Search This Blog

Thursday, December 30, 2010

2010ன் நாயகன் விருதும் காமெடியன் விருதும் - ஞானி

கடந்து முடியும் 2010ம் ஆண்டில் உலகத்தையே கலக்கிய,கலக்கிக் கொண்டிருக்கிற ஒரே மனிதர் என்றால் அது ஜூலியன் அசாஞ்சேதான். எனவே அவருக்கே 2010 நாயகன் விருது.

ஜூலியன் யார் ? அரசாங்கங்களின் அராஜகங்களை அம்பலமாக்கத் துடிக்கும் ஒவ்வொரு சமூகப் போராளிக்கும் 39 வயதாகும் ஜூலியன் ஒரு ரோல் மாடல். அவர் 2006ல் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளம் நான்காண்டுகளாக அம்பலப்படுத்திவரும் உலக அரசு ரகசியங்கள் எல்லா நாட்டு அரசாங்கங்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன.

மக்களுக்கு நியாயமான விஷயங்கள் நடக்க வேண்டுமானால், ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்கான அடிப்படைத் தேவை ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நிர்வாகம். அதை செய்யத் தவறும் அரசுகள்தான் ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள். எனவே அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். சுருக்கமாக இதுதான் ஜூலியனின் கொள்கை.

ஜூலியன் முதன்மை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் விக்கிலீக்ஸ் இதுவரை அம்பலப்படுத்திய விஷயங்கள் பல. சோமாலியாவில் ஒரு லோக்கல் தலைவர் ஆள் தூக்கி வேலைகளுக்காக அடியாட்களை அனுப்பக் கேட்டு எழுதிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. கென்யாவில் நடக்கும் அரசு ஊழல்கள் அடுத்த லீக்.ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளின் முக்கிய வங்கிகளில் நடந்த ஊழல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

நெதர்லாந்திலிருந்து டிரஃபிகுரா என்ற கம்பெனி விஷக் கழிவுகளைக் கப்பலில் ஏற்றி எந்த நாடும் அதை அனுமதிக்காத நிலையில் ஆப்பிரிக்க நாடான ஐவரியில் அபிட்ஜான் துறைமுகத்தில் கொண்டு இறக்கியது. அந்த நகரின் பல பகுதிகளில் இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டன. இவற்றால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு கடும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. ஒரு லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தான் பொறுப்பில்லை என்று சொன்ன கம்பெனி கடைசியில் நஷ்ட ஈடாக 19 கோடி டாலர்கள் கொடுத்தது. கழிவுகளின் விஷத்தன்மை பற்றி ஆராய குழு நியமித்தது. மிண்ட்டன் அறிக்கை எனப்படும் இந்தக் குழுவின் அறிக்கையை விக்கிலீக்ஸ் அமபலப்படுத்தியது. 

சர்ச் ஆஃப் சயண்டாலஜி என்ற ஒரு கிறித்துவ அமைப்பு ரகசிய இயக்கமாகவும் பகிரங்க மிஷனரியாகவும் இயங்கிய அமைப்பாகும். வருடத்துக்கு 50 கோடி டாலர் சம்பாதிக்கும் இந்த அமைப்புக்கு போதைப் பொருள் உட்பட நிறைய வணிகங்கள் உள்ளன. உறுப்பினர்கள் கடத்தல், மர்ம மரணம் எல்லாம் நடந்தன. அமெரிக்க அரசின் பல துறைகளில் இதன் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாக அமெரிக்க அரசே நடவடிக்கை எடுத்தது. இந்த அமைப்பின் ரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. 

ஜூலியன் அதிரடியாக வெளியிட்ட ஆவணங்களில் ஆப்கானிஸ்தான், இராக் யுத்தங்களில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியக் குறிப்புகள் முக்கியமானவை. இராக்கில் பாக்தாத் நகரில் ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்கள் இருவர் அமெரிக்க ராணுவத்தின் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டதன் ராணுவ வீடியோவை ஜூலியன் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. கௌண்டனாமா பேயிலிருக்கும் அமெரிக்க ராணுவ சித்ரவதை முகாமின் ஆவனங்களையும் ஜூலியன் அம்பலப்படுத்தினார். 

இந்த வருடம் ஜூலியனும் விக்கிலீக்சும் நடத்திய அதிரடித் தாக்குதல் உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் அந்தந்த நாடுகள் பற்றி தங்கள் அமெரிக்க மேலிடத்துக்கு அனுப்பி வந்த ரகசிய செய்திகளை வெளியிட்டதாகும். அமெரிக்கா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிவருவதை இந்த ஆவணங்கள் நன்றாகவே அம்பலப்படுத்திவிட்டன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், இராக் எல்லாரைப் பற்றியும் அமெரிக்கா வெளியில் சொல்வதற்கும் ரகசியமாக வைத்திருக்கும் கருத்துக்கும் சம்பந்தமே இல்லை.   

