Search This Blog

Thursday, December 05, 2013

நகத்தைப் பாதுகாப்பது எப்படி?


நகம் என்பது கை, கால் விரல்களின் நுனியில் வளரும் ஓர் உறுப்பு. ‘கெரோட்டீன்’ எனும் புரதப் பொருளாலான அமைப்பு. நகமும் சதையும் சந்திக்கிற நகக்கண் தோலிலிருந்து நகம் வளருகிறது. புதிய செல்கள் உருவாகும்போது பழைய செல்கள் முன்னால் தள்ளப்பட்டு நகத்தின் நுனியில் வெள்ளையாக மாறுகின்றன. புதிய செல்கள் உயிருள்ளவை. பழைய செல்கள் உயிரற்றவை. இதனால்தான் நகத்தின் நுனியைக் கடித்தாலும் வெட்டினாலும் வலிப்பதில்லை. அதேசமயம் நகக்கண்ணில் அடிபட்டால் அதிகம் வலிக்கும். காரணம், அங்குதான் நுண்ணிய ரத்தக்குழாய்களும் நரம்புமுனைகளும் அதிகம் உள்ளன. நகங்கள், விரல் நுனிகளுக்குப் பாதுகாப்பு தருகின்றன.
ஒரு நகம் ஒவ்வொரு வாரமும் 0.5 மி.மீ. அளவில் வளருகிறது. கால்விரல் நகங்கள் மெதுவாக வளருகின்றன. நகத்தின் இயல்பான வளர்ச்சிக்குப் புரதம், பயாட்டின், வைட்டமின்-ஏ, கால்சியம், துத்தநாகம், இரும்பு ஆகிய சத்துகள் தேவை. பால், முட்டை, மீன், இறைச்சி, மாம்பழம், வாழைப்பழம், கீரைகள், காரட், காலிஃபிளவர், முட்டைகோஸ், அவரை, சோயாபீன்ஸ், வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள், முழுத் தானியங்கள் போன்றவற்றில் இந்தச் சத்துகள் நிறைய உள்ளன. இந்த உணவுகளை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.

நகம் என்பது நோய் காட்டும் கண்ணாடி. நகத்தின் நிறம் மற்றும் வடிவம் மாறுவதிலிருந்தும் நகத்தை அழுத்தி அதில் காணப்படும் ரத்த ஓட்டத்தைப் பார்த்தும் ரத்தச்சோகை, இதயநோய், சுவாசப்பை நோய், சர்க்கரை நோய், எலும்பு நோய், கல்லீரல் நோய், தோல் நோய், தைராய்டு பாதிப்பு என்று பல நோய்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.

நாள்தோறும் நாம் பல பொருள்களைத் தொடுகிறோம். அவற்றிலிருந்து அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஏராளமாக கைவிரல்களுக்கு வந்து சேருகின்றன. இவை நகத்தின் அடியில் புகுந்து கொள்கின்றன. அசுத்தமான நகங்களால் நமக்குப் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல்புழு போன்றவை தொற்றுவதற்கு அழுக்கான நகங்களே காரணம். நகம் கடிப்பது, விரல் சூப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தால், நகத்தின் அழுக்கில் இருக்கும் கிருமிகள் உடலுக்குள் எளிதாகப் புகுந்துவிடும். ஆகவே, நகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

நகத்தில் வரும் நோய்களில் முதன்மையானது, நகச்சுற்று. அசுத்தமான நகம், நகத்தில் அடிபடுவது, நகத்தை வெட்டும்போது சதையோடு வெட்டிவிடுவது, கூர்மையான பொருள் குத்தி விடுவது, நகம் கடிப்பது போன்றவற்றால் பாக்டீரியா கிருமிகள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் மற்றும் தசையைத் தாக்கும். அப்போது ‘நகச்சுற்று’ ஏற்படும். இதன் விளைவால், நகத்தைச் சுற்றி வீக்கமும் வலியும் உண்டாகும். இதற்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால் குணமாகும். நகச்சுற்றில் சீழ் வைத்துவிட்டால் சீழை வெளியேற்ற வேண்டும். நகச்சுற்றுக்கு வீட்டு வைத்தியமாக எலுமிச்சைப் பழத்தை விரலில் சொருகி வைப்பார்கள். இதனால் பலன் கிடைப்பதில்லை. பதிலாக, ஐஸ்கட்டியைப் பிளாஸ்டிக் பையில் வைத்து நகச்சுற்று வந்த விரலில் ஒற்றடம் கொடுத்தால் வலி குறையும்.

