Search This Blog

Saturday, June 14, 2014

ஃப்ரெஞ்ச் ஓபன் - நடால் & மரிய ஷரபோவா


1990களில் நடந்த ஃப்ரெஞ்ச் ஓபன் பந்தயங்களை எடுத்துப் பார்த்தோமெனில், பெரும்பாலும் மற்ற கிராண்ட் ஸ்லாம்களில் கோலோச்சியவர்கள் தோற்கும் களமாகவே ரோலாண்ட் கேரோஸ் மைதானம் விளங்கியதை உணர முடியும். ஆண்ட்ரே கோமேஸ், மைக்கேல் சாங், செர்ஜி ப்ருகேரா போன்ற பெயர்கள் டென்னிஸ் வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்க ஃப்ரெஞ்ச் ஓபனின் களிமண் தளமே காரணம். இந்நிலை 2005ல் நடந்த சாம்பியன்ஷிப்புக்குப் பின் மாறியது. ரஃபேல் நடால் தமது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பெற்றார். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் எட்டு சாம்பியன்ஷிப் பட்டங்கள்.
நடால் ஒவ்வொரு முறை உடல் சம்பந்தப்பட்ட பிரச்னையால் டென்னிஸ் விளையாடுவதைத் தாற்காலிகமாக நிறுத்தும்போதும், இனி அவ்வளவுதான். இதிலிருந்து மீண்டுவருவது இயலாத காரியம்," என்ற எண்ணம் எழாமல் இருப்பதில்லை. ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பின் முதுகுப் பிரச்னையால் ஓய்வுக்குச் சென்ற நடால், ஃப்ரெஞ்ச் ஓபனுக்கு முன்னால் ஆடிய ஆட்டங்களைப் பார்த்தபோது இந்த வருடம் பாரிஸ் ஒரு புதிய சாம்பியனைப் பார்க்கக்கூடும் என்று தோன்றியது.  

ஆனால் அரை இறுதியில் ஆண்டி முர்ரேயை தம்மை எது தாக்கியது என்று உணர்வதற்கு முன்பே நேர் செட்களில் நடாலிடம் வீழ்ந்தார். அப்போது இந்த வருடமும் நடால்தான் வெல்வார் என்று தோன்றியது. அவர் இறுதி ஆட்டத்தில் எதிர்த்து விளையாடியது ஜோகோவிச்சை என்று தெளிவானதும் முன் தோன்றிய எண்ணம் சற்றே வலுவிழந்தது.2013ன் பிற்பகுதியில் இருந்து நடால் உலகின் நம்பர் 1-ஆக இருந்தாலும் நோவாக் ஜோகோவிச்சிடம் பல முறை தோற்க நேரிட்டது. குறிப்பாக நடாலின் பலம் முழுவதும் வெளிப்படும் களிமண் தளங்களிலும் ஜோகோவிச் மோண்டி கார்லோ ஓபனையும், இத்தாலியன் ஓபனையும் நடாலை வீழ்த்தி வென்றிருந்தார்.ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றிருந்தாலும் கெரியர் ஸ்லாமை வென்றுள்ள ஒரு சிலரின் பட்டியலில் சேர ஜோகோவிச்சிக்கு ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டம் தேவை. எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று முழு மூச்சில் முதல் பட்டத்தை நோக்கிச் சென்ற ஜோகோவிச்சின் தாக்குதலை ஏற்கெனவே எட்டு முறை வென்றிருந்த நடாலால் தாக்குப்பிடிக்க முடியுமா? ரோலாண்ட் கேரோஸில் தொடர்ந்து 34 ஆட்டங்களை வென்றிருந்த நடாலின் சாதனைத் தொடரை ஜோகோவிச் தடுக்க இயலுமா? ஒருமுறைகூட விம்பிள் டனை வெல்லாத இவான் லெண்டில், பயிற்சியாளராக மாறி முர்ரேயை விம்பிள்டன் பட்டம் பெற உதவியதைப் போல, ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றிராத போரிஸ் பெக்கர் தம்மிடம் பயிற்சிபெறும் ஜோகோவிச் பட்டம் பெற உதவுவாரா? என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
முதல் செட்டில் நடாலின் சில ஃபோர்ஹேண்ட் தவறுகள் மூலம் ஜோகோவிச் சுலபமாக வென்றார். இரண்டாவது செட்டில் ஆட்டம் சூடு பிடிக்க, அரங்கின் உஷ்ணமும் ஏறத் தொடங்கியது. பேஸ்லைனின் பின்னால் இருந்தபடி இருவரும் மாறி மாறி கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளைப் பரிமாறிக் கொண்டனர்.  நடால் முதலில் ப்ரேக் செய்து முன்னிலை பெற்றாலும் அதனைத் தக்கவைக்கத் தவறிய கணம் ஜோகோ விச்சின் கனவுகளைச் சாத்தியமாக்கியிருக்கக் கூடிய கணம். ஜோகோவிச்சின் ஆட்டம் மேம்படும் என்று எதிர்பார்க்கையில் நடந்தது தலைகீழாக இருந்தது. நடாலின் டாப்ஸ்பின் ஃபோர்ஹாண்ட் அரங்கின் மூலைகளைத் துல்லியமாகத் துளைக்கத் தொடங்கியது. இருவரின் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் இருந்தது என்ற போதும், ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் ஜோகோவிச் சற்றே தடுமாறினார். இரண்டாவது செட் நடாலுக்குச் சென்றது. முன்றாவது செட்டில் நடாலின் ஆட்டம் எந்தளவுக்கு உயர்ந்ததோ அதே அளவுக்கு ஜோகோவிச்சின் ஆட்டம் வீழ்ந்தது. குறிப்பாக ப்ரேக் பாயிண்டின்போது ஒரு எளிய வாலியை (volley) நெட்டில் அடித்தபோதே ஜோகோ விச்சின் கனவுகள் கலைந்துவிட்டன. மூன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சாம்பியன்ஷிப் பாயிண்டைப் பெற்ற நடாலை மேலும் காத்திருக்கச் செய்யாமல் ஜோகோவிச் டபுள் ஃபால்ட் செய்தார். இதுவரை ஃப்ரெஞ்ச் ஓபன் அரங்கில் ஆடிய 67 ஆட்டங்களில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கும் நடாலின் சாதனை முறிக்கப்படுவது சந்தேகமே.
பெண்கள் பிரிவில் மரிய ஷரபோவாவுக்கு இன்னொரு கிராண்ட் ஸ்லாம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எந்த ஒரு கணத்திலும் தோல்வியின் முன் சரணடைய மறுத்த பிடிவாதமே எனலாம். சாம்பியன் ஷிப்பில் அவர் ஆடிய கடைசி நன்கு ஆட்டங்களும் மூன்றாவது செட் வரை சென்றது. இறுதிப் போட்டிக்கு முன்னால் ஒரு செட்டில்கூட தோற்காத சிமொனா ஹலேப் வழக்கமான giant killer-களைப் போல இறுதி ஆட்டத்தில் வலுவிழந்து விடவில்லை. 

2001க்குப் பிறகு மூன்றாவது செட்வரை சென்ற முதல் ஃப்ரெஞ்ச் ஓபன் ஆட்டம் இது தான். 2004-ல் ஷரபோவா விம்பிள்டன் பட்டம் வென்றபோது டென்னிஸ் உலகில் ஒரு பெரிய சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாடலிங் பக்கம் கவனமும், தொடர்ந்து ஆட்டத்தைக் குலைத்த காயங்களும் அவரை அதிகம் ஜெயிக்கவிடவில்லை. இது அவருக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு. இந்த வெற்றியை அடிக்கல்லாகக் கொண்டு வரலாற்றில் அவர் திறமைக்குரிய இடத்தை பிடிப்பாரா?14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் நடால், 17 பட்டங்களை வென்று முன்னால் இருக்கும் ஃபெடரரின் ரெக்கார்டை வெல்வாரா? குறிப்பாக எழுச்சி குறைவாக இருப்பதனால் கால் முட்டிகளின் மேல் அழுத்தம் அதிகம் கொடுக்கும் புல்தரை மைதானமான விம்பிள்டனின் நடாலின் ஆட்டம் எப்படி இருக்கும்? உடலை வருத்தும் களிமண் தரை சீஸன் முடிந்துவிட்ட நிலையில் நடாலின் நிலை என்ன?இந்த ஆண்டும் பட்டம் வென்றாலும் நடாலின் பழைய வேகமும் துல்லியமும் சற்றே குறைந்திருப்பதாகவே தோன்றிய நிலையில், வருங்காலம் எப்படியிருக்கும் - இப்படி கேள்விகள் பல இருந்தாலும் அவற்றுக்கான தருணம் இதுவல்ல.

No comments:

Post a Comment