ஒவ்வொரு நாட்டு உள் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுவதை ஆவணங்கள் காட்டிக் கொடுத்துள்ளன. இந்தியாவில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவது ஆபத்து; பி.ஜே.பி, காங்கிரஸ் இருவருமே நமக்குச் சாதகமானவர்கள் என்று டெல்லியிலிருந்து அமெரிக்கத் தூதர் தேர்தல் சமயத்தில் கூறியிருக்கிறார். ராகுல் காந்தி, சோனியா, பிரகாஷ் காரத் என்று பலரைப் பற்றியும் கருத்துகளும் சொல்லியிருக்கிறார்.  

ஜூலியனும் விக்கிலீக்சும் பெரும் ஸ்தாபனங்கள் அல்ல. மொத்தம் ஐந்து பேர்தான் இதில் முழு நேர ஊழியர்கள். எண்ணற்ற ஆதரவாளர்கள். விக்கிலீக்சின் இணைய தளத்தை ஒரு நாட்டிலிருந்து செயல்படவிடாமல் தடுத்தால் இன்னொரு நாட்டில் இருந்து உடனடியாக இயங்கக் கூடிய அளவுக்குத் தயார் நிலையில் எப்போதும் விக்கிலீக்ஸ் இருந்து வருகிறது.

ஜூலியனையும் விக்கிலீக்சையும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகள் கடும் முயற்சி செய்கின்றன. இணைய தளத்துக்கான சர்வரை ரத்து செய்வது, யாரும் விக்கிலீக்சுக்கு இணைய வழியே பணம் நன்கொடை செலுத்த விடாமல் தடுப்பது என்று எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை. 

கடைசியாக ஜூலியனை ஸ்வீடனில் செக்ஸ் விவகாரத்தில் சிக்க வைத்து லண்டனில் கைது செய்தார்கள். ஏதோ பயங்கரவாதியைத் தேடுவது போல உடனே ஜூலியன் வாண்ட்டட் பட்டியலில் சேர்க்கப்பட்டு இண்ட்டர்போல் மூலம் எல்லா நாடுகளும் உஷார்படுத்தப்பட்டன. ஆனால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜூலியன் எப்போதும் ஒரு இடத்திலேயே தங்காமல் ஊர் ஊராக நாடு நாடாக மாறிக் கொண்டே இருப்பவர். உலக அரசுகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களைத் திரட்டித் தொகுத்து வெளிப்படுத்துவதென்றால் சும்மாவா ? பல முறை விமான நிலையங்களிலேயே நாளைக் கழித்திருக்கிறார். கடைசியில் ஜூலியன் தானாகவே லண்டன் போலீசில் சரணடைந்தார். 

ஸ்வீடனில் ஒரு கருத்தரங்கிற்காக சென்றிருந்தபோது ஜூலியன் அன்னா, சோபியா என்ற இரு பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டார். அன்னா வீட்டில்தான் ஜூலியன் தங்கி இருந்தார். சோபியா தானாகவே அவரைத் தேடி வந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போனவர். எல்லாம் இரு தரப்பும் விரும்பி நடந்தவைதான். ஆனால் ஜூலியன் ஆணுறையைப் பய்னபடுத்தவில்லை. ஸ்வீடன் நாட்டு சட்டப்படி பெண் ஆணுறையுடன் தான் உறவு கொள்வேன் என்று சொல்லும்போது அதன்படி ஆண் நடந்துகொள்ளவில்லையென்றால் அது பாலியல் வன்முறைக் குற்றமாகும். இதற்கு நான்காண்டு சிறை தண்டனை வரை உண்டு.

ஜூலியனுடன் உறவு வைத்த அன்னா ஏற்கனவே ஸ்வீடன் தூதரக அலுவலராக கியூபா நாட்டில் இருந்த போது, காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்க சி.ஐ.ஏ பண உதவியுடன் வேலை செய்த தன்னார்வ அமைப்புடன் தொடர்பில் இருந்தவர். அதற்காக வெளியேற்றப்பட்டவர். தான் விரும்பியே ஜூலியனுடன் உறவு கொண்டதை வெளிப்படுத்தும் தன் டிவிட்டர் பதிவுகளையெல்லாம் அன்னா அழித்துவிட்டார் எனவே அமெரிக்கா திட்டமிட்டுத்தான் அவரை ஜூலீயனின் படுக்கையறைக்கு அனுப்பியிருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜூலியன் விடை பெற்றுச் சென்று சில நாட்கள் கழித்துத்தான் இரு பெண்களும் சந்தித்துப் பேசி போலீசில் புகார் தந்தார்கள். 

