Search This Blog

Saturday, August 21, 2010

அரிக்கப்படும் விவசாயம்... அதிரவைக்கும் உண்மைகள்!

''நான் நின்று பேசிக் கொண்டு இருக்கும் இந்த இடம் இன்னும் 80 வருடங்களில் கடலுக்குள் இருக்கும். என் முன்னால் அமர்ந்திருக்கும் சென்னைவாசிகளாகிய உங்கள் வீடுகளை எல்லாம் கடல் மூழ்கடித்திருக்கும்!'' - 'சுற்றுச் சூழல் சூப்பர் ஹீரோ' என்று உலகமே போற்றும் ராபர்ட் ஸ்வான், சுதந்திர தினத்தன்று சென்னையில் உதிர்த்த எச்சரிக்கை இது!
 
25 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய எட்டு நண்பர்களுடன் தனிக் கப்பலில் அண்டார்டிக்கா சென்று, 'இதைப் பாதுகாப்பதே என் லட்சியம்' என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த ராபர்ட் ஸ்வான்தான், சென்னை அழிந்துபோகும் என்று அபாய மணி அடித்திருக்கிறார். 

புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்துகொண்டே போவதுதான் இதற்குக் காரணம் என்கிறார் ராபர்ட். இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாக, தன் பேச்சில் அண்டார்டிக்காவின் சுற்றுச்சூழல் விவகாரத்தை விலாவாரியாக எடுத்துரைத்தார் ராபர்ட். இவர் சொன்ன இன்னொரு அபாயம், 'இந்தியாவை நிலப் புற்றுநோய் பயங்கரமாகத் தாக்கத் துவங்கிவிட்டது' என்பது! அதாவது, விவசாய நிலங்களை மனிதர்கள் அழிப்பது துரிதகதியில் நடக்கிறது என்று வருந்தி இருக்கிறார். 

ஒரு மனிதனுக்குள் தோன்றி, அவனுக்குத் தெரியாமலேயே அரித்து உருத்தெரியாமல் செய்யும் புற்றுநோய்போல, தமிழக நிலங்களை இரண்டு விதமான புற்றுநோய்கள் தாக்கி இருக்கின்றன என்கிறார் ராபர்ட் ஸ்வான்! அவரை சந்தித்துப் பேசி, ஏற்கெனவே நிலப் புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வைத் தூண்டி வரும் 'எக்ஸ்னோரா' நிர்மல் கிஸானைச் சந்தித்தோம். 'எக்ஸ்னோரா' நிர்மல் தெரியும், அதென்ன நிர்மல் கிஸான்? இதைப்பற்றி பிறகு பார்க்கலாம். முதலில் இவர் சொல்வதைக் கேட்கலாம்!

அமெரிக்கா வன்முறை!

''பூமியைக் காப்பாற்ற ஒரே வழி இதுதான் என்ற நோக்கில், கோபன்ஹேகனில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புவி வெப்பமயமாதல் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். நம் பிரதமரும் கலந்துகொண்டார். நானும் அதில் கலந்துகொண்டேன். மொத்தம் 20 ஆயிரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டு தலைவர்களின் முடிவுகளைக் கேட்க ஆவலாக இருந்தோம். ஆனால், மாநாட்டைக் கூட்டி கேளிக்கைகள் மட்டுமே அமர்க்களப் பட்டதே தவிர, குறிப்பிடத்தக்க எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், உலகத்தில் யாருக்குமே சுற்றுச்சூழல் மீது ஆர்வம் இல்லை என்பதைத்தான்! 

