Search This Blog

Tuesday, December 21, 2010

முதலீடு - வரி

நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவரா? உங்கள் சம்பளம் வருடத்துக்கு 1.60 லட்சத்துக்கும் அதிகமா? வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க இதுவரை எந்த ஒரு திட்டத்திலும் நீங்கள் முதலீடு செய்யவில்லையா? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கே உங்களுக்குத்தான்!

மாதச் சம்பளக்காரர்களில் பெரும்பாலானவர்கள் கடைசி மூன்று மாதத்தில், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில்தான் வருமான வரிச் சேமிப்பு பற்றிய யோசனைக்கே வருகிறார்கள். இது அனுபவம் காட்டும் உண்மை. லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களும் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களும் அந்த மூன்று மாதங்களிலும் படுபிஸியாக இருப்பதை வைத்தே இது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

போனது போகட்டும், விடுங்கள்! இந்த நிதி ஆண்டுக்கான, அதாவது 2010-11-ம் ஆண்டுக்கான வருமான வரியை மிச்சப்படுத்த பல வழிகள் இருக்கின்றன. கொஞ்சம் பொறுமையோடு அவற்றைத் தெரிந்து கொண்டால் பல ஆயிரம் ரூபாயை உங்களால் எளிதாக மிச்சப்படுத்த முடியும்.

பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்க, முதலீடு மற்றும் செலவு என இரண்டு வழிகள் இருக்கின்றன. முதலில் முதலீட்டு வழிகளைப் பார்த்துவிடலாம்.

வரி கட்டாமல் மிச்சப்படுத்துவது என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது 80-சி பிரிவுதான். தற்போதைய நிலவரப்படி இப்பிரிவில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்கு வரிச்சலுகை கிடைக்கிறது. இந்தப் பிரிவில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலீடுகள் 

80 சி பிரிவு

பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்) 

தனியார் நிறுவனங்களில் பணியாளரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12 சதவிகிதம் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இந்தத் தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 9.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு வட்டி கிடைப்பதால், நீங்களாகவே விரும்பி கூடுதலாக 12 சதவிகித முதலீட்டை மேற்கொண்டு நன்மை பெறலாம். முற்றிலும் பாதுகாப்பான முதலீடு இது என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது. ஆனால், வட்டி விகிதம் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.


பொது பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)
இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 கூட முதலீடு செய்யலாம். ஓராண்டில் அதிகபட்சம் 70,000 வரையிலான முதலீட்டுக்குதான் வரிச் சலுகை கிடைக்கும். இதுவும் முற்றிலும் பாதுகாப்பான முதலீடே.

முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் என்பதும் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட வட்டி (8%) குறைவு என்பது கொஞ்சம் நெகட்டிவ்வான அம்சம். அதே நேரத்தில், நிரந்தரப் பணியில் இல்லாதவர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வு காலத்துக்கான சிறந்த சேமிப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

ஃபிக்ஸட் டெபாசிட் 

ஐந்தாண்டு லாக் இன் பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு 1,000. வட்டி 8.25-8.5%. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி. குறைந்த 'லாக் இன் பிரீயட்’ இதன் சிறப்பு அம்சம். அதே நேரத்தில், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது பாதகமான அம்சம். மூத்தக் குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஏற்றது இந்த முதலீடு.

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் 

எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒரு பகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜுக்கும் எடுத்துக் கொள்ளப்படுவதால் பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  பாலிசி மூலம் சுமார் 5-6% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம். பிரீமியத்தொகை பாலிஸி தொகையில் 20 சதவிகிதத்துக்குள்ளே இருந்தால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும்.  

தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (என்.எஸ்.சி) 

மத்திய அரசின் இந்த சேமிப்புப் பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி ஆண்டுக்கு 8% கிடைக்கும். இது ஆறு ஆண்டுத் திட்டம். பாதுகாப்பான முதலீடு என்றாலும் வட்டிக்கு வரி உண்டு. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம்..!

பென்ஷன் திட்டங்கள் 

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் பென்ஷன் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டங்களில் நிபந்தனைக்கு உட்பட்டு முதிர்வுத் தொகைக்கு (33%-க்கு வரி இல்லை) வரி கட்ட வேண்டும். ஆனால், பென்ஷன் தொகைக்கு வரி உண்டு என்பது பாதகமான அம்சம்.

பி.எஃப். திட்டத்தில் சேரும் வசதியில்லாத சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கூடுதல் பென்ஷன் தேவை என்று விரும்புகிறவர்களுக்கு..!

தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், (9%, 5 ஆண்டு), தபால் அலுவலக டைம் டெபாசிட் (7.5%, 5 ஆண்டு) போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு.

இ.எல்.எஸ்.எஸ். 

பங்குச் சந்தை சார்ந்த இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு வரி விலக்கு இருக்கிறது. மாதம் தோறும் குறைந்தது 500 கூட இதில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இதில், வருமானம் என்பது பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்திருக்கிறது. இதில் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி இல்லை என்பது சாதகமான விஷயம். ஆனால், மூன்றாண்டுகள் கழித்துத்தான் நீங்கள் கட்டிய பணத்தைத் திரும்ப எடுக்க முடியும் என்பது கொஞ்சம் நெகட்டிவ்வான விஷயம். பொறுமைசாலிக்கு ஏற்ற திட்டமிது!

பங்கு முதலீடு..! 

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நிறுவனங்களின் பங்குகளை ஐ.பி.ஓ.வின் போது வாங்கினால், அதற்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது. ஆனால், டிவிடெண்டுக்கு வரி கிடையாது.

செலவு
80 சி பிரிவு
டேர்ம் இன்ஷூரன்ஸ் 

இந்த ஆயுள் காப்பீடு பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே  இழப்பீடு கிடைக்கும். அப்படி எதுவும் நடக்காவிட்டால் கட்டிய பணம் உள்பட எதுவும் கிடைக்காது. ஆனால், பிரீமியத்துக்கு வரிச் சலுகை உண்டு.

வீட்டுக் கடன் அசலை திரும்பச் செலுத்துதல் 

குடியிருப்பு வசதிக்காக வாங்கிய வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை இருக்கிறது.

கல்விக் கட்டணம் 

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கான கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், இரு பிள்ளை களுக்குதான் சலுகை உண்டு.

மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து இந்த நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.


இதர முதலீடுகள் 

உள்கட்டமைப்பு பாண்ட்கள் 

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்ட்களில் 20,000 வரை செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி சுமார் 8%. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். தவிர, ஐந்தாண்டுக்கு நம் முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது.

இதர செலவுகள் 

வீட்டு வாடகை - 10 (13 ஏ) 

குடியிருக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரிவிலக்கு இருக்கிறது. மொத்த சம்பளத்தில் 10%-க்கு மேல் வாடகையாகக் கொடுத்திருக்க வேண்டும். மேலும், வசிக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றைப் பொறுத்து கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெறுவதும், அவரின் பான் எண்ணை குறிப்பிடுவதும் அவசியம்.

80 டி- மருத்துவக் காப்பீடு
 
மெடிக்ளைம் பாலிசிக்கு நாம் கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு 15,000 (மூத்த குடிமக்களுக்கு 20,000) வரை வரிவிலக்கு இருக்கிறது. பெற்றோருக்குக் கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை உண்டு. மொத்தம் 40,000 வரை வரிச் சலுகை உண்டு.  

80 யூ- உடல் ஊனமுற்றவர்கள் 

வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், 50,000 (தீவிரமான உடல் ஊனம் 1,00,000) வரிச் சலுகை இருக்கிறது.

80 டி.டி- மருத்துவச் சிகிச்சைக்கான செலவு

வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் ஊனமுற்ற ஒருவர் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் பட்சத்தில் அவருக்குச் செய்யப்படும் மருத்துவமனை செலவில் 50,000 வரை (தீவிர பாதிப்புக்கு 1,00,000 வரை) வருமான வரிவிலக்கு இருக்கிறது. இதற்கு மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் அவசியம்.

80 டி.டி.பி - தீவிர நோய்களுக்கான சிகிச்சை

கேன்சர், எய்ட்ஸ், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் 40,000 ( மூத்த குடிமக்களுக்கு 60,000 வரை) வரிவிலக்கு உள்ளது. இதற்கும் மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை.

80 இ கல்விக் கடன்   

வரி கட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும். ஆனால், அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.

பிரிவு 24 - வீட்டுக் கடனுக்கான வட்டி 

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதில் ஓராண்டில் கட்டப்படும் வட்டியில் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை உண்டு. வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது முக்கியம்..! அதே நேரத்தில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான அளவுக்கு லைஃப் மற்றும் மெடிக்ளைம் பாலிசிகள் எடுத்தது போக மீதமுள்ள தொகையை மட்டுமே முதலீடு செய்யுங்கள். அப்போது தேவையைப் பொறுத்து முதலீட்டு காலத்தை, அதாவது லாக் இன் பீரியடைக் கவனியுங்கள். கூடவே எவ்வளவு வருமானம், வருமானத்துக்கு வரிச் சலுகை இருக்கிறதா என்பதைப் பாருங்கள்



1 comment:

  1. Individual (other than II and III below) and HUF
    Income Level / Slabs Income Tax Rate
    i. Where the total income does not exceed Rs. 2,00,000/-. NIL
    ii. Where the total income exceeds Rs. 2,00,000/-
    but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount
    by which the total income exceeds Rs. 2,00,000/-
    iii. Where the total income exceeds Rs. 5,00,000/-
    but does not exceed Rs. 10,00,000/-. Rs. 30,000/- + 20% of the amount
    by which the total income exceeds Rs. 5,00,000/-.
    iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 130,000/- + 30% of the amount
    by which the total income exceeds Rs. 10,00,000/-.
    Education Cess: 3% of the Income-tax.
    II. Individual resident who is of the age of 60 years or more but below the age of 80 years at any time during the previous year
    Income Level / Slabs Income Tax Rate
    i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
    ii. Where the total income exceeds Rs. 2,50,000/-
    but does not exceed Rs. 5,00,000/- 10% of the amount
    by which the total income exceeds Rs. 2,50,000/-.
    iii. Where the total income exceeds Rs. 5,00,000/-
    but does not exceed Rs. 10,00,000/- Rs. 25,000/- + 20% of the amount
    by which the total income exceeds Rs. 5,00,000/-.
    iv. Where the total income exceeds Rs. 10,00,000/- Rs. 125,000/- + 30% of the amount
    by which the total income exceeds Rs. 10,00,000/-.
    Education Cess: 3% of the Income-tax.
    III. Individual resident who is of the age of 80 years or more at any time during the previous year
    Income Level / Slabs Income Tax Rate
    i. Where the total income does not exceed Rs. 5,00,000/-. NIL
    ii. Where the total income exceeds Rs. 5,00,000/-
    but does not exceed Rs. 10,00,000/- 20% of the amount
    by which the total income exceeds Rs. 5,00,000/-.
    iii. Where the total income exceeds Rs. 8,00,000/- Rs. 100,000/- + 30% of the amount
    by which the total income exceeds Rs. 10,00,000/-.
    Education Cess: 3% of the Income-
    nagarajvlic@gmail.com

    ReplyDelete