Search This Blog

Tuesday, May 31, 2011

மீண்டும் டிஸ்கவர் 125

மிடில் கிளாஸ் மக்களின் சூப்பர் பைக் மார்க்கெட்டான 125 சிசி செக்மென்ட் டில், மீண்டும் தனது டிஸ்கவரைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ். 

2004-ம் ஆண்டு பஜாஜ் அறிமுகப்படுத்திய டிஸ்கவர் 125 சிசி பைக் செம ஹிட். ஆனால், மார்க்கெட்டில் மிகவும் வெற்றி பெற்ற பைக்காக இருந்த இதை, எக்ஸீட் 125 சிசி பைக்கை அறிமுகப்படுத்தி டிஸ்கவரின் விற்பனையை நிறுத்திவிட்டது பஜாஜ். ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜின் ஒரே 125 சிசி பைக்கான பிளாட்டினா 125, வாடிக்கையாளர்களிடம் ஹிட் ஆகாததால், மீண்டும் இப்போது 125 சிசி டிஸ்கவரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது.


2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் 100 அதிக மைலேஜ் தரும் பைக் என்பதால், நாடு முழுவதும் மாதந்தோறும் சுமார் 80 ஆயிரம் பைக்குகள் விற்பனையாகி வருகிறது. அதேபோல், 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் 150 சிசி பைக்கும் மாதந்தோறும் சுமார் 35 ஆயிரம் பைக்குகள் வரை விற்பனையாகிறது. ஸ்ப்ளெண்டருக்கு அடுத்தபடியாக டிஸ்கவர் பைக்தான் உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் பைக். ஆனால், 100 சிசி மற்றும் 150 சிசி பைக்குக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதாலும், வாடிக்கையாளர்கள் டிஸ்கவர் 125 சிசி பைக்கை விரும்புவதாலும், மீண்டும் டிஸ்கவர் 125 சிசி இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது.  

தோற்றத்தில் பொதுவாக 100, 150 சிசி பைக் போலவே இருந்தாலும், ஸ்டிக்கர் மாற்றங்களில் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது டிஸ்கவர் 125.



124.6 சிசி திறன் கொண்ட இது, 8000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 10.8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 1.1 kgmடார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும் இது டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. 5-ஸ்பீடு கியர் பாக்ஸைக் கொண்ட டிஸ்கவர் 125 மைலேஜ் மற்றும் பர்ஃபாமென்ஸ் இரண்டிலுமே டாப் - கிளாஸாக  இருக்கும் என்கிறது பஜாஜ்.


100, 150 சிசி டிஸ்கவர் பைக்குகளுக்கிடையே, இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் 125 சிசி பைக்கான டிஸ்கவர் நிச்சயம் மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கலாம். விலையும் குறைவு என்பது இதன் மிகப் பெரிய ப்ளஸ் ஆக இருக்கிறது!


No comments:

Post a Comment