Search This Blog

Friday, October 11, 2013

நலம் காப்போம் - நாக்கைப் பாதுகாப்பது எப்படி?

நம் வாயில் பற்களுக்கு இடையில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் உறுப்பு நாக்கு. இது தசையால் ஆனது. உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச் செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப் பணிகள். இவை தவிர, நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் அசைவுகள் முக்கியம்.

இயல்பான நாக்கு சிவப்பும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். ‘மியூக்கஸ்’ எனும் வெளி உறையால் மூடப்பட்டிருக்கும். நாக்கின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான அரும்புகள் அமைந்துள்ளன. நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன. நாக்கின் நுனி, இனிப்புச் சுவையை உணர்த்தும். உப்புச் சுவையை நாக்கின் மேற்புறம் அறியும். நாக்கின் பின்புறத்தில் கசப்பு தெரியும். புளிப்புச் சுவையை நாக்கின் பக்கவாட்டுப் பகுதிகள் உணர்த்தும்.

நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக்கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும். இரும்புச்சத்து, வைட்டமின் சத்து உட்பட்ட பல ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளவர்களுக்கு நாக்கில் அடிக்கடி புண்கள் வரும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ளவர்களுக்கும், வெற்றிலை பாக்கு, பான் மசாலா, புகையிலை போடுபவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோருக்கும் நாக்கில் புண் வரும் வாய்ப்பு அதிகம். பற்கள் கூர்மையாக இருந்தால் அவை நாக்கைக் குத்திப் புண்ணாக்கிவிடும். ஸ்டீராய்டு, ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போதும், சில மருந்துகளின் ஒவ்வாமை காரணமாகவும் நாக்கில் புண் ஏற்படுவதுண்டு. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு உண்டாகிற மன அழுத்தம், தூக்கமின்மைகூட நாக்கில் புண் உண்டாக வழி அமைக்கும். பற்களில் ‘கிளிப்’ போட்டிருப்பவர்களுக்கும் செயற்கைப் பல்செட் சரியாகப் பொருந்தாதவர்களுக்கும் நாக்கில் புண் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருகிறது. கட்டுப்படுத்தத் தவறினால் நாக்கில் புண் வரும்.

நாக்கில் உண்டாகிற புண்களுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் அவை மீண்டும் மீண்டும் வருவதைத் தடுக்கலாம். உதாரணமாக, குழந்தைகளைப் பொறுத்தவரையில் நாக்குப்புண்ணுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுதான் பிரதான காரணமாக இருக்கும். அப்போது காரட், பீட்ரூட், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளையும், பால், முட்டை, இறைச்சி, ஈரல், போன்ற அசைவ உணவுகளையும், கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, முளைக் கட்டியப் பயறுகள், பருப்புவகைகள், நிலக்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றையும், பேரீச்சை, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிட்டால் சத்துக் குறைவால் நாக்கில் ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தவும் முடியும்; தடுக்கவும் முடியும்.

நாக்கு என்பது ஒரு நோய் காட்டும் உறுப்பு என்றால் மிகையில்லை. காரணம், நாக்கைப் பார்த்ததும் நாற்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டுபிடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நாக்கு வெளுத்துக் காணப்பட்டால், உடலில் ரத்தம் குறைந்துள்ளது என்றும் ரத்தச்சோகை நோய் உள்ளது என்றும் பொருள். நாக்கு மஞ்சளாக இருந்தால் மஞ்சள் காமாலை நோயைக் குறிக்கும். காய்ச்சல் உள்ள ஒருவருக்கு நாக்கில் வெண்படலம் திட்டாகப் படிந்திருந்தால் அது டைஃபாய்டு காய்ச்சலுக்குரிய நோய்க் குணம். வெள்ளையும் கறுப்புமாக நிறம் மாறியிருந்தால் அது புற்றுநோய் வருவதற்கான அறிகுறி. ஆகவே, நாக்கு நமக்குப் பல நோய்களைத் ஆரம்ப நிலையிலேயே தெரிவித்து அவற்றின் ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது. ஆனால் ஒன்று, வெற்றிலைப் பாக்கு, புகையிலை போன்றவற்றைப் போடும் போது மேற்படி நோய்களை அறிய முடியாது. இவர்களுக்கு நோய் முற்றிய பிறகுதான் இந்த நோய்கள் வெளியில் தெரியும். இதனால் இவர்களுக்கு ஆபத்துகள் பெருகும்.

பரம்பரை காரணமாக சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே நாக்கு சிறியதாக இருக்கும். இன்னும் சிலருக்கு நாக்குப் பெரிதாக இருக்கும். குறிப்பாக, ‘டௌன்சின்ட்ரோம்’ குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இவ்வாறு நாக்குப் பெரிதாக இருக்கும். இவற்றால் ஆபத்தில்லை. சிலருக்குப் பிறவியிலேயே நாக்கு வாய்த்தளத்துடன் ஒட்டியிருக்கும். இதனைச் சிறு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். சிலருக்கு நாக்கில் முடி வளரும். இன்னும் சிலருக்கு உணவு பட்டதுமே எரிச்சல் உண்டாகும். நாக்கு அடிக்கடி உலர்ந்துவிடும். இவையெல்லாமே உடலில் உணவு வளர்சிதை மாற்றம் அடையும்போது உண்டாகிற குறைபாடுகளைத் தெரிவிக்கும் அறிகுறிகள். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றால் குணமாகும். நாக்கில் வெகு நாட்களாக புண் ஆறவில்லை என்றால் அது புற்றுநோயாக இருப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் புகைபிடிப்பது, புகையிலை போடுவது, பாக்கு மற்றும் பான்மசாலா மெல்லுவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு வருகிற வாய்ப்பு மிக அதிகம். இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாக்கைப் பாதுகாக்க....

காலை, இரவு என இரு வேளைகளும் பற்களை நன்கு துலக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பற்களைத் துலக்கும் ஒவ்வொருமுறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். மவுத் வாஷ் கொண்டு வாயைக் கழுவுவது நாக்கின் அழுக்கை நன்றாகச் சுத்தம் செய்யும் என்றாலும், மவுத் வாஷை அதிகம் பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள ஆல்ஹகால் நாக்குக்குத் தீமை பயக்கும். நாக்குக்கு அதிகச் சூடான பானங்களும் அதிகக் குளிரிச்சியான பானங்களும் ஆகாது. இதுபோல், புளி, காரம் மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டாலும் நாக்கின் ஆரோக்கியத்தை அவை பாதிக்கும். மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாகவே ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைச் சாப்பிடாதீர்கள். 


டாக்டர் கு.கணேசன்

No comments:

Post a Comment