இன்றைக்குப் பலரது தூக்கத்தைக்
கெடுத்திருக்கும் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது தங்கத்தின்
விலையேற்றம். நாளுக்கு நாள் இதன் விலை ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டு,
இனிமேல் நம்மால் தங்கம் வாங்க முடியுமா என அதிர்ச்சியில் உறைந்து
போயிருக்கிறார்கள் நடுத்தர மக்கள்.
முன்பு தங்கத்தை ஆபரணமாகவோ, தங்க நாணயமாகவோ வாங்கி வந்த முதலீட்டாளர்கள், இப்போது
கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு, கோல்டு பெட்டல் என பல வகைகளில் வாங்கி
முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கம் விலையேறியதற்கு இது ஒரு
முக்கிய காரணம். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 15,630 ரூபாய்.
இப்போது அதன் விலை 21,552 ரூபாய். பங்குச் சந்தையைவிட கூடுதலான லாபத்தைத்
தந்ததால், இப்போது எல்லோரது கவனமும் இ.டி.எஃப்., இ-கோல்டு போன்றவற்றின்
மீது விழுந்திருக்கிறது. புதிதாக வந்திருக்கும் இந்த முதலீடு பற்றி இனி
விளக்கமாக:
கோல்டு இ.டி.எஃப்.!
2007-ல் பெஞ்ச்மார்க் நிறுவனம்தான் இந்தியாவில் முதல் கோல்டு
இ.டி.எஃப்.பை அறிமுகம் செய்தது. தற்போது எட்டு நிறுவனங்கள் இ.டி.எஃப்.
திட்டங்களை நடத்தி வருகின்றன. ஒரு கிராம் தங்கத்தை வாங்குவதற்குப் பதில் ஒரு யூனிட் இ.டி.எஃப். வாங்கி
விடலாம். முன்பு இ.டி.எஃப்.பை வாங்கினால் மீண்டும் பணமாகவே திரும்ப
கிடைக்கும். ஆனால், தற்போது 10 யூனிட்டிற்கு மேல் இ.டி.எஃப்.
வாங்கியிருந்தால், பணத்திற்கு பதில் தங்கமாக வாங்கலாம். 2010-ல் இ.டி.எஃப். மூலம் 15 டன் தங்கத்தை வாங்கினார்கள் நம்
முதலீட்டாளர்கள். இது 2011-ல் 30 டன்னாக அதிகரித்தது. தனிநபர்கள்
மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களும் இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்வது
அதிகரித்திருக்கிறது. 2011-ன் பிற்பாதியில் பங்குச் சந்தை சரிந்தபோது பல
நிறுவனங்கள் இ.டி.எஃப்.-ல் நம்பிக்கை வைத்து அதில் முதலீடு செய்யத்
தொடங்கின. ஆனால், இந்தாண்டு பங்குச் சந்தை 11% அதிகரித்திருக்கிறது. எனினும்,
இ.டி.எஃப்.-ல் நிறுவனங்கள் செய்யும் முதலீடு 100% அதிகரித்துள்ளது. உலக
அளவிலும் கோல்டு இ.டி.எஃப்பிற்கான தேவை அதிகரித்து 933 டன்னாக உள்ளது.
இ-கோல்டு!
இதுவும் இ.டி.எஃப். போன்ற திட்டம்தான் என்றாலும், இதில் நாம் வாங்கும் தங்கத்தை டெலிவரியாக எடுத்துக் கொள்ள முடியும். 2010-ல் தொடங்கப்பட்ட நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் இ-கோல்டு, இ-சில்வர்,
இ-காப்பர், இ-ஜிங்க் என பலவற்றையும் விற்று வருகிறது. இதில் அதிகம்
வர்த்தகமாவது இ-கோல்டுதான்! 8 கிராம், 10 கிராம், 100 கிராம் என டெலிவரி எடுக்கும் வசதி இதில்
இருப்பதால் இந்த முதலீட்டை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். 2010-11-ம்
நிதியாண்டில் தினமும் 150 கோடி ரூபாய்க்கு இ-கோல்டு டேர்ன் ஓவர்
நடந்திருப்பதாக என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்ச் கூறியுள்ளது. வெளிப்படையான விலை, தங்கத்தை ஹோல்டிங் செய்ய கட்டணங்கள் கிடையாது போன்ற
வசதிகளால் சிறு முதலீட்டாளர்களும், அதிக பணம் படைத்த தனிநபர்களும்
இ-கோல்டில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
கோல்டு பெட்டல், கினியா!
கமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்க நினைத்தால் 10 கிராம், 1 கிலோ
என்றுதான் வாங்க முடியும். இதற்கு நிறைய பணம் வேண்டும். ஆனால், சிறு
முதலீட்டாளர்கள் சிறிய அளவில் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதற்காக
அறிமுகமானதே கோல்டு பெட்டல், கோல்டு கினியா. இதில் ஒரு கிராம், 8 கிராம் என தங்கம் வாங்க முடியும். மார்ஜின் தொகை
மட்டும் செலுத்தி தங்கத்தை வாங்க முடியும் என்பது இதிலுள்ள கூடுதல்
சிறப்பு. தங்கத்தின் அன்றைய விலையில் பத்து சதவிகித மார்ஜின் தொகை மட்டும்
செலுத்தி தங்கத்தை வாங்கலாம் என்பதால் கொஞ்சம் பணத்தை வைத்து, நிறைய
தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர் முதலீட்டாளர்கள். இப்படி புதுப்புது முதலீடுகளில் பலரும் தங்கள் முதலீட்டை அதிகரிக்க,
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் தொடருமா?
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக
கருதி சமீப காலமாக அதில் நிறைய முதலீடு செய்து வருகின்றன. இந்த முதலீடு
நல்ல வருமானம் தரும் பட்சத்தில் நிறைய நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு
செய்வது அதிகரிக்கும். ஆனால், இதன் காரணமாக தங்கத்தின் விலை ஏறும் என்பது சரியல்ல. காரணம்,
இந்தியாவில் முதலீட்டு அடிப்படையில் தங்கத்தை வாங்குவது இப்போதுதான்
பிரபலமடைந்து வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் 1,200 டன் அளவுக்கு தங்கத்தை
முதலீட்டு நோக்கில் சேமிக்கின்றனர். அதனால் உலக நடப்புகளை வைத்துதான்
தங்கத்தின் விலை இருக்கும். கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை சரியாகி வருகிறது. மேலும், அந்நாடு
கரன்சி அச்சடிக்க இருப்பதால் அங்கு பணவீக்கம் அதிகரிக்கும். பணவீக்கம்
அதிகரிக்கும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். கச்சா எண்ணெய்யின்
விலையும் அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை குறைவதற்கான அறிகுறி எதுவும்
தென்படவில்லை. பத்து கிராம் 24 காரட் தங்கம் குறுகிய காலத்தில் 29,000
ரூபாய் முதல் 29,500 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது.
பானுமதி அருணாசலம்
விகடன்
No comments:
Post a Comment