Search This Blog

Wednesday, August 13, 2014

உலகில் இருப்பது ஒரே கடல்!


கடற்கரைக்குப் போவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள எந்த ஊராக இருந்தாலும் கடற்கரைக்குப் போய் நாம் காண்பது வங்கக் கடலே. உண்மையில் இதன் பெயர் வங்காள விரிகுடா.

இந்தியாவின் மேற்குக் கரையோரமாக உள்ளது அரபுக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்துமாக் கடல் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், வட துருவப் பகுதியில் அமைந்த ஆர்டிக் கடல், தென் துருவப் பகுதியில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டி அமைந்த தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் (சமுத்திரங்கள்) அமைந்துள்ளன. இவற்றைப் பெருங்கடல்கள் என்றும் சொல்வதுண்டு.

இவற்றைத் தவிர வங்கக் கடல், அரபுக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, பால்டிக் கடல், மத்திய தரைக்கடல் என நூற்றுக்கும் மேற்பட்ட கடல்கள் உள்ளன. இவை மேலே கூறப்பட்ட ஐந்து பெருங்கடல்களின் ஓரங்களில் அல்லது நடுவில் நிலப் பகுதியை ஒட்டி அமைந்தவை. தவிர, இவை சமுத்திரங்களை விடவும் சிறியவை.

சொல்லப் போனால் உலகம் முழுமைக்குமாக ஒரே கடல்தான் உள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கப்பலில் கிளம்பினால் பூமியை ஒரு தடவை சுற்றி வந்துவிட முடியும். அதாவது ஐந்து பெருங்கடல்களும் மற்றுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பினால் ஸ்ரீநகர் வரை நம்மால் காரில் செல்ல முடியும். அது மாதிரிதான் இதுவும். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை தொடர்ச்சியாக உள்ள நிலப்பகுதியை நாம் பல்வேறு மாநிலங்களாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களை வைத்துள்ளோம். அந்தந்த மாநிலங்களுக்குள்ளாக பல மாவட்டங்களும் தாலுகாக்களும் உள்ளன. உலகில் கடல்களையும் நாமாக இவ்விதம் பிரித்து தனித்தனிப் பெயர்களை வைத்துள்ளோம்.

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் பூமியானது பெரிய உருண்டையாகத் தெரியும். உலகின் கடல்கள் எல்லாம் சேர்ந்து நீல நிறத்தில் காட்சி தரும். கடல்கள் இடையே எல்லை என்பதே இல்லை என்பது நன்கு புலப்படும்.

உலகின் நிலப் பகுதியில் மேடு பள்ளம் உண்டு. மலைகள் உண்டு. பள்ளத்தாக்கு உண்டு. ஆனால் கடலின் மேற்பரப்பில் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்பது கிடையாது. ஆகவேதான் கடல் மட்டம் என்ற அளவு முறையைப் பயன்படுத்துகிறோம்.

இமயமலையில் அமைந்த எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் என்று சொல்கிறோம். அதாவது அது கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரம் என்று அர்த்தம். நிலப் பகுதியில் உள்ள எல்லா இடங்களும் இவ்விதம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்று கணக்கிடப்பட்டு அவ்விதமே குறிப்பிடப்படுகின்றன.

உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தால் பிளாட்பாரத்தின் கோடியில் பெயர்ப் பலகை இருக்கும். அதில் அந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்பது மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் இதைக் காணலாம்.

நீங்கள் ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டினால் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் ஒரே அளவாக இருக்கும். தண்ணீரின் மேற்பரப்பில் மேடு பள்ளம் இருக்காது. இதை நீர் மட்டம் (Water Level) என்பார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள் கட்டுமானப் பணியின்போது ஒரே அளவாக இருக்கிறதா என்று சோதிக்க நீர் மட்டம் பார்ப்பார்கள். இதற்கென கருவி வைத்திருப்பார்கள்.
நியாயமாகப் பார்த்தால் ஏரிகளில் காணப்படுவது போல கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. கடல்களில் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக பெரிய அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாக கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை வேலை ஏற்றம் என்றும் வேலை இறக்கம் என்றும் கூறுவர். (வேலை என்றால் கடல் என்று பொருள்).

இதன் விளைவாக உலகில் துறைமுகங்களில் ஒரு சமயம், அதாவது வேலையேற்றத்தின்போது கடல் நீர் வெள்ளம் போல உள்ளே பாயும். வேறு சில சமயங்களில் வேலை இறக்கத்தின்போது துறைமுகத்திலிருந்து கடல் நீர் இதேபோல வெளியே பாயும். கடல் நீர் துறைமுகத்துக்குள்ளே பாயும்போது கப்பல்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையும். துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியே பாயும்போது அதை அனுசரித்து கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும்.

வேலை ஏற்றமும் வேலை இறக்கமும் ஏற்படும் நேரங்கள் எல்லா இடங்களிலும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதை முன்கூட்டிக் கணித்து அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்படுகின்றன. துறைமுக நிர்வாகிகளுக்கும் கப்பல் கேப்டன்களுக்கும் இந்தக் கையேடுகள் மிக உதவியாக உள்ளன.கடல் மட்ட மாறுபாடு பற்றிக் குறிப்பிட்டோம். உலகின் கடல்களில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் கடல் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் தாழ்வாகவும் இருக்கத்தான் செய்கிறது. தென் அமெரிக்கக் கண்டமும் வடஅமெரிக்கக் கண்டமும் சேரும் இடத்தில் பனாமா என்ற நாடு உள்ளது. இங்கு மேற்குப் புறத்தில் பசிபிக் கடல் உள்ளது. கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது. இந்த இடத்தில் பசிபிக் கடல் பகுதியின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தைவிட 20 செண்டிமீட்டர் உயரமாக உள்ளது. இதற்கு பசிபிக் பகுதியில் உள்ள நீரோட்டமே காரணம்.உலகில் உள்ள பெருங்கடல்கள் பற்றி ஆரம்பத்தில் கவனித்தோம். இவற்றில் பசிபிக் கடல்தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்தையும் இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.இந்தக் கடல்களின் பரப்பளவு மாறாமல் என்றுமே இந்த அளவில் நீடிக்குமா என்று கேட்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. அட்லாண்டிக் கடலின் பரப்பளவு ஆண்டு தோறும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலின் பரப்பளவு மெல்லக் குறைந்து வருகிறது.

என்.ராமதுரை


No comments:

Post a Comment