Search This Blog

Friday, December 31, 2010

பிகாரில் வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூடாது? - ராகுல் காந்தி

காங்கிரஸில் இளைஞர் சக்தியை அதிகரித்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை  ஏற்படுத்த முடியும்''- அண்மையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அக்  கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி, தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும்  திரும்பத் திரும்ப வலியுறுத்திய கருத்து இது. ""காமராஜ் ஆட்சியை அமைத்தே  தீருவோம்''- உள்ளூர் தலைவர்கள் அடிக்கடி கூறும் சூளுரை இது. 

 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி, மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிப்  பொறுப்பில் உள்ள கட்சி என காங்கிரஸ்காரர்கள் பெருமை பேசிக் கொண்டாலும்,  தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸôல் ஆட்சிப் பொறுப்புக்கு வர  முடியவில்லை. காங்கிரஸ் இல்லாத கூட்டணி ஜெயிக்காது என்று கூறும் அதே வேளையில், கூட்டணியில் இல்லாத காங்கிரஸôலும் ஜெயிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

 உள்கட்சி ஜனநாயகம் இல்லாதது, ஏதோ ஓர் அத்திப்பட்டிக்கு நிர்வாகி என்றாலும்  தில்லியில் நியமனம் செய்யப்படுவது, கோஷ்டி அரசியல், தலைமையை மதிக்காதது,  கோஷ்டித் தலைவர்களின் மாறுபடும் விசுவாசம், மக்கள் பிரச்னைக்காக களம் இறங்காதது என காங்கிரஸின் தேய்மானத்துக்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைதான் கட்சிக்குள்.  கட்சியை எப்படி வளர்ப்பது என்று "கழகங்களிடம்' பாடம் படிக்க வேண்டிய  நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத் தலைவரே ஆனாலும் அவருக்கு எதிராக  பூந்தொட்டியை வீசுவது, முற்றுகையிட்டு கோஷ்டி வலுவைக் காட்டுவது எல்லாம்  காங்கிரஸில் மட்டும்தான் நடக்க முடியும். மற்ற கட்சிகளில், குறிப்பாக, மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வரும் "கழகங்களில்' தலைமைக்கு எதிராகத் தொண்டர்களால் மூச்சுவிட முடியுமா? 

காங்கிரஸில் தொண்டர்களைவிட தலைவர்களே அதிகம் என வேடிக்கையாகச்  சொல்வதுண்டு. அந்த அளவுக்குக் கட்சியினரைத் திருப்திப்படுத்த வேண்டும்  என்பதற்காகவே பதவிகள் பங்கிடப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர் பதவியே  கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என திசைக்கு ஒன்றாக இருக்கிறது. இதுபோக  வட்டம், நகரம், பேரூர், ஊராட்சி என பதவிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வாசன் அணி, தங்கபாலு அணி, சிதம்பரம் அணி, இளங்கோவன் அணி என நான்கு அணிகள் செயல்படுகின்றன. 50 உறுப்பினர்களைக்  கொண்ட சின்னஞ்சிறிய ஊர்களில்கூட இந்த நான்கு அணிகளும் செயல்படுகின்றன. எந்த அணிக்கு எவ்வளவு செல்வாக்கு என்று கணக்குப் பார்த்து, அதன் விகிதாசார அடிப்படையில்தான் கட்சிப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பதவி வாங்கிக்  கொடுக்க அணித் தலைவர் இருக்கும்போது, கட்சியைவிட அந்த அணித் தலைவருக்கே தொண்டர்கள் விசுவாசம் காட்டுகின்றனர். ஓர் ஊரில் காங்கிரஸ்காரர்கள் விழா நடத்துகிறார்கள் என்றால், அது எந்த அணியின் விழா என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. இது போதாது என்று, ஒரே கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சியினர் போல மாறிமாறி அறிக்கைப் போர்விட்டு, பேட்டியளித்து அவ்வப்போது "ஒற்றுமையை' வேறு பறைசாற்றிக் கொள்கின்றனர். பின்னர் எப்படிக் கட்சி வலுப்பெறும்?

கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே எண்ணம் இருந்தால், தமிழகக் காங்கிரஸின் இப்போதைய தேவை என்ன தெரியுமா? அணிசேரா  கொள்கைதான்.  தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸýக்கு மொத்தம் 14 லட்சம் உறுப்பினர்கள்  இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு கட்சியும், ஜாதி அமைப்புகளும் காட்டும் இந்தக் கணக்கு எத்தனை உண்மை என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலத்தான் இதுவும்.

எல்லா தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சியின் தோளில் ஏறி அல்லது ஒரு கட்சியைத் தோளில் ஏற்றித்தான் தேர்தலைச் சந்தித்திருக்கிறது காங்கிரஸ். அந்த அணி வெற்றிபெற்று ஆட்சிக்கும் வந்துவிடுவதால், பின்னர் அரசுக்கு எதிராக மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்திக்கூட  எந்தப் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்துவதில்லை. கூட்டணி தர்மமாம். உள்ளூர்  பிரச்னைகளைத் தவிர்த்து மாநில அளவிலான மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்காக  காங்கிரஸ் எந்தப் போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா?

கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெறும் நான்கு இடங்களிலேயே வென்றபோது, "கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டியுள்ளது'' என்று சொன்னார்கள் சோனியாவும் ராகுலும். 

 நாங்கள் சேரும் அணிதான் வெற்றி என்ற வெற்று மாயையைவிட உண்மையான  பலத்தை அறிந்துகொண்டால் கட்சியை வளர்க்கவாவது ஆர்வம் தோன்றும். பிகாரில்  வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூடாது? 

ராஜாராம் 

No comments:

Post a Comment