Search This Blog

Saturday, March 03, 2012

மோதலில் சொதப்புவது எப்படி? - ஓ பக்கங்கள் , ஞாநி

சினிமாவில் காதல், காமெடி, சோகம், குடும்பம், வரலாறு, இசைச் சித்திரம் என்று பல வகைகள் இருப்பது போல போலீசின் ஒடுக்குமுறையில் ஒரு புதிய வகையாக ‘மோதல் கொலைகள்’ இந்தியாவில் உருவாகிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக 1975-76 நெருக்கடி காலகட்டத்தில் இந்த மோதல் கொலைக்கு அரசின் முழுமையான ஆசிகள் தரப்பட்டன. தமிழகத்தில் சுமார் 30 வருடங்களாக ‘மோதல் கொலைகள்’ நடைமுறையில் இருக்கின்றன.வேளச்சேரியில் பிப்ரவரி இறுதியில் ஐந்து வடமாநிலத்தவர்களை, குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் போலீசார் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி பற்றிய போலீஸ் தரப்புச் செய்திகளில் இருக்கும் ஓட்டைகளை தமிழ் சினிமாவில் புத்தம்புதுசாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற துணை இயக்குனர் கூட எளிதாகப் பட்டியல் இட்டுவிடமுடியும். சந்தேகத்துக்குரிய நபரின் வீடியோ என்று ஒன்றை போலீஸ் விளம்பரப்படுத்திய பத்தே மணி நேரத்தில் அந்த நபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே போய் அவரையும் இன்னும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுவிடவே முடிந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிவராஜன், சுபா படங்களை ஊர் ஊராக போஸ்டர் அடித்து ஒட்டி, தினசரி டி.வி.யில் காட்டியும் மாதக் கணக்கில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்ததுடன் ஒப்பிட்டால், காவல் துறையின் திறமை பல்லாயிரம் மடங்கு உயர்ந்துவிட்டதாகவே நம்பவேண்டியிருக்கிறது.முதல் ஓட்டை வீடியோவில் காட்டிய காட்சி. பணம் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு வங்கிகளிலும் கேமராக்கள் இயங்கவில்லை. இந்த வீடியோ சென்னையில் இருக்கும் இதர நூற்றுக்கணக்கான கொள்ளையடிக்கப்படாத வங்கிகளில் இயங்கிய கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பல மணி நேரம் பார்த்து துருவி எடுத்ததாம். வங்கி கவுன்ட்டர்களுக்கு எதிரே மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடமாடும் காட்சி. அதில் சுற்றிலும் இருக்கும் மக்களை மறைத்து விட்டு இந்த நபரை மட்டுமே காட்டியிருக்கிறது. நானும் நண்பரும் வெளியே சினிமாவுக்குப் போகிற வழியில் நண்பர் பாங்க்கில் ஒரு சின்ன வேலையை முடித்து விட்டு போகலாம் என்றால் நானும் கூடப் போவேனல்லவா. அப்போது நண்பர் கவுன்ட்டரில் தன் வேலையை முடிக்க மும்முரமாக இருக்கும்போது, வெட்டியாக இருக்கும் நான் என்ன செய்வேன்? அந்தக் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும்தான் உலாத்துவேன். யாராவது ஒருவரை கொஞ்சம் வேடிக்கை பார்ப்பேன். திடீரென்று ஏதாவது சத்தம் என் கவனத்தை ஈர்த்தால் அந்த கவுண்ட்டரை நோக்கி உற்றுப் பார்ப்பேன். வங்கி கேமராவில் பதிவான காட்சியில் என்னை மட்டும் பிரித்துப் பார்த்தால், நான் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடுவதாகத்தான் தோன்றும்.இந்த மாதிரி வீடியோ நறுக்குகளைத் தேர்ந்தெடுப்பதானால், ஒவ்வொரு வங்கியிலும் தினசரி பத்து பேராவது சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடுவதாகவே தோன்றும். 
 
