்தியர்தானே! மூன்றாவதாக, பொதுமக்களில் சிலர் பேச்சுலர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று பேசுவதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டின. இன்றைய வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூருக்குச் சென்று தன்னைப் போன்ற நால்வருடன் தனியே வீடு எடுத்துத் தங்கிப் பிழைப்பது சகஜமாகி விட்டது. இந்நிலையில் பேச்சுலர்களுக்கு வாடகை வீடு தரக்கூடாது என்ற மனநிலையை ஊக்குவிப்பது அபத்தமானது. வேளச்சேரி நிகழ்ச்சி, நம் சமூகம் வரலாற்றிலிருந்து இன்னும் பல பாடங்களைக் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

எனது இந்தியா! ( ராஜ வாழ்க்கை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

வரலாற்றில் நாம் படித்த மன்னர்களுக்கும், கதைகளில் வரும் மன்னர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மன்னர்களின் பெயர்கள், அரசாண்ட வருடங்கள், போரில் அடைந்த வெற்றிகள், அரசாட்சி யின் சாதனைகள், தோல்விகள் ஆகியவை மட்டுமே பாடப் புத்தகங்களில் இருக்கின்றன. ஓர் அரசன் எத்தனை மணிக்கு எழுந்துகொள்வார், என்ன சாப்பிட்டார், எந்த விதமான உடைகளை அணிந்தார், எப்படி நீதிபரிபாலனம் செய்தார், எவ்வாறு உத்தரவு பிறப்பித்தார், எந்த இசையை விரும்பிக் கேட்டார், எந்தப் பெண்ணைக் காதலித்தார், யார் அவரது குரு... என்று, மன்னர்களின் ராஜ வாழ்க்கை பற்றி பல நூறு கேள்விகள் சாமான்யர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எழுத்தாளனின் கற்பனைதான் பல நேரங்களில் பூர்த்தி செய்கிறது.அப்படி என்றால், மன்னர்களின் அன்றாட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லையா? இந்த விஷயத்தில் மொகலாய மன்னர் கள் முன்னோடிகள். சக்கரவர்த்தி தூங்கி எழுந்ததில் இருந்து இரவு நடன விருந்து வரை அத்தனை முக்கிய நிகழ்வுகளையும் துல்லியமாக எழுதிவைத்து இருக்கிறார்கள்.அபுல்பாஸல் எழுதிய 'அக்பர்நாமா’, அப்துல் ஹமீத் லாஹுரி எழுதிய 'பாதுஷாநாமா’, ஜஹாங்கீர் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் 'மஆத்திரி ரஹிமீ’, ஷாஜகான் பற்றி சாதிக் கான் எழுதிய 'தாரீக் இ ஷா ஜஹானி’ போன்ற நூல்கள், மொகலாய அரசர்களின் முழுமையான வாழ்க்கைப் பதிவேடு களாக இருக்கின்றன.இந்த அரச சரிதங்களை வாசிக்கையில், ஒரு முக்கிய உண்மையை அறிந்துகொள்ள முடிகிறது. வெகு தூரத்தில் இருப்பவர்களைக்கூட தனக்குக் கீழ் அடிபணியச் செய்துவிடுகிறது அதிகாரம். ஆனால் அதுவே, கூடவே இருக்கும் குடும்பத்து மனிதர்களை அந்நியர்கள் ஆக்கி, உட்பகையையும் உருவாக்கி விடுகிறது.காட்டில் மிகவும் உயரமாக வளர்ந்துவிட்ட மரம், மற்றவற்றில் இருந்து தனிமைப்பட்டுவிடும் என்பார்கள். விண்ணை முட்டுவது ஒரு வகையில் பெருமிதம், மறு வகையில்... அறிந்து தனிமைப் படுதல்.
உயரமாக வளர்ந்துவிட்ட மரத்துக்கு துணை இருக் காது. அதைக் காணும் மனிதன் தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து வியப்போடு பாராட்டுவான். அதே மரத்தை இன்னொரு மனிதன் இது யாருக்கும் பயனற்ற நெடுமரமாக நின்றிருக்கிறது எனக் கடுமை யாக விமர்சனம் செய்வான். இப்படி வியப்பும் விமர்சனமும் இணைந்ததுதான் மன்னர்களின் வாழ்க்கையும். பயம்தான் மன்னரின் ஒரே தோழன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. அரசனின் வாழ்க்கை என்பது வெட்டவெளியில் ஏற்றிவைக்கப்பட்ட தங்க விளக்கு போன்றதே. காற்று எப்போது அதை அணைத்துவிடும் என்று யாருக்கும் தெரியாது.'நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள், எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக்கொள், இருவர் மீதும் கவனமாக இரு, இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம்’ என்று மன்னர்களுக்கு ஆலோசனை சொல்வார்களாம். அதுதான், சரித்திரத்தில் நடந்திருக்கிறது. முக்கால் வாசி இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த சக்கரவர்த்திக்குக்கூட அமைதியான நல்ல சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.பிரம்மாண்டமான மாளிகையில் ஆயிரம் வேலை யாட்கள், பல நூறு காவலர்கள் சூழ, தங்கக் கட்டி லில் படுத்துக்கொண்டு, வெள்ளி டம்ளரில் பால் அருந்தியபடி மகிழ்வது மட்டுமே இல்லை அரசனின் வாழ்க்கை. ஒரு நாளில், அதிகாலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை அவனது வேலைகள் முறையாகத் திட்டமிடப்பட்டன. இதற்காக, நேரத்தைப் பகிர்ந்து தரும் விசேஷ முறை ஒன்று அக்பர் காலத்தில் நடை முறையில் இருந்திருக்கிறது.'ஐரோகா இ தர்ஷன்' என்பது, பொது மக்களுக்குக் காலையில் தரிசனம் தந்து திறந்தவெளி தர்பார் நடத்துவது. 'திவானி காஸ் ஒ ஆம்’ என்பது, அரச மண்டபத்தில் நடக்கும் தர்பார். 'குஷால் கானா’ என்பது, தனியறை சந்திப்பு. அலாவுதீன் கில்ஜி, சிறுபொருட்களின் விலைகளைக்கூட அவரே நிர்ணயம் செய்து இருக்கிறார். அக்பரும் பாபரும் அரசாங்க நடைமுறை ஒழுங்கினை நேரடியாகக் கவனித்து உள்ளனர். அரபுக் குதிரைகள் என்ன விலைக்கு வாங்கப்படுகின்றன என்பதில் இருந்து, உள்ளுர் சந்தையில் மாம்பழம் என்ன விலை என்பது வரை அக்பரின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.அரச பதவி என்பது ஆண்டவனின் அன்பளிப்பு. அது, ஆயிரம் நற்பண்புகள் பெற்ற ஒருவருக்கே கிடைக்கிறது என்கிறார் அபுல் பாஸல். பேராற் றல், பெருந்தன்மை, அளப்பறிய பொறுமை, முன் யோசனை, சான்றாண்மை, நேர்மை, கொடை மனம், குறையாத சிந்தனை, குற்றங்களை மன்னிக்கும் திறன், ஒப்புரவாண்மை, உயர் கருணை, சமய வேற்றுமை பாராத மனம், காலமறிந்து செயல்படுதல், எதற்கும் அஞ்சாத துணிச்சல், சுயநலமின்மை இத்தகைய பண்பு கள் இருப்பவரே சிறந்த அரசராகத் திகழ முடியும்.
