Search This Blog

Friday, December 17, 2010

தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?

அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 63 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும்கூட, நாம் இன்னும் அடிமைத்தனச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, நமது ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியாவின் பலத்தை உணரவில்லை என்பது  மட்டுமல்ல, இந்த மாபெரும் தேசத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்வுகூட இல்லாமல் இருக்கிறார்களே என்பது வேதனையளிக்கிறது.அது அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, இந்தியாவை அவமானப்படுத்துவதில் துன்பியல் இன்பம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டிருக்கின்றன. சீனா நம்மை அவமானப்படுத்துவது புரிகிறது. ஆனால் அமெரிக்காவும் அப்படி இருக்கிறது என்கிறபோது, நமது வெளியுறவுக் கொள்கை தவறாக இருக்கிறதா இல்லை நமது ஆட்சியாளர்கள் முதுகெலும்போடு செயல்படாமல் இருக்கிறார்களா என்பது புரியவில்லை. அமெரிக்க அதிபர்களை நமது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வருந்தி அழைத்து வருவதால், இந்தியா தனது சுற்று தேவதை நாடுகளில் ஒன்று என அமெரிக்கா கருதிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. 

எந்தவொரு நாட்டிலும் சாதாரணப் பயணிகளைப்போல, அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் நடத்தப்படுவதில்லை. விமானநிலையங்களில் அவர்களுக்குத் தனியான வரிசை ஏற்படுத்தி பாதுகாப்புச் சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் என்ன பொருளை வாங்கினாலும் அதற்கு எந்தவிதமான வரியும் விதிப்பதில்லை என்பது சர்வதேச வழக்கு.ஷாரூக்கான், கமல்ஹாசன் என்று திரைப்பட நடிகர்கள் அமெரிக்காவில் சோதனையிடப்பட்டதை நாம் பெரிதுபடுத்தவில்லை. இவர்களுக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்று நாம் கோரவும் இல்லை. ஆனால் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமை பாதுகாப்புச் சோதனை என்கிற பெயரில் அவமானப்படுத்தினால் அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் அவமானப்படுத்துவது போன்றதல்லவா? அதை எப்படி இந்திய அரசு சகித்தது? ஜிம்மி கார்ட்டரும், பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும்  இந்தியா வந்தால், அவர்களை அதேபோல சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா மௌனம் காக்குமா?போகட்டும், அது நடந்து முடிந்த கதை. அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டாமா? அமெரிக்காவிடம் கறாராகப் பேசி, இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா?

சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவருக்கு பாதுகாப்புச் சோதனையின்போது அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம்தான், நமது அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஹர்தீப்சிங் புரி என்பவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர். சீக்கியரான ஹர்தீப்சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ஹெளஸ்டன் விமான நிலையத்தில். தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக அந்தஸ்துப் பெற்றவர் என்றும் எடுத்துக்கூறியும் அந்தப் பாதுகாப்புச் சோதனையிடும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளாகச் செல்லும் சீக்கியர்களைத் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்வதில்லை. இந்தியத் தூதரக அதிகாரி என்பதால் வேண்டுமென்றே அந்த அதிகாரிகள் ஹர்தீப்சிங் புரியைக் கேவலப்படுத்தினார்கள் என்பது தெளிவு.கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் இதேபோல, மிஸ்ஸிஸிப்பி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியத் தூதர் என்ற முறையில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுடன் செயல்படும் உயர் அதிகாரி மீரா சங்கர். அவரது குற்றம் சேலை கட்டி இருந்தது. உங்கள் சேலையை அவிழ்த்துக் காட்டுங்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேட்பது என்றால், இந்தியாவை எந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு ஷேக்குகளின் மனைவியரையும் அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோகூட நினைவில்லை. அப்படி ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால் அடுத்த நொடியே, பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல் ஹில்சும் அலறித் துடித்திருக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வராமல் போனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பமே ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

பாதுகாப்புச் சோதனைக்குத் தூதரக ஊழியர் உள்படுத்தப்படுவதில்கூடத் தவறில்லை. ஆனால், சேலையைக் கழற்றித்தான் இந்தியத் தூதரைச் சோதனையிடுவேன் என்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லவா? நாம் பிறந்த புண்ணிய பூமிக்கு இழைக்கப்படும் அவமானம் அல்லவா அது?நிமிர்ந்து நிற்கவும், எதிர்த்துக் குரலெழுப்பி அமெரிக்காவை எச்சரிக்கவும் நாம் ஏன் தயங்குகிறோம்? ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக நமது தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?   

1 comment:

  1. நியாயமான கேள்வி பதில் சொல்வர்தான் யாருமில்லை நண்பா

    ReplyDelete