 
எனவே இந்தக் குறிப்பிட்ட நபரை வீடியோ க்ளிப்பில் தேர்வு செய்ய போலீசிடம் முன் தகவல் ஏதாவது இருந்தாக வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளில் கொள்ளையர்களைப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளங்களின் அடிப்படையில் இந்த நபரை சரியாக பல மணி நேர வீடியோ க்ளிப்புகளிலிருந்து சலித்து எடுத்திருக்க முடிந்ததா? முன்தகவல்கள் பற்றி போலீஸ் எதுவும் சொல்ல வில்லை. கொல்லப்பட்ட ஐந்து பேரின் பிணங்களைப் போய் பார்த்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த ஐந்து பேரும்தான் எங்கள் வங்கியில் வந்து கொள்ளையடித்தார்கள் என்று அடையாளம் சொன்னதால் அது மட்டும்தான், இந்த வழக்கில் அந்த ஐவர்தான் கொள்ளையர்கள் என்பதற்கு ஒரே சாட்சியம்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இருந்த வீட்டிலிருந்து சில லட்சம் பணம் மட்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொல்லியது. ஆனால் தரையில் கிடக்கும் பிணங்கள், ரத்தக் கறை, துப்பாக்கிகள், வீடியோவில் காட்டியவர் அணிந்த சட்டை ஆகியவற்றையெல்லாம் படம் எடுத்துக் காட்ட அனுமதித்த போலீஸ், பணத்தை இதுவரை காட்டவில்லை. பொதுவாகக் கைப்பற்றிய நகைகள், பொருட்கள், பணம் இவற்றையெல்லாம் நிருபர்கள் முன்பு காட்சிக்கு வைப்பது போலீஸ் வழக்கம்.குடியிருப்புப் பகுதியில் தரை தளத்தில் தங்கியிருந்த ஐவரை விசாரிக்கத்தான் இரவு 12.30க்குச் சென்றோம் என்று போலீஸ் சொல்கிறது. கதவைத் தட்டியதும் திறக்காமல், ஐவரும் உள்ளிருந்து ஜன்னல் வழியே சுட்டதாகவும் அதில் இரு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதன்பின்னர் எச்சரித்தும் சரணடையாததால், வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு போய் சுட்டதில் ஐவரும் செத்ததாகவும் போலீஸ் கதை நீள்கிறது. பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தங்களைக் காத்துக் கொள்ளவும் சுட வேண்டியதாயிற்றாம். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்களுக்கு எங்கே ஆபத்து வந்தது? தூங்காமல் எட்டிப் பார்த்த ஓரிரு வீட்டினரையும் போலீஸ் வந்த உடனே எச்சரித்து உள்ளே போகச் சொல்லிவிட்டது. இனி போலீஸ் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே போலீசை நோக்கி ஐவர் சுட்டார்கள் என்ற கதையைப் பார்ப்போம். டி.வி.யில் காட்டப்பட்ட அந்த வீட்டுக் கதவுகள், ஜன்னல், சுவர்கள், எதிர்ப்பக்கம் இருக்கும் சுவர்கள் எதைப் பார்த்தாலும் இருதரப்புக்கும் இடையே பெரிய துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான அடையாளங்களே இல்லை. 
 
வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை திட்டமிட்டுப் பட்டப் பகலில் போய் துணிச்சலுடன் கொள்ளையடிப்பவர்கள்தான் உள்ளே இருந்தவர்கள் என்றால், அவர்களுக்கு அடிப்படை காமன்சென்ஸ் கூட இருக்காதா என்ன? வந்திருப்பது போலீஸ். அதை ஜன்னல் வழியே சுட்டுவிட்டு தாங்கள் தப்பித்துப் போவது எப்படி என்று யோசிக்க மாட்டார்களா? ஜன்னல் வழியே ஒருவன் சுட்டபடி போலீஸ் கவனத்தை ஈர்க்கும்போதே, அதைப் பயன்படுத்தி மற்றவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து இன்னொரு பக்கத்திலிருந்து தாங்களும் போலீசை நோக்கிச் சுட்டபடி தெருவுக்கு ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பார்கள்? எந்த மசாலா சினிமா பார்த்திருந்தாலும் இந்த அறிவு அவர்களுக்கு இருந்திருக்குமே? அப்போது போலீஸ் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஐவரும் இறந்திருந்தால், ஒவ்வொரு பிணமும் வீட்டுக்கு வெளியே, நடையில், வாசற் கதவருகில் அப்படித்தானே விழுந்திருக்க முடியும்? ஆனால் ஐவரும் உள்ளே ஒரே அறையில் செத்துக் கிடந்ததாகக் காட்டப்பட்டது. அப்படியானால், உள்ளிருந்துகொண்டு ஜன்னல் வழியே சுட்டுக் கொண்டே இருந்தால், போலீஸ் கொஞ்ச நேரம் கழித்துப் போய்விடும், அப்புறம் நாம் போகலாம் என்று நினைத்துச் சுட்டார்களா? அவ்வளவு முட்டாள்களாக இருந்தால் அவர்களால் எப்படி பட்டப்பகலில் வங்கியைக் கொள்ளையடிக்க முடிந்திருக்கும்? உள்ளேயிருந்து வெளியேறவும் வாய்ப்பில்லை, தப்பவும் முடியாது என்று உணர்ந்திருந்தால் ஏன் ஜன்னல் வழியே சுடப் போகிறார்கள்? ஒன்று சரண்டைவார்கள். அல்லது தற்கொலை செய்துகொள்வார்கள்.போலீஸ் சொன்னதாக பத்திரிகைகளில் வந்த இன்னொரு செய்தியின்படி அன்றிரவே அவர்கள் ஊரை விட்டு ஓட திட்டமிட்டிருந்தார்களாம். வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் ஊருக்குப் போகிறோம். அட்வான்சை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார்களாம். சுமார் 40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து வைத்திருக்கிறவன் வீட்டை காலி பண்ணுகிறேன் என்று ஏன் சொல்லிவிட்டுப் போக வேண்டும்? அட்வான்ஸ் பணம் வெறும் 20 ஆயிரத்தை திரும்ப வாங்குவதற்கா?வங்கிக் கொள்ளையர்கள் வேளச்சேரி வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல் உறுதியானதும் போலீஸ் அவர்களை உயிருடன் பிடிக்கத்தான் முயற்சித்திருக்க வேண்டும். அது கடினமானதல்ல. வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே உள்ளிருந்து சுட்டிருந்தால், போலீஸ் செய்திருக்க வேண்டிய எளிய வழி அதே ஜன்னல் வழியே ஏழெட்டு கண்ணீர்ப்புகை குண்டுகளை உள்ளே வீசுவதுதான். நிச்சயம் ஐவரையும் உயிரோடு கைது செய்திருக்க முடியும். தொடர்ந்து சந்தேகத்துக்குரியதாகவே ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலையும் இருக்கிறது. இதனால்தான் தெளிவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் என்கவுண்ட்டர் டெத் நடந்தால், சுட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தாக வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன. நிச்சயம் தவிர்க்க முடியாத சூழலில், தற்காப்புக்காகவும் பிற உயிர்களைக் காப்பாற்றவும்தான் போலீஸ் சுடவேண்டி வந்தது என்று நிரூபிக்காதவரை அதுவும் கொலைதான் என்பதே உச்ச நீதிமன்றக் கருத்து.வங்கிக் கொள்ளைகளின் பின்னணி என்ன? தனி நபர் கொள்ளையர்களா? தீவிரவாத இயக்கங்களா? இந்த ஐந்து பேர் மட்டும்தான் சம்பந்தப்பட்டவர்களா? அல்லது இன்னும் பலர் இருக்கிறார்களா? கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதிதானே மீட்கப்பட்டது ? மீதி எங்கே யாரிடம் போயிற்று ? இவையெல்லாம் கண்டறியப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். ஆனால் ஐவரும் கொல்லப்பட்டதால், பல தகவல்களும் அவர்களோடே மறைந்துவிடும். அப்படி மறைப்பதற்காகத்தான் கொல்லப்பட்டார்களா? இந்தக் கேள்விகள் எல்லாமே முக்கியமானவை. மனித உரிமை காப்புக் குழுவினர் பலரும் கோருவது போல ஒரு சி.பி.ஐ விசாரணை நடந்தால் மட்டுமே இதிலெல்லாம் கொஞ்சமாவது தெளிவு கிடைக்கும்.
 
