Search This Blog

Thursday, December 16, 2010

முதலமைச்சர்கள்-அன்றும் இன்றும்

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி). அதற்குப் பிறகு அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் பணியாற்றினார். வங்காளத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத்தின் பகுதிகள் அடங்கிய சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில்தான் அவரது வீடு இருந்தது. மிகவும் குறுகலானது மட்டுமல்ல, சிறியதும்கூட. 

 பெருந்தலைவர் காமராஜ் தமிழக முதல்வராக அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து ஒருமுறைக்கு இரண்டு முறை இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுத்தவர். அவர் வாழ்ந்த வீடு திருமலைப்பிள்ளை சாலையில் இப்போதும் நினைவு இல்லமாக இருக்கிறது. அது அவருக்குச் சொந்தமானதல்ல. வாடகை வீடுதான். இவரது மறைவுக்கு முன்பு அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர் இறந்த பிறகு அந்த வீட்டை எம்.ஜி.ஆர். ஆட்சியில் விலை கொடுத்து வாங்கி, காமராஜின் நினைவாலயமாக்கினார். அவர் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது. அந்த வீட்டில் இருந்துகொண்டுதான், உலகத் தலைவர்களையும், இந்தியத் தலைவர்களையும் சந்தித்தார். அவரைச் சந்தித்த தலைவர்கள் பெருமைப்பட்டார்களே தவிர, அவரது வீடு சிறியது என்று எண்ணிக் கவலைப்படவில்லை.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் வீடும் சிறியதுதான். அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் ஆட்சியும் நடத்தினார், தன்னைப் பார்க்க வந்த அனைத்துத் தலைவர்களையும் (அண்ணா, கருணாநிதி) உள்பட அவர் இருந்த சிறிய வீட்டில்தான் சந்தித்தார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கு சென்னையில் வீடே இருக்கவில்லை.பிரதமர் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்குத் தம் பிள்ளைகள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் வசிப்பதற்கு தில்லியில் சொந்த வீடு கிடையாது. மோதிலால் நேருவால் கட்டப்பட்டு, பரம்பரை உரிமையாகத் தனக்குக் கிடைத்த  அலாகாபாதிலுள்ள ஆனந்தபவனத்தையும் இந்திய அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, அரசு வீட்டில்தான் கடைசிவரை வாடகைக்கு வாழ்ந்தவர் இந்திரா அம்மையார். 

இந்த நிலையில் நம்முடைய முதலமைச்சர் தாம் வசிக்கிற வீடு, (கோபாலபுரம், சி.ஐ.டி. நகர்), குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாதது என்று வேதனைப்படுவது புரிகிறது. அவரைவிட எளிமையாக வாழ்ந்த முதலமைச்சர்கள் அந்தக் குறையை வெளிப்படுத்தியதில்லை. எனவே, தான் வாழ்கிற வீட்டின் வசதி குறைவு எனக் கருதி நமது முதலமைச்சர் வேதனைப்படத் தேவையில்லை.

முதலமைச்சர், தான் ஏதோ சல்லிக்காசுகூட இல்லாமல் சென்னைக்கு வந்ததுபோல் எழுதுவதாகவும், தான் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், அன்றைக்கே திருக்குவளையில் அல்லாமல் திருவாரூரில் தங்கிப் படித்ததாகவும் எழுதுகிறார். தம் வீட்டில் திருடன் புகும் அளவுக்கு வசதி இருந்தது என்கிறார். அவரை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை. சென்னைக்கு வரும்பொழுது அவர் திருட்டு ரயில் ஏறி வந்ததாக அவரும், அவரைச் சார்ந்தவர்களும்தான் மேடையில் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்மூலம் தாங்கள் ஏழை எளியவர்கள், சாமானியர்கள் என்று மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். எனவே, அவரைப் பற்றி யாராவது வசதி இல்லாதவர் என்று சொல்லியிருந்தால் அதற்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் காரணம். 

