Search This Blog

Tuesday, December 10, 2013

ஸ்போர்ட்ஸ் - சச்சின் இருக்கை யாருக்கு ?

 
இந்திய அணி, பலவிதமான முன்னேற்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்கா என்கிற சிங்கத்தை அதன் குகைக்குள் சந்திக்கிறது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டிகள் எவற்றிலும் இந்திய அணி ஜெயித்தது கிடையாது. இன்றைய தேதியில், மிகவும் பலம் பொருந்திய அணியாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி எந்தவகையில் ஈடுகொடுக்கப்போகிறது? சச்சின் இல்லாத இந்திய டெஸ்ட் அணி எப்படி இருக்கப் போகிறது? இரு முக்கியமான வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோற்றுப்போன இந்திய அணி தெ.ஆ.வில் விஸ்வரூபம் எடுக்குமா? இப்படிப் பல கேள்விகளுக்கு தெ.ஆ. தொடரில் விடை தெரியப் போகிறது.
 
இந்திய அணிக்கு 2013 கொண்டாட்டமான வருடம் (இதுவரை). கடந்த 11 மாதங்களில் 6 ஒருநாள் தொடர்/போட்டி களை வென்றுள்ளது. 30 ஒருநாள் ஆட்டங்களில் 8ல் மட்டுமே தோற்றிருக்கிறது. 2013ல், ஆடிய 6 டெஸ்டுகளிலும் வெற்றி. இந்தக் காலகட்டத்தில்தான் கோலி, ரோஹித் சர்மா, தவான், விஜய், அஸ்வின், ஜடேஜா, ஷமி, புவனேஷ்வர் குமார், ஓஜா போன்றவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றி அணியின் வெற்றிகளுக்கு அடித்தளமாக இருந்தார்கள். ஒரு கேப்டனாக தோனிக்கு 2011-ஐ விடவும் 2013தான் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும். இந்திய அணி ஜொலிப்பு இப்படியென்றால் மறுபக்கம் தென் ஆப்பிரிக்கா பீமபலத்துடன் இருக்கிறது. தெ.ஆ. கடந்த ஏழு வருடங்களில் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டும் தோற்றிருக்கிறது. (2009ல் ஆஸி). கடந்த 11 வருடங்களில் தெ.ஆ.வில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ஒரேயொரு முறைதான் தோல்வி! இவ்வளவு வலுவான டெஸ்ட் அணியுடன் அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் மோதுவதென்பது மலையைக் கட்டி இழுப்பதற்குச் சமம். ஜெயித்து விட்டால் அதைவிடவும் சவாலான ஒன்று இனி இருக்க முடியாது.  

அடுத்த ஒருவருடம் வரை இந்திய அணிக்கு வெளிநாடுகளில்தான் அதிக ஜோலி. இந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், ஜனவரி-பிப்ரவரியில் நியூசிலாந்தில் 2 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள், ஜூலை- செப்டெம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள், ஒரு டி20. பிறகு டிசம்பர்-2015 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகள், முத்தரப்பு ஒருநாள் போட்டி. பிறகு, அதே ஆஸ்திரேலியாவில் 2015 உலகக் கோப்பை. அதனால் அடுத்த ஒண்ணேகால் வருடம் இந்திய அணிக்குக் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. பி.சி.சி.ஐ. தென் ஆப்பிரிக்கா தொடருக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறது. முதலில் ஒருநாள் ஆட்டங்கள், பிறகு டெஸ்டுகள் என்று கால அட்டவணை மாறியது. அதேபோல, அங்குள்ள சூழலை வீரர்கள் எளிதில் புரிந்து கொள்ள டெஸ்ட் வீரர்களை முன்னதாகவே அனுப்புகிறது. இத்தனை ஏற்பாடுகள் செய்தபிறகு தொடரைச் சாதகமாக்கிக் கொள்வது, வீரர்களின் கையில்தான் இருக்கிறது.
 
இப்போதைய இந்திய டெஸ்ட் அணியில், தோனி, ஜாகீர் கான் தவிர மற்ற எல்லோரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள். அனுபவம் குறைந்தவர்கள். மேலும், சச்சின் ஆடிவந்த 4ம் இடம் யாருக்கு என்கிற முக்கியமான கேள்வியும் தோனியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ரோஹித் சர்மா ஆடிய இரண்டு டெஸ்டுகளிலும் செஞ்சுரி அடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு முன்பே அணியில் தன்னை நிரூபித்தவர் விராத் கோலி. யாருக்கு சச்சினின் இருக்கை? ரோஹித் அடித்த இரண்டு செஞ்சுரிகளும் ஆறாவதாகக் களமிறங்கியபோது நிகழ்ந்ததால் அதை மாற்றவேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. ரோஹித் நான்காவதாக களம் இறங்கினால் அவருக்குப் பிறகு கோலி வருவதாக இருந்தால் ரோஹித்தால் இன்னும் நம்பிக்கையுடன் ஆடமுடியும் என்கிற கருத்தை முன்வைக்கிறார் டபிள்யூ.வி. ராமன். ஆனால் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே என்கிற வரிசைதான் தோனியின் விருப்பமாக இருக்கும். பௌலர்களில் அஸ்வின் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவார். ஆஸ்திரேலியாவில் மிகவும் சுமாராக பௌலிங் செய்த அஸ்வின், பிறகு தம் பங்களிப்பில் ஒரு குறையும் வைக்கவில்லை. இப்போது, ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம்.
 

No comments:

Post a Comment