Search This Blog

Friday, October 11, 2013

விடைபெறும் சிங்கங்கள்! - சச்சின், டிராவிட்...


இனி, சச்சின், டிராவிட் ஆகிய இருவரையும் மைதானத்தில் வண்ண உடைகளில் பார்க்க முடியாது. அனைத்து விதமான லிமிடட் ஓவர் மேட்சுகளிலிருந்தும் இருவரும் விடைபெற்று விட்டார்கள். எத்தனை எத்தனை மறக்க முடியாத ஆட்டங்கள்! அக்தரை துவம்சம் செய்த சச்சின், டொனால்டின் பந்தை சிக்ஸருக்குத் தள்ளிய டிராவிட்... கடகடவென்று பழைய மேட்சுகள் ஞாபகத்துக்கு வருகின்றன! காலம் தான் எத்தனை வேகமாக நம் கண்முன்னே சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் சச்சின் தொடர்ந்து டி20 மேட்சுகளில் ஆடிக் கொண்டி ருந்தார். மும்பை அணி ரசிகர்களுக்காகவும் மும்பை அணிக்குப் பங்களிக்க வேண்டிய பொறுப்புக்காகவும் அவர் உடனே விலகவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற பிறகு இப்போது முழு மனத்துடன் விடை பெற்றிருக்கிறார். சச்சினின் கடைசி ஐ.பி.எல்.  

சாம்பியன் லீக், உலகக்கோப்பை ஆகிய போட்டிகளில் அவர் ஆடிய அணியே வென்றிருக்கிறது. அதே போல அவர் கடைசியாக ஆடிய ஒரு நாள், டி20 (ஒரே மேட்ச்) மற்றும் கடைசி ஐ.பி.எல். சாம்பியன் லீக் ஆட்டங்களும். ஆனால், ஆரம்பம் இத்தனை எளிமையாக இருக்கவில்லை. சச்சின் ஆடிய முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் அவர் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. இரண்டிலும் இந்திய அணி தோற்றது. ஒரு நாள் ஆட்டத்தில், சச்சினுக்கு முதல் செஞ்சுரி அடிக்க 78 ஆட்டங்கள் தேவைப்பட்டன. அப்படியாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா? அடுத்த மூன்று மேட்சுகளிலும் பூஜ்ஜியம். 99 செஞ்சுரிகளை அடித்துவிட்டு நூறாவது செஞ்சுரிக்கு ஒரு வருடமாகத் தவித்தார். ஐ.பி. எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது மும்பை நிறைய தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், இப்போது ஒரே வருடத்தில் மும்பை (ரோஹித் சர்மா தலைமையில்), ஐ.பி.எல். மற்றும் சாம்பியன் லீக் சாம்பியன். பல சவால்களைச் சந்தித்த கிரிக்கெட் வாழ்க்கையில், கடைசியில் வெற்றிகளை மட்டுமே சுவைத்திருக்கிறார் சச்சின்.

