Search This Blog

Friday, March 02, 2012

காதலைக் கையாள்வது எப்படி?

இன்று சமூகத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால், இரு வேறு ஜாதி, மத, கலாசாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை இன்னமும் பெற்றோர்களால் அத்தனை சுலபமாக ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்த நிலை. இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?

‘தங்களுடைய திருமணம் குறித்து முடிவெடுக்கும் மனப் பக்குவம் ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய சம்மதத்தைத் தெரிவிப்பதுதான் சரியான அணுகுமுறை. பதினெட்டு வயது கூட ஆகாத நிலையில் காதல், திருமணம் என்று மகனோ, மகளோ பேசும்போது, உடனே சீறி விழாமல், ‘திருமணம் குறித்து முடிவெடுக்கும் அளவுக்கு உங்களுக்கு மெச்சூரிட்டி இல்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து அது பற்றி யோசித்தால் சரியாக இருக்கும்’ என்பதை அவர்களுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்றால் பெற்றோர்களின் பொறுப்பு; காதல் திருமணம் என்றால் அது பிள்ளைகளின் பொறுப்பு என்ற எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக ஊறி இருக்கிறது. பெற்றொர்கள் பார்த்து ஏற்பாடு செய்கிற திருமணத்திலும் சரி, காதல் திருமணங்களிலும் சரி நல்ல புரிதலோடு, வாழ்க்கை நடத்துகிறவர்களும் உண்டு; இருவருக்குள் ஒத்துப் போக முடியாமல் பிரிந்து விடுபவர்களும் உண்டு. எல்லா திருமணங்களிலும் பிரச்னைகள் இருக்கும்; அந்தப் பிரச்னைகளை அவர்களுக்குள்ளே எப்படித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

முதலில் பெற்றோர்கள், தங்கள் பையனோ, பெண்ணோ தங்கள் திருமணம் குறித்த முடிவை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தக் காலத்து இளைய தலைமுறையினர் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எந்த விஷயமானாலும் நல்லது, கெட்டது பற்றி அலசி, முடிவு எடுக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த உண்மையைப் பெருந்தன்மையோடு பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இன்னொரு முக்கியமான விஷயம் காதலிக்கிற வயது. காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் சேர்ந்து, வாழ்க்கையில் செட்டிலான பிறகு காதல் என்றால், அது இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படுகிற காதல் இல்லை. அதை பெற்றோர்கள் தடுக்க முயற்சிக்க வேண்டாம். அவர்களிடம் இரு தரப்பிலும் உள்ள வேறுபாடுகள், அவற்றால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவற்றை உட்கார்ந்து பேசலாம். எடுத்த உடனே, ‘உங்கள் காதல் விஷயத்தில் இதெல்லாம் பிரச்னை; எனவே வேண்டாம்’ என்று எதிர்மறையான அணுகுமுறையில் துவங்காமல், ‘இதெல்லாம் பிரச்னைகள்; இவற்றை எப்படிச் சமாளிப்பது? என்று அணுக வேண்டும். பிரச்னைகளை எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி, அது பற்றி யோசித்துப் பார்க்க அவர்களுக்கு அவகாசம் கொடுங்கள். அப்போது உங்கள் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டு, நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சாத்தியமுண்டு. இருவரும் இந்தத் திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்குக் கூட வரலாம்.

அப்படி இல்லாமல், ‘இது சரிப்படாது!‘ அணுகுமுறையில், உங்கள் தரப்பில் அக்கறையோடு சொல்லப்படும் வெகு யதார்த்தமான உண்மைகளைக் கூட அவர்கள் புரிந்து கொள்ள பொறுமை காட்டாமல், தங்கள் முடிவில் மேலும் உறுதியாகி, உங்களை எதிர்க்கவும் துணிவார்கள். சட்டப்படி மேஜரான அவர்களது முடிவில் நீங்கள் தலையிட முடியாது போகும். குறிப்பாக பெற்றோர்களால் மிகவும் அடக்கி வைத்து வளர்க்கப்பட்ட குழந்தைகள், வளர்ந்து, வேலைக்குப் போகிறபோது, சுதந்திரத்தின் வெளிப்பாடாகக் காதலிக்கவும் அந்த விஷயத்தில் பெற்றோர்களை எதிர்க்கவும் துணிவது இயல்பு. அதனைத் தொடர்ந்து வீட்டுக்குத் தெரியாமல் கோயிலுக்குப் போய் திருமணம் செய்துகொள்வது, நண்பர்கள் உதவியோடு பதிவுத் திருமணம் போன்றவை எல்லாம் நடக்கும்.அப்படித் திருமணம் நடந்தாலும், பெற்றோர்களின் கோபம் ஒரு குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும். அதன் பிறகு உறவு புதுப்பிக்கப்படும். எதற்காக இப்படி சில வருட இடைவெளியை நாமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? சற்று புத்திசாலித்தனமாகவும், யதார்த்தமாகவும் பிரச்னையை அணுகினால், அதைத் தவிர்க்கலாமில்லையா?இருபது, இருபத்தியோரு வயதில் காதல் என்றால், அதில் முதிர்ந்த மனப்பக்குவம் இருக்காது. அந்த சமயத்தில் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுப்பது சகஜம். ஆனால் அதேநேரத்தில் தங்களுடைய அனுமதி மறுப்புக்கு ஜாதி, அந்தஸ்து, கலாசாரம், மொழி போன்ற காரணங்களைச் சொல்லக் கூடாது. மாறாக, ‘திருமணம் பற்றி முடிவு எடுக்கும் வயது, மனப்பக்குவம் உங்களுக்கு இல்லை; என்று சொன்னால், நிச்சயம் பலன் இருக்கும்.

அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சந்திப்புக்குத் தடை போடுவது தவறு. அவர்கள் சந்தித்துப் பேசினால்தான், அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட கால காத்திருப்புக்குப் பிறகு தங்கள் திருமணம் குறித்து சரியான முடிவை எடுக்க முடியும்.பெற்றோர் நிச்சயித்த திருமணம், காதல் திருமணம் என்று இரண்டு வகை இருக்கும். இப்போதெல்லாம் மூன்றாவதாக ஒரு வகை திருமணத்தையும் கவனிக்கிறேன். அதுதான் பெற்றோர்களின் ஒப்புதலோடு நடக்கிற காதல் திருமணம். இருதரப்பு பெற்றோர்களும் தங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில் கன்வின்ஸ் செய்து, அவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வது. இது கூட வரவேற்கத்தக்க விஷயம்தான்.

மனோதத்துவ நிபுணர் டாக்டர் விஜய் நாகசுவாமி.

 

No comments:

Post a Comment