திரைப்படத் துறையில் எப்படியெல்லாம் முன்னேறினேன் என்று விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஏனோ அவர் ஈரோட்டில் தங்கி, தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழில் பணியாற்றி ஊதியம் பெற்றதைச் சொல்லத் தவறிவிட்டார். அவருடைய ஆழ்ந்த தமிழ் அறிவையோ, சொல்லாற்றலையோ, எழுத்து வன்மையையோ இதுவரை எவரும் கேலி செய்ததும் இல்லை, எள்ளி நகையாடியதும் இல்லை. அவர் படிப்படியாகத் திரைப்படத் துறையில் முன்னுக்கு வந்தவர், மற்றவர்களைவிட அதிகம் ஊதியம் பெற்றவர். கூட்டாகச் சேர்ந்து சினிமாப் படம் தயாரித்து நஷ்டப்பட்டவர். சம்பாதிக்கவும் செய்தவர். 

திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்குள் புகுந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு அறிஞர் அண்ணா, சினிமாத் துறையை விட்டுத் தானாக விலகிவிட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகு மிகப்பெரிய அளவில் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்த நடிப்புத் துறையைவிட்டுத் தாமாக ஒதுங்கிவிட்டார். முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெ. ஜெயலலிதா நடிப்புத் துறையைவிட்டு விலகிவிட்டார். ஆனாலும் கருணாநிதி முதலமைச்சர் பதவியையும், திரைப்படத் துறையையும் இப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மற்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர் உணரவில்லை. முதலமைச்சராக கதைவசனம் எழுத ஆரம்பித்த பிறகு அவருக்குக் கிடைத்த ஊதியம் பல லட்சம் (|25 லட்சம் முதல் 50 லட்சம்) வரை உயர்ந்தது. அவரோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மற்ற எழுத்தாளர்கள் குறைந்த ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தத் திரைப்படங்கள் வலிந்து ஓட்டப்படுகின்றன. ஓடுவதாகத் தெரியவில்லை. ஆனாலும், தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து நஷ்டப்படத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களே, ஏன்? இவருக்குப் பல லட்சங்களை அள்ளிவீச வரிசையில் நிற்கிறார்களே, ஏன்? இவர் முதலமைச்சர் என்பதால்தானே?  

 அவர் பல லட்சம் பெற்றுக்கொண்டு எழுதிய வசனம் எவருடைய மனதிலும் இன்று நிலைத்து நிற்கவில்லை. அவர் சில நூறுகள், சில ஆயிரங்கள் வாங்கிக்கொண்டு எழுதிய கதை வசனம் இன்னும் பார்த்தவர்கள் மனதில் பசுமையாக நிழலாடுகிறது. படம் எடுப்பவர்களுக்கும் இது தெரியும். முதலமைச்சர் தான் திரைப்படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு பணம் வாங்குகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைவிட, ஏன் அவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 கோபாலபுரம் வீட்டைப் பற்றி இந்த ஒரே வீடுதான் என்னுடையது, அதுவும் எனக்குப் பிறகு மருத்துவமனைக்குத் தானம் கொடுத்துவிட்டேன் என்கிறார். இன்று கோபாலபுரம் கருணாநிதிபுரமாக மாறிவிட்டது. அவர் வீட்டின் பின்புறம் பற்றி சட்டமன்றத்தில் பிரச்னை எழுந்ததை அவர் மறந்துவிட்டார். முரசொலி பத்திரிகை, துணைப் பத்திரிகைகளை எவ்வளவு சிரமங்களுக்கிடையே நடத்தி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால், அந்த முரசொலி பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துபோன நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நிதி சேர்த்ததை மறந்திருக்க மாட்டார். இன்றைக்கு அவர் சன் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு நூறு கோடி பிரித்துக் கொடுத்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால், சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியபொழுது அதன் நிலை என்ன? யாருடைய ஆதரவில் வளர்ந்தது? இவரும், இவரது அரசும் ஆதரவு அளித்து அதை வளர்க்கவில்லையா?  ஒரு காலகட்டத்தில் அது தமிழக அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வரவில்லையா?