இந்தியாவில் விவசாய நிலங்கள் தொழில் புரட்சி, தொழில் முன்னேற்றம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர்களால் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தின் விவசாய நிலத்தில் 13 சதவிகிதம் காணாமல் போய்விட்டது. கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 10 சதவிகித விவசாய நிலம் காணாமல் போயிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலமே இருக்காது. இதைத்தான் ராபர்ட் ஸ்வான், 'நிலப் புற்றுநோய்' என்று வர்ணிக்கிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இணையாக ரியல் எஸ்டேட் மூலமும் விவசாய நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்போதே சென்னையைச் சுற்றியிருக்கும் விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வசப்ப டுத்திக் கொண்டுவிட்டன. இப்போது அது அடுத்த கட்ட நகரங்களுக்கும் நகர ஆரம்பித்துவிட்டது. இதனால், வேலை வாய்ப்புகள் பெருகும்தான். அதே சமயம், விவசாயமே இல்லாமல் போய்விடுமே? 

இதை ஓரளவுக்குத் தடுக்கவும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தலாம். உழவனின் மகன் விவசாயம் செய்யவும், விவசாயம் சாராத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன் விவசாயம் செய்யவும் அரசாங்கம் ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.'' என்கிறார் நிர்மல். இப்போது இவர் தன் பெயருக்குப் பின்னால் 'கிஸான்' என்று சேர்த்திருப்பது 'மற்ற எல்லா அடையாளங்களையும்விட,என்னை ஒரு விவசாயியாகக் காட்டிக்கொள்வதில்தான் பெருமை அடைகிறேன்' என்பதற்காம்! 

கூடி வாழ்ந்தால் கோடி நிலம்!

எக்ஸ்னோரா அமைப்பு, இப்போது கூட்டுப் பண்ணை விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. அதன்படி இப்போது தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஏராளமான கூட்டுப் பண்ணைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. திருச்சியில், ஸ்ரீரங்கத்தில், மைசூருக்குப் பக்கத்தில் என கூட்டுப் பண்ணைகள் ஜோராகக் களைகட்டத் தொடங்கி இருக்கின்றன. இதில் ஆர்வம்கொண்ட இன்னும் பலரும் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் நன்மைகளை ஒரு பிரசாரமாகவே நடத்தி வருகிறார்கள். 

ஒரு விவசாயி தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கருக்கு தன் மூளையைக் கசக்கிப் பயிரிட வேண்டும். இதற்கென தனி நபராக பணம் செலவழிப்பதோடு, விளைந்த பொருளை விற்பதற்கும் பெரும்பாடு பட வேண்டும். சிறிய நிலத்தில் நவீன வேளாண் உத்திகளைப் பயன்படுத்துவதும் தனிநபருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. இதுவே 10 பேர் தலா 10 ஏக்கர் என்று வாங்கி, மொத்தமாக 100 ஏக்கரில் கூட்டுப் பண்ணை ஆரம்பித்தால், லேட்டஸ்ட் விவசாயத்துக்கு சர்வதேச ஆலோசனைக் குழுவைக்கூட அமர்த்திக்கொள்ளலாம். தண்ணீரைச் சேமிக்கும் லேட்டஸ்ட் பாசன வசதிகளை மேம்படுத்தலாம். இப்படி கூட்டுப் பண்ணையின் மூலம் விவசாயத்தின் மீது இருக்கும் தற்கால நம்பிக்கையின்மையைப் போக்கி, அந்த நிலங்கள் கைமாறி தொழிற்சாலைகளாகவோ, அடுக்குமாடிக் கட்டடங்களாகவோ மாறிவிடாமல் தடுப்பதும் நிலப் புற்றுநோய்க்கு எதிரான முக்கிய நடவடிக்கை! வனத்தைப் பாதுகாக்க, வன விலங்குகளைப் பாதுகாக்க அரசாங்கம் தனித் துறைகளை வைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாய நிலங்களைப் பாதுகாக்க தனித் துறையோ, தனி சட்டங்களோ இல்லாததும் நிலப் புற்றுநோய் முற்றிப்போக ஒரு காரணம். நஞ்சை நிலத்தில் வீடு கட்டக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், இப்போது நஞ்சை நிலங்களில்தான் பரவலாக வீட்டு மனைகள் போடப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரம்! நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக்க, தற்போது கிராம அதிகாரிகள் அளவில் அனுமதி பெற்றாலே போதுமானது. கிராம அளவில் இருக்கும் அதிகாரிகள், 'நஞ்சை நிலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த நிலத்தில் உழவும் இல்லை' என்று சான்றளித்து வீட்டு மனைகளாக்க பரிந்துரை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலில் லஞ்சம் புகும் இடம் இங்குதான். நஞ்சை நிலங்களை வீட்டு மனை நிலமாக்கும் அதிகாரத்தை இனிமேல் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைந்த ஒரு குழுவுக்குக் கொடுத்தால், விளை நிலங்களைக் காப்பாற்றலாம் என்பது இயற்கை ஆர்வலர்கள் நெடுநாட்களாக எழுப்பும் கோரிக்கை. இன்னொரு புறம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க, மாடர்னாக 'பண்ணை வீடு' என்ற பெயரில் விவசாய நிலத்தை முடக்குகிறார்கள். பல ஏக்கரில் ஒரே ஒரு பங்களா கட்டி, நீச்சல் குளம் அமைத்து உள்ளே போகும் கரன்ஸிகர்த்தாக்கள், பிறகு ரெசார்ட்ஸ் என்ற பெயரில் விளை நிலங்களை இல்லாமலேயே செய்துவிடுகிறார்கள். இதை எல்லாம் தடுக்கவேண்டிய அரசியல்வாதிகள் முகத்தில் கரன்ஸி மழை பொழிய, விளை நிலங்கள் கரைந்துகொண்டு இருக்கின்றன!

அப்ரூவரான அரசாங்கம்

தமிழக அரசு இலவசத் திட்டங்களிலும், புதுப் புது சட்டங்களிலும் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது. ஆனால், இந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தவே முடியவில்லை. காரணம், தமிழ்நாட்டில் விவசாய நிலம் இல்லவே இல்லை என்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்டதுதான்! இப்போதே சென்னையைச் சுற்றிலும் தேவையான அளவுக்கு சர்வதேச தொழிற்சாலைகள் வந்துவிட்டன. இதற்கே காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கால்வாசி விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டன. இப்போதும் தினம் தினம் ஏதோ ஒரு பன்னாட்டு கம்பெனியுடன், முதல்வரோ, துணை முதல்வரோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிறுவனங்களை விவசாய நிலங்கள் குறைந்த அளவு கொண்ட மாவட்டங்களான தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கலாம்! 

விவசாயத்தை முடக்குவதே மத்திய அரசுதான்!

'பொதுவாகவே இந்தியாவில் விவசாயக் கூலிகள் கணிசமாகக் குறைந்துவிட்டனர்' என்று ஆந்திராவைச் சேர்ந்த விவசாயிகள் எடுத்த புள்ளிவிவரம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. மத்திய அரசாங்கம் கொண்டுவந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்தான் விவசாயத்தைச் சாகடிக்கிறது என்று அதில் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளே வயிற்றுப் பிழைப்புக்காக தங்கள் விவசாயத்தை ஓரம்கட்டிவிட்டு மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்குப் போகிறார்கள். இந்தத் திட்டத்தில் வேலை இல்லாத நாட்களில் சும்மா இருக்கும் தினக் கூலிகளை தங்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு அழைத்துப் போய் ஓரளவே விவசாயம் செய்கிறார்கள். இதெல்லாமே விவசாயம் அழிவதற்கான கண்கூடு! 

