Search This Blog

Saturday, August 23, 2014

திருப்பதியில் சில அதிசயங்கள்!


திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவற்றில் சில
* திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறையின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானது.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு வகையான ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான திருவுருவச் சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் பூசுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* எந்த கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்ட தடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலேகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் போல் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்களெல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல், வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையல் கட்டு) மிக பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்திரான்னம், வடை முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப் படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையைக் கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரத்தைச் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் 2,000 ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருநது வாசனைத் திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு தங்கத்தாம்பளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்ட்டர்ட்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் தமாலம், கிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1,000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடம் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரி நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாதக் கவசம் 3.75 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* சிவராத்திரி அன்று கே்ஷத்ரபாலிகர் என்ற உற்சவம் நடைபெறுகிறது - அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமயா ஏழுமலையானை பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும் க்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமயாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர். மந்திரம், சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமாவளியைப் பாடியுள்ளார்.

* தினசரி அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளியமரம்.

* எந்த சாத்விக சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் இரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுத பாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.

1781-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயமடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானப் பிரார்த்தித்து இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்.

*ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ கர்னல் ஜியோ ஸ்டிரெட்டின் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* திருப்பதி அலர்மேலுமங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது - செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால் இதை நெய்யும் போது மூன்று வேளையும் குளிப்பார்கள். அவர்கள் மது, புலால் உண்ணமாட்டார்கள் வெள்ளிக் கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவு அரைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்குச் சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்களை பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50,00 மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இருகைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்தில் விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப் பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கிபி. 1764ல் நிஜாம் ஒருவனது தலைமையில் வந்த முஸ்லிம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

* திருவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த பூமாலைகள் திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது.



அருள்வாக்கு - நிலைத்த ஆனந்தம் எது?

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன, சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். 
மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம், நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம்.வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம், சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவாய் செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்தமட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Tuesday, August 19, 2014

இறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்!


லோகம் முழுக்க ஒரு நாடகம்; பகவான் கபட நாடக சூத்திரதாரி என்று மகான்கள் சொல்கிறார்கள். சர்வ தேசத்திலும் மகாகீர்த்தி வாய்ந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். அவர்கூட ஓர் இடத்தில், ‘லோகம் முழுதுமே ஒரு நாடக மேடைதான்; எல்லா ஸ்த்ரீ - புருஷர்களும் அதிலே வரும் நடிகர்கள்தான்’ என்று சொல்கிறார்.

ஸ்வாமி நடத்துகிற இந்தப் பெரிய நாடகத்தில் மநுஷ்யனும் ‘நாடகம்’ என்று ஒரு கலையை உண்டாக்கியிருக்கிறான். அநாதி காலமாக இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கிறது. வேதங்களிலே ஆங்காங்கே சம்பாஷணை ரூபத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்கிற மாதிரியான மந்திரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காரர்கள் இதுதான் நாடகக் கலையின் தோற்றுவாய் (Origin) என்று சொல்கிறார்கள். தமிழிலும் இயல், இசை, நாடகம் என்று சொல்கிறார்கள். ‘கத்யம்’ (Prose) என்பதை ‘இயல்’, ‘பத்யம்’(Poetry) என்பதை ‘இசை’ என்று சொல்லி, ‘நாடகம்’ என்பதற்கு மட்டும் அதே வார்த்தையையே தமிழிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். ‘கூத்து’ என்பதே நாடகத்திற்கான தமிழ் வார்த்தை.

ஸம்ஸ்கிருதத்தில் கவி சிரேஷ்டர்கள் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடக்கூடிய காளிதாஸன், பவபூதி காலத்திலிருந்து நாடக இலக்கியம் மகோன்னதமாக வளர்ந்திருக்கிறது. காளிதாஸன், பவபூதி இருவருமே கவிகள் (Poets) என்பதைவிடப் பெரிய நாடகாசிரியர்களாக ( Dramatist) இருந்திருக்கிறார்கள். இன்னும் பாஸன், விசாகதத்தன் முதலான பல பேரும் நாடகாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


கேள்விக்குறியாகும் தோனி தலைமை!

 
2012-ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்துக்கு முன் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் இங்கிலாந்து முன்னணியில் இருந்தது. இப்போது இங்கிலாந்தில் நடந்துவரும் தொடரிலும் அதே நிலைதான். ஒரே வித்தியாசம் 2012 தொடரில் பல இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அதே அபாரத்தை மோசமாக விளையாடுவதில் காட்டி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஊர் ஊராய் சென்றடைந்த தோல்விகளும், கை நழுவிப்போன, ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டங்களும் தோனியின் அணித் தலைமையை கேள்விக்குட்படுத்தின. இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை லார்ட்ஸில் இந்தியா வென்றபோது, அணியின் ஒருங்கிணைப்பிலும், தோனியின் தலைமையிலும் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதா ஒருவார காலத்துக்கு அனைத்து ஊடகங்களும் முழங்கித் தள்ளின.
 
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து யுகங்கள் ஆகிவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை அடுத்த இரண்டு ஆட்டங்களும் ஏற்படுத்தியுள்ளன. லார்ட்ஸ் ஆட்டத்தில் தென்பட்ட உத்வேகமும், தோனியின் அதிரடி அணுகுமுறையும் தெரியாமல் நிகழ்ந்த விபத்தென அடுத்த ஆட்டங்கள் எண்ண வைக்கின்றன.
 
சௌரவ் கங்குலி தலைமை ஏற்பதற்கு முன் வெளிநாட்டுத் தொடர்களை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தியா தோற்றுவிடும். தொடர் போனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனிமனித சாகஸங்கள் நிகழ்த்திக் கொண்டால் போதும் என்ற எண்ணத்திலேயே மொத்த அணியும் இயங்கும். தோனியின் தலைமை மெல்லமெல்ல அந்த நிலைக்கு இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது.இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அரை மணிநேரத்தில் தாமாகவே களமிழந்ததைப் பார்த்த தோனி, அடுத்த ஆட்டங்களில் வந்து நின்றால் போதும் என்று எண்ணியிருப்பார் போலும். மூன்றாவது டெஸ்டில் முதல் நாளில் காலையில் விக்கெட்டுகள் விழாதபோது, முதல் இடைவேளைக்குப் பிறகு டிராவுக்கு விளையாடினால் போதும் என்றே தோனியின் தலைமை அமைந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இங்கிலாந்து வீரரா பார்த்து ஆட்டமிழக்கும் வரை தோனி தன் பௌலர களை தட்டாமாலை சுற்றி ஓவருக்கு ஒருமுறை மனம் போன போக்கில் மாற்றியது ஒருவகையில் அவருடைய சுவாரஸியத்தைக் காட்டியது.
 
நான்காவது ஆட்டத்தில் 200-க்கு குறைவாக ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த இங்கிலாந்தை மேலும் அதிரடியா தாக்காமல் இருந்த தோனி தற்காப்பான அணுகுமுறை கொண்டவராய் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மூன்றாம் நாளைத் தாக்குப்பிடித்தால் அடுத்த நாள் வருணபகவான் கிருபை நிச்சயம் உண்டு என்ற நிலையிலும் அணியின் நலனைவிட மோயின் அலியை அடித்து துவம்சம் செய்வதே முக்கியம் என்று ஆட்டத்தை இழந்தார். இந்த இரண்டுங்கெட்டான் நிலையே வெளிநாட்டில் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்.
 
அணித் தலைமை என்பது பெரும் அழுத்தம் தரக்கூடிய ஒன்று தான். அதனுடன் கூட விக்கெட் கீப்பிங்கும் சீராகச் செய்ய முடியாதபட்சத்தில், மெய்க்குல்லம், சங்ககாரா போல கீப்பிங்கை யாவது வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கலாம் தோனி.  ஸ்டம்புக்குப் பின்னால் நின்றாலொழிய நான் ஒரு மோசமான ஃபீல்டர் என்று கூறிக் கொள்வதில் உண்மை இருக்கலாம். அதனால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை. முதல் ஸ்லிப்புக்கும் கீப்பருக்கும் இடையே செல்லும் பந்தை விக்கெட் கீப்பர்தான் பிடிக்க முயல வேண்டும். இந்தத் தொடரில் அத்தகைய கேடுகளை தோனி வேடிக்கைதான் பார்க்கிறார். 
 
