Search This Blog

Saturday, May 14, 2011

ப்ளஸ் டூ ப்ளஸ் கவலைகள்! - ஞாநி, ஓ பக்கங்கள்!


இந்த வருடமும் ப்ளஸ் டூ தேர்வுகளில் வழக்கம் போல மாணவிகளின் தேர்வு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. மாணவிகளில் 89 சதவிகிதம்; மாணவர்களில் 82.3 சதவிகிதம்.இது பற்றி எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சி; மறுபுறம் கவலை. ஏனென்றால் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் பையன்கள் மேற்படிப்புக்கு அனுப்பப்படுவதும், அதிக மதிப்பெண் வாங்கியிருந்தாலும் பெண்ணை ப்ளஸ் டூவுடன் நிறுத்திவிடுவதும், நலிவுற்ற பிரிவினர் மத்தியில் இன்னும் சகஜமாக இருக்கிறது. 

செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டே நர்சிங்கில் மாநில முதலிடம் பெற்றிருக்கும் பழநி மாணவி இருளாயி, தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துப் படித்த சாத்தூர் மாணவி மாலதி, பொள்ளாச்சி சேரிப்பாளையம் விவசாயக் கூலியின் மகள் ஜீவா நந்தினி... என்று நிறைய நலிவுற்ற குடும்பப் பெண்கள் தேர்வுகளில் சாதித்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கல்விக் கடன் பெறுவது என்பது இன்னமும் நடுத்தரக் குடும்பங்களுக்கே சிக்கலாக இருக்கும்போது, ஏழைக் குடும்பங்கள் ஆங்காங்கு மனசாட்சியுடன் இயங்கும் ஓரிரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் வங்கி மேலாளர்களையும் மட்டுமே நம்பியிருக்கிறது.


நலிவுற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பல தடைகளை மீறி சாதிக்கிறார்கள் என்பதற்கு இந்த வருட சென்னை மாநகராட்சி மாணவர்களே சான்று. அந்தப் பள்ளி மாணவிகளில் 90.49 சதவிகிதம் பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். மாணவர்களில் 78.74 சதவிகிதம்.மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கும் ஒரு மாணவியின் தாய் தந்த பேட்டியைப் படித்ததும் எனக்கு மனம் வலித்தது. அந்த மாணவி தனியார் பள்ளியில் படித்தவர். தாயோ அரசுப் பள்ளியில் ஆசிரியை. அரசுப் பள்ளியில் கல்வியின் தரம் குறைவாக இருக்கும் என்று அவர் சொல்கிறார். ஏன் குறைவாக இருக்கிறது என்பதற்கான காரணங்களில் ஆசிரியர்களும் அடக்கம்.

என்னைப் பொறுத்தவரையில் 60 சதவிகிதத்துக்கு மேல் மார்க் வாங்குவோர் அனைவரின் புத்திசாலித்தனமும் ஒன்றுதான். மனப்பாடத் திறமைகள் மட்டுமே வேறுபட்டவை. குடும்பத்தில் படித்தவர்கள் இல்லாத சூழல், ஆசிரியர்களில் பலர் போதுமான அக்கறை காட்டாத நிலை என்பதையெல்லாம் மீறித்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் 90 சதவிகித மதிப்பெண்கள் வரை எடுக்கிறார்கள். அந்த மாணவரின் 60ம் தனியார் பள்ளி மாணவரின் 90ம் எனக்கு சமமானவைதான்.ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மொத்த மாணவர்களில் 25 சதவிகிதம் வரை ஏழை மாணவர்களுக்குத் இடம் தர வேண்டுமென்று இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, சென்னையில் சில மேட்டுக்குடி பள்ளிகள் பெற்றோருக்கு அனுப்பிய சர்க்குலரைப் படித்ததும் எனக்கு ரத்தம் கொதிக்கிறது. 


அந்த ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கிரிமினல்களாக இருப்பார்களாம். சுத்தமில்லாமல் இருப்பார்களாம். அந்தக் குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகள் சேர்ந்து படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள். நோய்கள் வரும். பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை, எனவே எங்களுடன் சேர்ந்து நீங்களும் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று சர்க்குலர்களில் விஷம் கக்கியிருக்கிறார்கள். எனக்கு அதிகாரம் கிடைத்தால் இந்தப் பள்ளி நிர்வாகங்களை, சிறையில் தள்ளி அந்தப் பள்ளிகளை அரசுடைமையாக்கி விடுவேன். இப்படிப்பட்ட சமூக விரோத சிந்தனையுள்ளவர்கள் கல்வித்துறையில் இருக்கவே தகுதியற்றவர்கள்.1978 வரை தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல இடங்களிலும் ஏழைகளும் மிடில் க்ளாசும், பணக்காரர்களும் ஒரே பள்ளிகளில் தான் படித்தார்கள். சி.வி.ராமன், ராமானுஜம் முதல் அப்துல் கலாம் வரை இப்போது 50 வயதுக்கு மேற்பட்ட சகல துறைப் பிரபலங்களும் அறிஞர்களும் அப்படித்தான் படித்தார்கள்.

எல்லாருக்கும் சமமான தரமான கல்வி என்பதுதான் அப்போதைய அணுகுமுறையாக இருந்தது. எண்பதுகளில்தான் இது மாறி காசுக்கேத்த கல்வி என்று திரிக்கப்பட்டது. கல்வி முறையே அறிவைப் பெறுவதற்கான வழி என்று இருந்தது போய், மதிப்பெண் வாங்குவது மட்டுமே நோக்கம் என்றாக்கப்பட்டது. குழந்தைகள் மார்க் வாங்கும் மெஷின்களாக ஆக்கப்பட்டார்கள். அதைத் தவிர வேறு எந்தப் பொது அறிவும் ரசனையும் இல்லாத அறிவிலிகளாக வார்க்கப்பட்டார்கள்.  

மாநில முதல் மார்க் வாங்கிய மாணவியின் தாய் சொல்லியிருக்கிறார். நான்கு வருடங்களாக அவர்கள் வீட்டில் கேபிள் கனெக்‌ஷனே கிடையாதாம்.சின்னவள் அடுத்து ப்ளஸ் டூ செல்வதால் அடுத்த நான்கு வருடத்துக்கும் கிடையாதாம். என்ன மூடத்தனம்...! டெலிவிஷனை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எத்தனை நேரம் பயன்படுத்த வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமே தவிர முழுமையாகத் தடை விதிப்பது குழந்தையின் ஆளுமையையும் உளவியலையும் பாதிக்கும். இந்த மாதிரி வீடுகளில் கலை, இலக்கியம் எதற்கும் இடம் இராமல் போய்விடும். குழந்தைகள் மார்க் தயாரிக்கும் மெஷினிலிருந்து பணம் தயாரிக்கும் மெஷினாக மாறுவது மட்டுமே நடக்கும்.  இப்படிப்பட்ட சிக்கலான சூழல்களில் நமது பெண் குழந்தைகளுக்குக் கூடுதல் ஆபத்தும் இருக்கிறது. அடுத்து அவர்கள் குழந்தை தயாரிக்கும் மெஷின்களாக ஆக்கப்படுகிறார்கள். 

இருபதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 18 வயதிலேயே திருமணமாகிவிட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 47 சதவிகிதம் என்று ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. நாம் எப்போதும் பழித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் இது 24 சதவிகிதம்தான். நாம் பரிதாபப்படுகிற ஆப்பிரிக்காவில் கூட 38 சதவிகிதம்தான்.  திருமணம் பெண்ணின் எல்லாக் கனவுகளையும் முறித்துப் போடுகிறது. கல்யாணமாகிவிட்டால், மேலே படிப்பாயா, வேலைக்குத் தொடர்ந்து போவாயா, விட்டு விடுவாயா என்ற கேள்விகளை ஒரு போதும் ஆண்கள் சந்திக்க வேண்டிய அவசியமே இங்கு இல்லை. இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒரு பெண்ணும் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் வாய்ப்பும் இல்லை.

சிங்கப்பூர், அமெரிக்கா, திருப்பூர், மதுரை, திருச்சி என்று நான் செல்லும் வெவ்வேறு இடங்களிலெல்லாம் திடீரென்று ஏதோ ஒரு பெண் வந்து, ‘சார், என்னை நினைவிருக்கிறதா?’ என்று கேட்கும்போது அடுத்து தெரியவரும் தகவல்கள் என் அடிமனத்தில் வேதனையை ஏற்படுத்துகின்றன. உங்களிடம் இதழியல் படித்தேன்.மொழிபெயர்ப்பு படித்தேன். நாடகப் பயிற்சி முகாமில் இருந்தேன். வாழ்க்கைக் கல்விப் பயிலரங்கில் இருந்தேன், கல்லூரிக் கருத்தரங்குக்கு நான் தான் உங்களை அழைத்துச் சென்றேன்... என்றெல்லாம் விதவிதமாக நினைவுபடுத்தும் பல பெண்களிடம் ‘இப்போது என்னம்மா செய்கிறாய்?’ என்று நான் கேட்ட மறு நொடி, அவர்களில் பெரும்பாலோரின் கண்களில் ஒரு சோகம் மின்னி மறைவதைக் கண்டு நானும் துயரப்படுகிறேன்.  குழந்தை, கணவன், குடும்பம் என்று அவர்கள் வாழ்க்கை சிறு வட்டத்தில் சுருங்கிவிட்டதை நாசூக்கான வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். தாய்ப் பால் தருவதைத் தவிர குழந்தை வளர்ப்பில் மீதி அத்தனையும் ஆணுக்கும் சாத்தியமானதே என்கிறபோது, அவன் வாழ்க்கையும் கனவுகளும் மட்டும் தொடர்ந்து விரிவடைவதாகவும் பெண்ணின் வாழ்க்கை மட்டும் சுருக்கப்படுவதாகவும் இருப்பது மிகப் பெரிய ஒரு மனித உரிமை மீறலன்றி வேறென்ன?

மார்க், தேர்வு, வேலை, சம்பளம், திருமணம் இதெல்லாம் நம் வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்கள், மைல்கற்களே ஒழிய அவையே வாழ்க்கை அல்ல. சக மனிதர்களுடன் கூடி வாழ, நம் ஆற்றல்களை செழுமைப்படுத்தி சிந்திக்க, ரசிக்க, சந்தோஷப்பட, பகிர்ந்துகொள்ள, நம்மை முழுமையான மனிதராக்கிக் கொள்வதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். கல்வியும் மார்க்கும் அதற்கு உதவுவதற்குப் பதில் எதிராக இருப்பதுதான் நம் சமூகத்தின் மிகப்பெரிய சோகம்.

இந்த வார பூச்செண்டு!

பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளும் ‘சென்னை லிட்டில் பிளவர்’ பள்ளி மாணவிகளுமான சங்கீதா, துர்காதேவி, வெண்ணிலா மூவரும் புவியியல் தேர்வில் பெரும் சாதனை செய்திருப்பதற்கு இ.வா.பூ. மதுரையில் இந்திய பார்வையற்றோர் சங்கம் நடத்தும் பள்ளியில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நூறு சதவிகித தேர்ச்சி பெறுவதற்காக இ.வா.பூ. 

இந்த வார ஆறுதல்!


சமூகத்தின் பிற்போக்கான பார்வையை மாற்றவேண்டிய பெரும் கடமை இருக்கும் சக்தி வாய்ந்த மீடியா சினிமா. அது மாற்றாவிட்டாலும் பரவாயில்லை. மேலும் கெடுப்பதாகவே பெரும்பாலும் இருக்கிறது. விதிவிலக்காக ஓரிரு படங்கள் வரும்போது பெரும் ஆறுதலாக இருக்கிறது. இந்த வாரம் அப்படி நான் பார்த்து மகிழ்ந்தது இயக்குனர் சுசீந்திரனால் படமாக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் குறுநாவலான ‘அழகர் சாமியின் குதிரை’. விரசம், கண்மூடித்தனமான வன்முறை இரண்டும் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில் இவை இரண்டும் துளியும் இல்லாமல் அதே சமயம் ரசிக்கத் தகுந்ததாக உருவாக்கிய படக்குழுவைப் பாராட்டலாம். மெலிதான நகைச்சுவை, திருவிழாவும் சாமியும் கிராமத்தில் ஏற்படுத்தும் குதூகலத்தின் கூடவே இழையோடும் பகுத்தறிவு, மிக எளிமையான முகங்களின் தேர்ந்த நடிப்பு என்று பல விதங்களில் இந்தப் படம் என்னை மகிழ்வித்தது. மதுரை, தேனி வட்டாரப் படங்கள் என்றாலே வெட்டுக் குத்து ரத்தக் களறி என்று புதிய இயக்குனர்கள் ஆக்கி வைத்திருப்பதை சுசீந்திரன் தகர்த்திருக்கிறார்.
  

இந்த வார வேதனைக் கேள்வி! 
கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, ராசாவை வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் சதிகாரர் என்று சொல்லலாமே தவிர தன் கட்சிக்காரருக்கு ஒரு தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்ட அதே நாளில் அதே மன்றத்தில் ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளின் காலைத் தொட்டு வணங்கிய செய்தி படிக்க வேதனையாக இருந்தது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று வாதிடும் தி.மு.க கட்சி சார்பில் கனிமொழி, ராசா இரு வருக்காகவும் வாதாட ஒரே வக்கீலாக ராம்ஜெத்மலானியை நியமித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

1 comment:

  1. தி.மு.க கட்சி சார்பில் கனிமொழி, ராசா இரு வருக்காகவும் வாதாட ஒரே வக்கீலாக ராம்ஜெத்மலானியை நியமித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
    இரண்டு பேரும் சேர்ந்து தண்டனையை அனுபவிக்கிறதுக்கு பதில் குற்றத்தை ஒருத்தர் மட்டும் ஒத்துக் கொண்டால் ஒருவர் தண்டனையில்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா?

    ReplyDelete