Search This Blog

Monday, June 09, 2014

மிரள வைப்பாரா மெஸ்ஸி?

 
இது உலகக்கோப்பை நேரம். கால்பந்துப் பிரியர்களின் கொண்டாட்டமான தருணம். ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை. 32 நாடுகள். மொத்தம் 64 மேட்சுகள். அகிலமே உலகக்கோப்பைப் போட்டியின் வசம் இருக்கப்போகிறது.
 
1978க்குப் பிறகு தென் அமெரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பை இது. பிரேஸிலில் நடக்கும் இரண்டாம் உலகக்கோப்பை போட்டி. இதுவரை ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது பிரேஸில் (இத்தாலி-4, ஜெர்மனி-3, அர்ஜெண்டினா, உருகுவே -2). தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின், நெ.1 இடத் தில் இருக்கிறது. பிரேஸில், 4ம் இடத்தில் (இந்தியா 147ம் இடத்தில்!).
 
2011 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தது எப்படி ஒரு பொருத்தமோ, அப்படியொரு பொருத்தம், கால்பந்து உலகக்கோப்பை போட்டி, பிரேஸிலில் நடப்பது. மகத்தான கால்பந்து வீரர்களையும் தன்னிகரற்ற கால்பந்து ரசிகர்களையும் கொண்டது பிரேஸில். பலமான வீரர்களும் திறமையான பயிற்சியாளர்களும் அவர்கள் வசம் இருப்பதால் பிரேஸிலை வீழ்த்த எந்த ஓர் அணியும் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமைதான் எப்போதும். உலகக்கோப்பை போட்டியால் பிரேஸிலுக்கு மகத்தான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்த நாட்டு மக்கள். சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் பிரமிப்பு ஏற்படுகிறது.  

இந்தப் போட்டிக்காக பிரேஸில் கிட்டத்தட்ட 83 ஆயிரம் கோடி ரூபாயைச் (14 பில்லியன்) செலவழித்துள்ளது. 12 ஸ்டேடியங்கள், விமான நிலையம், சாலைகள் புதுப்பித்தல் என பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எப்படியும் பிரேஸிலுக்கு 60 லட்சம் சுற்றுலாவாசிகளின் வருகை இருக்கும் என்று நம்புகிறது பிரேஸில் அரசு. இந்தப் போட்டியினால் பிரேஸிலுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது. 2010ல் தென் ஆப்பிரிக்கா சம்பாதித்ததை விடவும் 10 மடங்கு அதிகமிது. பிரேஸில் ரசிகர்கள் கால்பந்து மேட்சுகள், பீர்களுக்கு மட்டுமல்ல சூதாட்டத்துக்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிப்பார்கள். இப்போட்டியின் சூதாட்ட வருமானம், எப்படியும் 1800 கோடி ரூபாயைத் தாண்டும் என்று நம்பப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 207 கோடி ரூபாய் பரிசுத்தொகை. இறுதிப் போட்டி டிக்கெட்டின் விலை - 58,000 ரூபாய். 
 
உலகக் கோப்பையில் சாகசம் செய்த வீரர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். கால்பந்து ஆட்டத்தின் பிதாமகனான பீலே ஆடிய நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் பிரேஸில் மூன்று முறை வென்றுள்ளது. 1986 உலகக் கோப்பையில் மரடோனா, ஒற்றை ஆளாக இங்கிலாந்து வீரர்களை கடந்து அடித்த கோலை யாரால் மறக்கமுடியும்? 1998லும் 2002லும் பிரேஸிலின் ரொனால்டோ அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். 2010ல், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்தமுறை கவனத்தை ஈர்க்கப்போகிறவர் யார் என்று உலகம் முழுக்க விவாதம் நடந்து வருகிறது.  

மரடோனாவின் வாரிசாக முடிசூட்டப்பட்ட மெஸ்ஸி, சென்றமுறை ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மிகச்சிறந்த வீரர் என்றால் பீலே, மரடோனா போல தங்கள் அணி உலகக்கோப்பை வெல்ல ஒரு சூத்திரதாரியாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மெஸ்ஸி மிகவும் பலவீனமாக இருக்கிறார். பார்சிலோனா கிளப்புக்காக ஆடுகிற மெஸ்ஸி அசைக்கமுடியாத சக்தியாக இருந்தாலும் உலகக்கோப்பைப் போட்டியில் தன் நாட்டுக்காக அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை" என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மரடோனாவால் 1986ல் அர்ஜெண்டினா உலக சாம்பியன் ஆனபிறகு மீண்டும் உலக்கோப்பையை அர்ஜெண்டினாவால் வெல்ல முடியவில்லை. இந்தப் போட்டியில், அர்ஜெண்டினாவை உலக சாம்பியனாக்கி, தன்னையும் நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார், மெஸ்ஸி. 
 
கால்பந்தில் எப்போதும் சாம்பியன்கள் ஐரோப்பியர்களும் தென் அமெரிக்கர்களும்தான். ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வென்றபிறகு, ஸ்பெயின் வளர்ச்சி கிடுகிடுவென எகிறிவிட்டது. 2010 உலகக் கோப்பையையும் வென்று இந்தப் போட்டியையும் ஒரு கை பார்க்கத் தயாராக இருக்கிறது, ஸ்பெயின். இதுவரை தென் அமெரிக்காவில் நடந்த போட்டியில் ஐரோப்பிய அணி ஜெயித்தது இல்லை. இதை உடைக்கவேண்டும் என்று விரும்புகிறது ஜெர்மனி.
 
க்ரூப் ஆஃப் டெத் என்கிற கஷ்டமான அணியில் (ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா) ஜெர்மனி உள்ளதால் அதன் ஆட்டங்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன. 1990ல், நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை குட்டி ஆப்பிரிக்க நாடான கேமரூனும் 2002ல் நடப்பு சாம்பியனான பிரான்சை செனகல் வென்றதும், அதே போட்டியில் தென் கொரியா அரையிறுதிக்கு நுழைந்ததும் சமீப கால உலகக்கோப்பைப் போட்டியில் நடந்த சில ஆச்சரியங்கள். சென்றமுறை ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த நாக் அவுட் போட்டியில், பந்து கோட்டைத் தாண்டிச் சென்ற பிறகும் இங்கிலாந்துக்குச் சாதகமாக கோல் வழங்கப்படவில்லை. அந்த மேட்சில் இங்கிலாந்து தோற்றுப்போனது.  

இதில் உண்டான சர்ச்சையைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து சங்கம், கோல் லைன் டெக்னாலஜியை முதல் முறையாக உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் இனிமேல் சர்ச்சைகள் குறையும் என்று நம்பலாம்.
 
பெரும்பாலும் இந்தியர்கள் இந்தப் போட்டியைப் பார்க்க வேண்டுமென்றால் இரவு கண்விழிக்க வேண்டியிருக்கும். ஜூன் 12ம் தேதி பிரேஸிலும் குரோஸியாவும் ஆடுகிற முதல் ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30க்கு நடக்கிறது. பல மேட்சுகள் நள்ளிரவு 12.30க்கும் அதிகாலை 3.30க்கும் நடக்கின்றன. நல்ல வேளையாக இரவு 9.30க்கும் பல மேட்சுகள் உண்டு. இறுதிப் போட்டி இரவு 12.30 மணிக்கு.
 
1958, 1962ல் பிரேஸில் தொடர்ந்து இரண்டுமுறை உலக சாம்பியன் ஆனபிறகு வேறு எந்த அணியும் அடுத்தடுத்து ஜெயிக்கவில்லை. ஸ்பெயின் இந்த முறையும் ஜெயித்து புதிய சாதனை படைக்குமா அல்லது பிரேஸில், ஜெர்மனி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் ஒன்று உலக சாம்பியனாகும் வாய்ப்புள்ளதா? ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment