Search This Blog

Tuesday, May 03, 2011

மலிங்கா & சச்சின்


இந்தியா என்கிற பெயரில் ஆடாவிட்டால், தோனி தலைமையிலான கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை இவ்வளவு ஆர்வமாக யாரும் பார்க்க மாட்டார்கள். "சூப்பர் கிங்க்ஸ்' என்கிற பெயருக்கு முன்னால் சென்னை என்கிற ஊர்ப்பெயர் மட்டும் இல்லாவிட்டால், அது பல நாட்டு ஆட்டக்காரர்களின் கலவையாக, யார் யாரோ ஆடும் அணியாகத்தான் இருந்திருக்கும். நமது தமிழக இளைஞர்களும் டிக்கெட் வாங்குவதற்கு இப்படி முட்டி மோதிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

 ஆண்டாண்டு காலமாகப் பலசரக்கு, புத்தகக் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு பெரு முதலாளிகள் வரை அனைவரும் கடைப்பிடிக்கும் அடிப்படை வியாபார நுணுக்கம் இது. இதைக்கொண்டுதான் நம்கடை, நம் பொருள், நம்நாட்டு நிறுவனம் என்கிற உணர்வை ஏற்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள்.


நமது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிரிக்கெட் விளையாட்டுதான் தொழில். இந்தியா என்பது தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பெயர். ஐபிஎல் போட்டிகள் மூலம் கோடிகோடியாய்ப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு, சேவை செய்து கொண்டிருப்பதாக இனியும் கருத முடியாது என்று நீதிமன்றமும் வணிகவரித்துறையும் கூறிவிட்டன. ஒருபக்கம் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா என இந்திய நகரங்களைக் ஏலம் விட்டுப் பணம் சம்பாதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் வரி விலக்கும் கேட்டால் வேறு என்ன சொல்வார்கள்? 


சாதாரண ரசிகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. இந்திய அணி, பாகிஸ்தானைத் தோற்கடித்தது, உலகக் கோப்பையை வென்றது என்றால் இரவு முழுவதும் பட்டாசு வெடிக்கிறோம். பிறந்த நாளுக்கு ஆரஞ்சு மிட்டாய் தராதவர்கள்கூட இந்த வெற்றியை சாக்லேட் வழங்கிக் கொண்டாடுகிறார்கள்.  இறுதிப் போட்டியில் சிங்கள அணியை வீழ்த்தியதால், ஈழப் படுகொலைக்குப் பழி வாங்கிவிட்டதாகத் தமிழனுக்கு இதில் கூடுதல் பெருமை வேறு. பிரபாகரனைக் கொன்றவர்களைப் பழிவாங்கிவிட்டார்களாம். இது மகா அபத்தம்தான் என்றாலும், ரசிகர்களைக் குறை சொல்ல இதில் ஒன்றுமில்லை. இந்தியா என்கிற பெயரில்தான் நமது மக்கள் மயங்கிவிடுகிறார்கள்.


இந்த மயக்கத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதைக் கொண்டுதான், பணம் குவிப்பு, ஐபிஎல் தொடக்கம், அரசையே எதிர்ப்பது இன்ன பிறவெல்லாம்.இந்தியாவைப் பொறுத்தவரை பலமான அமைப்பு பிசிசிஐ. அரசியல் ரீதியாகவும் சரி, அதிகார ரீதியாகவும் சரி. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உலகின் மிகப் பெரிய வணிக ரீதியான பல விளையாட்டு அமைப்புகளில் அமெரிக்காவின் என்பிஏவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பணக்கார அமைப்பு என்கிற பெயர் ஐபிஎல் அமைப்புக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்குப் பணம். 

5 மாநிலத் தேர்தல் நடக்கும் நேரத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்தியா முழுவதும் போட்டிகளை நடத்த முடிகிறது. போட்டி அட்டவணையில் சிறிய மாற்றம்கூடச் செய்யவில்லை. அந்த அளவுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு. இதெல்லாம் இந்தியா என்கிற பெயரைக் கொண்டு சம்பாதித்ததுதான்.இப்படி, நாட்டின் பெயரை தனது லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிசிசிஐ, நாட்டுக்காக வீரர்கள் ஆடுவதை ஊக்குவிப்பதில்லை என்பதுதான் உண்மை. பணம் சம்பாதிப்பது மட்டுமே அதன் குறிக்கோள். இதற்கு சமீபத்திய உதாரணம் மலிங்கா விவகாரம்.


"உடல் நிலை சரியில்லை' என்று கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கூறிவிட்டு இந்தியாவுக்கு வந்தார் மலிங்கா. ஐபிஎல் போட்டிகளில் தனது வழக்கமான யார்க்கர்களை வீசிக் கொண்டிருந்தார்."ஐயா, ஏதோ உடல் பிரச்னை என்று கூறினீர்களே, ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆக்ரோஷமாக பந்து வீசுவதை டி.வி.யில் பார்க்கிறோமே, என்ன விஷயம்'' என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர் கேட்டார்கள். ஆனால் நாடாவது ஒண்ணாவது, ஐபிஎல்தான் முக்கியம் என்று இருந்துவிட்டார் மலிங்கா.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் செய்தது இதை விட மோசம். வாரியத்துடன் சண்டையே போட்டுவிட்டு ஐபிஎல் ஆட வந்துவிட்டார் அவர். அவ்வளவு ஏன் சச்சின்கூட இந்திய அணி கலந்து கொள்ளும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார். ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளும் ஐபிஎல் போட்டிகளால் சர்வதேசப் போட்டிகளுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய முடியாமல் தவிக்கின்றன. தனது அணி நாட்டுக்காக ஆடுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் பிசிசிஐ, இப்படிப் படிதாண்டி வருவோரைக் கண்டிப்பதற்குப் பதிலாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.


சொந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தையே எதிர்க்கும் அளவுக்கு வீரர்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? சர்வதேசப் போட்டிகளில் ஆடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் அதிகப் பணம் கிடைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து வேறு எந்தக் கிரிக்கெட் வாரியமும் தங்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுத்துவிடாது என்கிற நம்பிக்கைதான் இப்படிப் "படி தாண்டி' வருவதற்கு முக்கியக் காரணம். 


 சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக வெளிவராத பல ரகசியங்கள் இருப்பதாக எத்தனையோ முறை அசாருதீன் கூறியபோதிலும் அதையெல்லாம் நாம் பொருள்படுத்தவேயில்லை. முறைகேடுகள் தொடர்பாக ஐபிஎல் முதலாளிகளின் வீடுகளில் நடந்த அதிரடிச் சோதனைகளும் எந்தப் பலனும் தரவில்லை. 1992-ம் ஆண்டிலிருந்து தங்கள் வீரர்கள் மேட்ச்-ஃபிக்சிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் இலங்கையின் ஹசன் திலக ரத்னே குறிப்பிட்டிருக்கிறார். 

 பல நாடுகளின் வீரர்களை அந்த நாட்டு அணிகளிடம் இருந்து பிரித்து வந்திருப்பதன் மூலம் பிசிசிஐக்கு நாடு என்பது முக்கியமில்லை என்பதும் தெரிந்து விட்டது. ரசிகர்களான நாம் மட்டும் தான் கிரிக்கெட் மட்டையில் கொண்டுபோய் தேசபக்தியை ஒட்டி வைத்திருக்கிறோம் போலிருக்கிறது.          


மணிகண்டன்  

1 comment:

  1. இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் மட்டுமே முக்கியம் என செயல்படுகிரதுதான். ஆனால் மலிங்கா விசயத்தில் நீங்கள் எழுதி இருப்பது தவறு. எந்த விசயத்தையும் எழுதும் முன் சரியான விபரங்களை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

    ReplyDelete