இந்த மோதல் கொலைகளையடுத்து நடக்கும் சில ஆபத்தான போக்குகள் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்பட வேண்டியவை. முதலாவது போலீசார் கொள்ளையர்களைக் கொன்று மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திவிட்டார்கள் என்று வரிசையாக வங்கி அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என்ற பெயரில் சில குழுக்கள் பாராட்டு அறிக்கை வெளியிடுவதும் கமிஷனரை சென்று பாராட்டுவதும், கடற்கரையில் போர்டு வைத்துக் கையெழுத்திடுவதும் செய்யப்பட்டது. எந்தக் குற்றவாளியையும் கொலை செய்யும் அதிகாரம் எந்தச் சட்டத்தின் கீழும் போலீசுக்கு இல்லை. சட்டம் தரும் விதிவிலக்கையே சட்டமாக்கிவிட முடியாது. குற்றவாளியை நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்துவதுதான் போலீசின் திறமை. தானே கொன்று தண்டனை தருவது திறமையின்மையின் அடையாளமேயாகும். உண்மை நிலையைக் கண்டறிய வந்த பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான குழுவினரை பொது மக்கள் என்ற போர்வையில் சிலர் தடுத்தது அராஜகமானது. எண்பதுகளிலும் இதே போலத்தான் திருப்பத்தூர் பகுதியில் நடந்த நக்சலை-போலீஸ் மோதல்கள் பற்றி விசாரிக்க வந்த கிளாட் ஆல்வாரிஸ், வி.எம்.தார்குண்டே ஆகியோர் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டார்கள்.  இரண்டாவதாக வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வந்து இங்கே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக இங்கே வாழும் வட இந்தியர்களுக்கு, குறிப்பாக ஏழைத்தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வெறுப்புக் கருத்தை சில ஊடகங்களும் சில பத்திரிகைகளும் சில அமைப்புகளும் பிரசாரம் செய்கின்றன. இதன் விளைவாக மனநிலை சரியில்லாத ஒரு ஆந்திர இளைஞரை, பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் நிலை ஏற்பட்டது. உண்மையில் இங்கே வரும் இந்தியத் தொழிலாளிகள் நம்மால் சுரண்டப்படுகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரசு கட்டிய அத்தனை மேம் பாலங்கள், அண்ணா நூலகம், சட்டமன்றக் கட்டிடம் அனைத்துக்கும் வடமாநிலங்களிலிருந்து கட்டடத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை செய்ய வைக்கப்பட்டு தங்குமிடம், கழிப்பிடம் முதலிய வசதிகள் ஒழுங்காக இல்லாமல் சுரண்டப்பட்டார்கள். (சட்டமன்ற தண்ணீர் தொட்டி கட்டடம் முடிந்ததும் கடைசி நாள் கருணாநிதி அவர்களுக்கு அரசு செலவில் பிரியாணி விருந்து போட்டு ஹிந்திப் பாடல் இசை நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பிவைத்தார்!) இதேபோல பிற மாநிலங்களுக்கு பல ஏழைத் தமிழர்கள் சென்று பிழைக்கிறார்கள். ஒரு இன மக்களுக்கு இன்னொரு இன மக்கள் மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பது தொலைநோக்கில் மிக மிக ஆபத்தானது. ஒரு சில கொள்ளையர்கள் வட இந்தியர்களாக இருக்கலாம். அவர்களைச் சுட்டுக் கொன்ற சென்னை போலீஸ் துறையின் கமிஷனரும் வட இந்தியர்தானே! மூன்றாவதாக, பொதுமக்களில் சிலர் பேச்சுலர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று பேசுவதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டின. இன்றைய வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூருக்குச் சென்று தன்னைப் போன்ற நால்வருடன் தனியே வீடு எடுத்துத் தங்கிப் பிழைப்பது சகஜமாகி விட்டது. இந்நிலையில் பேச்சுலர்களுக்கு வாடகை வீடு தரக்கூடாது என்ற மனநிலையை ஊக்குவிப்பது அபத்தமானது. வேளச்சேரி நிகழ்ச்சி, நம் சமூகம் வரலாற்றிலிருந்து இன்னும் பல பாடங்களைக் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

No comments:

Post a Comment