டி20யில் ஆரம்பித்ததுதான் சச்சினின் வாழ்க்கை. சச்சின் ஆடிய முதல் ஒரு நாள் தொடரில் அவரை ஆட வைப்பதாகவே இல்லை.பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ரத்தானதால் 20 ஓவர் கண்காட்சி ஆட்டம் நடத்தப்பட்டு, அதில் சச்சின் சேர்க்கப்பட்டார். அப்துல் காதிர் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்து கவனத்தை ஈர்த்தார். (அந்த ஓவரில் 6, 0, 4, 6 6 6.) ஐ.பி.எல். போன்ற டி20 ஆட்டங்களில் மறக்கமுடியாத ஆட்டங்களை அதிகம் நிகழ்த்தாமல் போனாலும், அதனால் என்ன, சச்சின் ஆடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் அவர் சென்ற மைதானங்களையெல் லாம் நிரப்பினார்கள். இதனா லேயே சச்சினும் இந்தியாவுக்காக ஆடுகிற மேட்சுகளில்கூட சில சமயம் ஏதாவதொரு காரணம் சொல்லி (மகனுக்குப் பள்ளி விடுமுறை) விலகியிருக்கிறார். ஆனால், காயம் தவிர மற்ற எந்தக் காரணங்களுக் காகவும் மும்பைக்காக ஆடுவதை விடவில்லை.மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் ஆடுவதைப் பார்க்க முடியும். டிராவிட்? தன் கடைசி மேட்சில்கூட எல்லோரையும் முதலில் அனுப்பிவிட்டு பிறகு களம் இறங்கினார். அணிக்காக எதையும் செய்வதில் டிராவிடுக்கு மிஞ்சி இன்னொருவரைப் பார்க்க முடியாது. ‘கிரிக்கெட் அறிவில் மட்டுமல்ல, தான் வாழும் உலகைப் பற்றி அவ்வளவு அறிவு அவருக்கு’ என்கிறார் சஞ்ச மஞ்ச்ரேக்கர். ‘அணி’ என்கிற வார்த்தையின் மகத்துவம் அறிந்தவர் டிராவிட். அணிக்காக அவர் செய்யாத தியாகங்கள் இல்லை. சச்சினைப் போலவே டிராவிடும் ஒரே ஒரு சர்வ தேச டி20 மேட்சில் ஆடியிருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பையின் வெற்றியால் இந்திய அணிக்கு டிராவிட்டின் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், 2011 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டிராவிட் மட்டும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். செஞ்சுரி மேல் செஞ்சுரி அடித்தார். அதனால் நீண்டநாள் கழித்து, ஒரு நாள் மற்றும் டி20 மேட்சுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஒரு மேட்சில் தன்னைப் பற்றி மற்றவர்கள் எவ்வளவு தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். சமிட் படேல் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து இது கனவா என்று பார்த்த அத்தனை பேரையும் அசரடித்தார். சச்சினைப் போலவே டிராவிடும் ஒரு நாள் போட்டிகளில் ஆரம்பத்தில் மிகச் சுமாராகவே ஆடியிருக்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அணியின் பொறுப்புகளைத் தன் மேல் சுமந்து கொண்டார். கீப்பிங்கில் முறையான அனுபவம் இல்லாமல் போனாலும், அணிக்கு ஏழு பேட்ஸ் மேன்கள் அவசியம் என்பதற்காக 73 மேட்சுகளில், (உலகக்கோப்பை உள்பட) விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். கீப்பராக இருந்த சமயங்களில் பேட்டிங்கில் இன்னும் வெளுத்துக் கட்டினார். சூழ்நிலைகள் சரியில்லாமல், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முன்பு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்று ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை அறிந்து துவண்டு விட்டார். அதே சமயம் அவர்களைக் காப்பாற்றவும் முயலவில்லை. பொதுவாக, தன்னுடைய கௌரவத்தை முன்னிறுத்தி டிராவிட் எந்த சர்ச்சையும் செய்ததில்லை. ஒரு நாள், டெஸ்ட் இரண்டிலும், அணி எந்த இடத்தில் ஆடச் சொல்லியதோ அங்கு சத்தமில்லாமல் ஆடுவார். ஒரு நாள் போட்டிக்குப் பொருத்தமில்லாதவர் என்கிற விமர்சனத்தைக் கடந்து ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்தார். பெவனை விடவும் இரண்டு முறை அதிகமாக மேன் அஃப் தி மேட்ச் வாங்கியவர். டிராவிட் கேப்டனாக இருந்த சமயத்தில்தான் இந்திய அணி தொடர்ந்து 17 முறை வெற்றிகரமாக சேஸிங் செய்து உலக சாதனை செய்தது. 


பொதுவாக, இந்தியாவில் நடக்கும் மேட்சுகளில் பேட்ஸ்மேன் அவுட் ஆனால் ரசிகர்கள் அமைதியாகி விடுவார்கள். ஆனால், டிராவிட் அவுட் ஆனால் மட்டும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அடுத்து வரப்போவது சச்சின் அல்லவா! டிராவிட் ஏதாவது சாதனை செய்தால் கூடவே இன்னொரு வீரரும் சாதித்து, டிராவிடைப் பின்னுக்குத் தள்ளி விடுவார் (சிறந்த உதாரணம் 2001 கொல்கத்தா டெஸ்ட்). பல சமயங்களில் டிராவிடின் சாதனைகளை சச்சினின் சாதனைகள் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. அதுபோல, டிராவிடின் கடைசி கிரிக்கெட் மேட்சும், அது சச்சினின் கடைசி லிமிடட் ஓவர் மேட்ச் என்பதால் வழக்கம்போல அதிகக் கவனத்தை சச்சினுக்கு வழங்கிவிட்டது.டெஸ்டோ, ஒரு நாள் ஆட்டமோ, டிராவிட் களத்தில் இருந்தால் உடனே விக்கெட் விழாது என்கிற நம்பிக்கையைக் கொடுத்ததுதான் டிராவிடின் முக்கியமான சாதனை. சச்சின் களத்தில் இருந்தால் போதும், எப்படிப்பட்ட நெருக்கடியிலிருந்தும் அணியை மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தவர் சச்சின். இந்த நம்பிக்கைகளைத்தான் அடுத்தத் தலைமுறை வீரர்கள் உருவாக்க வேண்டும்.

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment