முற்போக்கு எழுத்தாளர், தமிழகத்தின் மனசாட்சி, பார்ப்பனப் பதர், என்றெல்லாம்  விதவிதமாக எனக்கு பலரும் பட்டங்கள் சூட்டுகிறார்கள்.அவை எதையும் நான்  பொருட்படுத்துவதில்லை. எனக்குப் பிடித்தமான ஒரு பட்டம் இருக்கிறது. அதை  அடைவதுதான் என் ஆசை. கவலை இல்லாத மனிதன் என்ற பட்டத்துக்குத்  தகுதியுள்ளவனாகவேண்டும் என்பதே என் வாழ்நாள் விருப்பம். தன்  படத்தலைப்பாக அதை வைத்த சந்திரபாபுவுக்கும் அப்படிப்பட்ட ஆசை இருந்திருக்க  வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் கவலை இல்லாத மனிதன் யாரேனும் இருக்கும்  சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்று கவலை இல்லாத  மனிதன் பட்டத்துக்கு உரியவர் யாராக இருக்கலாம் என்று நிறைய யோசித்துப்  பார்த்தேன். ஒருவரும் தேறவில்லை. 90வது  வயதை நோக்கி சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும்  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கூட கவலை இல்லாத மனிதர் என்று கருத  முடியவில்லை. அவரவர் கவலை அவரவருக்கு.
தனிப்பட்ட கவலைகளைத் தாண்டி கொஞ்சமாவது சமூக விஷயங்களைப் பற்றிக்  கவலைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறதோ என்ற  கவலை எனக்குத் தொடர்ந்து இருக்கிறது. அன்றாடச் சொந்தக் கவலைகளுடன்  கீழ்வரும் கவலைகளுக்காகவும் குறைந்தது ஓரிரு நிமிடங்களைச் செலவிடும்படி  வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சோனியாவின் காங்கிரஸ்  ஆட்சியில் எப்படியோ மக்களுக்குக் கிடைத்துவிட்ட ஒரு புரட்சிகரமான அகிம்சை  ஆயுதம். இந்தச் சட்டத்தை நீர்க்கச் செய்யவும், அமுக்கவும், செயலற்றதாக்கவும் பல அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதை  மீறி இன்னமும் வலுவாகவே இது செயல்பட்டு வருகிறது. சட்டத்தை முடக்க  முடியாதபோது அதைப் பயன்படுத்தும் சமூக அக்கறையாளர்களை முடக்க வன்முறையும்  மிரட்டலும் பயன்படுத்தப்படுவது நம் கவலைக்குரியது.
சென்ற வாரம் அகமதாபாதில் குஜராத் உயர் நீதி மன்றத்தின்  அருகே அமித் ஜெத்வா என்ற தகவல் உரிமைப் போராளி பட்டப்பகலில் படுகொலை  செய்யப்பட்டார். இவர் கிர் சரணாலயத்தில் சட்ட விரோதமாக நடக்கும்  சுரங்கத்தொழில் பற்றி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பியவர். கடந்த  ஏழு மாதங்களில் இந்தியாவில் மொத்தமாக எட்டு சமூக அக்கறையாளர்கள் இப்படிக்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மகாராஷ்டிர  மாநிலத்தில் மட்டும் நான்கு பேர். பி.ஜே.பி ஆளும் குஜராத்தில் இருவர்.  ஆந்திரத்தில் ஒருவர். பீஹாரில் ஒருவர்.
மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் திருட்டு, காண்ட்ராக்ட் ஊழல்கள், அரசு  மனை ஒதுக்கீட்டு முறைகேடுகள் போன்றவற்றில் ஈடுபடும் அதிகாரிகளும்  அரசியல்வாதிகளும் இவை பற்றி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தோண்டித்  துருவிக் கேள்விகள் கேட்போரை கொலை செய்யப்படவேண்டிய பகைவர்களாகக்  கருதுகிறார்கள். வட மாநில மாஃபியாக்கள் கொலை செய்கிறார்களென்றால், தென் மாநிலங்களில் இன்னமும் அந்தக் கொடூரம் வரை போகவில்லை. கேள்வி கேட்போரை திசை திருப்புவது, கேள்விகளுக்கு முறையாக பதில் தராமல் இழுக்கடிப்பது, தகவல் சட்ட விதிளுக்கு வேறு விதமாக விளக்கமளித்து ஏமாற்றுவது, பொய் வழக்குகள் போடுவது போன்ற சாம, தான, பேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
தமிழகத்தில் அண்மையில் மூன்று நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
ஜெயலலிதா ஆட்சியின் சுடுகாட்டுக் கூரை ஊழலை அம்பலப்படுத்தி  நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருந்த ஐ.ஏ.எஸ்  அதிகாரி உமாசங்கர் மீதே இப்போதைய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. போலி  சாதி சான்றிதழ் கொடுத்ததாக அவர் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்பு அவர் மீது வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்ததாக எடுத்த  நடவடிக்கைக்கு அவர் நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறார். இதில்  விசித்திரம் என்னவென்றால், இதே ஆட்சியில் அவர் விஜிலன்ஸ் கமிஷனாராக இருந்தவர். அவர் மீதே விஜிலன்ஸ் நடவடிக்கை ! கேபிள்  டிவி விவகாரத்தில் அரசியல் செல்வாக்குடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று தான் பரிந்துரை செய்ததற்காகப் பழி வாங்கப்படுவதாக உமாசங்கர்  நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். சாதி சான்றிதழைப் பொறுத்த மட்டில் தலித்தான அவர் கிறித்துவரா, இந்துவா என்பதே பிரச்சினை. ஆனால் அதை 20 வருட  காலமாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துவரும் அவருக்கு எதிராக இதுவரை ஒருபோதும்  சொன்னதில்லை. உமாசங்கருக்கு ஆதரவாக இதர தலித் அதிகாரிகளோ, இதர ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ வாயையே திறக்கவில்லை.
பொள்ளாச்சியில் இருந்து பாஸ்கரன் என்ற ஆர்வலர் நீதித்துறையில் அலுவலக உதவியாளரின் பணிகள், கடமைகள்  பற்றிய விவரங்களைத் தரும்படி தகவல் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்துக்கு  விண்ணப்பித்தார். அதற்கு பதில் தரும் முன்பாக அவர் நேரில் தன் அடையாள  அட்டையுடன் ஆஜராகவேண்டுமென்று உயர் நீதி மன்ற அதிகாரி பதில்  எழுதியிருக்கிறார். தகவல் சட்டத்தின் எந்த விதியிலும் தகவல் கோருபவர் தன்  அடையாள அட்டையுடன் ஆஜராகவேண்டுமென்ற விதி கிடையாது. நேரில்  போய் கேட்டால் தகவல்கள் சொல்வது கிடையாது என்ற அரசாங்க அதிகாரிகளின்  அலட்சியப் போக்கினால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமே வந்தது.
இன்று வேறு எந்த ஊடகத்தையும் விட மிகுந்த சுதந்திரத்துடன் இயங்கும் ஊடகம் இணையம்தான். அதன் வீச்சும் தாக்கமும் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றுக்கு நிகராக இன்னமும் இல்லை என்பதும், இருக்கும்  சுதந்திரம் சிலரால் வீணடிக்கப்படுகிறது என்பதும்தான் அதன் பலவீனம். அதே  சமயம் இணையத்தில் வெளியாகும் பல திடுக்கிடும் தகவல்களை தமிழின் புலனாய்வுப்  பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவற்றில் கூடப் பார்க்கமுடியாது.
சவுக்கு, தமிழக  மக்கள் உரிமைக்கழகம் என்ற பெயரில் இயங்கும் இணையதளங்களில் அண்மையில் தமிழக  உயர் அதிகாரிகள் சிலர் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.  இந்த தளங்களில் பயன்படுத்தப்படும் அவதூறான ரசக் குறைவான மொழி நடை எனக்கு  உடன்பாடானது அல்ல. அதே சமயம் இவற்றில் முன்வைக்கப்படும் செய்திகள் மட்டும்  உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை நம் ஆழ்ந்த கவலைக்கும் அக்கறைக்கும்  உரியவை.
