'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே!
மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்படுத்தியவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!
ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!
அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர். அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.
இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?
இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்பேன்...'' என்றார்.
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.
நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!
விகடன்
Good, We are all with Anna Azhare!
ReplyDelete