Search This Blog

Tuesday, June 17, 2014

'லெட்ஸ் மூவ்’ - மிஷேல் ஒபாமா

 'லெட்ஸ் மூவ்’ - அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!

எதற்காக?!

 'சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.

 கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.

 டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.

பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’.


- இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், 'லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!

அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்... வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். '2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்... போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்.... 'லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.

'குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ - இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.

பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்... இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் 'மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி... துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.

'பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.

துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், 'துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்' என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!

No comments:

Post a Comment