டோனி-சேவாக் இடையே சண்டை, சச்சினை ஓய்வுபெறச் சொல்லும்
விவாதம், வெளிநாட்டில் தொடரும் 'தொடர் தோல்வி’கள்... உலக சாம்பியன் பட்டம்
வென்ற ஒரு வருடத்துக்குள்ளா கவே இந்திய கிரிக்கெட் அணி இவ்வளவு சொதப்பும்
என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! என்னதான் பிரச்னை?
கிரிக்கெட் மதமல்ல!
ஆம்... இனிமேலும் கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் அல்ல.
இன்றைய நிலவரத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க ஒரு வணிகமாகிவிட்டது.
அதிலும் 20/20 யுகம் ஆரம்பித்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியமும்
கிரிக்கெட் வீரர்களும் ஒவ்வொரு நாளையும் வருமானத்தை மனதில்வைத்தே
திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்! உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டால்
இந்தியாவில் திறமையான இளம்வீரர்களை அடையாளம் காண முடியவில்லை. சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லக்ஷ்மணுக்குப் பிறகு அவர்களுக்கான மாற்றுவீரர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலைக்
கண்டுபிடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை மெனக்கெடவில்லை. ஐ.பி.எல்.
போட்டி களைச் சிக்கல் இல்லாமல் நடத்துவது மட்டும்தான் இந்திய கிரிக்கெட்
போர்டின் முழு நேரப் பணியா?
ஓய்வுக்கே ஓய்வு!
எவ்வளவு திறமையான ஆட்டக்காரராக இருந்தாலும் ஃபார்மில்
இல்லாவிட்டால், உடனடியாக அணியில் இருந்து நீக்கி, அணியைத் திறம்பட
நிர்வகிப்பது எப்படி என்பதைச் செயலில் காட்டுகின்றன ஆஸ்திரேலிய,
இங்கிலாந்து அணிகள். ஸ்டீவ் வாக், மார்க் வாக்கில் தொடங்கி கெவின்
பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப் என, இப்போது ரிக்கி பாண்டிங் வரை ஒரு
தொடரை வெற்றிகரமாக முடித் துத் தர முடியாதவர்களைக் கொஞ்சமும் தயங்காமல்
தூக்கிவிடுவார்கள். ஆனால், இது இந்திய அணியில் சாத்தியமா? ஒருவேளை ஸ்டீவ்
வாக் இந்திய அணியில் இருந்திருந்தால், இன்று வரை இந்திய அணிக்காக அவர்
விளையாடிக்கொண்டுதான் இருந்திருப்பார். டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னமும்
ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
ஐ.பி.எல்-ல் இரண்டு மேட்ச் அபாரமாக ஆடினால், உடனடியாக அவருக்கு இந்திய
அணியில் வாய்ப்பு. இந்திய அணியில் இரண்டு போட்டிகளில் சொதப்பிவிட்டால்
உடனடியாக அவர் தூக்கியடிக்கப்படுவது என்ன நியாயம்?
சச்சினின் ஓய்வு இப்போது அவசியமா?
'சச்சின் ஓய்வுபெற வேண்டும்!’ என்ற கபில்தேவின்
கருத்துக்கு உலகம் முழுக்க கிரிக்கெட் ஆர்வலர்களிடையே கடும் கண்டனம்தான்
கிளம்பியிருக்கிறது. அணியில் அனைவரும் சாதனை மேல் சாதனைகளைக்
குவித்துக்கொண்டு இருக் கும்போது, சச்சின் மட்டும் சொதப்பிக்கொண்டு
இருப்பதுபோல அவரைஓய்வெடுக்கச் சொல்வது, அர்த்தமே இல்லாத வாதம்! சச்சினுக்கு எதிரான இந்தக்
கோஷத்துக்குக் காரணம், சச்சினை இந்திய அணியின் 11 வீரர்களில் ஒருவராகப்
பார்க்காமல், அவரை மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியாகப் பார்க்கும்
போக்குதான்! விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும்சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிறைந்த
இந்தியாவில், அது பொய்க்கவும் டெண்டுல்கரின் ஓய்வு குறித்து
விவாதிக்கிறார்கள். ''உடலளவிலும் மனதளவிலும் சச்சின் இன்னும் முழு பலத்தோடு
இருக்கிறார். அவரை ஓய்வுபெறச் சொல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''
என்ற சௌரவ் கங்குலியின் வார்த்தைகளில் பொருள் இருக்கிறது!
வேகமும் வியூகமும் இல்லாத வேகப் பந்து வீச்சு!
அந்நிய மண் தோல்விகளுக்கு மிக முக்கியக் காரணம் திறமையான
வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது மட்டுமே! ஜாகீர் கான் தவிர சர்வதேச
தரத்துக்குப் பந்து வீசுபவர் யார் இருக்கிறார்கள் அணியில்? அதனாலேயே ஜாகீர்
கானைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் டோனி. ஜாகீரும் காயமடைந்து
விடக்கூடாது என்பதற்காக 'ரிஸ்க்’ எடுக்காமலேயே பந்துவீசிக்கொண்டு
இருக்கிறார். எப்போதும் உலகின் டாப் 3 சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவர்
இந்தியராக இருப்பார். இப்போது அந்தச் சூழ்நிலையும் இல்லை. இளம்
வேக-சுழற்பந்து வீச்சாளர்களை பள்ளிப் பருவத்திலேயே கண்டறிந்து இந்திய
கிரிக்கெட் வாரியம் தத்தெடுத்துப் பயிற்சியளிக்க வேண்டும். ஆனால்,
இதற்கெல்லாம் செலவு செய்ய அவர்களிடம் 'பட்ஜெட்’ இருக்கிறதா என்பது
சந்தேகமே!
இந்திய கிரிக்கெட்டில் கோடீஸ்வர வியாபாரிகளின் செல்வாக்கும் ஊழலும்
தெளிவற்ற தொலைநோக்குத் திட்டங்களும் தொடரும்வரை இந்திய அணி வீட்டில் புலி,
வெளியே எலியாகத்தான் இருக்கும்!
சார்லஸ்
விகடன்
அப்பாடா, இனிமேல் வேறு ஆட்டங்கள் பிழைத்தன!.
ReplyDeleteஅல்லது நிம்மதி பெறுமூச்சு விட வாய்ப்பு உள்ளது.