மன்னரானவர் அதிகாலை 3 மணிக்கு எழுந் துகொள்கிறார். அதுவும், அவராக எழுவது இல்லை. துயில் எழுப்புவது மன்னருக்குப் பிடித்த ராணி யின் வேலை. மன்னர் எந்தப் பெண்ணோடு எந்த அறையில் தூங்கினாலும், துயில் எழுப்பும் ராணிதான் தினமும் எழுப்ப வேண்டும். சூரியன் உதயமாவதற்குள், மக்களைச் சந்திக்க மன்னர் தயாராகிவிட வேண்டும் என்பது நடைமுறை.பன்னீரும் ரோஜாப்பூக்களும் பெர்ஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளித்துவிட்டு தயாராக வேண்டும். இந்தக் குளியல் கூடத்தில் 12 பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள், மன்னர் குளிப்பதற்கான தண்ணீரைத் தனியே முத்திரையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இளம் சூடான தண்ணீரில்தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்ய தனியாக ஒரு பணியாள் இருந்தார்.அதுபோல, மன்னரின் உடலுக்கு சந்தனம் மற்றும் வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிடுவதற்கு பணிப்பெண்கள் உண்டு. குளித்து முடிந்தவுடன் அவருக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களில் எதை அவர் அணிந்துகொள்வது என்று தேர்வு செய்வார்கள். மன்னர் அந்த வஸ்திரத்தை அணிந்துகொண்டதும் சிறு பறை எழுப்பப்படும். அந்த ஓசை மன்னர் துயில் நீங்கி தனது நாளைத் துவக்கிவிட்டார் என்பதற்கான அறிவிப்பு.அதன் பிறகு, அரண்மனை வைத்தியர் மன்ன ருக்கு நாடி பரிசோதனை செய்து, அவரது வயிற்று உபாதைகள், உஷ்ணம், நாக்கின் தன்மை, மூத்திர நிறம், மலத்தின் தன்மை, தோல் நிற மாற்றம், பாதங் களின் மிருது, சுவாச வேகம் போன்றவற்றை அறிந்து சொல்வார். மருத்துவரின் ஆலோசனைப்படி, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த பழரசத்தை விலக்கிவைக்க வேண்டும் என்பதை மன்னர் முடிவு செய்துகொள்வார்.இதற்குப் பிறகு, மன்னர் தனது குருவை, கடவுளை வணங்க வேண்டும். தினமும் அறவுரை வழங்க ஓர் ஞானி அரண்மனையில் இருப்பார். அவர் அன்றைக்கான ஞானவுரையை மன்னருக்கு சொல்வார். அதைப் பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும். அது முடிந்தவுடன் மன்னருக்காக விசேஷமாக பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் அர்ச்சகர்கள் காத்திருப்பார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் அதிகாலையில் சூரியனை வழிபடு கிறார்கள் என்பதால், சூரியனை வழிபடும் நேரத்தில் அரசன் தரிசனம் தருவது முக்கியமானது என்ற நடைமுறை, அக்பர் காலத்தில் இருந்து இருக்கிறது. அதனால், மன்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட தனி மாடத்தில் நிற்பார். அதிகாலையிலேயே கூடி நிற்கும் மக்கள், மன்னரை வணங்கி வாழ்த்தொலி சொல்வார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மன்னர், சூரியனை வணங்குவார். பின், மக்கள் குறை தீர்ப்பதற்கு திறந்தவெளி தர்பார் தொடங்கிவிடும். இது, ஒன்றரை மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில், மக்கள் எளிதாக மன்னரை அணுகி தங்களின் பிரச்னைகளை முறையிடலாம். அங்கு கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பிரச்னைகள் முறையாக விசாரிக்கப்பட்டு நீதித் துறை எழுத்தர்கள் மூலம் குறிப்பு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