கிட்டத்தட்ட இதே சம்பவம் கேரளாவில் நடந்தது. ஒரு விவசாயி தன் வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிரை களத்துக்குக் கொண்டுவர கூலிகள் இல்லாமல் திண்டாடினார். கதிர் அறுக்கும் மெஷினைக் கொண்டுவந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர், 'வேலைக்கு ஆட்கள் இல்லை என்றால் ஏன் இவ்வளவு விவசாயம் செய்கிறாய்? உன் வீட்டில் இருக்கும் ஆட்களைக்கொண்டு செய்யும் அளவுக்கு விவசாயத்தைச் செய். மெஷினை வயலுக்குள் இறக்காதே, கெமிக்கலையும் வயலுக்குக் காட்டாதே' என்று எதிர்ப்புச் சொன்னார்கள். இந்த எதிர்ப்பைப் பார்த்து பயந்துபோன அந்த விவசாயியிடம், 'நீயும் எங்களோடு சேர்ந்து கொள் விவசாயத்தைக் காப்பாற்ற நாங்கள் இப்போது பெயர் வைக்காத புது இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்' என்று அவரையும் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள். கடைசியில், அவர்களே இறங்கி நெல் அறுவடையை செய்து முடித்தார்கள். இதில் சில முரண்பாடுகள் இருந்தாலும், விவசாயத்தைப் பாதுகாக்க அரசாங்கத்துக்கு எதிராக அப்படியும் ஒரு போராட்டம் தேவைதான்!

இருக்கும் இடத்தைவிட்டு..!

நிலப் புற்றுநோய்க்குக் கடைசியான காரணம் பாசனம் இல்லாததும்தான். ஊரில் பெய்யும் மழையைக் கடலுக்குள் விட்டுவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க இன்று பல கோடிகளை இறைத்துக் கொண்டு இருக்கிறோம். நதிகளை இணைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இணைந் திருந்த ஏரிகளைப் பிரித்து அழித்துக்கொண்டு இருக்கிறோம். பாசனத்துக்குத் தண்ணீர் கொடுக்கும் பல ஏரிகளில் இன்று வீடுகள் இருக்கின்றன. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அமைந்திருக்கும் விசாலமான ஏரியாவே ஓர் ஏரிதான். இப்போதும் மழை வந்தால், அந்த அலுவலக வளாகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. ஏரிகள் மாவட்டம் என்று பழைய செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒரு பெயர் உண்டு. இப்போது காஞ்சிபுரம் மாவட்டமாக உருமாறி இருக்கும் அந்த மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் இல்லை என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும். அடுத்து, இந்த மாவட்டத்தில் பெருகிவிட்ட தொழிற்சாலைகளால் விவசாயத்தைப்பற்றி நினைக்கவே முடியாது. அதைப்பற்றி நினைத்தால்தானே பாசனத்தையும் ஏரியையும் நினைப்போம்! 

மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்துக்கு வருவோம். 80 வருடங்களில் சென்னை இருக்காது என்று ராபர்ட் சொன்னதில் இன்னொரு உள்ளர்த்தமும் இருக்கிறது. அவர் சென்னை கடல் மட்டம் உயர்ந்து நகருக்குள் தண்ணீர் புகுந்தால்... அது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரை தாக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஒரு முறை சென்னையைச் சுற்றி கடல் நீர் வந்துவிட்டாலே சென்னையைச் சுற்றி இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலத்திலும் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மண் வளம் கெட்டுப்போகும் என்பது ராபர்ட் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி! 

நன்றி - விகடன் குழுமம் 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒரு நல்ல பதிவு.. ஆனால் இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இது போன்ற நல்ல பதிவுகளை வாசிக்க கூட நேரமில்லை. அது மட்டும் இல்லாமல் இதை படிப்பவர்கள் விவசாய துறையை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதனால் இது யார்க்கு போய்ச சேர வேண்டுமோ அவர்களுக்கு போய் சேருவதில்லை. அதே போல் Exnora கூட்டு பண்ணை திட்டத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விவரங்கள் தந்தால் சௌகரியம். நம்மால் முடிந்த அளவு இதை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. என்னால் முயற்சி செய்து இது போல் கட்டுரைகளை சேகரித்து அதனை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

    ReplyDelete