சுலபமான ஸ்டம்பிங்குகளை தவறவிட்டுள்ளார். தன்னுடைய மோசமான ஃபார்மின் பிரதிபலிப்பாகவே ஜடேஜாவை லெக் ஸ்டம்புக்கு வெளியில் போடச் சொல்லுதல், அஸ்வினுக்கு லாங் ஆன் ஃபீல்டரை வைத்து களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற நெகட்டிவ் சூழல்களில் அணியைத் தள்ளுகிறாரோ என்று தோன்றுகிறது.அறையில் தீட்டிய திட்டங்கள் செயலாக்கம் பெறும்போது கேப்டனுக்கு அதிகம் வேலையில்லை. அந்தத் திட்டங்கள் தவறாகும்போது அணித் தலைவரின் பங்கு அவசியமா கிறது. இந்தத் தொடரைப் பொறுத்தமட்டில், அணித் தேர்விலோ, ஃபீல்டிங் களம் அமைப்பிலோ, பௌலிங் மாற்றங்களிலோ தோனியின் சமயோசிதம் சற்றும் வெளிப்படவில்லை. எதிரணியின் தவறுகளுக்குக் காத்திருத்தல் மட்டுமே தன் திட்டம் என்பது போல செயல்பட்டு வருவது கவலைக்குரியது. ஒருநாள் தொடர்களில் கடைசி நிமிட சாகஸங்களும், ஐ.பி.எல்.லில் வெளிநாட்டு வீரர்களின் ஆள்பலமும், உள்ளூரில் முட்டிக்குமேல் எழும்பாத ஆடுகளங்களும் தோனியின் தலைமையை பிரம்மாண்டமாகக் காட்டக்கூடும். உண்மையான உரைகல்லான டெஸ்ட் கிரிக்கெட் டில் இந்தியாவின் எந்த அணித் தலைவரை விடவும் அதிகமாக வெளிநாட்டில் தோற்றவர் என்பது பெரும் கறை. இதை தோனி குறைந்த பட்சம் ஆமோதிக்கவாவது செய்வாரா? அடுத்த கேப்டன் என்று கட்டியம் கூறப்பட்ட விராத் கோலி சுமாராகவாவது இந்தத் தொடரில் ஆடியிருந்தால் இந்நேரம் தோனியின் தலைமையை மாற்ற வேண்டி கூச்சல்கள் வானைப் பிளந்திருக்கும். 2012-ஐ போலவே இப்போதும் சரியான மாற்று இல்லாத ஒரே காரணத்தினால் தோனியின் தலைமை இன்னும் சில காலம் தொடரக்கூடும். தோனியின் இடம் கிட்டத் தட்ட நிரந்தரம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய ‘சித்தம்போக்கு சிவன் போக்கு’ அணுகுமுறை மாற அவரே ஏதாவது செய்தால்தான் உண்டு.
 
லலிதாராம்
 
 

Monday, August 18, 2014

நோக்கியா... சாம்சங்... மைக்ரோமேக்ஸ்...

செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.

டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன?
 
‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
 
 
இந்திய செல்போன் மார்க்கெட்  அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். 

இந்தியர்கள் செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும் இந்திய செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!

 

பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!

அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது. இதில் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்த நிறுவனங்கள் முதலிடத்தை நோக்கிய போட்டியில் எப்போதும் முன்னணியில் ஓடிகொண்டு தான் இருக்கும்.

சைபர்சிம்மன்

ஸ்மார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள்!

செல்போன் உலகில் நிலவும் போட்டியைச் சமாளிக்க, செல்போன் நிறுவனங்கள் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளன. கடைகள் மூலமாக அவர்கள் சென்றடையும் வாடிக்கையாளரின் அளவு குறைவாக உள்ளது என இந்த நிறுவனங்கள் நினைப்பதால் இ-காமர்ஸ் துறையைக் கையில் எடுத்துள்ளன சில நிறுவனங்கள். குறிப்பாக, மோட்டோரோலாவின் மோட்டோ-இ, ஷியோனி எம்ஐ3 போன்ற செல்போன்கள் ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் அதற்கான புக்கிங்குகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிடுகின்றன. இதெல்லாம் செயற்கையாகச் செய்யப்படும் ஹைப் (hype)தான். இதை நிஜமென்று நம்பத் தேவையில்லை என்று விமர்சனம் செய்கிற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆக, வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்!

தொடரும் சாம்சங், ஆப்பிளின் வீழ்ச்சி!
 
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களின் போட்டி அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு நிகராக அவற்றைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதால் தற்போது சரிவில் உள்ள முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிளின் சந்தை பங்களிப்பு வரும் 2015-ம் ஆண்டில் முறையே 31 மற்றும் 15 சதவிகிதமாக குறையும் என பிட்ச் தரவரிசை நிறுவனம் கணித்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதில் 15 சதவிகிதத்தை சீனாவின் ஷியோமி நிறுவனம் பிடித்துள்ளது. இது சாம்சங்கின் 12 சதவிகிதத்தைவிடவும் அதிகம்.


மேரி கோம்! - தடைக்கல்லும் படிக்கல்லே!

திருமணமான பெண்களை வேலைக்குப் போக அனுமதிப்பதே இன்றும் பெரும்பாடாக பல வீடுகளில் இருக்க, வீராங்கனையாக, அதுவும் குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்குகிற அளவுக்கு உயர வேண்டும் எனில், எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். அப்படி பல தடைகளைத் தாண்டி வந்தவர்தான் மேரி கோம்.
 
மணிப்பூரின் கங்காதேய் பகுதியில் மார்ச் 1, 1983ல் பிறந்தார் மேரி கோம். பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத கோம், மீண்டும் தேர்வுக்குத் தயாராவதை விரும்பவில்லை. தனது சிறுவயது இன்ஸ்பிரேஷனான டிங்கோ சிங்கின்  பாக்ஸிங் திறமை அவரை குத்துச்சண்டைக்கு இழுத்தது. 2000ல் குத்துச்சண்டை விளையாட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால், கைக்குப்போடும் கிளவுஸ்கூட அவரால் வாங்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல். அவரிடமிருந்த ஆர்வம் கிளவுஸ் போடாத வெறும் கையாலேயே குத்துச்சண்டையை பழக வைத்தது.

 

இதெல்லாம் மேரி கோமின் குடும்பத்துக்கு தெரியாமலே நடந்தது. ஒருநாள் செய்தித்தாளில் சிரித்தபடி மேரி கோமின் புகைப்படம் வெளியாக, அதிர்ந்தார் அவரது தந்தை. ‘‘நீ குத்துச்சண்டை போடறியா... அப்புறம் எவன் உன்னை கல்யாணம் செஞ்சுக்குவான்?’’ என்று கத்த ஆரம்பித்தார்.   ஆனால், தாய் ஆதரவு அவருக்கு இருந்தது.வறுமை ஒருபக்கம், சவால்கள் இன்னொரு பக்கம் என பயிற்சியைத் தொடங்கிய கோம் சர்வதேச அங்கீகாரத்துக்காகப் போராடினார். இறுதியில் ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.  வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட மேரி கோம், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியர் ஒருவர் குத்துச் சண்டை யில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் பெற்றார்.பதக்கம் வென்ற மேரி கோம், வடகிழக்குப் பகுதி பல ஆண்டு காலமாக கவனிக்கப்படாமல் இருப்பதை அமைதியாக எடுத்துச் சொன்னார். துணிந்துவிட்டால் எதுவுமே தடையில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னதால்தான், அவரது வாழ்க்கை இன்று சினிமா படமாகிறது. மேரி கோம் ஒரு ரியல் ஹீரோயின்...
 

கேட்ஜெட் : சிக்னல் சிக்கலை தீர்க்கும் கோடென்னா!

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

 

நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி  அமைக்கப் பட்டுள்ளது.ஒரு இண்டிகேட்டர் லைட் மற்றும் ஃப்ளாஷ் மெமரியைக் கொண்டுள்ளது ‘கோடென்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம்-ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் அவர்களது ஸ்மார்ட்போனில் ‘கோடென்னா’வை கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும்,  பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Thursday, August 14, 2014

எபோலா... என்ன செய்ய வேண்டும்?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! 

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே... ஏன்? ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி... எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 'எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், 'நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை 'உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.


இந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.
நகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

எபோலா... அறிகுறிகள் என்ன?

எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.  

எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.  

சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
 

வீழ்கிறாரா விஜயகாந்த்?

''அரசியலுக்கு வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தா சும்மா அறிக்கை விடுறது, பேசுறது... இதெல்லாம் பிடிக்காது. இறங்கின முதல் நாளே முழு வேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்கப் பிரியப்படுறவன் நான்’ - தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சபதம் இது. இதோ... அவர் கட்சி தொடங்கி 10-வது ஆண்டு தொடங்கவிருக்கிறது. சபதம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் 'கடமைக்கே’ என்று அறிக்கை மட்டுமே விட்டு கட்சி நடத்தியதால், 10-வது ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது!
 
2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, அரசியல் கட்சித் தலைவராக அரங்கத்துக்கு வந்தார் விஜயகாந்த். அதற்கு முந்தைய 30 ஆண்டு காலம் அரிதாரம் பூசி, பல்வேறு அவதாரங்களை தமிழ் சினிமாவில் காட்டி, வாங்கிய பேரும் புகழும் அவர் கட்சி ஆரம்பித்தபோது கை கொடுத்தது. ஏதோ ஒரு கட்சியில் இருந்து பிரிந்துவந்து இந்தக் கட்சியை விஜயகாந்த் தொடங்கவில்லை. யாரோ ஆரம்பித்து வளர்த்து எடுத்த கட்சியில் இணைந்து, அதனை அவர் தன் வசப்படுத்திவிடவும் இல்லை. அவரே ஆரம்பித்த கட்சி இது. அந்த வகையில் சுயம்புவான கட்சி இது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கருப்பையா மூப்பனார்... ஆகிய மூவருடனும் நெருக்கம் பாராட்டியும், தமிழ், தமிழர் விவகாரங்களில் கருத்துச் சொல்லியும் தனது அடையாளங்களைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வந்தவர்தான் விஜயகாந்த். அதே சமயம் எந்தக் கட்சியிலும் சேராத ரஜினிகாந்துக்குத் தரப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவம், விஜயகாந்த்தை யோசிக்கவைத்தது. அதுவே தனது ரசிகர் மன்றங்களுக்கு என பிரத்யேகக் கொடியை அறிமுகப்படுத்தியாகவேண்டிய ஆசைக்கு அடித்தளம் அமைத்தது.