விகடன்  

Friday, March 02, 2012

சினிமாவுக்கு அடையாளம் தந்த வங்காளம்!

இன்று இந்தியத் திரை உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இந்தியத் திரைப்படங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது மேற்குவங்காளத்தில் தான். ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதும், கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று ஒவ்வொன்றாக இந்தியத் திரைத்துறைக்கு கற்றுத் தந்தது மேற்கு வங்க சினிமா துறைதான்.தெற்கு ஆசியாவில் சினிமா என்றாலே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் பெயர்கள், கொல்கத்தாவையும் டாக்காவையும்தான். 1890-ம் ஆண்டு பயாஸ்கோப் காட்சியை, மக்கள் மத்தியில் இதுதான் சினிமா என்று உச்சரிக்க வைத்தது கொல்கத்தாவில்தான். ஹிரா லால்சென்தான் முதன்முதலில் ராயல் சினிமாஸ்கோப் சினிமா கம்பெனி நிறுவனத்தைத் தொடங்கினார்.அதுவரை வீட்டில் ரேடியோ பெட்டியை மட்டும் காதில் வைத்துக்கொண்டிருந்தவர்கள், வீதிக்கு வந்து ஒரு பெட்டிக்குள் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தனர். பயாஸ்கோப் அடைந்த வெற்றிதான் வங்காள திரைப்பட வளர்ச்சி உலக அளவுக்குச் செல்ல அடித்தளமாக அமைந்தது.1918-ல் திரேந்திரநாத் கங்குலி இந்தோ பிரிட்டிஷ் பிலிம் அண்ட் கோ கம்பெனியை உருவாக்கினார். வங்காள மொழியில் சொந்தமாக ஒரு பட கம்பெனி உருவானது அப்போதுதான். இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் பில்லாத் பெராத். மாடன் தியேட்டர் நிறுவனம் 1919ல் பல்வா மங்கள் என்ற திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் முழுநீள திரைப்படம். அதற்குப் பிறகு அதே நிறுவனம் 1931-ம் ஆண்டு அமர் சௌதாரி இயக்கத்தில் ஜமாய் சாஸ்தி திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம் தான் வங்காளத்தில் வெளியான முதல் பேசும் திரைப்படம். 
விளம்பரப் படத்துக்கு அடித்தளமிட்டதும் கொல்கத்தாவில்தான். ஹிராலால் சென் முதலில் விளம்பர படத்தை கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தினார். 1931 கால கட்டத்தில் வங்க மொழி திரைப்படத் துறையில் புகழின் உச்சியில் இருந்தவர்கள் பிரம்மதீஸ் பரூவா, தீபகி போஸ். பரூவா நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இன்று நாம் பார்க்கும் நவீன சினிமாவுக்கு அடையாளம் கொடுத்தவர் பரூவாதான். அதேபோல தீபகி போஸ் 1932-ம் ஆண்டு சந்திதாஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார். முதன்முதலில் பின்னணி இசையை இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.இந்தியாவில் முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்த சத்யஜித்ரே என்ற மாபெரும் திரைப்பட இயக்குனரைத் தந்ததும் மேற்கு வங்க சினிமாதான். திரைப்படத் துறையில் பெரும் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியவர் இவர்தான். எழுத்தாளர், புத்தக வெளியீட்டாளர், ஓவியர், கிராபிக் டிசைனர், திரைப்பட இயக்குனர் என்ற பன்முக திறமை கொண்ட ரே இயக்கிய படங்கள் மொத்தம் 37. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி. இந்தத் திரைப்படம் 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இவருடைய திரைப்பட வாழ்வில் 32 தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் இவரின் சாதனையைப் பாராட்டி 1992-ம் ஆண்டு, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. மனிதர்களின் உணர்வுகளையும், இந்திய கலாசாரத்தையும் தன்னுடைய படத்தில் காட்டுவதை எப்போதும் தவறியதில்லை ரே. தாகூர் பற்றிய இவரின் டாக்குமென்ட்ரி திரைப்படம் இன்றுவரை பாராட்டுக்குரியதாக விளங்குகிறது. வாழ்க்கை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல், வித்தியாசமான திகில் படங்கள், துப்பறியும் படங்களையும் இயக்கி, அதில் வெற்றியும் கண்டார் ரே. இருபத்தி நான்கு மணி நேர ரயில் பயணத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய கதை முழுவதும் ஒரு ரயில் பெட்டியிலேயே எடுத்து முடித்த சாருலதா என்ற சத்யஜித்ரேயின் படத்தின் வெற்றியை எந்த சினிமா சம்பந்தப்பட்டவர்களாலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடித்திருந்த உத்தம் குமார், நாயகி ஷர்மிளா தாகூர் இருவரும் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.வங்க மொழி திரைப்படத்துறைக்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம் மிருணாள் சென். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய மிருணாள் சென், திரைப்பட ஸ்டூடியோவில் ஆடியோ டெக்னீஷியனாகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் சினிமா மீதான காதலில் 1953ல் முதல் திரைப்படத்தை உருவாக்கினார். அவருடைய இரண்டாவது படம் நீல் அக்ஷார் நீச்சி மேற்கு வங்காளத்தை மட்டுமல்ல, சுற்றியுள்ள மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 
பெய்ஸி ஷர்வண் திரைப்படம் சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சினிமா இந்திய சினிமாவில் புதிய பாணியை ஏற்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் போன்ற ஏதோ ஒரு துறையில் ஒரு புதுமையைப் புகுத்தியிருப்பார். அதுதான் மிருணாள் சென்னின் பாணி. இவரது சினிமா கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, கார்லோவேரி, சிக்காகோ, கெய்ரோ போன்ற இடங்களில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. 

அகிலன்

காதலைக் கையாள்வது எப்படி?

இன்று சமூகத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால், இரு வேறு ஜாதி, மத, கலாசாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை இன்னமும் பெற்றோர்களால் அத்தனை சுலபமாக ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்த நிலை. இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?