நகச்சொத்தை என்பது ‘ட்ரைக்கோபைட்டன் ரூப்ரம்’ எனும் ஒருவகை பூஞ்சையால் வருவது. நகம் சொத்தையானால், நகத்தின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும். பின்பு அது சுருங்கி, வதங்கி, உடைந்து, சிதைந்து போகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். நகச்சொத்தையில் தகுந்த களிம்பு தடவி, சில வாரங்களுக்குப் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைச் சாப்பிட அது குணமாகும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தண்ணீரில் வேலை செய்யும்போது கைக்குக் காப்புறை அணிந்துகொண்டால் மீண்டும் நகச்சொத்தை வராமல் தடுக்கலாம்.

சிலருக்கு நகத்தில் வெண்புள்ளிகள் தோன்றும். இந்த நிலைமை கால்சியம் மற்றும் துத்தநாகம் சத்துகள் பற்றாக்குறையினால் வருகிறது என்று முன்பு சொல்லப்பட்டது. இது தவறு என்று இப்போது தெரியவந்துள்ளது. நகத்தில் லேசாக அடிபடுவதுதான் இந்த வெண் புள்ளிகள் தோன்றுவதற்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை நகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை; சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆகவே, இவற்றுக்குத் தனியாக சிகிச்சை எதுவும் தேவையில்லை.

வெதுவெதுப்பான சோப்பு கரைசலில் விரல் நகங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர், மென்மையான பிரஷைக் கொண்டு விரல் நகங்களுக்கும் சதைக்கும் இடையில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். சுத்தமான பஞ்சு கொண்டு விரல் முனைகளைத் துடைக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டுமுறை இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை நகம் வெட்டுவதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. சரியான நக வெட்டியால் மட்டுமே நகத்தை வெட்ட வேண்டும். பிளேடு கொண்டு நகத்தை வெட்டக்கூடாது. நகத்தின் சதையை ஒட்டி வெட்டக்கூடாது. கால்விரல் நகங்கள் கடினமாக இருக்கும் என்பதால், குளித்து முடித்த பிறகு அவற்றை வெட்டுவது எளிதாக இருக்கும்.

நகத்துக்கு பாலிஷ் போடலாம். தரமான நகப்பூச்சுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகப்பூச்சு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். ஒவ்வாமை உள்ளவர்கள் நகப்பூச்சுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். விரல் சூப்புவது, நகம் கடிப்பது போன்ற பழக்கங்கள் வேண்டாம். நகங்களை நீளமாக வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நகத்தில் அழுக்கு சேராமல் இருக்க வேண்டுமானால் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழாயிலிருந்து கொட்டும் தண்ணீரில் நன்றாகக் கைகளை நனைக்க வேண்டும். பின்னர், கையின் முன்புறம், பின்புறம், விரல்களுக்கு இடையில், நகங்களுக்குக் கீழே, மணிக்கட்டு ஆகிய பகுதிகளை சோப் அல்லது சோப் திரவம் கொண்டு நன்கு நுரை வரத் தேய்க்க வேண்டும். பிறகு, கைகளைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். சோப் இல்லாத நேரங்களில் கைகளை அதிவேகமாக உரசிக் கழுவுவதன் மூலம் சுத்தப்படுத்தலாம். வெறும் கையால் தண்ணீர்க் குழாயை மூடுவதற்குப் பதிலாக கையில் துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் குழாயை மூட வேண்டும். அப்போதுதான் குழாயில் உள்ள அழுக்கு கைகளில் ஒட்டாது. துண்டு இல்லாவிட்டால் குழாயை இடது கையால் மூட வேண்டும். உலர்ந்த சுத்தமான துண்டு அல்லது டிஷ்ஷூ பேப்பரைப் பயன்படுத்தி கைகளில் ஈரம் போகத் துடைக்க வேண்டும். ‘கைச் சுத்தம்’ நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம்!No comments:

Post a Comment