ஜூலியனை ஸ்வீடனுக்கு அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினாலும் அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் இப்போது போராடி வருகிறார்கள். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஜூலியன் உள்ளே இருந்தபோது கூட விக்கிலீக்சைத் தடை செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டபடிதான் இருந்தது. ஜூலியனோ, விக்கிலீக்சோ, அவர்களுடைய ஆதரவாளர்களோ எதற்கும் அசருவதாக இல்லை. ஜூலியனுக்கு ஆதரவாக ஐரோப்பா முழுவதும் பேரணிகள் நடக்கின்றன. பிரேசில், ரஷ்ய நாட்டு அதிபர்கள் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜூலியன் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். ஆஸ்திரேலியாவின் குயினிஸ்லாந்து மாநிலத்தில் பிறந்த ஜூலியனுக்கு அப்பா யாரென்று தெரியாது. அம்மா கிறிஸ்டீன் ஒரு பொம்மலாட்டக் கலைஞர். ஜூலிக்கு ஒரு வயதானபோது கிறிஸ்டி மறுமணம் செய்தார். ஒரு தம்பி பிறந்தான். இந்தத் திருமணமும் முறிந்தது. தன் இரு குழந்தைகளை தன்னிடமிருந்து முன்னாள் கணவர்கள் பிரித்துவிடக் கூடாது என்பதற்காக கிறிஸ்டி ஊர் ஊராக ஓடி ரகசியமாக வாழ்ந்தார். தலைமறைவு வாழ்க்கை அப்போதே ஜூலிக்குப் பழகிவிட்டது. ஜூலியின் திருமணமும் முறிந்துவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். 

தன் 16வது வயதிலேயே கம்ப்யூட்டர் நிபுணராக திகழ்ந்தார் ஜூலியன். எந்த இணைய தளத்தின் ரகசிய பூட்டையும் உடைத்துத் திறந்து உள்ளே செல்லும் ஹேக்கிங் கலையில் அவர் ஒரு மேதையானார். ஹேக்கிங் பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். ஹேக் செய்பவர் எந்தக் கணிணியிலும் நுழையலாம். ஆனால் அதைப் பாழ்படுத்தக் கூடாது. தகவல்களை சிதைக்கக்கூடாது. பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது ஜூலியின் அறக் கோட்பாடு. கணிதம், இயற்பியல் எல்லாம் பல்கலைக்கழகங்களில் படித்தபோதும் அவர் டிகிரி முடிக்கவில்லை. விக்கிலீக்ஸ் தொடங்கியபின்னர் ஜூலியனுக்கு உலகம் முழுவதும் பல விருதுகள் வந்து குவிந்தன. 

பெரும் யானையைக் கூட சிறு அங்குசம் ஆட்டி வைக்க முடியும் என்பது போல உலக அரசுகளை ஆட்டி வைத்திருக்கும் விக்கி லீக்சின் ஜூலியன்தான் 2010ன் உலக நாயகன்.


2010ன் காமெடியன் விருது:
இந்த வருடத்தின் சிறந்த காமெடி நடிகர், காமெடி வசனகர்த்தா, பஞ்ச் டயலாக் புலி, எல்லா விருதுகளும் மானமிகு (மாண்புமிகு வரும் போகும் என்று வீரமணி சொல்லியிருக்கிறார்!) கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. “நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான்”, “நான் ஏழையாகப் பிறந்து ஏழைகளோடு வளர்ந்து, ஏழைகளுக்காக வாழ்பவன்”, “ராசா தலித் என்பதால் ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள்” “அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்லும் சுயமரியாதைக்காரன்” , “ இரு பெண்கள் ( நீரா ராடியா, பூங்கோதை) பேசிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கென்ன?” “ ராசாவுக்கு டெலிகாம் வேண்டுமென்று யாரும் யாரிடமும் கேட்கவில்லை” போன்ற எண்ணற்ற மறக்கமுடியாத நகைச்சுவை வசனங்களை 2010ல் உதிர்த்திருக்கும் கருணாநிதி, 2011ல் நவரச நாயகனாகப் பரிணமிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை நேயர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். 


நகைச்சுவை ஆறுதல் விருது:
காங்கிரஸ் ஒருபோதும் ஊழலை சகித்துக் கொள்ளாது என்று அறிவித்திருப்பதற்காக மன்மோகன்சிங்குக்கும் சோனியாவுக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

இ.வா.பூச்செண்டு:
தாமதமாகவேனும் சாகித்ய அகாதமி விருது தரப்பட்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இ.வா.பூ.

இ.வா.திட்டு:
வெங்காயம் முதல் அடிப்படைப் பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு இ.வா.தி.

கல்கி 26.12.2010

1 comment:

  1. அருமையான விருதுகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete