Search This Blog

Saturday, December 18, 2010

மின்சாரம்

கம்பி வழித் தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தத் தொடங்கினால் முதலில் கேட்பது இதுதான்: மின்சாரம் பொருளாதாரத்தின் உயிர்நாடி. அதைத் திறம்படப்  பயன்படுத்துங்கள், என்பதுதான்.இந்த வாரம் மின் சிக்கன வாரம். இதற்கான விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தைச் சேமிப்பதை வலியுறுத்திக் கருத்தரங்குகள், மனிதச் சங்கிலி, விழிப்புணர்வுப் பேரணி ஆகியவற்றை ஆங்காங்கே நடத்தி வருகிறார்கள்.இந்தியாவில் உற்பத்திக்கும் மின்தேவைக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே போனாலும் மின்தேவையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மின்உற்பத்தித் திறன் (ஜூன் 2010 நிலவரப்படி) 162366 மெகாவாட். இருப்பினும், மின் பற்றாக்குறை என்பது இதில் 15 விழுக்காடு. அதாவது சுமார் 24,000 மெகாவாட். 

2020-ம் ஆண்டுக்குள் தற்போதைய மின்உற்பத்தித் திறனுடன் மேலும் கூடுதலாக 78,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டாலும், இதில் பெரும்பகுதியை எட்டுவதற்கு அணுஉலைக் கூடங்களை அமைத்தால் மட்டுமே முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், புனல்மின் நிலையங்களுக்கான வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்துபோய்விட்டன.இந்தியாவில் 70 விழுக்காடு மின்சாரம் அனல் மின்நிலையங்கள் மூலம்தான் கிடைக்கிறது. அதற்கு பழுப்பு நிலக்கரி தேவை. இந்தியாவில் உள்ள பழுப்பு நிலக்கரியில் சாம்பல் சத்து அதிகமாக இருப்பதால் பெருமளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இறக்குமதி என்றாலே அரசியல்வாதிகளுக்கு இனிப்புக்கு சாப்பிடுவது போலத்தானே. வெளிநாட்டில் வாங்கும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் வர்த்தகக் கமிஷன் உண்டு. அதை வெளிநாட்டு வங்கிக் கணக்கில் நேரடியாக- தன் பெயரிலோ அல்லது கட்சியின் தேர்தல் செலவுக்காகவோ- வரவு வைத்துக்கொள்ளும் வசதிகளும் உண்டு. ஆகவே ஊழல் புகுந்தால், பழுப்பு நிலக்கரியின் விலையும் கூடும், மின் உற்பத்திச் செலவு கூடும். மின்கட்டணம் கூடும். மக்கள் தலையில் தான் இந்தக் கட்டணச் சுமை விழும்.நிலைமை இதுவாக இருக்க, நாம் இருக்கிற மின்சாரத்தைத் திறம்பட, அதாவது சிக்கனமாக, தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துகிறோமா என்கிற கேள்வியை எழுப்பினால், இல்லை என்றே சொல்லிவிட முடியும்.

பிரயாஸ் எனர்ஜி குரூப் என்கிற தன்னார்வ அமைப்பு இந்த ஆண்டு மின்பயன்பாடு குறித்து  ஆய்வு நடத்தியதில், தொடர் மின்இணைப்பில் வைத்திருத்தல் (ஸ்டான்ட்பை மோட்) என்கிற ஒரு வகைப்பாட்டில் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு 270 கோடி யூனிட் மின்சாரம் வீணாகிப் போகிறது என்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய தொடர் மின்இணைப்பில் வைக்கப்படும் கருவிகள் பெரும்பாலும், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செட்-டாப் பாக்ஸ் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்தத் தொடர்மின்இணைப்பு வகைப்பாட்டில் நகர்ப்புற மக்கள்தான் கிராமத்தினரைக் காட்டிலும் அதிகம் வீணடிக்கிறார்கள். நகர்ப்புறத்தில் வாழும் ஒருவர்- டிவி, கணினியை முற்றிலும் ஸ்விட்ச் ஆப் செய்யாமல், இத்தகைய ஸ்டான்ட்பை மோடில் வைத்திருப்பதன் மூலம், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்துவதோடு, தன் வீட்டுக்கு மாதம் தோராயமாக | 400 இழப்பு ஏற்படுத்திக் கொள்கிறார் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  

கணினியும் தொலைக்காட்சியும் இப்போது கிராமப்புறங்களையும் ஆக்கிரமித்து வருவதால், இதன் அளவு கூடுமேதவிர, குறையாது என்கிறது அந்த ஆய்வு. அவர்கள் கணக்கின்படி 2013-ம் ஆண்டு இந்தத் தொடர் மின்இணைப்பு மூலம் 461 கோடி யூனிட் மின்சாரம் வீணாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க மின் திருட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசுப் பிரமுகர்களின் கட்சி அல்லது இல்ல நிகழ்ச்சிகளுக்கு, அந்தத் தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கொக்கிபோட்டு மின்சாரம் திருடுவது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அரசியல் தலைவர், அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் ஊருக்கு வெளியிலிருந்து குழல்விளக்குகள் அமைத்து இரவு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் நிலைமை இன்னமும் தமிழ்நாட்டில்தான் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்காக, சாதாரண கிராம மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் செல்ல வேண்டிய மின்சாரத்தைத்தான் இங்கே திசைதிருப்புகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்வதில்லை. இந்த மின்சாரம் காந்தி கணக்கில் எழுதப்படுகிறது என்பதைக்கூட புரிந்துகொள்ளாதவர்களாகவே இன்னும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளிக்கப்பட்ட பிறகு, எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி பிற்பகல் தொடங்கி இரவு 11 மணி வரை இடைநில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத சாலையோர தேநீர் கடைகளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. முன்பு வானொலிப் பெட்டி இதே தேநீர் கடைகளில் இருந்தபோது அதற்குத் தேவைப்பட்ட மின்தேவை மிகக் குறைவு. போதாதற்கு செல்போன்களையும் நாள்தோறும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.இதுபோதாதென்று முக்கிய நகரங்கள், தெருமுனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்களில் ஆங்காங்கே கேன்டிட் கேமராக்கள் பதிவு இயங்கிக் கொண்டே இருக்கின்றன எந்நேரமும்.

மின்உற்பத்திக்குக் குறைவான சாத்தியங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மின்தேவைக்கோ அளவே இல்லை. எவ்வளவு உற்பத்தி செய்து கொடுத்தாலும் காலி செய்யக் காத்திருக்கிறது நவீன நாகரிகம்.வசதியான வாழ்க்கை என்பது தேவைதான். ஆனால், தேசநலனைப் புறம் தள்ளி மின்விரயத்துக்குத் துணைபோகும் நமது மக்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும். மின் உற்பத்தியைப் பெருக்குவது எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் மக்களிடம் மின் சிக்கனத்தின் தேவையை உணர்த்துவது.மின்சாரம் தொட்டால் மட்டுமல்ல, நினைத்தாலே ஷாக் அடிக்கும் போலும்.

தினமணி     

1 comment:

  1. விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு .அருமை தகவல்கள் பல அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete