Search This Blog

Tuesday, May 24, 2011

புலிகள்..

 
இந்தியா... புலிகளின் தேசம். அந்த அளவுக்கு இங்கே கணக்கு, வழக்கில்லாமல் புலிகள் நிறைந்திருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அவை தாறுமாறாக அழிக்கப்படவே... அருகி வரும் விலங்கினங்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டிய துரதிர்ஷ்டசாலிகளாக அவை மாறிப் போயிருக்கின்றன. 2006-ம் ஆண்டில் 1,413 என்ற கவலை தரும் எண்ணிக்கைக்கு புலிகள் குறைந்து போகவே... அவற்றுக்கு ஆதரவாக இயற்கை ஆர்வலர்கள் ஆர்த்தெழுந்து குரல் எழுப்பினர். அதையடுத்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட... அரசுத் தரப்பிலிருந்தும் உதவிகள் வந்து சேர... புலிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் முடுக்கவிடப் பட்டன. இதையடுத்து, சமீபத்திய கணக்கெடுப்பின்படி 1,711 என்று நம்பிக்கை தரும் எண்ணிக்கைக்கு உயர்ந்திருக்கின்றன புலிகள்!
 
புலி, மிகவும் அடர்ந்த காட்டில் மட்டுமே வாழும். நம்நாட்டில் இருந்த அடர்காடுகளில் 93% காடுகளை நாம் அழித்து விட்டோம். இருப்பினும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. புலிகளை, அவற்றின் கால்த்தடங்கள் மூலம் கணக்கிடும் உத்தேச முறைக்கு மாற்றாக, புலிகளின் உடம்பில் உள்ள வரிகளை வைத்து மிகத் துல்லியமாக கணக்கிடும் 'கேமரா ட்ராப்பிங்’ முறையைக் கண்டறிந்தவர் டாக்டர் உல்லாஸ் கரந்த்.
 
தற்போது, வனங்களின் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை. வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை, வனத்துறை ஊழியர்கள் அத்தனைப் பேரிடமுமே இருப்பதில்லை. அவர்களில் பலரின் துணையோடுதான் வனமும், விலங்குகளும் சூறையாடப்படுகின்றன. காடுகளில் சாலை வசதி, அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள் என வனங்களை அழிக்கும் பல திட்டங்களை அரசே இயற்றுகிறது.

 
 சமூக விரோதிகள், தங்கள் அன்றாடத் தேவைக்களுக்காக வனச் செல்வங்களைத் திருடிய காலம் போய், இன்று அதனை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட வனங்களைக் காப்பதில் நீயா... நானா... போட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே  தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. இத்தகையச் சூழலில், வனவிலங்குகளை நாம் எப்படி காப்பாற்ற முடியும். இனியாவது, அதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதை அரசாங்கமோ... அதிகாரிகளோ நிச்சயமாக எடுக்கமாட்டார்கள். அதை எதிர்பார்ககவும் கூடாது. ஏனென்றால்... வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு நம் ஒவ்வொருவருக்குமே வேண்டும். தனிமனிதனில் இருந்து அதை ஆரம்பித்தால்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்''
 

No comments:

Post a Comment