Search This Blog

Wednesday, October 16, 2013

அமரத்துவம் தந்த ஆதிசங்கரர் - மகாபெரியவா சொன்ன கதைகள்!

அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்’ என்று பெயர். 'அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப் பற்றியும், அதை எழுதினவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இதில் பல ரசமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக் கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.

இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்’ என்றேன். 'கோசம்’ என்றால், 'பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்’தான்.

அமரசிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால், அதற்கு 'அமர கோசம்’ என்று பெயர்.

அமரசிம்மன் மகா புத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிர மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். அமரசிம்மன் ஹிந்து அல்ல; ஜைனன்.

இந்த அமரசிம்மன் ஒருமுறை ஆசார்யாளிடம் வாதப்போருக்கு வந்தபோது, ''நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல் வேன்'' என்றான்.

ஆசார்யாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.
அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு, அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆசார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அத்தனைக்கும் அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான்.

அவன் என்னதான் மகா புத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்று ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷண காலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும், ஸர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷ£த் சரஸ்வதிதேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால், இவன் அப்படிச் செய்திருக்கவேகூடாது. ஏனென்றால், இவனுடைய ஜைன மதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை; அதைப் பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில், ஆராதிப்பதை ஜைன தத்துவம் ஒப்புக்கொள்ளாது. அப்படியிருந்தும், இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி, அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்கிறார்கள்; மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், 'வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி(feeling)க்கு மதிப்பு (Respect) கொடுத்தேன்’ என்று ஜம்பமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத் தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமர சிம்மன், அவை நன்றாக அமையவேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் - அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்துவிட்டாள்.

எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும்- அது நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும்... அதில் ஒருவன் பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்கான பலனை பகவான் நிச்சயம் தருவார். அப்படியே, அமரசிம்மனுக்கும் ஸ்ரீசரஸ்வதியின் அருள் கிடைத்தது என்று பார்த்தோம். சரி, அதற்குப் பிறகு என்ன நடந்தது?

இதோ, மகாபெரியவாளே விவரிக்கிறார்...

''திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான் அமரசிம்மன். தான் எத்தனை புத்திசாலியானாலும், ஆசார்யாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவத்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால், முன்னமேயே வாக் தேவியைத் தஞ்சம் புகுந்திருந் தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள்.

எனவே, ''என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரை போட்டுக்கொண்டு, அதற்குள் நீ இரு. சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்'' என்று வாக்குத் தந்தாள் வாக் தேவி.

அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆசார்யாளும், துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்துவிட்டார்.

உடனே அவர், ''அம்மா! உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆரா திக்கிற பழக்கத்தையே தொலைத்துவிடவேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், அவன் இத்தனை புஸ்தகங்கள் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப்பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகம் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?'' என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமரசிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்துகொண்டாள். உடனே, கடத்திலிருந்து அந்தர்த்யானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது. அப்புறம், அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆசார்யாளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டான்.

அதற்கப்புறம், அவனுக்கு தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால், அடிப் படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமர சிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்கவேண்டி யதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான்.

இதை ஆசார்யாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூடச் சந்தோஷப்பட வில்லை. மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.

'அடடா, என்ன காரியம் செய்துகொண்டு இருக்கிறாய்? லோகம் என்று இருந்தால், நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து சர்ச்சை பண்ணுவதுதான், பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்து விட்டுப் போ..! ஆனாலும், நீ மகாபுத்திமான்! நான் உன்னைக் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை, புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்லமுடியுமோ அத்தனை நன்றாகச் செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரமதத்வம், இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்தச் சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ, அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருக்கிறது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?'' என்று ஆசார்யாள் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசி கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போட வொட்டாமல் தடுத்தார்.

அப்போது, அவன் கையில் இருந்துதான் 'அமரகோசம்’. ஆசார்யாள் தடுத்திருக்கா விட்டால் அதுவும் 'ஸ்வாஹா’வாகியிருக்கும்.  துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆசார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.
No comments:

Post a Comment