 சன் தொலைக்காட்சி நிறுவனம் நூறு கோடி ரூபாய் அவருக்குப் பிரித்துக் கொடுத்துள்ளது. ஆனால், அதில் அவருடைய முதலீடு எவ்வளவு என்பதைச் சொல்லவில்லை. அவர் துணைவியாருக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்லவில்லை. அவரே சம்பாதித்த பணத்தை வங்கிகளில் வைத்து ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்ய அறக்கட்டளை அமைத்து இருப்பதாகச் சொல்கிறார். அதில் எவ்வளவு பணத்துக்கு வருமானத் துறை விலக்களித்தது என்று சொல்லவில்லை.  ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், ஆட்சிக்கு வந்த பின்பும் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோதெல்லாம் காங்கிரஸ் கட்சியிலிருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் ஆகிய பெரும் நிலம் படைத்தவர்களின் கட்சிதான் காங்கிரஸ் கட்சி என்றார்கள். இவர்களுக்காகவே காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவராமல் தவிர்க்கிறது என்று சொன்னார்கள். ஏன் முதல்வர் கருணாநிதியே பல மேடைகளில் பேசினார்.

இன்றைக்கு அந்த பெரும் நிலச் சுவான்தார்கள் அத்தனைபேர் நிலப்பரப்பையும் ஒருசேர கூட்டினால் எத்தனை ஏக்கர் நிலம் வருமோ அதைவிட அதிகமாக அவருடைய குடும்பத்தினர் எஸ்டேட்டுகளையும், நிலத்தையும் வாங்கி வைத்திருக்கிறார்களா இல்லையா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு நில உச்சவரம்புச் சட்டம் என்ன ஆயிற்று? மிகப் பெரிதாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக்கொண்டு சட்டமன்றத்தின் முன்வைத்த நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்ட முன்வடிவு என்ன ஆயிற்று? அந்தச் சட்ட முன்வடிவு யாருக்காகக் கைவிடப்பட்டது என்பதை முதலமைச்சர் விளக்குவாரா? குறைந்தபட்சம் அந்தச் சட்ட முன்வடிவில் குறிப்பிட்டிருந்ததைவிட பல மடங்கு அதிக நிலத்தை சென்னை மாநகராட்சி எல்லையிலும் மற்ற மாநகராட்சி எல்லைகளிலும் அவர் குடும்பத்தினர் வைத்திருப்பதை இல்லை என்று சொல்வாரா?  எதையெதையோ தம்முடைய சொந்தக் கணக்கோடு சேர்த்து எழுதியிருக்கும் முதலமைச்சர் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கொலைவழக்கில் சிக்கினார் என்பது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சி ஊழலில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்களை உடனே கட்சியை விட்டு விலக்கினார். இன்றைக்கு கருணாநிதி ஈரோடு மாவட்டத்தில் பல கிரிமினல் வழக்கில் சிக்கிய எஸ்.கே.கே.பி. ராஜாவை என்ன செய்துள்ளார்?  உலகையே வியக்கவைத்த ஊழலுக்குக் காரணமான ராசாவை எப்படி கட்டி அணைக்கிறார் என்பதைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அவர்களுக்கு வந்த பணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் செலுத்திவிட்டு, தங்களுக்குத் தேவையான ஆடை மற்றும் மளிகைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச்  சீட்டு அனுப்பிப் பெற்றுக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.பெருந்தலைவர் காமராஜ் பதவியில் இருந்தபோது, அவர் பெற்ற ஊதியத்தையும் பொது நிகழ்ச்சிக்குச் செல்லும்பொழுது மாலைக்குப் பதிலாகக் கொடுத்த பணத்தையும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பிவைத்தார். புதிய ஆடைகள் வேண்டுமென்றாலும், மளிகைப்  பொருள்கள் வேண்டுமென்றாலும் அவரது பணியாளர் மறைந்த வைரவனிடம் சொல்லி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் பெற்றுக் கொள்வார்.  ஆனால், தனிநபர் கருணாநிதியின் குடும்பச் சொத்து மதிப்பீடு பல ஆயிரம் கோடி என்பதை மறுக்க முடியுமா? 

ஒரு விரலால் மற்றவர்களைக் குற்றம்சாட்டும்போது, மீதி நான்கு விரல்கள் அவரைச் சுட்டிக்காட்டுவதை முதல்வர் கருணாநிதி ஏனோ மறந்துவிடுகிறார். அவரைச் சாமானியன் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. கோடீஸ்வரர் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. பிறகு இவரை எப்படித்தான் வர்ணிப்பது?  ஆனாலும், இவர் தன்னை ராஜாஜியுடனும், காமராஜுடனும், அண்ணாவுடனும் ஒப்பிட்டுப் பேச நினைப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை...  

1 comment: