Search This Blog

Wednesday, April 20, 2011

முடித்துக் காட்டுவாரா அன்னா ஹசாரே!!

200 கோடி = 1 மதுகோடா

 25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி


4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...



இந்த ஊழல்களை எல்லாம் எதிர்க்க வேண்டுமா? அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தாருங்கள்!'' என்கிறது ஒரு குறுஞ்செய்தி!

இந்த 60 வருடங்களில் ஊழலுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட முடியாமல் இருந்த நிலையில்,ஹசாரேவால் மட்டும் எப்படி சாத்தியமானது? காந்தியச் சிந்தனையான அகிம்சை வழிக் குழு முயற்சிதான் இதற்குக் காரணம்!


 'அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்கும் சட்ட மசோதாவில்சமூக ஆர்வலர்களையும் இணைத்துக்​கொள்ள வேண்டும்’ என்று ஹசா​ரே, பட்டினிப் போராட்டம் தொடங்க... நாடு முழுவதும் அடக்கி​வைத்திருந்த எழுச்சி, காட்டுத் தீ போலப்பரவியது. உண்ணா​விரதங்​கள், மனித சங்கிலிகள், ஆதரவுப் பேரணிகள், மெழுகுவத்தி ஏற்றல்கள் என மக்களின் உணர்​வுகள் கொந்தளித்துக் கிளம்ப... சுதாரித்த அரசு, ஹசாரேவின் கோரிக்கைகளை ஏற்றது! 'இந்த வெற்றி​தான் உண்மையான உலகக் கோப்பை!’ என்று பெருமிதம் கொள்கிறார் கிரண் பேடி.

எகிப்து, லிபியா போன்ற இடங்​களில் மக்களின் எழுச்சியை வரலாற்றில் பொறிக்கவேண்டும் என்று சொல்கிற அதே சில ஊட​கங்​கள், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஒரு காந்தியவாதியின் தலைமையின் கீழ் ஒன்றுதிரண்ட மக்கள் ஆதரவை, 'நாடகத்தன்மை வாய்ந்தவை’ என்று பரிகசிக்கின்றன! 

''ஹசாரேவை ஏதோ காந்திக்கு நிகராகவும், அவருக்குத் துணை நிற்கும் சுவாமி அக்னிவேஷை விவேகானந்தர்போலவும் நினைத்து, இவர்கள் நடத்தும் போராட்டம், கல்லூரி நாடகம் போலத்தான் இருக்கிறது!'' என்று கமென்ட் அடித்திருக்கிறார், 'ஓப்பன்’ ஆங்கில இதழ் ஆசிரியர் மனு ஜோசப்!



இப்படி ஹசாரேவை ஒதுக்கித்தள்ளக் காரணம், அவர் முன்பு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக இருந்ததுதான்!

ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று, ஊழலை விசாரிப்பதற்கான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில், ஹசாரே உட்பட இன்னும் நான்கு பேரை நியமித்தது அரசு. அதில் அரசியலமைப்புச் சட்ட வல்லுநரான சாந்தி பூஷண் மற்றும் அவரது மகனும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ''உறவினர்களுக்கு சலுகைதான் ஊழலின் முதல் படி! ஆகவே, இந்த சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில், சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இருக்கவேண்டும். அதுதான் சட்ட மசோதாவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்!'' என்று ஹசாரேவிடம் கோரிக்கை வைத்தார் பாபா ராம்தேவ்! 


ஆனால், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த பாபா ராம்தேவின் யோகா பயிற்சி முகாமில், அரசுக்குத் தெரியாமல் மின் கம்பங்களில் மின்சாரம் திருடியோகா பயிற்சி வாரக்கணக்கில் நடத்தப்பட்டது. விடுவாரா ஹசாரே? அவருக்கும் தக்க பதிலடி கொடுத்து, அவரது கருத்தை மறுத்தார்.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹசாரே, 'நரேந்திர மோடி ரொம்ப நல்லவர்’ என்று சொல்ல, கொஞ்சம் திகிலடைந்தனர் ஹசாரேவின் ஆதரவாளர்கள். 'மோடி செய்யும் கிராமத்துக்கான முன்னேற்றத் திட்டங்கள் பாராட்டத்தக்கன’ என்று ஹசாரே சொன்னார். இதனால், அவரின் ஆதரவாளர்கள் சிலர் கழன்று​கொள்வதற்கான அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது! 

ஹசாரேவின் இந்தக் கூற்றுக்கு நன்றி சொல்லிக் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார், நரேந்திர மோடி. ஹசாரேவின் ஆதர​வாளர்களோ, 'குஜராத் கலவரங்களை எல்லாம் மறந்துவிட்டு, வெறுமனே கிராம முன்னேற்றத்தை மட்டுமே புகழ்​வது நியாயம் அல்ல. இப்படி நியாயப்​படுத்தினால், ஹசாரேவுக்கு எதிராக அவதூறு கூறுகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விடும்’ என்று கவலைப்படுகிறார்கள். ''நான் கிராம முன்னேற்றத்தை மட்டும்தானே பாராட்டினேன்? மற்றபடி சாதி, இனம், மதம் ஆகியவற்றின் பெயரால் எந்த ஒரு பிரிவினையை யார் ஏற்படுத்தினாலும், அதற்கு நான் எதிரானவன்தான்!'' என்று பதில் சொன்னார் ஹசாரே. ஆனாலும், ''ஹசாரே சொன்ன வார்த்தைகளை திரும்பப் பெறாத வரை, அவரிடம் இருந்து நாங்கள் தள்ளியே இருப்போம்...'' என்று மல்லிகா சாராபாய் போன்ற ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 பல்வேறு பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் வந்தபடி இருக்க... ஹசாரே உட்பட அந்த லோக்பால் மசோதா வடிவமைப்புக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நால்வரும், தங்களின் சொத்துக் கணக்கை மீடியாக்கள் முன் தாக்கல் செய்திருக்கிறார்கள். 'அரசியல்வாதிகளைப்போல நீங்களும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வீர்களா?’ என்ற மீடியாக்களின் கேள்விக்கு செயலாலே பதில் தந்திருக்கிறார் ஹசாரே!

ஆனால், இந்தப் பாராட்டுக்கு விபரீதம் வரும் விதமாக, இந்தக் குழுவின் இணைத் தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக 'சி.டி.’ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாந்தி பூஷண், இந்தக் குழுவுக்கு ஒரு நீதிபதியை நியமிக்க முலாயம் சிங்கிடம் 4 கோடி கேட்டதாகவும், நீதிபதியை நியமிக்கும் பொறுப்பில் தன் மகன் பிரசாந்த் பூஷண் ஈடுபடுவார் என்றும் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், சாந்தி பூஷண் இதை மறுத்துள்ளார். 

''இந்த லோக்பால் மசோதாவின் அடிப்படை வரைமுறைகள், நாங்கள் சொல்வதாக இருக்க வேண்டும்...'' என்று ஹசாரே கேட்டு வருகிறார். ஜூன் 30-க்குள் இந்த மசோதா தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம்!


இந்த விவகாரத்தில் தமிழகம் ரொம்பவே பின்தங்கி இருக்கிறது. ஊழலுக்கு எதிராக 18 மாநிலங்களில் 'லோகாயுக்தா’க்கள் இருக்கின்றன. ஆனால், அப்படி ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை!


3 comments:

  1. அன்னா ஹசாரே வாழ்க.. அவர் முயற்சி வெல்க.. ஜெய் ஹிந்.....

    ....ஆனால்..... ....ஆனால்.....

    அன்னா ஹசாரே RTI சட்டம் கொண்டு வந்தார் ... அந்த RTIவந்த பின்னால் நம்ம ஆ.ராஜாவும் ஆகா மந்திரியும் அவரோட புள்ளிங்களும் 167000 கோடி பண்ணல்லியா என்னா ?

    அதே போலத்தான் சார்.....

    மேலும் ...
    http://vaanipam.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  2. \\200 கோடி = 1 மதுகோடா

    25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி


    4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...\\

    \\200 கோடி = 1 மதுகோடா
    25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி
    4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...\\

    சுரேஷ் கல்மாடி= 25 மதுகோடா= 25 x 200 கோடி=5000 கோடி

    ஆ.ராசா = 4 சுரேஷ் கல்மாடி = 4 x 5000 கோடி =20000 கோடி

    அண்ணா சரியான விடை ஆ.ராசா =1,76,000 கோடி. உங்கள் கணக்குப் படி வெறும் இருபதாயிரம் கொடிதானே வருது? விடை தப்பா வருதே ராசா. எங்கே விட்டுப் போச்சு??

    ReplyDelete
  3. அன்னா ஹசாரேவுக்கு சோனியாவும் ஆதரவு தெரிவிசசிருக்காங்க, தில்லியிலும் உண்ணா விரதமிருக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மீடியாக்களால் மிகவும் பிரபலப் படுத்தப் பட்டிருக்கிறார். இதெல்லாம் ஆளும் கட்சியின் தயவில்லாமல் நடக்காது என்கிறார்கள். மேலும் இவர் விடுத்த கோரிக்கையை மன்மோகன் உடனே ஒப்புக் கொண்டுமிருக்கிறார். ஆக, ஊழலுக்கு எதிராக நிஜத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றாலும், அவ்வாறு எடுப்பதாக ஒரு போய்த் தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயல்வதாகவும், அதற்க்கு அண்ணா ஹசாரே வைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். யார் கண்டது நிஜமாகவும் இருக்கலாம்!!

    ReplyDelete