இரண்டு மூத்த காவல் துறை அதிகாரிகள், முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி, பிரபலமான  புலனாய்வு பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ஆகியோருக்கு எதிராக இந்த  இணைய தளங்கள் குற்றம் சாட்டியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மனைகள்  திருவான்மியூரில் இவர்களில் சிலர் வீட்டுப் பெண்களின் பெயரில் அரசால்  விருப்ப ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஒளிநகல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த செய்திகள் இணையத்தில் வெளியான சில நாட்களில் சவுக்கு  என்ற பெயரில் எழுதுபவர் என்று கூறப்படும் முன்னாள் காவல் துறை அலுவலர்  சங்கர் என்பவர், தெருச்சண்டையில்  இன்னொருவரைத் தாக்கியதாக ஒரு புகாரின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர்  ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அமைச்சர் பூங்கோதை தனக்கு  வேண்டியவருக்காக அரசு அதிகாரி உபாத்யாயாவுடன் தொலைபேசியில் பேசியதன் பதிவை  வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தன் அரசுப் பதவியிலிருந்து  நீக்கப்பட்டவர் இந்த சங்கர்.
இந்த மூன்று நிகழ்வுகளும் அரசாங்க செயல்பாடுகள் பற்றிய  அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. அரசு நடவடிக்கைகள் பகிரங்கமாகவும்  நேர்மையாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. உமாசங்கர், பாஸ்கரன், சங்கர்  போன்றோர் தொடர்பான விஷயங்கள் எழுப்பும் கேள்விகள் நிச்சயம்  சங்கடமானவைதான். ஆனால் அவற்றை நேருக்கு நேர் சந்தித்துத் தன் நேர்மையை  நிரூபித்துக் கொள்ளவேண்டிய கடமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதில் உண்மை என்ன என்பதை பாரபட்சமின்றிக்  கண்டறிந்து சொல்லவேண்டிய கடமை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும்  இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தீர்வு நீதிமன்றத்துக்குப் போனால்தான்  கிட்டும் என்ற நிலை இருப்பது ஆரோக்கியமானது அல்ல.
இன்னும் சொல்லப் போனால், இவற்றையெல்லாம் தி.மு.க ஆட்சியின் பிரச்சினையாகவோ, கோளாறாகவோ குறுக்கிப் பார்ப்பது கூட ஆபத்தானதுதான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும் எப்படி நடதுகொள்ளவேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கத்துடன் இவை தொடர்புடையவை. நம் சமூகத்தின் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் இந்த அடிப்படைகள் பற்றிய கவலையை தயவுசெய்து மேற்கொள்ளவேண்டும்
இந்த வாரப் பூச்செண்டு:
விபத்து இழப்பீட்டுக்குக் கணக்கிடும்போது ,வீட்டு நிர்வாகம், இதர  இல்லப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வருமான மதிப்பை கணவர்  வருவாயில் மூன்றில் ஒரு பங்கு என்று நிர்ணயித்திருக்கும் அபத்தமான மோட்டார்  வாகன சட்டப்பிரிவை திருத்தவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோருக்கு இ.வா.பூ.
இந்த வார வேண்டுகோள்:
ராணி மேரி கல்லூரியில் புதிய கட்டடத்துக்குக் கலைஞர் மாளிகை என்று பெயர்  சூட்டி அதைத் திறந்து வைத்திருக்கும் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உங்கள் பெயர் சூட்டப்படும் கட்டடங்களையேனும் திறந்துவைக்கும் வாய்ப்பைப்  பேராசிரியர் அன்பழகனுக்கு அளிக்கும்படி வேண்டுகிறேன்.
இந்த வாரத் திட்டு:
தங்கள் சமபளத்தை மாதம் 16 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுத்து வரும் அத்தனை எம்.பிகளுக்கும் அனைத்து வாக்காளர் சார்பாகவும் இ.வா.தி.
--- ஞானி ( ஒ பக்கங்கள் ) 
No comments:
Post a Comment