Search This Blog

Monday, July 07, 2014

தடுமாறும் தமிழ்சினிமா?


தமிழ்நாட்டில் வெளியாகும் எந்தப் படமும் சரியாக ஓடுவதில்லை. நினைத்த தொகை வசூல் ஆவதில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை. இனி சினிமாவின் எதிர்காலம் கவலைக்கிடம்தான். 

காரணம் கோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் 100க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்கள் எண்ணிக்கையே விரல் விட்டு எண்ணக்கூடியவை தான். கனவு கோட்டையான சினிமாவை நம்பி வரும் புது தயாரிப்பாளர்களும், புதுமுக நட்சத்திரங்களும் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகிறார்கள். இவர்கள் மட்டுமா? பெரும் பட நிறுவனங்கள் தயாரித்த படங்கள் ஓடாமல் அடுத்த படங்களை வெளியிட முடியாமலும், நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. தலைமுறைகளை தாண்டி படம் தயாரித்தவர்கள் கூட இன்று சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறலாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே இன்றைய சினிமாவின் உண்மைநிலை.

2011ல் தமிழில் 131 திரைப்படங்கள் வெளியாகின. இதில் 2 சூப்பர் ஹிட் படங்கள், 4 ஹிட் படங்கள் மட்டுமே. 2012ல் தமிழில் 143 படங்கள் வெளியாகின. இதில் வெற்றி பெற்றவை 11.

2013ம் ஆண்டு வெளியானவை 152 படங்கள். இதில் பேசப்பட்டவை 12 மட்டுமே.

கடந்த ஆண்டு வெளியான படங்களால் பல புரட்சிகளும், அதிர்வுகளும் உண்டானது. அதில் முக்கியமானது சினிமா ஜாம்பவான்களுக்கு தோல்விகள் பரிசாக கிடைத்தன. அடுத்த மாற்றம் புதிய, திறமையான இளைஞர்களுக்குக் கிடைத்த வரவேற்பு. 

மணிரத்னத்தின் ‘கடல்’, பாரதிராஜாவின் ‘அன்னக் கொடி’, அமீரின் ‘ஆதிபகவன்’, வசந்தின் ‘மூன்றுபேர் மூன்று காதல்’ போன்ற ஜாம்பவான்கள் பலர் இயக்கிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதே நேரத்தில் இளம் ரத்தங்கள் சாதனை சரித்திரம் படைத்தனர். மூத்த இயக்குநர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் செய்வதுதான் மிகச் சரியே என்ற குருட்டு தன்னம்பிக்கையை கைவிட வேண்டும் என்பதே இந்தத் தோல்வி கற்று தந்திருக்கும் பாடம். 

மேலும் சாதாரண மக்கள் தியேட்டருக்கு சென்று, குடும்பத்துடன் படம் பார்ப்பது முற்றிலுமே குறைந்து விட்டது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட எந்த தியேட்டரும் முழுமை ஆவதில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருக்கிறது. அதிக தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்வதால், ஓரளவு கையைக் கடிக்காமல் வசூல் பார்த்து விடுகிறார்கள்.  

புதுமுகங்கள் நடித்த படங்களின் நிலை அந்தோ பரிதாபம். அந்தப் படங்களைத் தயாரிப்பவர்கள் புதியவர்கள். முன் அனுபவம் இல்லாமை, திட்டமிடாமல் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது, நட்சத்திரங்களுக்குச் சம்பளத்தை வாரி வழங்குவது என, ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. சென்சார் சான்றிதழ் வாங்கியும் ரிலீசாகாத படங்களின் எண்ணிக்கை 400க்கும் மேல் நீள்கிறது. இதுவரை தமிழ் சினிமா சந்தித்த நஷ்டக் கணக்கு பல கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும் என்று, சொல்கிறார்கள் விவரமறித்தவர்கள்.






1 comment:

  1. வணக்கம்
    மக்கள் திருந்தி விட்டார்கள் போல் உள்ளது

    பகிர்வுக்கு நன்றி

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போதுதான் பார்ப்பது.......: சித்திரையில் - பார்ப்போம் சிங்காரியே சொல்லு நித்திரையும் போனதடி நின்று பதில் சொல்லும் சித்திரை மாத சுடும்வெயில் சுர் என்று என்னை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete