Search This Blog

Sunday, July 27, 2014

உங்களில் யார் 'கணித’ ராமானுஜன்?

'தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. அப்படிப் புகழுடன் தோன்றவேண்டுமானால், அதற்குக் கல்வியறிவு மிகவும் அவசியம். ஒருவர் கல்வியறிவு பெற்றவராகத் திகழவேண்டுமானால், புதனின் பரிபூரண அனுக்கிரகம் வேண்டும்.
 
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிடமுமே ஏதேனும் ஓர் ஆற்றல் நிறைந்திருக்கிறது. சிலருக்குக் கவி பாடும் திறன், சிலருக்கு ஓவியம் வரைவதில் திறமை, சிலருக்குக் கணிதத்தில் நிபுணத்துவம், சிலருக்கு எழுத்தாற்றல், சிலரிடம் பேச்சாற்றல், இன்னும் சிலருக்குக் கற்பிக்கும் திறமை என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான திறமை இருப்பதை நாம் காணலாம். இவ்வாறான திறமைகளுக்கு, ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் அமைந்திருப்பது அவசியம். புகழ், பெருமை, அரசியல் செல்வாக்கு, பாரம்பரியப் பெருமை... இவை அனைத்தையும் அருள்பவர் புதன் பகவான்.
 
ஆத்மகாரகன் என்று சொல்லப்படும் சூரியனுடன் சேர்ந்து புதன் அமர்ந்திருத்தல் பெரும் யோகமாகும். கிரக மார்க்கத்தில் பிரதட்சணமாய் வலம் வரும் புதன், தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் வீட்டைப் பார்வையிடுவார். புதன் தன் காலம் முழுவதும் பலன் தருபவர். அதேபோல், அடுத்த ராசிக்குள் பிரவேசிப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன்பே பலன் தருபவர்.

புதன், ஒருவரின் ஜாதகத்தில் தனித்துக் காணப்பட்டாலோ, அல்லது பாப கிரகங்களின் சேர்க்கை பெற்று காணப்பட்டாலோ, அவரால் ஜாதகருக்குப் பெரிய அளவில் பலன்களை அளிக்கமுடியாது. சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டுமே அவரால் நற்பலன்களை வழங்கமுடியும்.

 

புதன் சூரியனுடன் இணைந்து இருப்பது புதாதித்ய யோகம் எனப்படும். இது மிகவும் விசேஷமான யோகமாகும். இந்தச் சேர்க்கையானது மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற இடங்களில் அமைந்திருப்பின், குறிப்பிடத்தக்க நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார். நவரசங்களின் நாயகன் புதன். புதன் மிதுனத்தில் ஆட்சியாகவும், கன்னியில் ஆட்சி மற்றும் உச்சமாகவும் இருப்பார். தன்னுடைய சொந்த ராசியிலேயே உச்சம் பெறும் ஒரே கிரகம் புதன் மட்டுமே! இவ்வாறாக, புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற ஜாதகர், தான் இருக்கும் இடத்தில் முதன்மை பெற்றுத் திகழ்வார்.

பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று பத்ரயோகம் என்பதாகும். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில், அதாவது 1, 4, 7, 10-ல் புதன் இருப்பதே பத்ரயோகம். இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகர், கம்பீரத் தோற்றமும் பேச்சாற்றலும் கொண்டவராக இருப்பார்.

புதனும் சூரியனும் லக்னத்தில் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகர் வசீகரத் தோற்றம் பெற்றிருப்பதுடன், ஜோதிடத் துறையில் புகழ்பெற்று விளங்குவார். அத்துடன் இத்தகைய  ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்கள், கணிதத்தில் ராமானுஜன் போல் சிறந்து விளங்குவர்.

புதன்- சூரியன் இரண்டாம் பாவத்தில் சேர்ந்திருப்பின், கவிதை, காவியங்கள் படைத்துப் புகழ் பெறுவார். மூன்றாம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப்பட்டால், ஜாதகர் பத்திரிகைத் துறையில் பல அரிய சாதனைகள் செய்து, புகழுடன் விளங்குவார். புதன்- சூரியன் நான்காம் இடத்தில் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பார். ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்தச் சேர்க்கையானது பக்தி மார்க்கத்தில் ஜாதகரை ஈடுபடுத்தி, புகழ்பெறச் செய்யும். புதன்- சூரியன் 6-ம் இடத்தில் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் எவரிடமும் கைகட்டி வேலை செய்ய விரும்பாமல், சொந்தத் தொழில் செய்து, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். 7-ம் இடத்தில் புதாதித்ய யோகம் பெற்ற ஜாதகருக்கு உறவுமுறையில்தான் வாழ்க்கைத்துணை அமையும். ஆயுள் ஸ்தானமான 8-ம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் மற்றவர் மனத்தை எளிதில் புரிந்துகொண்டு செயல்படும் திறமையும், தன் காரியத்தை எப்படியும் முடித்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருப்பார். பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் புதன்- சூரியன் சேர்க்கை இருப்பின், அயல்நாடு சென்று பணம் சம்பாதிப்பார். 10-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்பட்டால், நடிப்பு, எழுத்துத் துறைகளில் புகழுடன் விளங்குவார். லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்படும் ஜாதகர் அரசியலில் பிரபலமாகத் திகழ்வதுடன், சம்பாதித்த பணத்தைச் சேமிப்பதில் அக்கறையாக இருப்பார். புதன்- சூரியன் 12-ம் இடத்தில் அமைந்திருப்பின், அந்த ஜாதகருக்குப் பெரும்பாலும் இரவு நேரப் பணியே அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகையோ நீசமோ பெற்றிருப்பின், அதற்காக ஜாதகர் வருத்தப்படத் தேவையில்லை. உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.

புதனின் அதிதேவதையான மஹாவிஷ்ணுவையும், ஸ்ரீ ஹயக்கிரீவரையும் புதன்கிழமைதோறும் வழிபடுவதுடன், நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவதும் நலம் தரும்.
 

No comments:

Post a Comment