 

விழுப்புரத்துக்கு ஒரு திருமணம் நடத்திவைக்கப் போனார் விஜயகாந்த். சென்னையில் இருந்து விழுப்புரம் வரை சுமார் 220 இடங்களில், கொடி ஏற்றிவைக்க கம்பங்கள் தயாராக இருந்தன. '150 கி.மீ தூரத்துக்குள் இத்தனை ஆயிரம் ரசிகர்களா...’ என்று கணக்குப்போட்ட விஜயகாந்த், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்சிக்கு அச்சாரம் போட்டார். தே.மு.தி.க-வைத் தொடங்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அதுவும் ஆட்சி முடியும் கட்டம். 2006-ல் தி.மு.க ஆட்சி மலர்ந்துவிட்டது. எந்த கருணாநிதியை தன் நெஞ்சில் தாங்கி விஜயகாந்த் வளர்ந்தாரோ, அதே கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிர்பந்தம்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு திரையுலக பொன்விழாவை கடற்கரையில் நடத்திக்காட்டிய விஜயகாந்த், தன்னை சிவந்த கண்களோடு எதிர்ப்பார் என்று கருணாநிதியும் கற்பனை செய்யவில்லை. விஜயகாந்த் என்றோ, தே.மு.தி.க என்றோ குறிப்பிடாமல் 'நடிகர் கட்சி’ என்றே முரசொலியும் கருணாநிதியும் கொச்சைப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆரையுமே ஒரு காலகட்டம் வரை அப்படித்தானே அழைத்தார்கள்.நடிகர் கட்சி என்றபோது, 'நடிக்க முயன்று நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப் பூ கதாநாயகன் அல்ல நான்’ என்று கருணாநிதியை விமர்சித்தார் விஜயகாந்த். 'பகுதிநேர அரசியல்வாதி’ என்று அழைக்கப்பட்டார். '24 மணி நேரமும் கருணாநிதி அரசியல் செய்கிறார் என்றால், இத்தனை படங்களுக்கு எப்படி கதை-வசனம் எழுதினார்?’ என்று கேட்டார் விஜயகாந்த். ஆனாலும், விஜயகாந்தை தலைவராகவோ, தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ மதிக்கவே இல்லை கருணாநிதியும் தி.மு.க-வும்.

தி.மு.க ஒருவரைக் கொச்சைப்படுத்துகிறது என்றால், அ.தி.மு.க அவரை அரவணைக்கும். அந்த விதியும் விஜயகாந்தைப் பொறுத்தவரை உல்ட்டா ஆனது. 2006-2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலும் போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா முடங்கியே கிடந்தார். 'கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று விஜயகாந்த் சுற்றிச்சுழன்று வந்தார். கிராமப்புற எம்.ஜி.ஆர் ரசிகர்கள், இவர் பக்கம் லேசாகச் சாயத் தொடங்கினார்கள். இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணிக்க, விஜயகாந்த் அதில் கணிசமான வாக்குகளை வாங்கி முன்னேறிக்கொண்டிருந்தார். தி.மு.க-வுக்கு மாற்று தே.மு.தி.க-வாக மாறலாம் என்ற நிலைமை நெருங்க ஆரம்பிக்கும்போதுதான், 'குடிகாரர்’ என்ற அஸ்திரத்தை அம்மா ஏவினார். 'இவருக்கு எப்படித் தெரியும்? பக்கத்துல உட்கார்ந்து ஊத்திக் கொடுத்தாரா?’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி, அவரது துணிச்சலின் அடையாளம். அடுத்த பதில் ஜெயலலிதாவிடம் இருந்து வரவே இல்லை. அ.தி.மு.க மேடைகளில் விஜயகாந்த் விமர்சனங்கள் ஆரம்பமாகின.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கலாம்; தமிழீழத்துக்கு ராஜபக்ஷே தலை ஆட்டலாம்; ஆனால், விடுதலைச்சிறுத்தைகளை பா.ம.க. ஏற்காது. இருப்பினும் விஜயகாந்த் விஷயத்தில் தொல்.திருமாவளவனும் கோ.க.மணியும் கைகோத்து, வட மாவட்டங்களில் தே.மு.தி.க-வின் பாய்ச்சல் பொறுக்கமுடியாமல் பரிதவித்து அறிக்கைவிட்டார்கள். இப்படி எல்லாக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கும் கட்சியாக தே.மு.தி.க-வை வளர்த்தெடுத்த பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு!''தமிழ்நாட்டில் எனது   முகத்தைப் பார்க்க லட்சோபலட்சம் மக்கள் இன்றைக்கும் ஆர்வமாக உள்ளனர் என்பதே எனக்குக் கிடைத்த மாபெரும் சொத்து. பணம், பிரியாணி பொட்டலம், பான வகைகள்... என பல வகைகளில் செலவழித்தும், மக்கள், சிலரைக் கண்டால் எரிச்சல் அடைகிறார்கள். அந்த நிலை எனக்கு இல்லை'' என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 2009-2011 காலகட்டம் அவரை உச்சத்தில் ஏற்றியது.  

'குடிகாரர்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்துக்காக, சட்டமன்றத் தேர்தல் சமயம் இரண்டு மாதங்கள் காத்திருந்து 41 தொகுதிகளைத் தூக்கிக்கொடுத்தார் ஜெயலலிதா. 'நடிகருக்காக’ முரசொலியில் வெளிப்படையாக அறிவிப்புகளைக் கொடுத்தார் கருணாநிதி. பகுதி நேர அரசியல்வாதியான விஜயகாந்தைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். 'தி.மு.க கூட்டணிக்கு வாருங்கள்’ என்று திருமாவளவன் தாம்பூலம் வைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் சேர்ந்த பா.ஜ.க கூட்டணியை விட்டுவிடக் கூடாது என்று பா.ம.க-வும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் உறவு கொண்டாடத் துடிக்கும் அளவுக்கு அரசியலில் பிரமிப்பான வளர்ச்சி அடைந்தார் விஜயகாந்த்!2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  8.5 சதவிகித வாக்குகளைத் தனித்துப் பெற்றவர், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை அள்ளினார். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி சட்டமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைத் தாண்டுவது தே.மு.தி.க-வுக்கு மட்டுமே வசப்பட்டது.  இவை அனைத்தையும்விட, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த மகுடம் சூட்டப்பட்டதைவிட, 60 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க, ஐந்து முறை ஆட்சியில் இருந்த தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட்டு தே.மு.தி.க முன்னுக்கு வந்திருந்தது. அதுதான் சாதனை!ஆனால், அந்தச் சாதனையைக் கொண்டாட முடியாத அளவுக்கு உடனே சரியத் தொடங்கியதே, தே.மு.தி.க எதிர்கொண்ட சிக்கல். தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி அமைத்து அடைந்த புகழையும், அ.தி.மு.க-வுடன் கைகோத்துப் பெற்ற வெற்றியையும் ஓரிரு மாதங்கள்கூட விஜயகாந்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சட்டமன்றத்தில் அவர் முகத்தைப் பார்க்கவே, ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவுக்குப் பிடிக்காவிட்டால் ஆண்டவனையே எதிர்க்கக்கூடிய அ.தி.மு.க-வினர், இவரைப் பார்த்தாலே கூச்சல் எழுப்பியது ஜனநாயக ஒழுங்கீனம். ஆனால், அதற்காக சபைக்கே வராமல் விஜயகாந்த் 'பாய்காட்’ செய்தது ஜனநாயகத்தையும் மக்களையும் அவமானப்படுத்தியதற்குச் சமம்.எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது அரசு வாகனம், மூவர்ணக் கொடி, அவையில் முதலாவது இருக்கை... என்பன மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதும்கூட! அப்படியாவது விஜயகாந்த் இயங்கினாரா? எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாத தி.மு.க-தான், வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க- வினருக்கும் சேர்த்து 'ஜனநாயகம் படும்பாடு’ என்ற பேச்சுக் கச்சேரியை நடத்தியாக வேண்டும் என்றால், 'எதிர்க்கட்சி அந்தஸ்துடன்’ தே.மு.தி.க என்ற கட்சி எதற்கு? இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எதற்கு? ஆட்சிக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதும் இல்லை; விஜயகாந்த் பங்கேற்பதும் இல்லை. நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், 'என்கிட்டதான் கேட்பீங்களா? அந்தம்மாகிட்ட போயிக் கேளுங்கய்யா. நான்தான் இளிச்சவாயனா?’ என்று கேட்கிறார் விஜயகாந்த். அதாவது நானும் ஜெயலலிதாவைப்போல கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது அவரது எண்ணம்.

இதே பந்தாவை கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களிடம் காட்டியதால்தான் ஒவ்வொருவராக கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை எம்.எல்.ஏ-க்கள் விலகி நிற்பதும், அவர்களை இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் விலக்காமல் வைத்திருப்பதும், விஜயகாந்த் பலவீனத்தின் உதாரணங்கள். தன்னைத் தவிர மற்றவர்கள் தேவை இல்லை என்பது அவரது மனோபாவமாக இருக்குமானால், அவரது இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகும் நாள் தூரத்தில் இல்லை!

''நான் சினிமாவில் இருந்து வந்தவன். ஒரு படம் ஜெயிக்கும், அடுத்த படம் அடிவாங்கும். அடுத்தது எதிர்பாராமல் தூக்கிவிடும். மாறி மாறி நடந்த இந்தப் போராட்டத்தில் மனம் பழகிவிட்டது'' என்று ஒரு முறை விஜயகாந்த் சொன்னார். அரசியல் என்பது தனித்தனி சினிமா அல்ல; ஒரே படம்தான். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி ஆக்ஷன் காட்டுகிறோம் என்பதை வைத்தே, அடுத்த காட்சிக்கு மக்களைத் தக்கவைக்க முடியும். கடந்த மூன்று ஆண்டு காலமாக விஜயகாந்த் தியேட்டரில் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, கேப்டன் உஷார்!

ப.திருமாவேலன்
 

Wednesday, August 13, 2014

சாலையோரக் கடைகளில் சாப்பிடலாமா?


இன்றைய மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோரக் கடைகளை மொய்க்கின்றனர். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.  

தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்றுநோய்களுக்கு வழிவிடும்.

அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை; கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் கலந்து இறைச்சியை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகிற வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.  

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப்போக்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் கு.கணேசன்

உலகில் இருப்பது ஒரே கடல்!


கடற்கரைக்குப் போவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள எந்த ஊராக இருந்தாலும் கடற்கரைக்குப் போய் நாம் காண்பது வங்கக் கடலே. உண்மையில் இதன் பெயர் வங்காள விரிகுடா.

இந்தியாவின் மேற்குக் கரையோரமாக உள்ளது அரபுக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்துமாக் கடல் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், வட துருவப் பகுதியில் அமைந்த ஆர்டிக் கடல், தென் துருவப் பகுதியில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டி அமைந்த தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் (சமுத்திரங்கள்) அமைந்துள்ளன. இவற்றைப் பெருங்கடல்கள் என்றும் சொல்வதுண்டு.

இவற்றைத் தவிர வங்கக் கடல், அரபுக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, பால்டிக் கடல், மத்திய தரைக்கடல் என நூற்றுக்கும் மேற்பட்ட கடல்கள் உள்ளன. இவை மேலே கூறப்பட்ட ஐந்து பெருங்கடல்களின் ஓரங்களில் அல்லது நடுவில் நிலப் பகுதியை ஒட்டி அமைந்தவை. தவிர, இவை சமுத்திரங்களை விடவும் சிறியவை.

சொல்லப் போனால் உலகம் முழுமைக்குமாக ஒரே கடல்தான் உள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கப்பலில் கிளம்பினால் பூமியை ஒரு தடவை சுற்றி வந்துவிட முடியும். அதாவது ஐந்து பெருங்கடல்களும் மற்றுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பினால் ஸ்ரீநகர் வரை நம்மால் காரில் செல்ல முடியும். அது மாதிரிதான் இதுவும். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை தொடர்ச்சியாக உள்ள நிலப்பகுதியை நாம் பல்வேறு மாநிலங்களாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களை வைத்துள்ளோம். அந்தந்த மாநிலங்களுக்குள்ளாக பல மாவட்டங்களும் தாலுகாக்களும் உள்ளன. உலகில் கடல்களையும் நாமாக இவ்விதம் பிரித்து தனித்தனிப் பெயர்களை வைத்துள்ளோம்.

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் பூமியானது பெரிய உருண்டையாகத் தெரியும். உலகின் கடல்கள் எல்லாம் சேர்ந்து நீல நிறத்தில் காட்சி தரும். கடல்கள் இடையே எல்லை என்பதே இல்லை என்பது நன்கு புலப்படும்.

உலகின் நிலப் பகுதியில் மேடு பள்ளம் உண்டு. மலைகள் உண்டு. பள்ளத்தாக்கு உண்டு. ஆனால் கடலின் மேற்பரப்பில் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்பது கிடையாது. ஆகவேதான் கடல் மட்டம் என்ற அளவு முறையைப் பயன்படுத்துகிறோம்.

இமயமலையில் அமைந்த எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் என்று சொல்கிறோம். அதாவது அது கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரம் என்று அர்த்தம். நிலப் பகுதியில் உள்ள எல்லா இடங்களும் இவ்விதம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்று கணக்கிடப்பட்டு அவ்விதமே குறிப்பிடப்படுகின்றன.

உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தால் பிளாட்பாரத்தின் கோடியில் பெயர்ப் பலகை இருக்கும். அதில் அந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்பது மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் இதைக் காணலாம்.

நீங்கள் ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டினால் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் ஒரே அளவாக இருக்கும். தண்ணீரின் மேற்பரப்பில் மேடு பள்ளம் இருக்காது. இதை நீர் மட்டம் (Water Level) என்பார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள் கட்டுமானப் பணியின்போது ஒரே அளவாக இருக்கிறதா என்று சோதிக்க நீர் மட்டம் பார்ப்பார்கள். இதற்கென கருவி வைத்திருப்பார்கள்.
நியாயமாகப் பார்த்தால் ஏரிகளில் காணப்படுவது போல கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. கடல்களில் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக பெரிய அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாக கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை வேலை ஏற்றம் என்றும் வேலை இறக்கம் என்றும் கூறுவர். (வேலை என்றால் கடல் என்று பொருள்).

இதன் விளைவாக உலகில் துறைமுகங்களில் ஒரு சமயம், அதாவது வேலையேற்றத்தின்போது கடல் நீர் வெள்ளம் போல உள்ளே பாயும். வேறு சில சமயங்களில் வேலை இறக்கத்தின்போது துறைமுகத்திலிருந்து கடல் நீர் இதேபோல வெளியே பாயும். கடல் நீர் துறைமுகத்துக்குள்ளே பாயும்போது கப்பல்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையும். துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியே பாயும்போது அதை அனுசரித்து கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும்.

வேலை ஏற்றமும் வேலை இறக்கமும் ஏற்படும் நேரங்கள் எல்லா இடங்களிலும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதை முன்கூட்டிக் கணித்து அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்படுகின்றன. துறைமுக நிர்வாகிகளுக்கும் கப்பல் கேப்டன்களுக்கும் இந்தக் கையேடுகள் மிக உதவியாக உள்ளன.கடல் மட்ட மாறுபாடு பற்றிக் குறிப்பிட்டோம். உலகின் கடல்களில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் கடல் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் தாழ்வாகவும் இருக்கத்தான் செய்கிறது. தென் அமெரிக்கக் கண்டமும் வடஅமெரிக்கக் கண்டமும் சேரும் இடத்தில் பனாமா என்ற நாடு உள்ளது. இங்கு மேற்குப் புறத்தில் பசிபிக் கடல் உள்ளது. கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது. இந்த இடத்தில் பசிபிக் கடல் பகுதியின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தைவிட 20 செண்டிமீட்டர் உயரமாக உள்ளது. இதற்கு பசிபிக் பகுதியில் உள்ள நீரோட்டமே காரணம்.உலகில் உள்ள பெருங்கடல்கள் பற்றி ஆரம்பத்தில் கவனித்தோம். இவற்றில் பசிபிக் கடல்தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்தையும் இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.இந்தக் கடல்களின் பரப்பளவு மாறாமல் என்றுமே இந்த அளவில் நீடிக்குமா என்று கேட்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. அட்லாண்டிக் கடலின் பரப்பளவு ஆண்டு தோறும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலின் பரப்பளவு மெல்லக் குறைந்து வருகிறது.

என்.ராமதுரை


எளிய பரிசோதனை - உடையாத பலூன்!


நெருப்புப் பட்டாலோ, கூர்மையான பொருள்பட்டாலோ உடைந்துவிடக்கூடியது பலூன். நெருப்பில் பட்டாலும் பலூன் உடையாமலோ, உருகாமலோ இருக்கும். எப்படி? செய்து பார்க்கலாம் வாருங்கள்.

என்ன தேவை?

பலூன்கள் - 2
மெழுகுவர்த்தி -1
தீப்பெட்டி - 1
தண்ணீர் - 1/2 கப்


எப்படிச் செய்வது?

ஒரு பலூனை ஊதி நன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

இன்னொரு பலூனில் 1/4 கப் தண்ணீரை ஊற்றி, ஊதி, இருக்கமாகக் கட்டுங்கள்.
மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

நீர் ஊற்றாத பலூனை மெழுகுவர்த்தி ஜுவாலைக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.

இப்போது பலூன் உடைந்துவிடுகிறது.

அடுத்து, தண்ணீர் ஊற்றிய பலூனை எடுத்துக்கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தியின் ஜுவாலையில் காட்டுங்கள்.

என்ன நிகழ்கிறது? பலூன் உடையவில்லை. தொடர்ந்து சிறிது நேரம் நெருப்பில் காட்டினாலும் பலூன் உடையவில்லை. ஏன்?

சாதாரண பலூனை நெருப்பில் காட்டும்போது நேரடியாக வெப்பம் பலூனைத் தாக்குவதால் பலூன் உடைந்துவிடுகிறது. அதே நேரம், தண்ணீர் இருக்கும் பலூனில் வெப்பம் நேரடியாக பலூனைத் தாக்கவில்லை. வெப்பம் தண்ணீருக்குக் கடத்தப்படுகிறது. இதனால் பலூன் உடையவில்லை. இதே போல பால் பாக்கெட்டில் தண்ணீர் விட்டும் செய்து பாருங்கள்!

Tuesday, August 12, 2014

ஃப்ளிப்கார்ட் vs அமேஸான்!

அயர்ன்பாக்ஸிலிருந்து ஃப்ரிட்ஜ் வரை எந்தப் பொருளாக இருந்தாலும், அதை வாங்கும்முன் கடை கடையாக ஏறியிறங்கி, ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நம் வழக்கம். ஆனால், இன்றைக்கு இ-காமர்ஸ் வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது. இனிவரும் காலத்திலும் பலரும் இ-காமர்ஸ் மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பிருப்பதால், இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்களிடம் பெரும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட் - அமேஸான் நிறுவனங் களிடையே ஜெயிக்கப் போவது நீயா, நானா என்கிற விஷயத்தில் கடும்போட்டி நடக்கிறது.  
 
ஃப்ளிப்கார்ட் ஒரு பில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடை வதற்குள், அமேஸான் 2 பில்லியன் டாலர் (ரூ.12,000 கோடி) முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாக்கத்துக்காக ஒதுக்கிவிட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்களிடையே ஏன் இந்தப் போட்டி, இந்த நிறுவனங் களில் ஏன் இத்தனை பணத்தை முதலீடு செய்கிறார்கள், இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் ?


 

‘‘இ-காமர்ஸ் நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிற  கேள்விக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் விளக்கங்கள் ஆச்சர்யமானவை.

ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையாளர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடு கிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம்; அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது. 1999 - 2000 ஆண்டுகளில் டாட் காம் என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போயின. ஆனால், இன்று இ-காமர்ஸ் துறையும் அப்படி நொடிந்துபோகும் என்று சொல்லிவிட முடியாது.

காரணம், மக்களின் வேலை, அவர்களால் ஷாப்பிங்குக்கு என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் ஆன்லைன் வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

ரீடெயில் நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 சதவிகித லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன. ஆனால், அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீடெயில் நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் விற்கின்றன.

இதனைதான் நன்றாக கவனிக்க வேண்டும். இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இதுபோன்ற ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. இவர்களது நோக்கமே தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

தற்போது 1 பில்லியனை திரட்டியுள்ள ஃப்ளிப்கார்ட்டுமே இந்தப் பணத்தை அப்படிதான் செலவு செய்யும். 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில், இதுபோன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு, நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை; இதற்கு பயன்படும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால், அதற்கும் அதிகமாக ஆஃபரில் பொருட்களை விற்பதற்கு இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.

அமெரிக்க அமேஸானை இந்திய ஃப்ளிப்கார்ட்டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த சுவாரஸ்யமான கேள்வி. அமேஸானும் ஃப்ளிப்கார்ட்போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான். அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, குறைந்த விலையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன. ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இங்குதான் அவர்களால் அதிக வாடிக்கையாளர்களைத் தொடர முடியும்.

அமேஸான் போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால், ஃப்ளிப்கார்ட்டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை ஃப்ளிப்கார்ட் கையாளும்பட்சத்தில், அமேஸானுக்கு ஃப்ளிப்கார்ட் சவாலாக இருக்கும். உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் இப்போது எஃப்கார்ட் எனும் கொரியர் வசதியைக் கொண்டுள்ளது. இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான். இன்னமும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைதான் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும், அதிகமானோர் நம்பிக்கை இன்மையால் இந்த முறையைத்தான் தொடருகிறார்கள். இது மாறினாலே இ-காமர்ஸ் துறையின் நம்பிக்கை அதிகரித்து, நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கிவிடும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேஸான் மட்டும் இந்தப் போட்டியில் இல்லை. இதுபோன்று பல நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது அமேஸானிலோ ஆர்டர் செய்தால் அவர்களது இருப்பிலிருந்து டெலிவரி செய்வார்கள். ஆனால், ஸ்நாப்டீல் போன்ற சில நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை பொருள் தயாரித்த கம்பெனி களுக்கு அனுப்பிவிடும். அதற்கான கட்டணத்தை மட்டும் பெற்று கொள்ளும். பொருள் தயாரித்த கம்பெனிகளே உங்களுக்்கு பொருளை டெலிவரி செய்யும். அப்படி செய்வதில் ரிஸ்க் குறைவு. அதனால் இதுபோன்ற நிறுவனங்களும் நாளை தன்னை நிலைநிறுத்தி நிதி திரட்டும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்று வரும்போது உள்நாட்டு நிறுவனமா, வெளிநாட்டு நிறுவனமா என்று வாடிக்கையாளர்கள் பார்க்க மாட்டார் கள். குறைந்த விலை, அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ, அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கை யாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில், அமேஸான் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும்! 



தூக்கத்தை தொலைக்கலாமா?

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை  நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
 
'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.


ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமென்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்னைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தப் பிரச்னையைச் சில வகை தெரப்பி, மெலட்டோனினைச் சுரக்கவைக்கும் மாத்திரைகளைக் கொடுத்துக் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்போனைத் தூர வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.'

நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு... 

இரவு 7 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள், கிளம்பும் முன் காலையில் 'பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிடுவது போல் சாப்பிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பகல் உணவை, நள்ளிரவு 1 மணியளவில் சாப்பிட வேண்டும்.

 வேலை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும்போது, முடிந்தவரை இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து வெளிச்சம் படாதவாறு வேன் போன்றவற்றில் பயணிக்க வேண்டும்.

 வீட்டில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் இரவு உணவை உண்ண வேண்டும். பிறகு கட்டாயம் செல்போனைத் தள்ளிவைத்துவிட்டு, ஜன்னல்களை அடைத்து, வெளிச்சம் புகாத அறையில் உறங்கி மாலை எழுந்திருக்க வேண்டும்.

  வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால், இரவு நேர ஷிஃப்ட் காரணமாக உடலில் ஏற்படும் வியாதிகளின் பிடியில் இருந்து விடுபடலாம்.

 
 

உடல் பருமனைத் தவிர்க்க

ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்?
 
சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.

 உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையேனும் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைக் கண்டறிய முடியும்.

 அவ்வப்போது உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். காலை மாலை நேரத்தில் வாக்கிங் செல்லலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம்.

 அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதற்குப் பதில், வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இதனால், உடலில் கூடுதல் கலோரிகள் சேருவது தவிர்க்கப்படும். வெந்நீரில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் துரிதப்படுத்தும் திறன் தேனுக்கு உண்டு. இதனால் கூடுதல் அளவில் கொழுப்பு கரைக்கப்படுவது உறுதி.

 காலை, மதியம், இரவு மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதற்குப் பதில், இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை 8 மணிக்கும், மதிய உணவை 1 மணிக்கு முன்னதாகவும், இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவும் எடுத்துக்கொள்வது அதிக அளவில் கலோரிகளை எரிக்க உதவும்.

 பசி இன்றி எதையும் சாப்பிட வேண்டாம். வயிறு நிரம்பிவிட்ட உணர்வு மூளைக்குப் போய்ச் சேர, சிறிது நேரம் பிடிக்கும். பொறுமையாகச் சாப்பிட வேண்டும். இரண்டு உணவு வேளைக்கு நடுவில், கலோரி நிறைந்த நொறுக்குத் தீனிகளை எடுக்கக் கூடாது.

 நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். தினசரி உணவுப் பட்டியலில் ஐந்து கப் காய்கறி, சர்க்கரை அளவு குறைவான பழம் இருக்க வேண்டும். இதில் ஒரு கப் பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளாக இருக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, வெள்ளரி, காரட் போன்ற காய்கறிகளை சாலட்டாகச் செய்து சாப்பிடலாம்.

 சில உளவியல் காரணங்கள் கூட அதிகம் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டுகிறது. சோகம், துயரம், தனிமை போன்ற சூழ்நிலையில் பலரும் நாடுவது உணவுகளைத்தான். அதிகம் சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும்.


 அனைத்துக்கும் மேல், மிக வேகமாக உடல் எடையைக் குறைக்கும் மருந்து, மாத்திரை, கருவிகளை நம்ப வேண்டாம். இதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியம்.

குழந்தைகளின் உடல் பருமனைத் தவிர்க்க... 

 குழந்தைகளுக்குச் சுண்டல் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்துங்கள்.

 சரியான நேரத்துக்குச் சாப்பிடப் பழக்குங்கள்.

 சாப்பிடும்போது தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.

 கம்ப்யூட்டர் கேம்ஸுக்குப் பதில் சக நண்பர்களுடன் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.

 பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளின் தீமைகளைப் பற்றிச் சொல்லிப் புரியவையுங்கள். இதுபோன்ற உணவை உட்கொள்ளும்போது சற்று அதிக நேரம் விளையாடவிடுங்கள்.

 தேநீர், காபி, குளிர்பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள் அல்லது குறைத்திடுங்கள்.
 

Monday, August 11, 2014

கேமரூன்!

