Search This Blog

Sunday, May 08, 2011

ஏன் கலைத்தார் ரசிகர் மன்றத்தை? - அஜித் முடிவின் அதிரடி பின்னணி


அஜித் தமது 40-வது பிறந்த நாளின் அதிரடி அறிக்கையில் அவரது பெயரில் இயங்கி வந்த நற்பணி இயக்கத்தைக் கலைப்பதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமும், நற்பணி இயக்கத்தைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர சீண்டி வந்த அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.‘இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னாலிருப்பது கடந்த காலக் கசப்புகளும், அரசியல் நெருக்கடிகளும்தான்’ என்கிறது அவரது நட்பு வட்டம். உண்மையைச் சொல்வதென்றால் இதுபோன்ற அதிரடி முடிவுகள் இதற்கு முன்பே அவர் எடுத்திருக்கிறார்.

ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் அகில இந்திய அஜித் ரசிகர் நற்பணி மன்றத் தலைவராக இருந்த ராஜா என்பவர் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டபோது, அதிரடியாக அவரை நீக்கினார். நற்பணி மன்றங்களைத் தமது நண்பரின், மானேஜரின் நேரடிப் பார்வையில் கொண்டு வந்தார்.கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நற்பணி இயக்கத்தை அரசியல் அமைப்பாகவும், தங்களுக்கு ஒரு கொடி வேண்டும் என்றும் மன்றத்தில் சிலர் அழுத்தம் கொடுத்தபோது, பொங்கி எழுந்த அஜித், ‘என் மன்றத்தில் இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் நற்பணி இயக்கத்துக்குள் அரசியல் வருவதை அனுமதிக்க முடியாது. மீறினால் அனைத்து மன்றங்களையும் கலைத்து விடுவேன்’ என்று எச்சரித்தார்.


தமிழ்நாடு முழுவதும் அஜித்துக்கு முப்பத்தைந்தாயிரம் ரசிகர் நற்பணி மன்றங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய அதில் 8 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2004 முதல் இதை நற்பணி இயக்கமாக மாற்றி அமைத்து, தமது ரசிகர்கள் வாயிலாக ரத்ததானம், கல்வி உதவிகள், மரம் நடுதல் போன்றவை செய்து வந்தார். அதே சமயத்தில் அரசியல் நெருக்கடிகளும், எதிரணியின் பொய்ப் பிரசாரமும் அவரை அசைத்துப் பார்த்தன. 

ஒரு சமயம் வடிவேலு வீட்டின் மீது யாரோ கல்லெறிந்து விட்டு, ‘அஜித் வாழ்க’ என்று கூச்சல் போட்டிருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதி அஜித் மன்றத் தலைவர் சிறைபிடிக்கப்பட்டு, காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அதேபோன்று ஜாக்குவார் தங்கம் மாஸ்டர் வீட்டைத் தாக்கியதாக ஐந்து ரசிகர்கள் சிறைபிடித்து விசாரிக்கப்பட்டார்கள். துன்புறுத்தப் பட்டார்கள்.சமீபத்தில் நடந்த தேர்தலின் போது பல காமெடிகள் அரங்கேறி இருக்கின்றன. ஏதாவது ஓர் ஊரில் அடிமட்டத்தில் யார் என்றே தெரியாதிருக்கும் ரசிகர் ஒருவரைப் பிடித்து அவரை தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருவதாக ஜோடித்து ‘அஜித் ரசிகர் மன்றம் ஆதரவு’ என்று பேப்பரில் போட்டு, பரபரப்புச் செய்தியாக்கி வருகின்றனர். ஓரிருவர் ஆதரவு கொடுப்பதை அனைத்து அஜித் ரசிகர்களும் ஆதரவு தந்து விட்டது போல் ஒரு பொய்யான தோற்றத்தை அரசியல்வாதிகள் உருவாக்கி வருகிறார்கள்.

ஆக, அமைப்பு என்று இருந்தால்தானே இப்படி எல்லாம் செய்வீர்கள் என்றுதான் ‘தல’ இந்த முடிவு எடுத்தது. அதே சமயத்தில் இது திடீர் முடிவு அல்ல. ரொம்ப நாட்களாக அவர் மனத்தில் உறுத்திக் கொணடிருந்ததுதான்" என்கிறார் அவரது நண்பரும் மானேஜருமான சுரேஷ் சந்திரா. மேலும் அவர், எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் காலத்துச் சூழல் வேறு; ரசிகர்கள் வேறு. இன்றைக்கு ரசிகர்கள், அடிப்படையில் சற்றுத் தெளிவாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; எல்லாக் கட்சிகளிலும், அமைப்புகளிலும் அவர்கள் இருக்கிறார்கள்.

முன்னே மாதிரி பேனர் கட்டுவது, கட்-அவுட் வைப்பது, தோரணங்கள் தொங்க விடுவது போன்றவற்றுக்கு சென்னையில் எந்த தியேட்டர்களிலும் அனுமதிப்பதில்லை. போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதற்கும் கூட இடம் கிடைப்பதில்லை.அதுமட்டுமல்ல. ரசிகர் மன்றங்களுக்காக சிறப்புக் காட்சி போடுவது, மன்றத்துக்கு முன்னுரிமை கொடுத்து டிக்கெட் கொடுப்பது எல்லாம் தற்போது தவிர்க்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் டிக்கெட் கொடுக்கும் வழக்கம் வந்த பிறகு, மன்றங்களுக்கு என்று 30 டிக்கெட் மட்டும் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது" என்றார்.


சரி நாளை அரசியலுக்கு வந்தால் இந்த மன்றங்கள் துணையாக இருக்குமே என்று கேட்டால்,‘ரசிகர்களை எனது சுயநலத்துக்குப் பயன்படுத்த மாட்டேன். எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதுமில்லை. இனியும் பயன்படுத்த மாட்டேன்.நாளைக்கு சந்தர்ப்பச் சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும் சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட் டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்... அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லாக் கட்சியைச் சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படும்படி செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம்’ என்று ‘தல’ ஏற்கெனவே ஒரு நீண்ட நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்" என்கிறார் சுரேஷ் சந்திரா.

‘நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு’ என்பது அஜித் வாக்குமூலம். 

‘மன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல படம் நிச்சயம் ஓடும். அதே சமயத்தில் ரசிகர்கள் முதலில் தங்களை, தங்கள் குடும்பத்தைக் கவனிக்கே வண்டும். நல்ல வேலை தேடிக் கொண்டு சொந்தக் காலில் நிற்க வேண்டும். பின்னர் சமுதாய நலப் பணிகளில் ஈடுபடலாம். நல்லது செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல்ல உள்ளமும், எண்ணமும் இருந்தாலே போதும்’ என்பது அஜித்தின் கருத்து. 


ஒரு இயக்கம் என்றால் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது. கோஷ்டிப் பூசல், தங்களின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக இயக்கத்தைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களுக்காக நற்பணி இயக்கத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது" என்கிறார் அஜித்தின் செய்தித் தொடர்பாளர் வி.கே.சுந்தர்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு அஜித் ரசிகர்களின் எதிர்விளைவு எப்படியிருக்கிறது?நாங்களே எதிர்பார்க்கவில்லை. இதற்கு அஜித் ரசிகர்களிடமிருந்து 90 சதவிகிதம் ஆதரவு கிடைத்திருக்கிறது. ‘இது நல்ல முடிவு’ என்று நிறைய பேர் தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."


இதை ஆதரித்து மதுரையில் அடித்திருக்கும் போஸ்டர்களில் ரசிகர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்... 

‘இயக்கமும் வேண்டாம் 

பதவியும் வேண்டாம் 

தலைவா! உன் 

இதயத்தில் இடம் வேண்டும்’
- என்று. 

சக நடிகர்களில் பலரும் அஜித்தின் முடிவைப் பாராட்டி வரவேற்றிருக்கிறார்களாம். 


- சபிதா ஜோசப்



1 comment: