Search This Blog

Tuesday, August 05, 2014

மலாலா

சிறு பிள்ளைகள் சொல்வதை யார் கேட்பார்கள் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால், ஒரு சிறுமியால் ஒரு பெரும் புரட்சியே செய்ய முடிந்திருக்கிறது. அந்தச் சிறுமியின் பெயர் மலாலா யூசுப்சாய். பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி மரணத்தை ஜெயித்து வந்தவர்தான் இந்த மலாலா! இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

1997-ம் ஆண்டு பாகிஸ்தானின் மின்கோராவில் பிறந்தார் மலாலா. இவரது தந்தை ஜியாவுதீன் நடத்திவந்த பள்ளியிலேயே படித்தார். இவரது வீடு இருக்கும் பகுதி கோடைகால விழாக்களுக்கு சிறப்புவாய்ந்த இடம். இந்தப் பகுதியை திடீரென ஆக்கிரமித்தனர் தாலிபான்கள். பெண்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனைக் கண்டு கொதித்த மலாலா, 2008-ல் பெஷாவரில் தாலிபான்களை எதிர்த்துப் பேசினார்.



2009-ல் பிபிசிக்கு வலைதளம் மூலம் தாலிபான்களை விமர்சித்து கட்டுரை எழுதினார். இதற்குபின், பெண் கல்வி பற்றியும், அவர்களது உரிமை பற்றியும் பேசிவந்த அவர் 2011-ல் சர்வதேச அமைதிக்கான சிறுமி என்ற விருதையும், பாகிஸ்தானின் அமைதிக்கான இளம் பெண் என்ற விருதை யும் பெற்றார். ஆனால், அதற்குபிறகுதான் மலாலாவுக்கு காத்திருந்தது நிஜ போராட்டம்.

2012-ல் தனது 14-வது வயதில் தாலிபான்களிடமிருந்து மலாலாவுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனாலும், ஒரு சிறுமியைத் தண்டிக்கும் அளவுக்கு அவர்கள் மோசமாக நடக்க மாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அக்டோபர் 9, 2012 பள்ளி செல்லும் வழியில் தாலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார் மலாலா. குண்டு இடதுபக்க தலையைத் தாக்கி கழுத்துவரை சென்றது.
 
உயிருக்குப் போராடினார் மலாலா. இங்கிலாந்தில் பலகட்ட மருத்துவ உதவிகளுக்குப்பின் 2013-ல் மலாலா மீண்டு வந்தார். தன்னை தாக்கிய தாலிபான்களுக்கு எதிராக இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்.
சிறுமிகளுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து போராடிவரும் மலாலாவை தாலிபான்களின் குறி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், மலாலாவின் போராட்டம் ஓயவில்லை. அவர் போராட்டம் என்றும் ஓயாது!

No comments:

Post a Comment