Search This Blog

Tuesday, May 10, 2011

வெப்ப நோய்கள் சமாளிப்பது எப்படி?


கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அப்போது, மூளையில் உள்ள ’ஹைப்போதலாமஸ்’ எனும் பகுதி, வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உடலின் வெப்பத்தைச் சமன் செய்ய அது முயற்சி செய்கிறது.என்றாலும், அக்னி நட்சத்திர வெயிலின்போது, ’ஹைப்போதலாமஸ்’ தன்னுடைய முயற்சியில் தோற்றுப் போகிறது. அப்போது பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன.

வெப்பத் தளர்ச்சி:  

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ’வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.

என்ன முதலுதவி?

· இந்தப் பாதிப்பு உள்ளவரை நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
· தண்ணீரில் நனைத்த துணியால் உடலை மூட வேண்டும். உடலின் வெப்பம் குறையும்வரை உடலை ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
· நிறைய தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.
· ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் உப்பு, 20 கிராம் சர்க்கரை கலந்து அடிக்கடி தரலாம்.

வெப்ப மயக்கம்:

விடுமுறை காலமான கோடையில், சிறுவர், சிறுமிகள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் சிறிது நேரம் விளையாடினால்கூட மயக்கம் வந்துவிடும். அதுபோல், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள் போன்றோர் திடீரென மயக்கம் அடைவதுண்டு. இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள இரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்க வழி செய்து விடுகின்றன; இதனால் இதயத்திற்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை; உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.
 
முதலுதவி என்ன?
 
· பாதிக்கப்பட்ட நபரைக் குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப்படுத்தவும்.
· குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும்.
· தலையைத் தாழ்த்தி, கால்களை ஒரு அடி உயரத்துக்குத் தூக்கி வைத்துப் படுக்க வைக்கவும்.
· ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படிச் செய்யவும்.
· மின்விசிறி அல்லது கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யவும். 
· மயக்கம் தெளிந்த பின்னர், குடிக்க தண்ணீர், இளநீர், சர்பத், பழச்சாறு ஏதேனும் தரலாம். 
· இது மட்டும் போதாது. அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய நீர் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியதும் வரலாம். ஆகையால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கு வழி செய்வது அவசியம்.



சிறுநீர்க் கடுப்பு:

 கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகமாகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கியக் காரணங்கள். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள், படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்துவிடும். இதனால் சாதாரணமாக காரத்தன்மையில் இருக்கும் சிறுநீர் அமிலத் தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவால் சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். 
 
என்ன செய்யலாம்?
 
· கோடையில் 3 லிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாகச் சொன்னால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

· எலுமிச்சைச்சாறு, நீர்மோர், இளநீர், ஆரஞ்சு, திராட்சைச் சாறுகள் சாப்பிடவும்.

வியர்க்குருவும் வேனல் கட்டிகளும்

வெயில் ஏற ஏற, வியர்வை அதிகமாகச் சுரக்கும், அப்போது, தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் ’வியர்க்குரு’ வரும். தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே, அந்த இடம் வீங்கி புண்ணாகும். இதுதான் வேனல்கட்டி.

இதற்கு இப்படிச் செய்யுங்கள்!

· வெயில் காலத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளை குளியுங்கள். மதியம் குளித்தாலும் நல்லது.
· தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், துண்டை தண்ணீரில் நனைத்து, அடிக்கடி துடையுங்கள்.
· உடலைத் துடைத்துவிட்டு, வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.

ஒளி ஒவ்வாமை

வெயில் கடுமையாக பாதிக்கும் போது, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக தோலில் புகும். இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. முகத்திலும் உடலின் வெளிப்பக்கங்களிலும் வெப்பப்புண்கள் வரும். அரிப்பு, எரிச்சல், வலி ஏற்படும். இதற்கு ‘ஒளி ஒவ்வாமை’ (Photo allergy) என்று பெயர். இதனைத் தவிர்க்க, வெளியில் செல்லும்போது, ‘சன்ஸ்கிரீன்’ களிம்புகளை முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் தடவிக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புக்கு 10 வழிகள்!

தினமும் குறைந்தது இருமுறை குளிக்க வேண்டும்.

· இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக, சிறுவர்கள் கடுமையான வெயிலில் விளையாடக் கூடாது.
· பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
· வெயில் நேரத்தில் குடை பிடித்துச் செல்லலாம்.
· கண்களுக்குச் சூரியக் கண்ணாடியை (Sun glass) அணிந்து கொள்ளலாம்.
· பருத்தி ஆடைகளை அணியுங்கள். அவற்றில்கூட தளர்வான ஆடைகளை அணியவது முக்கியம்.
· தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
· காபி, தேநீர், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரி பண்டங்கள், காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
· தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடிச் சாப்பிடவும்.
· காலுக்கு ஷூ மற்றும் பிளாஸ்டிக் செருப்புகள் வேண்டாம். மாற்றாக, ரப்பர் அல்லது தோல் செருப்புகளை அணியலாம்.

  
 
 டாக்டர் கு.கணேசன்
 

No comments:

Post a Comment