Search This Blog

Thursday, December 19, 2013

பாரத ரத்னா 50

நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு இது 50-வது வருடம்!

வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா’ என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.

பாரத ரத்னா முதல் விருதைப் பெற்ற மூவர், சி.வி.ராமன், ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.

வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார். பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள்... இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர்.

இதுவரை 43 பேர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது.


திரும்ப பெறப்பட்ட விருது, நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா மட்டுமே. இந்த விருதைப் பெற மறுத்தவர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.

1966-ம் வருடத்தில் இருந்துதான் மறைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற விதிமுறை இணைக்கப்பட்டது. 12 பேர்களுக்கு இறந்த பின்னர் வழங்கப்பட்டது. உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக  மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. முதல் விருதைப் பெறுகிறார் சச்சின்!

பாகிஸ்தானின் மிக உயரிய 'நிஷான் இ பாகிஸ்தான்’ விருது மற்றும் 'பாரத ரத்னா’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்.


உழைப்பு...ஆர்வம்...வெற்றி ! 


சிந்தாமணி நாகச ராமச்சந்திர ராவ், பாரத ரத்னா விருதைப் பெறும் மூன்றாவது அறிவியல் அறிஞர். இதற்கு முன்னர் சர்.சி.வி.ராமன், அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர், தன்னுடைய பட்டப்படிப்பை மைசூர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலைக்கழகத்தில் செய்தார்.

நேருவின் அழைப்பில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த விஞ்ஞானிகளில்... ராமச்சந்திர ராவ் முக்கியமானவர். இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான, இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

வேதியியல் துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வகங்களை அமைத்து, எண்ணற்ற கண்டுபிடிப்புகள், பங்களிப்புகள் செய்தார். ஐ.ஐ.எஸ்.சி. இயக்குனராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.


உலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கும் முறைகளை உருவாக்கிய இவர், குறை கடத்தி மற்றும் 'கார்பன் நானோட்யூப்’களைப் பிரிக்க, எளிய முறையையும் உருவாக்கினார். இவரது கண்டுபிடிப்புகள்... ஆற்றல் பிரித்தல், பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல், மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது தொடங்கி எண்ணற்ற அமைப்புகளின்  விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், விரைவில் நோபல் பரிசு பெறுவார் என்கிறார்கள்.

''குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல், மனப்பாடம் செய்யவே உதவுகிறது. அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும்'' என்று அழுத்திச் சொல்கிறார், 80 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் ராமச்சந்திர ராவ்.

ஒழுக்கம்...எளிமை...தன்னம்பிக்கை !

 சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் இவர்.

24 ஆண்டுகளாக தேசத்தின் வெற்றிக் கனவுகளைச் சுமந்த சச்சின், பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து, இந்தியர்களை இணைக்கும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள் என்று நீளும் சாதனைகளை சச்சின் தன்னுடைய தலைக்கு ஏற்றிக்கொண்டதே இல்லை.

கடைசிப் போட்டியில் விளையாடி விடைபெறும் போது, 'இந்தியனாக இருப்பதற்குப் பெருமைப்படுங்கள். எதுவும் சாத்தியம் என்று நம்புங்கள்’ என்று இளைஞர்களிடம் நம்பிக்கை விதைத்தார். ''என் ஆசான் அச்ரேக்கர், நான் நன்றாக ஆடியதாக இந்த 30 ஆண்டுகளில் என்றுமே சொன்னது இல்லை. 

அப்படிச் சொன்னால், நான் 'இது போதும்’ எனத் திருப்தி அடைந்து தேங்கிவிடுவேனோ என்பதால், அவர் பாராட்டியதே இல்லை. இன்றைக்கு என்னுடைய கடைசிப் போட்டி. நான் நன்றாக ஆடினேன் என்று இன்றைக்குச் சொல்வீர்களா ஆசானே?' என்றும் அடக்கத்துடன் பேசினார்.


சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் அவரது ஆசிரியர் ராம்காந்த் அச்ரேக்கர் அவரை அலைபேசியில் அழைத்து, 'வெல்டன் மை பாய்!’ என்று சொன்னபோது, சச்சினின் கண்கள் கலங்கிப்போயின.

சச்சினின் எளிமைக்கு அவருடைய அம்மா முக்கியக் காரணம். சச்சின் கோடிகளில் சம்பாதித்தபோதும், அவர் தன்னுடைய அரசு வேலையைத் தொடர்ந்தார். சாதாரணமாக ரயிலில் பயணம் செய்தார். அந்த குணம் சச்சினுக்கும் தொற்றிக்கொண்டது. சச்சினின் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த தன் அம்மாவை நோக்கி, 'என் அன்னைக்கு இந்த பாரத ரத்னா விருது சமர்ப்பணம்'' என்று சொன்னார்.

ஒழுக்கம், எளிமை, இந்தியர்களால் எதிலும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனப் பல விஷயங்களை நமக்குச் சொல்லும் சச்சினுக்கு 'பாரத ரத்னா’ விருது வழங்குவது மிகப் பொருத்தம்.

No comments:

Post a Comment