கப்பல் கவிழ்ந்தால், எல்லோருக்கும் கஷ்டம்தான். ஆனால், ஒரு கப்பலை வெற்றிகரமாக கவிழ்த்ததன் மூலம் தன் திறமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்தான், ஜேம்ஸ் கேமரூன். இவர் எடுத்த டைட்டானிக் படத்துக்கு 11 ஆஸ்கார் விருது கிடைத்தது. இன்றைக்கும் முன்னணி இயக்குநராக இருக்கும் கேமரூன், இந்த நிலையை அடைய எதிர்கொண்ட போராட்டங்கள் பலப்பல.

கனடாவில்் 1954ல் பிறந்த  கேமரூனுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் பள்ளிக்குப் போய் வந்தார். கல்லூரியில் தனக்கு சற்றும் தொடர்பில்லாத இயற்பியல் பாடத்தை எடுத்தார். முதல் செமஸ்டர் முடியும்போதே கல்லூரியை விட்டு வெளியேறினார்.

பல வேலைகளைத் தேடி அலைந்தார். கடைசியாக, லாரி ஓட்டுநராக தன் வாழ்வைத் தொடங்கினார். இடையிடையே கதைகளை எழுதினார். அந்தக் கதைகளை யாரும் சீண்டக்கூட இல்லை.  1977ம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தைப் பார்த்தபின் அவருக்கு சினிமா ஆர்வம் தொற்றிக்கொண்டது. பல சினிமா கம்பெனிகளின் கதவைத் தட்டினார். படிப்பு வராத உனக்கு படப்பிடிப்பு வருமா என்று கேட்டு விரட்டினார்கள்.

இனி பேசி பிரயோஜனம் இல்லை. ஒரு படத்தை எடுத்துக்காட்டுவோம் என்று அறிவியல் புனைகதை ஒன்றை குறும்படமாக எடுத்தார். இதன்மூலம் வந்த வருமானத்தில் கேமரா, லென்ஸ் போன்றவற்றை விலைக்கு வாங்கி, தன் சினிமா எடுக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

1978ல் எடுத்த முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தன் பெயரை பதித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சில படவாய்ப்புகள் கிடைக்க, கேமரூனின் வாழ்க்கையில் வெற்றிக்காற்று வீச ஆரம்பித்தது. ஏலியன், டெர்மினேட்டர் என வரிசையாக ஒவ்வொரு படமும் வசூல் சாதனையில் முத்திரைப் பதிக்க, 1997ல் இவர் எடுத்த டைட்டானிக் உச்சகட்ட புகழை கொண்டுவந்து கொட்டியது.

அதன்்பின், அவதார் என்கிற படத்தை மோன்பிக்சர்ஸ் என்கிற அதிநவீன தொழில்நுட்பத்துடன் எடுத்து, அகில உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தார். இன்றும் புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும் கேமரூன், தோல்வியில் தவிக்கும் அனைவருக்கும் (டைட்)'டானிக்’தான்!

Tuesday, August 05, 2014

பொதிகை மலை குற்றால சீசன்


வழக்கமாக குற்றால சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீசன் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுவதும், சீசன் தொடங்காமல் கண்ணாமூச்சி காட்டிப்போவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு குற்றால சீசன் கொஞ்சம் காலதாமதமாக ஜூன் 2வது வாரம் தொடங்கி அனைவரின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு குற்றாலத்துக்கு கார், வேன், பஸ்களில் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிநேரம் அல்ல ஒரு நாள் முழுவதும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தாலும் களைப்பே தெரிவதில்லை. தண்ணீர் மேலிருந்து பொத் பொத்தென்று நம்மேல் விழுந்தாலும் உற்சாகமூட்டும் சுகம் தான் ஏற்படுகிறது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்த்துவரலாம்,
 
பேரருவி: பேரருவி எனப்படும் மெயின் அருவி குற்றாலம் பஸ் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பேரருவியில் தண்ணீர், வெள்ளிக்கொலுசுகளின் முத்துக்கள் போன்று சடசடவென்று கொட்டுவதைக் காணவே கண்கள் ஆயிரம் வேண்டும்.

உச்சி மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர் பால் அருவி, தேனருவி, செண்பகாதேவி அருவிகளைக் கடந்து, ஆபத்தான, அய்யோ நினைத்தாலே அச்ச மூட்டும் பொங்குமாகடலில் விழுந்து தரையை நோக்கிச் சீறிப்பாய்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் பேரருவியின் நீர்த்துவாளைகள் வெண்மேகம் பனித்துளி போன்று சுற்றுலா பயணிகளைப் பன்னீர் தெளித்து வரவேற்கும்.

இந்த அருவியில் கட்டப்பட்டுள்ள ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும்.

சிற்றருவி: மெயின் அருவிக்கு மேலே இருக்கும் சிற்றருவிக்கு மெயின் அருவியிலிருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவியைப் போன்று இங்கும் உற்சாகமாகக் குளித்து மகிழலாம்.

புலியருவி: ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் புலியருவி வழிந்தோடுகிறது. சிறுவர், சிறுமியர் அச்சமின்றி, ஆட்டம், பாட்டத்துடன் குளித்து மகிழும் இந்த அருவியை ‘சிறுவர் அருவி’ என்பார்கள்.

முன்காலத்தில் அடர்ந்த வனத்துக்குள் குடும்பத்தோடு வாழும் புலிகள் இங்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வதால் இந்த அருவிக்குப் புலியருவி எனப் பெயர் வந்ததாம். ஆனால் இப்பவெல்லாம் புலி என்ன எலி கூட வருவதில்லை என்கிறார்கள்.

செண்பகாதேவி அருவி: மெயின் அருவியிலிருந்து சுமார் 600 அடி உயரத்தில் செண்பகாதேவி அருவி உள்ளது. இந்த அருவிக்கு, கற்கள் நிறைந்த கரடு முரடான மலைப்பாதை வழியாகச் சுமார் 2 கி.மீ. தூரம் கால்நடையாக நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த அருவியின் தடாகத்தில் ஓவென்ற இரைச்சலுடன் கொட்டும் நீரில் உற்சாகமாகக் குளித்து மகிழலாம். இதில் மிகவும் கவனமாகக் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அருவிக்கு அருகில் உள்ள செண்பகாதேவி அம்மனையும் தரிசித்துவிட்டு வரலாம்.

தேனருவி: செண்பகாதேவி அருவியின் மேலுள்ள பாறைகளின்மேல், மரங்கள் அடர்ந்த பசுமை சூழ்ந்த வனத்துக்குள் அச்சமூட்டும் வகையில் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றால் தேன் அருவியை அடையலாம்.

இந்த அருவி வழிந்தோடும் பகுதியிலுள்ள பாறைகளில் தேன்கூடுகள் மிகுந்து காணப்படும். தேன்கூடுகள் வழியாக வழிந்தோடி வருவதால் இந்த அருவி தேனருவி என்ற பெயரைப் பெற்றது. பாதுகாப்பு கருதி இந்த அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலருவி: அகத்திய முனிவரால் அடையாளம் காணப்பட்ட பொதிகை மலையின் உச்சியில் தோன்றும் அருவியே பாலருவி. இந்த அருவியில் தண்ணீரானது வெள்ளை வெளேரென்று பால் போன்ற நிறத்தில் உருவாகிக் கொட்டுவதால் இது பாலருவியானது.

ஐந்தருவி: குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் ஐந்தருவி. மலையில் தவழ்ந்து, தரையை நோக்கிப் பாய்ந்தோடி வரும் நீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து கொட்டுவதால் இது ஐந்தருவி எனப்படுகிறது. ஐந்தருவியின் மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி: ஐந்தருவியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த அருவி பழ மரங்கள் நிறைந்த வனத்துக்குள்ளிருந்து பாய்ந்துவரும் வேளையில் பழங்களை அடித்து இழுத்து வருவதால் இதற்கு இந்தப் பெயர். இந்த அருவியில் குளிக்க வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதில் கொஞ்சமல்ல நிறைய வருத்தம் சுற்றுலாப் பயணிகளுக்கு.

பழைய குற்றால அருவி: குற்றாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கடையம் செல்லும் வழியில் இருக்கிறது பழைய குற்றால அருவி. முதன்முதலாக இந்த அருவி தான் குற்றால அருவியாக இருந்து, பழையதாக மாறிவிட்டதால் இதற்கு இந்தப் பெயர்.

வெயில் இன்றி கருமேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும் வானம், கார் மேகத்துடன் உறவாடும் உயரமான மரங்கள், மூலிகைச் செடிகளுடன் கலந்து வீசும் சுகாந்த காற்று, ஆங்காங்கே வித்தியாசமான குரல் கொடுத்து அழைக்கும் அரிய வகைப் பறவைகள் என இயற்கை கொஞ்சி விளையாடும் இந்த அருவிகளில் குளிப்பது எதற்குமே ஈடாகாது.



 

அருள்வாக்கு ராஜராஜன் செய்த யுக்தி!

 
‘நம்பிக்குத் தும்பி சொன்னார்’ என்பார்கள். தும்பி என்றால் யானை. அதன் கைதான் தும்பிக்கை. ஸாக்ஷாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது. அவர் சொன்னதை நம்பி பிற்பாடு ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலாகப் பாடினார். நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.
 
ஆனால், அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள்.  

‘அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதாரிட்டி இல்லையே!’ என்று கைவிரித்து விட்டார்கள்.

சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை; புத்திமானும்.

என்ன யுக்தி என்றால், ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோகூட இல்லை, அவை ப்ராண பிரதிஷ்டை ஆனவையாதலால் ப்ராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் ‘அர்ச்சாவதாரம்’ என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ ஸித்தாந்தத்திலே அர்ச்சா என்றால் விக்ரஹம். இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான். என்ன யுக்தி என்றால், மூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் ‘புறப்பாடு’ செவித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், ‘முத்ரை வைத்தவர்களே வந்து விட்டார்கள். கதவைத் திறக்கணும்’ என்று கேட்டுக் கொண்டான்.

எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவாரஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சோனி சைபர் ஷாட் (Sony Cyber-shot RX100 III)


என்னதான் ஸ்மார்ட் போன்களில் விதவிதமான கேமராக்கள் அதிக மெகா பிக்ஸலோடும், மிகையான தொழில்நுட்பத்தோடும் வந்தாலும், மொபைல் போன் என்பது கால், மெசேஜிங் போன்ற சேவைகளுக்கே பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக தொழில்நுட்ப கேமராக்கள் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை மிகுதியாக பயன்படுத் தினால் பேட்டரி பெரும் அளவில் குறையும். இதனாலே இன்றும் டிஜிட்டல் கேமரா, SLR, DSLR போன்ற பிரத்யேக கேமராக்களின் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சோனி நிறுவனம் தனது புதிய கேமராவான ‘சோனி சைபர் ஷாட் RX100 III’-வை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு சிம்பிளாகவும் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கும் இந்த சைபர் ஷாட் RX100 III, 1.0 type CMOS sensor (13.2 x 8.8mm) தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகத்தின் முதல் கேமரா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

20.2 மெகா பிக்ஸல்ஸ் கொண்ட இந்த கேமரா, 1.0 type CMOS sensor தொழில்நுட்பத்தைக் கொண்டு படங்களை மிகத் துல்லியமாகவும் அதிக தரத்தோடும் எடுக்கிறது. அதிக விட்டம் கொண்ட F1.8 ‘Carl Zeiss Vario-Sonnar T lens’ கேமராவின் ‘Defocus’ தன்மையை மெருகூட்டும் என்று சொல்லப்படுகிறது. ‘BIONZ’ இமேஜ் பிராசஸர் எந்தவொரு பொருளையும் 0.13 விநாடிகளில் ஃபோகஸ் செய்து படம் எடுத்துவிடுமாம். மேலும், இந்த பிராசஸர் குறைந்த வெளிச்சத்திலும் சீரான படங்களை எடுக்க வல்லது.

மேலும், கைகளாலே லென்ஸைச் சுற்றி இருக்கும் வளையத்தைக் கொண்டு zoom, aperture, magnification, படத்தின் தன்மைகளை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம். சோனி சைபர் ஷாட் RX100 III-ன் 7.62cm LCD டிஸ்ப்ளே 1229k ரெஸல்யூசனை கொண்டுள்ளது. இந்த அதிக ரெஸல்யூஷன் டிஸ்ப்ளே மூலம் எடுத்த படங்களின் தரத்தைத் தெளிவாகவும் நேரடியாகவும் பார்த்துவிடலாம்.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டுள்ள ‘சோனி சைபர் ஷாட் RX100 III-ன் இந்திய விலை ரூ.54,990.

மலாலா

சிறு பிள்ளைகள் சொல்வதை யார் கேட்பார்கள் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால், ஒரு சிறுமியால் ஒரு பெரும் புரட்சியே செய்ய முடிந்திருக்கிறது. அந்தச் சிறுமியின் பெயர் மலாலா யூசுப்சாய். பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி மரணத்தை ஜெயித்து வந்தவர்தான் இந்த மலாலா! இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

1997-ம் ஆண்டு பாகிஸ்தானின் மின்கோராவில் பிறந்தார் மலாலா. இவரது தந்தை ஜியாவுதீன் நடத்திவந்த பள்ளியிலேயே படித்தார். இவரது வீடு இருக்கும் பகுதி கோடைகால விழாக்களுக்கு சிறப்புவாய்ந்த இடம். இந்தப் பகுதியை திடீரென ஆக்கிரமித்தனர் தாலிபான்கள். பெண்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனைக் கண்டு கொதித்த மலாலா, 2008-ல் பெஷாவரில் தாலிபான்களை எதிர்த்துப் பேசினார்.



2009-ல் பிபிசிக்கு வலைதளம் மூலம் தாலிபான்களை விமர்சித்து கட்டுரை எழுதினார். இதற்குபின், பெண் கல்வி பற்றியும், அவர்களது உரிமை பற்றியும் பேசிவந்த அவர் 2011-ல் சர்வதேச அமைதிக்கான சிறுமி என்ற விருதையும், பாகிஸ்தானின் அமைதிக்கான இளம் பெண் என்ற விருதை யும் பெற்றார். ஆனால், அதற்குபிறகுதான் மலாலாவுக்கு காத்திருந்தது நிஜ போராட்டம்.

2012-ல் தனது 14-வது வயதில் தாலிபான்களிடமிருந்து மலாலாவுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனாலும், ஒரு சிறுமியைத் தண்டிக்கும் அளவுக்கு அவர்கள் மோசமாக நடக்க மாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அக்டோபர் 9, 2012 பள்ளி செல்லும் வழியில் தாலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார் மலாலா. குண்டு இடதுபக்க தலையைத் தாக்கி கழுத்துவரை சென்றது.
 
உயிருக்குப் போராடினார் மலாலா. இங்கிலாந்தில் பலகட்ட மருத்துவ உதவிகளுக்குப்பின் 2013-ல் மலாலா மீண்டு வந்தார். தன்னை தாக்கிய தாலிபான்களுக்கு எதிராக இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்.
சிறுமிகளுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து போராடிவரும் மலாலாவை தாலிபான்களின் குறி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், மலாலாவின் போராட்டம் ஓயவில்லை. அவர் போராட்டம் என்றும் ஓயாது!

Friday, August 01, 2014

தேசியக்கொடி சில துளிகள் !

நமது தேசியக் கொடி உருவாக்கத்தில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. மேடம் காமா எனப்படும் பைக்காஜி காமா, வீர சாவர்க்கர், விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா போன்றோரும் ஆரம்ப கால தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்கள்.




1907 ஆகஸ்ட் மாதம், ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்கான தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.

தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டது.
 
மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக் கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும் கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947 ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

 
1951-ல், இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறையால், கொடியின் நீளம் மற்றும் அகலம், தயாரிக்கப் பயன்படுத்தும் துணியின் தரம் போன்ற பல விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

 நமது நாட்டுக் கொடியைத் தயாரிக்க, குடிசைத் தொழில் கழகம் உரிமை பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டிலிருந்து, கர்நாடகா தார்வாடியில் உள்ள 'கதர் கிராமத் யோக சமுக்தா சங்கம்’ மூலம் தேசியக் கொடி தயாரிக்கப்படுகிறது.

 

தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும் தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக் குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக் குறிக்கிறது.
 

'டெம்பிள் ரன்’

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை, 'ஆங்ரி பேர்டு... ஆங்ரி பேர்டு’ எனப் பறவையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த வீடியோ கேம் பிரியர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, 'டெம்பிள் ரன்’ என்ற தங்கச் சுரங்கம்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா என்று  உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்போன்களில் டவுண்லோடு செய்திருக்கிறார்கள். ரயில், பஸ், பூங்கா, ஷாப்பிங் மால் என எங்கு பார்த்தாலும் தங்க ஓட்டம் ஓடுகிறார்கள். இந்த டெம்பிள் ரன் உருவானது எப்படி?

கெயித் ஷெப்பர்ட் (Keith Shepherd), நடாலியா லக்கியனோவா (Natalia Luckyanova) இருவரும் வாஷிங்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாஃப்ட்வேர்  துறையில் பணியாற்றிவந்தனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, திருமணம் செய்துகொண்டனர்.    குடும்பச் செலவுகள் அதிகரித்ததால், வருமானம் போதவில்லை. செலவைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

 

வீடியோ கேம் உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தார் கீத். இந்த நேரத்தில், வீடியோ கேம் ஆப்ஸ் உருவாக்குவதற்காக 'ஆப் ஸ்டோர்ஸை’ ஆரம்பித்தது ஆப்பிள் நிறுவனம். இது, கீத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. தானும் சொந்தமாக ஆப்ஸை உருவாக்க நினைத்தார். தனது வேலையை விட்டுவிட்டு, 2008-ல் 'இமாங்’ பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். நடாலியா வேலைக்குச் சென்றபடியே கணவருக்கு உறுதுணையாக நின்றார்.

வீடே அலுவலகமானது. முதலில், குறுக்கெழுத்து ஆப்ஸ் ஒன்றைத் தயார் செய்தார் கீத். இதன் மூலம் 5,000 டாலர்களைச் சம்பாதித்ததும் நம்பிக்கை பிறந்தது.

அடுத்த முயற்சிக்கு நடாலியாவையும் சேர்த்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து, 'ஹார்பர் மாஸ்டர், ஹிப்போ ஹை டைவ்’ போன்ற வீடியோ கேம்களை உருவாக்கினார்கள். அது, பெரிய அளவில் சக்சஸ் ஆகாவிட்டாலும், கையைக் கடிக்கவில்லை. அப்போது, அவர்களுடன் கிரில் என்ற ஓவியர் இணைந்தார்.

மூவரும் சேர்ந்து 2011 ஆகஸ்ட் 4-ம் தேதி, 'இன்டியானா ஜோன்ஸ்’ படத்தின் தீம் அடிப்படையில், 'டெம்பிள் ரன்’ வீடியோ கேமை உருவாக்கினார்கள். அது பெரிய அளவில் ஹிட் அடித்தது.

ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு, விண்டோஸ் 8, விண்டோஸ் போன் 8, பிளாக்பெர்ரி 10 போன்றவற்றில் இந்த விளையாட்டை மக்கள் போட்டி போட்டு டவுண்லோடு செய்துகொண்டார்கள். இப்போது, இலவசமாகவே கிடைக்கும் இந்த விளையாட்டை விளையாடுவோரின் எண்ணிக்கை இப்போது 100 கோடியைத் தாண்டிவிட்டது.

ஒரு திருடன், கோயிலில் இருந்து பணத்தைத் திருடிச் செல்லும்போது, அவனைப் பிடித்து விழுங்குவதற்கு குரங்குகள் துரத்துகின்றன. அவற்றிடம் இருந்து எதிர்ப்படும் சவால்களைச் சமாளித்து, எல்லையை அடைய வேண்டும். விளையாடும்போது அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், விறுவிறுப்பாகச் சுண்டி இழுக்கிறது. இதற்குப் போட்டியாக டெம்பிள் கன்ஸ், டெம்பிள் ஜம்ப்ஸ் என்று பல வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டன. எதுவுமே டெம்பிள் ரன் ஓட்டத்தைத் தொட முடியவில்லை.

''குடும்பச் செலவை சமாளிப்பதற்காக உருவாக்கிய இந்த வீடியோ கேம், எங்களை மில்லியனர்களாக ஆக்கிவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் இருவரின் உள்ளமும் ஒன்றாக இருப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்'' என்கிறார்கள், கீத் மற்றும் நடாலியா.

டெம்பிள் ரன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான, 'டெம்பிள் ரன் 2’ சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்து, சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.


இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், அஜிங்கியா ரஹானே

கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்குப் பின் பெற்ற டெஸ்ட் வெற்றி, நிச்சயம் இந்திய அணியின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி!

சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக்... என அசுர ஜாம்பவான்கள் இல்லாமல், அவர்கள் இருந்தபோதுகூட சாத்தியமாகாத வெற்றி இப்போது நம் வசம்.

இப்போதைய இந்திய அணியில் நிறைய மாற்றங்கள். முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களே, டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால், 20/20, ஐ.பி.எல் போட்டிகள் அதிகரித்த பிறகு, நிதானித்து ஆடும் திறன் பல வீரர்களிடம் குறைய, டெஸ்ட் போட்டிகளுக்கு என்று பிரத்யேக வீரர்களைத் தயார்படுத்த வேண்டிய சூழ்நிலை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்ச்சி காட்டும் வீரர்கள்தான், பின்னாட்களில் கிளாசிக் அந்தஸ்து பெறுவார்கள். அப்படி, இப்போதைய அணியில் எதிர்கால நம்பிக்கைகளாக ஜொலிக்கிறார்கள் இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், அஜிங்கியா ரஹானே ஆகிய ஐவர்.

பௌன்சர் பாய்!

அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் இடத்தை யார் நிரப்புவது என்பது தீராச் சிக்கலாக இருந்தது. அந்தக் குறையைத் தீர்த்து வெளிநாட்டு மைதானத்தில் வேகப்பந்து வீச்சை முன்னின்று நடத்தி அசத்தி இருக்கிறார் இஷாந்த் ஷர்மா. கடந்த காலத் தோல்விகளில் இருந்து நிறையவே பாடம் கற்றிருக்கும் இஷாந்த், இந்த முறை டெக்னிக்கலாகப் பந்து வீசி மிரட்டினார். இந்தியத் தொடருக்கு முன் விளையாடிய ஆஷஸ் தொடரில் பௌன்சர்களால் அடிவாங்கி விக்கெட்களைக் கோட்டைவிட்டது இங்கிலாந்து அணி. அந்த வியூகத்தை அப்படியே பிடித்துக்கொண்டார் இஷாந்த். கை மேல் பலனாக ஏழு விக்கெட்களை அள்ளி, வெற்றி நாயகனானார். இனி மற்ற அணிகள் இஷாந்தைச் சமாளிக்க பிரத்யேக வியூகம் வகுக்க வேண்டும்!

 

பலமான அஸ்திவாரம்!

'அதிரடிக்கு மட்டுமே லாயக்கு. நிலைத்து நின்று ஆடுவது இல்லை!’ என்ற தன் மீதான நெகட்டிவ் விமர்சனத்தை இரண்டே போட்டிகளில் மாற்றிவிட்டார் முரளி விஜய். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட முரளி விஜய், தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்டார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதற்காக ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வரும் பந்துகளை அடிக்காமல் விடும் பயிற்சியில் கவனம் செலுத்தினார். ஸ்டம்ப்புகளை நோக்கி வரும் பந்துகளை மட்டும் எதிர்கொண்டால், களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கலாம் என்ற நுணுக்கம் அவரை இப்போது வெற்றிகரமான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக்கியிருக்கிறது. வி.வி.எஸ். லக்ஷ்மணின் இடத்தை நிரப்புவதற்கான நம்பிக்கை அளிக்கிறார். ஓப்பனிங் இறங்கி புதிய பந்துகளை நம்பிக்கையாக எதிர்கொள்வது, கூடுதல் ப்ளஸ்!

நம்பர் 1 ஆல் ரவுண்டர்!

உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில், முதல் இடத்தில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. 100 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கத்துக்குட்டிதான். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருப்பவர், இப்போதுதான் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை விளாசி இருக்கிறார். அதுவும் போட்டியை ஜெயிக்கக் காரணமான அரை சதம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் துடிப்புடன் இருந்தபோது, 57 பந்துகளில் அவர் விளாசிய 68 ரன்களே இந்திய அணிக்கு வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் நம்பிக்கை அளித்தன. பந்துவீச்சிலும் எதிர்பாராத தருணத்தில், திடமான பார்ட்னர்ஷிப்பைக் குலைக்கும் திறனை கைவரப் பெற்றவர். இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கணக்கைத் தொடக்கியவரும் இவரே. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கும் ஜடேஜா, கொஞ்சம் மெனக்கெட்டால் கங்குலியின் இடத்தை எட்டிப் பிடிக்கலாம்!

சூப்பர் ஸ்விங்கர்!

காற்றில் திசை மாறி சரியாக ஸ்டம்ப்புக்குள் திரும்பும் ஸ்விங் பந்துகளை இந்திய அணியில் வீச யாருமே இல்லை என்ற அவப்பெயரை, அழிக்க முயல்கிறார் புவனேஷ்குமார். வேகமான ஓட்டம், கொஞ்சம் ஹை ஜம்ப், பலமான வீச்சுத் திறன், வேகம் மற்றும் பௌன்ஸ் என ஷான் பொல்லக்கின் ஸ்டைலில் பந்து வீசுவது புவனேஷ் குமாரின் பலம். இவருடைய அனைத்துப் பந்துகளுமே ஸ்டம்ப்புகளைக் குறிவைத்து வீசப்படுபவை. இதனால் அவரது பந்துகளையுமே பேட்ஸ்மேன் தடுத்தோ அல்லது அடித்தோ ஆடியாகவேண்டும். அதுதான் அவருக்கு விக்கெட்களைக் குவிக்கிறது. அதே சமயம் கடைசி பேட்ஸ்மேனாக களம் இறங்கி, முதல் இரண்டு டெஸ்ட்களின் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் குவித்திருக்கிறார், 'பந்து வீச்சாளர்’ புவனேஷ்குமார். இரண்டாவது டெஸ்ட் வரை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரன்களைவிட புவனேஷ்குமார் குவித்த ரன்கள் அதிகம்!

ஐந்தாவது தூண்!

ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும் ரஹானே, இப்போது இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன். லார்ட்ஸ் மைதானத்தில் நிதானமாகவும் அதே சமயம் மிகத் துல்லியமான ஷாட்கள் மூலமாகவும் அவர் அடித்த சதம், அவருடைய பொறுமையையும், எத்தகைய பந்துவீச்சையும் சமாளித்து ஆடும் திறனையும் வெளிப்படுத்தியது. டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என யாராலும் நிரப்ப முடியாத  ஐந்தாவது பேட்ஸ்மேனின் இடத்தைக் கச்சிதமாக நிரப்பிஇருக்கிறார் ரஹானே. டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும்போது பெரும்பாலும் புதிய பந்து வீசப்படும். அதற்கு மற்ற பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆனால் ரஹானே, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிவருவதால், இந்த ஐந்தாவது இடம் அவருக்குப் பிரச்னையாக இல்லை. ராகுல் டிராவிட்டின் உறுதியும் அவரைவிட கொஞ்சம் அதிக அதிரடியும் காட்டுபவராக உருவாகிவருகிறார் ரஹானே!
எந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இல்லாத சமயம், சாதனை வெற்றி மூலம் முத்திரை பதித்திருக்கிறது இந்திய இளம் அணி. வெற்றி ஓட்டத்தைத் தக்கவைத்தால், உலகின் எந்த அணிக்கும் சவால்விடக்கூடிய அணியாக இது உருவாகும்

 சார்லஸ்