‘தங்களுடைய திருமணம் குறித்து முடிவெடுக்கும் மனப் பக்குவம் ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய சம்மதத்தைத் தெரிவிப்பதுதான் சரியான அணுகுமுறை. பதினெட்டு வயது கூட ஆகாத நிலையில் காதல், திருமணம் என்று மகனோ, மகளோ பேசும்போது, உடனே சீறி விழாமல், ‘திருமணம் குறித்து முடிவெடுக்கும் அளவுக்கு உங்களுக்கு மெச்சூரிட்டி இல்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து அது பற்றி யோசித்தால் சரியாக இருக்கும்’ என்பதை அவர்களுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்றால் பெற்றோர்களின் பொறுப்பு; காதல் திருமணம் என்றால் அது பிள்ளைகளின் பொறுப்பு என்ற எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக ஊறி இருக்கிறது. பெற்றொர்கள் பார்த்து ஏற்பாடு செய்கிற திருமணத்திலும் சரி, காதல் திருமணங்களிலும் சரி நல்ல புரிதலோடு, வாழ்க்கை நடத்துகிறவர்களும் உண்டு; இருவருக்குள் ஒத்துப் போக முடியாமல் பிரிந்து விடுபவர்களும் உண்டு. எல்லா திருமணங்களிலும் பிரச்னைகள் இருக்கும்; அந்தப் பிரச்னைகளை அவர்களுக்குள்ளே எப்படித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

முதலில் பெற்றோர்கள், தங்கள் பையனோ, பெண்ணோ தங்கள் திருமணம் குறித்த முடிவை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தக் காலத்து இளைய தலைமுறையினர் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எந்த விஷயமானாலும் நல்லது, கெட்டது பற்றி அலசி, முடிவு எடுக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த உண்மையைப் பெருந்தன்மையோடு பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இன்னொரு முக்கியமான விஷயம் காதலிக்கிற வயது. காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் சேர்ந்து, வாழ்க்கையில் செட்டிலான பிறகு காதல் என்றால், அது இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படுகிற காதல் இல்லை. அதை பெற்றோர்கள் தடுக்க முயற்சிக்க வேண்டாம். அவர்களிடம் இரு தரப்பிலும் உள்ள வேறுபாடுகள், அவற்றால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவற்றை உட்கார்ந்து பேசலாம். எடுத்த உடனே, ‘உங்கள் காதல் விஷயத்தில் இதெல்லாம் பிரச்னை; எனவே வேண்டாம்’ என்று எதிர்மறையான அணுகுமுறையில் துவங்காமல், ‘இதெல்லாம் பிரச்னைகள்; இவற்றை எப்படிச் சமாளிப்பது? என்று அணுக வேண்டும். பிரச்னைகளை எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி, அது பற்றி யோசித்துப் பார்க்க அவர்களுக்கு அவகாசம் கொடுங்கள். அப்போது உங்கள் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டு, நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சாத்தியமுண்டு. இருவரும் இந்தத் திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்குக் கூட வரலாம்.

அப்படி இல்லாமல், ‘இது சரிப்படாது!‘ அணுகுமுறையில், உங்கள் தரப்பில் அக்கறையோடு சொல்லப்படும் வெகு யதார்த்தமான உண்மைகளைக் கூட அவர்கள் புரிந்து கொள்ள பொறுமை காட்டாமல், தங்கள் முடிவில் மேலும் உறுதியாகி, உங்களை எதிர்க்கவும் துணிவார்கள். சட்டப்படி மேஜரான அவர்களது முடிவில் நீங்கள் தலையிட முடியாது போகும். குறிப்பாக பெற்றோர்களால் மிகவும் அடக்கி வைத்து வளர்க்கப்பட்ட குழந்தைகள், வளர்ந்து, வேலைக்குப் போகிறபோது, சுதந்திரத்தின் வெளிப்பாடாகக் காதலிக்கவும் அந்த விஷயத்தில் பெற்றோர்களை எதிர்க்கவும் துணிவது இயல்பு. அதனைத் தொடர்ந்து வீட்டுக்குத் தெரியாமல் கோயிலுக்குப் போய் திருமணம் செய்துகொள்வது, நண்பர்கள் உதவியோடு பதிவுத் திருமணம் போன்றவை எல்லாம் நடக்கும்.அப்படித் திருமணம் நடந்தாலும், பெற்றோர்களின் கோபம் ஒரு குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும். அதன் பிறகு உறவு புதுப்பிக்கப்படும். எதற்காக இப்படி சில வருட இடைவெளியை நாமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? சற்று புத்திசாலித்தனமாகவும், யதார்த்தமாகவும் பிரச்னையை அணுகினால், அதைத் தவிர்க்கலாமில்லையா?இருபது, இருபத்தியோரு வயதில் காதல் என்றால், அதில் முதிர்ந்த மனப்பக்குவம் இருக்காது. அந்த சமயத்தில் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுப்பது சகஜம். ஆனால் அதேநேரத்தில் தங்களுடைய அனுமதி மறுப்புக்கு ஜாதி, அந்தஸ்து, கலாசாரம், மொழி போன்ற காரணங்களைச் சொல்லக் கூடாது. மாறாக, ‘திருமணம் பற்றி முடிவு எடுக்கும் வயது, மனப்பக்குவம் உங்களுக்கு இல்லை; என்று சொன்னால், நிச்சயம் பலன் இருக்கும்.

அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சந்திப்புக்குத் தடை போடுவது தவறு. அவர்கள் சந்தித்துப் பேசினால்தான், அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட கால காத்திருப்புக்குப் பிறகு தங்கள் திருமணம் குறித்து சரியான முடிவை எடுக்க முடியும்.பெற்றோர் நிச்சயித்த திருமணம், காதல் திருமணம் என்று இரண்டு வகை இருக்கும். இப்போதெல்லாம் மூன்றாவதாக ஒரு வகை திருமணத்தையும் கவனிக்கிறேன். அதுதான் பெற்றோர்களின் ஒப்புதலோடு நடக்கிற காதல் திருமணம். இருதரப்பு பெற்றோர்களும் தங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில் கன்வின்ஸ் செய்து, அவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வது. இது கூட வரவேற்கத்தக்க விஷயம்தான்.

மனோதத்துவ நிபுணர் டாக்டர் விஜய் நாகசுவாமி.

 

Thursday, March 01, 2012

இந்திய கிரிக்கெட் இனி...

 
டோனி-சேவாக் இடையே சண்டை, சச்சினை ஓய்வுபெறச் சொல்லும் விவாதம், வெளிநாட்டில் தொடரும் 'தொடர் தோல்வி’கள்... உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வருடத்துக்குள்ளா கவே இந்திய கிரிக்கெட் அணி இவ்வளவு சொதப்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! என்னதான் பிரச்னை?
 
கிரிக்கெட் மதமல்ல!  
 
ம்... இனிமேலும் கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் அல்ல. இன்றைய நிலவரத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க ஒரு வணிகமாகிவிட்டது. அதிலும் 20/20 யுகம் ஆரம்பித்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வீரர்களும் ஒவ்வொரு நாளையும் வருமானத்தை மனதில்வைத்தே திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்!  உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டால் இந்தியாவில் திறமையான இளம்வீரர்களை அடையாளம் காண முடியவில்லை. சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லக்ஷ்மணுக்குப் பிறகு அவர்களுக்கான மாற்றுவீரர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை  மெனக்கெடவில்லை. ஐ.பி.எல். போட்டி களைச் சிக்கல் இல்லாமல் நடத்துவது மட்டும்தான் இந்திய கிரிக்கெட் போர்டின் முழு நேரப் பணியா?

ஓய்வுக்கே ஓய்வு!

வ்வளவு திறமையான ஆட்டக்காரராக இருந்தாலும் ஃபார்மில் இல்லாவிட்டால், உடனடியாக அணியில் இருந்து நீக்கி, அணியைத் திறம்பட நிர்வகிப்பது எப்படி என்பதைச் செயலில் காட்டுகின்றன ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள். ஸ்டீவ் வாக், மார்க் வாக்கில் தொடங்கி கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப் என, இப்போது ரிக்கி பாண்டிங் வரை ஒரு தொடரை வெற்றிகரமாக முடித் துத் தர முடியாதவர்களைக் கொஞ்சமும் தயங்காமல் தூக்கிவிடுவார்கள். ஆனால், இது இந்திய அணியில் சாத்தியமா? ஒருவேளை ஸ்டீவ் வாக் இந்திய அணியில் இருந்திருந்தால், இன்று வரை இந்திய அணிக்காக அவர் விளையாடிக்கொண்டுதான் இருந்திருப்பார். டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னமும் ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆகியோரை  அழைத்து வருகிறார்கள். ஐ.பி.எல்-ல் இரண்டு மேட்ச் அபாரமாக ஆடினால், உடனடியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு. இந்திய அணியில் இரண்டு போட்டிகளில் சொதப்பிவிட்டால் உடனடியாக அவர் தூக்கியடிக்கப்படுவது  என்ன நியாயம்? 

சச்சினின் ஓய்வு இப்போது அவசியமா?


'சச்சின் ஓய்வுபெற வேண்டும்!’ என்ற கபில்தேவின் கருத்துக்கு உலகம் முழுக்க கிரிக்கெட் ஆர்வலர்களிடையே கடும் கண்டனம்தான் கிளம்பியிருக்கிறது. அணியில் அனைவரும் சாதனை மேல் சாதனைகளைக் குவித்துக்கொண்டு இருக் கும்போது, சச்சின் மட்டும் சொதப்பிக்கொண்டு இருப்பதுபோல அவரைஓய்வெடுக்கச் சொல்வது, அர்த்தமே இல்லாத வாதம்! சச்சினுக்கு எதிரான இந்தக் கோஷத்துக்குக் காரணம், சச்சினை இந்திய அணியின் 11 வீரர்களில் ஒருவராகப் பார்க்காமல், அவரை மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியாகப் பார்க்கும் போக்குதான்! விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும்சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிறைந்த இந்தியாவில், அது பொய்க்கவும் டெண்டுல்கரின் ஓய்வு குறித்து விவாதிக்கிறார்கள். ''உடலளவிலும் மனதளவிலும் சச்சின் இன்னும் முழு பலத்தோடு இருக்கிறார். அவரை ஓய்வுபெறச் சொல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை!'' என்ற சௌரவ் கங்குலியின் வார்த்தைகளில் பொருள் இருக்கிறது!

வேகமும் வியூகமும் இல்லாத வேகப் பந்து வீச்சு!

ந்நிய மண் தோல்விகளுக்கு மிக முக்கியக் காரணம் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது மட்டுமே! ஜாகீர் கான் தவிர சர்வதேச தரத்துக்குப் பந்து வீசுபவர் யார் இருக்கிறார்கள் அணியில்? அதனாலேயே ஜாகீர் கானைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் டோனி. ஜாகீரும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக 'ரிஸ்க்’ எடுக்காமலேயே பந்துவீசிக்கொண்டு இருக்கிறார். எப்போதும் உலகின் டாப் 3 சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவர் இந்தியராக இருப்பார். இப்போது அந்தச் சூழ்நிலையும் இல்லை. இளம் வேக-சுழற்பந்து வீச்சாளர்களை பள்ளிப் பருவத்திலேயே கண்டறிந்து இந்திய கிரிக்கெட் வாரியம் தத்தெடுத்துப் பயிற்சியளிக்க வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் செலவு செய்ய அவர்களிடம் 'பட்ஜெட்’ இருக்கிறதா என்பது சந்தேகமே! 

இந்திய கிரிக்கெட்டில் கோடீஸ்வர வியாபாரிகளின் செல்வாக்கும் ஊழலும் தெளிவற்ற தொலைநோக்குத் திட்டங்களும் தொடரும்வரை இந்திய அணி வீட்டில் புலி, வெளியே எலியாகத்தான் இருக்கும்! 

சார்லஸ்
விகடன்  

கோல்டு இ.டி.எஃப்.!


இன்றைக்குப் பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கும் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது தங்கத்தின் விலையேற்றம். நாளுக்கு நாள் இதன் விலை ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டு, இனிமேல் நம்மால் தங்கம் வாங்க முடியுமா என அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் நடுத்தர மக்கள்.

முன்பு தங்கத்தை ஆபரணமாகவோ, தங்க நாணயமாகவோ வாங்கி வந்த முதலீட்டாளர்கள், இப்போது கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு, கோல்டு பெட்டல் என பல வகைகளில் வாங்கி முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கம் விலையேறியதற்கு இது ஒரு முக்கிய காரணம். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 15,630 ரூபாய். இப்போது அதன் விலை 21,552 ரூபாய். பங்குச் சந்தையைவிட கூடுதலான லாபத்தைத் தந்ததால், இப்போது எல்லோரது கவனமும் இ.டி.எஃப்., இ-கோல்டு போன்றவற்றின் மீது விழுந்திருக்கிறது. புதிதாக வந்திருக்கும் இந்த முதலீடு பற்றி இனி விளக்கமாக:

கோல்டு இ.டி.எஃப்.!

2007-ல் பெஞ்ச்மார்க் நிறுவனம்தான் இந்தியாவில் முதல் கோல்டு இ.டி.எஃப்.பை அறிமுகம் செய்தது. தற்போது எட்டு நிறுவனங்கள் இ.டி.எஃப். திட்டங்களை நடத்தி வருகின்றன. ஒரு கிராம் தங்கத்தை வாங்குவதற்குப் பதில் ஒரு யூனிட் இ.டி.எஃப். வாங்கி விடலாம். முன்பு இ.டி.எஃப்.பை வாங்கினால் மீண்டும் பணமாகவே திரும்ப கிடைக்கும். ஆனால், தற்போது 10 யூனிட்டிற்கு மேல் இ.டி.எஃப். வாங்கியிருந்தால், பணத்திற்கு பதில் தங்கமாக வாங்கலாம்.   2010-ல் இ.டி.எஃப். மூலம் 15 டன் தங்கத்தை வாங்கினார்கள் நம் முதலீட்டாளர்கள். இது 2011-ல் 30 டன்னாக அதிகரித்தது. தனிநபர்கள் மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களும் இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. 2011-ன் பிற்பாதியில் பங்குச் சந்தை சரிந்தபோது பல நிறுவனங்கள் இ.டி.எஃப்.-ல் நம்பிக்கை வைத்து அதில் முதலீடு செய்யத் தொடங்கின. ஆனால், இந்தாண்டு பங்குச் சந்தை 11% அதிகரித்திருக்கிறது. எனினும், இ.டி.எஃப்.-ல் நிறுவனங்கள் செய்யும் முதலீடு  100% அதிகரித்துள்ளது. உலக அளவிலும் கோல்டு இ.டி.எஃப்பிற்கான தேவை அதிகரித்து 933 டன்னாக உள்ளது.  

இ-கோல்டு!

இதுவும் இ.டி.எஃப். போன்ற திட்டம்தான் என்றாலும், இதில் நாம் வாங்கும் தங்கத்தை டெலிவரியாக எடுத்துக் கொள்ள முடியும். 2010-ல் தொடங்கப்பட்ட நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் இ-கோல்டு, இ-சில்வர், இ-காப்பர், இ-ஜிங்க் என பலவற்றையும் விற்று வருகிறது.  இதில் அதிகம் வர்த்தகமாவது இ-கோல்டுதான்! 8 கிராம், 10 கிராம், 100 கிராம் என டெலிவரி எடுக்கும் வசதி இதில் இருப்பதால் இந்த முதலீட்டை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். 2010-11-ம் நிதியாண்டில் தினமும் 150 கோடி ரூபாய்க்கு இ-கோல்டு டேர்ன் ஓவர் நடந்திருப்பதாக என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்ச் கூறியுள்ளது. வெளிப்படையான விலை, தங்கத்தை ஹோல்டிங் செய்ய கட்டணங்கள் கிடையாது போன்ற வசதிகளால் சிறு முதலீட்டாளர்களும், அதிக பணம் படைத்த தனிநபர்களும் இ-கோல்டில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

கோல்டு பெட்டல், கினியா!

கமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்க நினைத்தால்    10 கிராம், 1 கிலோ என்றுதான் வாங்க முடியும். இதற்கு நிறைய பணம் வேண்டும். ஆனால், சிறு முதலீட்டாளர்கள் சிறிய அளவில் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதற்காக அறிமுகமானதே கோல்டு பெட்டல், கோல்டு கினியா. இதில் ஒரு கிராம், 8 கிராம்  என தங்கம் வாங்க முடியும். மார்ஜின் தொகை மட்டும் செலுத்தி தங்கத்தை வாங்க முடியும் என்பது இதிலுள்ள கூடுதல் சிறப்பு.  தங்கத்தின் அன்றைய விலையில் பத்து சதவிகித மார்ஜின் தொகை மட்டும் செலுத்தி தங்கத்தை வாங்கலாம் என்பதால் கொஞ்சம் பணத்தை வைத்து, நிறைய தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர் முதலீட்டாளர்கள். இப்படி புதுப்புது முதலீடுகளில் பலரும் தங்கள் முதலீட்டை அதிகரிக்க, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் தொடருமா?

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக கருதி சமீப காலமாக அதில் நிறைய முதலீடு செய்து வருகின்றன. இந்த முதலீடு நல்ல வருமானம் தரும் பட்சத்தில் நிறைய நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும். ஆனால், இதன் காரணமாக தங்கத்தின் விலை ஏறும் என்பது சரியல்ல. காரணம், இந்தியாவில் முதலீட்டு அடிப்படையில் தங்கத்தை வாங்குவது இப்போதுதான் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் 1,200 டன் அளவுக்கு தங்கத்தை முதலீட்டு நோக்கில் சேமிக்கின்றனர். அதனால் உலக நடப்புகளை வைத்துதான் தங்கத்தின் விலை இருக்கும். கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை சரியாகி வருகிறது. மேலும், அந்நாடு கரன்சி அச்சடிக்க இருப்பதால் அங்கு பணவீக்கம் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. பத்து கிராம் 24 காரட் தங்கம் குறுகிய காலத்தில் 29,000 ரூபாய் முதல் 29,500 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது.


பானுமதி அருணாசலம் 
விகடன்