Search This Blog

Friday, July 11, 2014

காரிருளில் வாழும் அதிசய மீன்கள்!

 
கடல்களில் 1000 மீட்டர் ஆழத்துக்கு கீழே ஒளியே இராது. ஒரே இருட்டாக இருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல் நீரானது ஐஸ்கட்டி அளவுக்குக் கடும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் அந்த இருட்டிலும் கடல் வாழ் உயிரினங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பலவும் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில் விசேஷத் திறன்களைப் பெற்றவையாக உள்ளன.
 
தூண்டில் மீன் (Angler fish) அவற்றில் ஒன்று. அந்த மீன் பார்ப்பதற்கு மிக விகாரமானது. இரை கிடைத்தால் கவ்வி அப்படியே விழுங்குவதற்கு ஏற்ற வகையில் அதன் வாய் பெரியது. அதன் கோரமான பற்கள் உள்நோக்கி வளைந்ததுள்ளன. இதை விட முக்கிய அம்சம் அந்த மீனின் தலையில் தூண்டில் போன்ற உறுப்பு உள்ளது. இந்த உறுப்பின் நுனிப் பகுதி பிரகாசமான ஒளியை வெளிவிடும் தன்மை கொண்டது. இப்படி ஒளி விடுவதன் நோக்கம் இருளில் வழியறிந்து செல்வது அல்ல. இரையைக் கவருவதற்காகவே இந்த உறுப்பு உள்ளது. அத்துடன் எதிரியை விரட்டவும் இது உதவுகிறது.
 
சுற்று வட்டாரத்தில் உள்ள இதர ஜீவ ராசிகள் தூண்டில் மீனின் உறுப்பு வெளிவிடும் ஒளியைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே வந்தால் அவற்றை தூண்டில் மீன் ஒரேயடியாகக் கவ்வி விழுங்கி விடும்.தூண்டில் மீன் மட்டுமன்றி வேறு வகை மீன்களும் இவ்விதம் ஒளியை வெளிவிடுகின்றன. இந்த ஒளியானது உயிரிஒளி என்று அழைக்கப்படுகிறது. தூண்டில் மீனைப் பொறுத்தவரையில் சில வகை பாக்டீரியாக்கள் இவ்வித ஒளியைத் தோற்றுவிக்க உதவுகின்றன.தூண்டில் மீன்களில் 320 வகைகள் உள்ளன. இவை வெவ்வேறு வடிவமைப்பைக் கொண்டவை. ஆழ்கடலில் வாழும் உயிரினங்களில் சுமார் 80 சதவிகிதம் தூண்டில் மீன்களே.ஆழ்கடலில் தூண்டில் மீன்களைத் தேட முற்பட்டால் பெரும்பாலும் பெண் மீன்களைத்தான் காண முடியும். ஆண் தூண்டில் மீன்களைக் காண்பது அரிது. ஆனால் பெண் தூண்டில் மீன் ஒன்றை உற்று நோக்கினால் அதன் உடலில் பல ஆண் தூண்டில் மீன்கள் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.ஆண் தூண்டில் மீனுக்கு மோப்ப சக்தி அதிகம். அது பெண் தூண்டில் மீனைக் கண்டுபிடித்து அதன் உடலில் போய் ஒட்டிக்கொள்ளும். அதன் பிறகு ஆண் தூண்டில் மீன் தனியே பிரிந்து வர முடியாது. பெண் மீனின் ரத்தம் ஆண் மீனின் உடலில் பாய ஆரம்பிக்கும். அதன் பிறகு ஆண் மீன் தனியே திரியவோ இரை தேடவோ அவசியமே இல்லாமல் போய் விடும். இவ்விதமாக ஆண் மீனுக்கு உணவு கிடைக்க ஆரம்பித்து விடும். பெண் தூண்டில் மீனின் உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் தூண்டில் மீன்கள் ஒட்டிக்கொண்டு ஓசியில் உயிர் வாழ்ந்து வரும். ஆனால் பெண் தூண்டில் மீன் இறக்க நேரிட்டால் அதனுடன் ஒட்டிக்கொண்டுள்ள ஆண் தூண்டில் மீன்களும் செத்து விடும். ஆண் தூண்டில் மீன் தனது உடலில் ஒட்டிக்கொள்வதால் பெண் தூண்டில் மீனுக்கு பெரிய பிரச்னை இல்லை. ஏனெனில் பெண் தூண்டில் மீனுடன் ஒப்பிட்டால் ஆண் தூண்டில் மீன்கள் வடிவில் மிகச் சிறியவை. கடலில் மிக ஆழத்தில் வாழும் மீன்கள் பொதுவில் அதிகம் மேலும் கீழுமாக நீந்தாதவை. அந்த அளவுக்கு அவற்றுக்கு உடலில் சக்தியும் இருக்காது. ஆகவே அவை இரை தம்மைத் தேடி வரட்டும் என்று காத்திருக்கும். பல சமயங்களில் ஒரே இடத்தில் இருந்தபடி மிதக்கும்.
 
ஆழ்கடலில் வாழும் மீன்களில் இன்னொரு வகை மீன் கொடுக்குப் பல் மீன் (Fangtooth fish).இந்த மீனும் பார்ப்பதற்கு கோரமானது. ஆனால் இது ஒன்றும் பெரிய மீன் அல்ல. சுமார் 18 செண்டி மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் இது நீளமான பெரிய பற்களைக் கொண்டது. பற்கள் கொடுக்கு போல உள்ளன என்பதால்தான் இந்தப் பெயர். பற்கள் பெரியவை என்பதால் இதனால் வாயை மூட இயலாது.கொடுக்குப் பல் மீன்கள் பகல் நேரங்களில் மிக ஆழத்தில் நடமாடும். இரவு நேரம் வந்தால் கடல் மட்டத்துக்கு வந்து இரை தேடும். விடியும் நேரம் வந்ததும் ஆழ்கடலுக்குச் சென்று விடும். சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்படிச் செய்கின்றன. உதாரணமாக லாந்தர் மீன்கள் பகலில் ஆழ்கடலுக்குள் சென்று விடுகின்றன. இரவு நேரம் வந்தால் இரை தேட கடல் மட்டத்துக்கு வந்து விடுகின்றன.இந்த வகை மீனின் உடலின் இரு புறங்களிலும் ஒளிரும் உறுப்புகள் உள்ளன. எனவேதான் இவை லாந்தர் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒளியை வேண்டும்போது அதிகரித்துக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் முடியும்.பசிபிக் வைப்பர் மீனும் இதே போல பகல் நேரங்களில் ஆழ் கடலுக்குச் சென்று விடுகின்றன. இரவில் சற்றே ஆழம் குறைந்த பகுதிக்கு வருகின்றன. இதுவும் ஒளிவிடும் தன்மை கொண்டது. எனினும் விளக்கைப் போட்டுப் போட்டு அணைப்பது போல வேண்டும் போது ஒளி விடுவதை நிறுத்திக் கொள்கின்றன.கடல்களில் 1000 மீட்டருக்குக் கீழே உயிரினமே இருக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கருதப்பட்டது. பின்னர் ஆழ்கடலில் காரிருளிலும் பல வகை உயிரினங்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.கடல்களில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும்போது நாலா புறங்களிலிருந்தும் கடல் நீர் அழுத்துவதால் மனிதனால் மிக ஆழத்துக்கு இறங்கி அங்குள்ள உயிரினங்களை ஆராய இயலாது. 1960ம் ஆண்டில் ஜாக்கஸ் பிக்கார்டு, டான் வால்ஷ் ஆகிய இருவரும் பின்னர் 2012ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரானும் கடலுக்குள் 11 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்று வந்தனர் என்றாலும் அவர்கள் விசேஷ நீர் மூழ்கு கலங்களைப் பயன்படுத்தினர்.

No comments:

Post a Comment