Search This Blog

Friday, May 06, 2011

டோர்ஜி காண்டு - விபத்தல்ல, கவனக்குறைவு....

 
ஐந்து நாள் தேடலுக்குப்பின் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இடா நகரில் அடக்கம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி தவாங்கிலிருந்து அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகருக்குத் திரும்புவதற்காகக் கிளம்பிய முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் சேலா கணவாய் பகுதியில் திடீரென்று காணாமல் போனது முதலே, நாடு தழுவிய அதிர்ச்சியும் திகைப்பும் தொடர்ந்து வந்தன. இந்திய சீன எல்லைப் பகுதியில் தவாங்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் லுகுதாங் என்கிற கிராமத்தில் முதல்வர் காண்டுவும் அவருடன் பயணித்த நான்கு பேர்களும் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பவன் ஹன்ஸ் என்கிற தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் எ350-பி3 ஹெலிகாப்டரில்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரும், அதில் பயணித்தவர்களின் சடலங்களும் அருகிலுள்ள கிராமத்தினரால் கண்டறியப்பட்டு, ஐந்து நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், விபத்து நிகழ்ந்த இடம் முதல்வர் டோர்ஜி காண்டுவின் தொகுதியான முக்தோலின் பகுதி என்பதுதான்.
 
 
விமான விபத்துகளில் பிரபலங்கள் உயிரிழப்பது ஒன்றும் புதியதல்ல. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தாரா என்கிற சர்ச்சை இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. ஐ.நா.வின் பொதுச் செயலராக சுமார் எட்டாண்டு பதவி வகித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த டாக் ஹாம்மர்ஷீல்ட் 1961-ல் விமான விபத்தில் இறந்தபோது அது விபத்தா, சதியா என்று எழுந்த சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், சஞ்சய் காந்தி, மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா, மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி என்று விமான விபத்துகளில் உயிரிழந்தோரின் பட்டியல் நீளும். ஏன், ராணுவ இணையமைச்சராக இருந்த என்.வி.என். சோமுவும் மூன்று ராணுவ அதிகாரிகளும் அருணாசலப் பிரதேசத்தில் இதே தவாங்க் பகுதியில்தான் ஹெலிகாப்டர் விபத்தில் 1997-ல் உயிரிழந்தனர் என்பது கவனத்துக்குரியது.
 
 
சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்தேறி இருப்பதுதான், அதுவும் இதே தவாங்க் பகுதியில் நிகழ்ந்திருப்பதுதான், பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒருசில நாள்களுக்கு முன்புதான் 17 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இதே பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அடுத்த சில நாள்களிலேயே முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றால், இந்தப் பகுதி ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றதுதானா என்கிற முக்கியமான கேள்வியை அல்லவா எழுப்புகிறது.
 
 
கடந்த சனிக்கிழமை நண்பகலில் முதல்வர் டோர்ஜி காண்டுவின் ஹெலிகாப்டர் கிளம்பும்போது தட்பவெப்பநிலை சாதகமாகவும், வானம் தெளிவாகவும்தான் இருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியும் தவாங்கிலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர், விமான நிலைய ராடாரிலிருந்து மறைந்தது என்றால், திடீரென்று தட்பவெப்ப நிலை மாறியதா என்றுதானே கேட்கத் தோன்றும்? உண்மை என்னவோ அதுதான். அருணாசலப் பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையே விசித்திரமானது. எப்போது திடீர் திடீரென்று மேகங்கள் தோன்றும், மழை பெய்யும், வெயில் அடிக்கும், இருள் சூழும் என்றெல்லாம் கணிக்க முடியாத தட்பவெப்ப நிலைமை அந்தப் பகுதியில் காணப்படும் என்பது, விமான ஓட்டிக்குத் தெரியாவிட்டாலும், முதல்வர் டோர்ஜி காண்டுவுக்குத் தெரியும்.
 
 
தவாங்கிலிருந்து இடா நகருக்குப் புறப்படுபவர்கள் காலையில் பத்து மணி முதல் பகல் 12 மணிக்குள் கிளம்பி விடுவார்கள். பிற்பகல் நேரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிந்தும், முதல்வர் ஏன் கவனக்குறைவாய் இருந்தார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் இந்த வேளையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரியின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் தொடர்பான சீதாராம் யெச்சூரி தலைமையிலான 30 பேர் அடங்கிய நிலைக்குழுவின் 168 மற்றும் 169-வது அறிக்கைகள், மாநிலங்களவைத் தலைவரான ஹமீத் அன்சாரியிடம் தரப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில், ஹெலிகாப்டர்களின் பாதுகாப்புப் பற்றிய குறிப்புகள் கவனத்தில்கொள்ள வேண்டியவை.
 
 
முக்கியமான அரசியல் தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் பல வேளைகளில் விமானப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்கிறது இந்த அறிக்கை. இரவு நேரங்களில் பறப்பது, காலநிலை பற்றிய அக்கறையின்மை, சரியாகக் காட்சிகள் தெரியாவிட்டாலும் சமாளித்துப் பறப்பது போன்ற விதிமுறை மீறல்கள் வி.ஐ.பி.களை ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர்களில் சர்வசாதாரணமாக நடப்பதாகவும், இதற்கு வி.ஐ.பி.கள்தான் முக்கியமான காரணம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது அந்த அறிக்கை.
 
ஏறத்தாழ 120 ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறு விமானங்கள் மலைப்பகுதிகளில் பறப்பதற்கான தகுதியே அற்றவை என்றும், போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாததால்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், இதுபோன்ற விபத்துகளில் அதிகமானவை, ஹெலிகாப்டர்களில் பயணிக்கும் வி.ஐ.பி.களின் வற்புறுத்தலால், தட்பவெப்ப நிலையைக் கவனிக்காமல் விமானிகள் பறக்க எத்தனிப்பதாலும், அவர்களது அவசரத்துக்கு ஈடுகொடுத்து விரைந்து பறப்பதாலும் ஏற்படுகிறது என்கிற சீதாராம் யெச்சூரி அறிக்கை.
 
விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், விபத்துகளிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டாமா? குறைந்தபட்சம், விபத்துகளை விரைந்து விசாரித்துத் தவறுகளைத் திருத்தவும், முறையான பாதுகாப்பு வசதி மற்றும் தொழில்நுட்பமுள்ள விமானங்கள்தான் செயல்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்கவும், அனுமதி தரவும், அடிக்கடி சோதனை செய்யவும் ஒரு தனியான அமைப்பை உருவாக்கினால்தான் என்ன?    
 
 

No comments:

Post a Comment