Search This Blog

Friday, May 06, 2011

இரண்டு கடிதங்கள் ! கலைஞர் & ஜெயலலிதா - ஓ பக்கங்கள், ஞாநி


அன்புள்ள முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு...

 வணக்கம்.

மீண்டும் நீங்கள் முதலமைச்சராவீர்களா, மாட்டீர்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து போய்விடும். முதலமைச்சராகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளையே இப்போது உங்கள் முன் வைக்கிறேன்.

தி.மு.க அணி பெரும்பான்மை பெற்றாலும், நான் முதலமைச்சராக விரும்பவில்லை என்று தயவு செய்து அறிவியுங்கள். மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வரலாறு படையுங்கள். பத்தாண்டுகளுக்கு முன்பே நீங்கள் செய்திருக்க வேண்டியதை செய்யத் தவறியதற்கு இப்போதேனும் தீர்வு செய்யுங்கள். அழகிரியை மாநிலத்தில் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக் கொண்டு ஒரு அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள். அதற்கு உடன்படாவிட்டால், அரசியலை விட்டு விலகியிருக்கச் சொல்லுங்கள். கனிமொழியை, தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கும் வரையேனும் அரசியலிலிருந்து விலகியிருக்கச் செய்யுங்கள்.  


ஸ்டாலின் அமைக்கக்கூடிய புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வட்டாரத் தலைவர்களின் குடும்ப வாரிசுகளை அமைச்சர்களாக்காமல், அப்படிப்பட்ட பின்னணி இல்லாமல் அரசியலுக்கு வந்திருக்கும் புதியவர்களை அமைச்சர்களாக்கச் சொல்லுங்கள். நீங்கள் கட்சித் தலைவராக இருந்து வழிகாட்டுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கண் முன்னாலேயே உருவாகி வளர்ந்து வலிவடைந்த திராவிட இயக்கம், குறிப்பாக தி.மு.க, அடுத்த சில ஆண்டுகளில் உங்கள் கண் முன்னாலேயே சிதைந்து சிதறி வீணாகப் போவதையும் பார்க்கும் அவல நிலை ஏற்பட வேண்டாம். 

தி.மு.க பிரம்மாண்டமான லட்சியக் கனவுகளுடன் அன்றைய இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தால், மணற் கொள்ளையில் தம் குடும்பத்துக்குப் பங்கு கிடைக்குமென்ற நப்பாசையில் அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல. அந்தக் கனவுகள் உருவாகி, துளிர்த்த காலத்தில் உடனிருந்து நேரில் பார்த்த சாட்சி நீங்கள்.  உங்கள் கண் முன்பாகவே தி.மு.க சிதைந்து அழிவதைத் தடுக்க மெய்யாகவே நீங்கள் விரும்பினால், இதுதான் கடைசி வாய்ப்பு. முடியுமானால், ஸ்டாலினைத் தவிர உங்கள் குடும்பத்தினர் அத்தனை பேரையும் கட்சியிலிருந்து விலக்கி வையுங்கள். அதனால் ஒன்றும் வானம் இடிந்து கீழே விழுந்துவிடாது. எந்த அரசியலறிவும், கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் உருவாகி வந்திருக்கும் புதிய தலைமுறை தமிழ் இளைஞர்களிடம் துடிப்பும் ஆற்றலும் இருக்கின்றன. அவர்களை மீண்டும் திரட்டினால் தி.மு.க எந்த லட்சியத்துக்காக, அண்ணாவால் தொடங்கப்பட்டதோ அதை மீட்டெடுக்க முடியும். அதை திசை மாற்றிய குற்றத்துக்கு நீங்களே பரிகாரம் செய்யும் கடைசி வாய்ப்பு இது.


ஒருவேளை தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறாவிட்டால், அப்போதும் உங்களுக்குப் பெரும் கடமை காத்திருக்கிறது. இந்தத் தோல்வியால் தி.மு.க அழியாமலிருக்க, ஏன் தோற்றோம் என்பதற்கான மெய்யான காரணங்களை நீங்கள் யோசிக்க வேண்டும். நிச்சயம் உங்கள் தோல்வி ஜெயலலிதா மீதான மக்களின் நம்பிக்கையால் வருவதல்ல; உங்கள் மீதான அவநம்பிக்கையாலேயே ஏற்படுவது. இலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை நீங்கள் உணர்வதற்கான தோல்வியாக அது இருக்கும். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், உங்கள் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை உணர்த்தும் தோல்வி அது.


மறுபடியும் மக்கள் நம்பிக்கையை தி.மு.க பெற வேண்டுமானால், குடும்ப அரசியலைக் கைவிடுங்கள். குடும்பம்தான் உங்கள் பலம், பலவீனம் இரண்டும். பகுத்தறிவு, சமத்துவம் என்ற இரு பெரும் பெரியார் கொள்கைகளையும் எளிமை, நேர்மை என்ற இரு பெரியார் வாழ்க்கை நெறிகளையும் புதிய தலைமுறையிடம் கொண்டு செல்லும் பிரசாரகனாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்நாளில் உங்கள் கண் எதிரிலேயே கழகமும் அத்துடன் சேர்த்து உங்கள் குடும்ப நலன்களும் சிதைவதற்கு சாட்சியாக மாறிவிடுவீர்கள்.

ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் திருந்துவதற்கான கடைசி வாய்ப்பு இது என்பதை உணருங்கள். இல்லையேல் காலம் உங்களை சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போய்விடும். நெஞ்சுக்கு நீதியை தரிசிக்கும் வாய்ப்பு உங்கள் முன்பு காத்துக் கொண்டிருக்கிறது.
அன்புடன் 


ஞாநி
அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,


வணக்கம்.

உங்கள் பெயருக்கு முன்னாலிருக்கும் ‘முன்னாள்’ என்ற அடைமொழி தொடருமா, மாறுமா என்பது இன்னும் சில தினங்களில் தீர்மானமாகி விடும். நீங்கள் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றால், அது நிச்சயம் உங்கள் மீதான நம்பிக்கையில் வந்த வாய்ப்பு அல்ல என்ற கசப்பான உண்மையை நினைவுபடுத்தக் கூடிய மிகச் சிலரில் நானும் ஒருவன்.

தேர்தல் சமயத்திலேயே மக்களுக்கு உங்கள் மீது பெரும் நம்பிக்கைகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. வைகோவை நேரில் சென்று நீங்கள் சந்தித்து சமாதானப் படுத்தியிருந்தால், உங்கள் போக்கில் மாற்றம் வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு நூலை அது வெளிவரும் முன்பே இடைக்காலத் தடையை நீதிமன்றத்தில் வாங்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் பிரபலமானவர்களின் வாழ்க்கை பற்றிய நூல்களைப் பலரும் எழுதுவது இயல்பானது. ஒரு சில நூல்களே பிரபலத்தின் அங்கீகாரம் பெற்ற சரிதைகளாக இருக்கும். மீதி நூல்களுக்கு யாரும் தடை கோருவது இல்லை. சில ஆயிரம் பேர்களே படிக்கப் போகும் ஒரு புத்தகத்தைக் கூட சகிக்க முடியாமல் தடை வாங்கும் உங்கள் செயல், உங்கள் மனநிலை மாறவே இல்லை என்பதையே நிரூபிக்கிறது.


இப்படி எந்த விதத்திலும் யதேச்சாதிகார மனப்போக்கிலிருந்து மாறாமலே இருக்கும் நீங்கள் இந்த முறை ஆட்சியைப் பிடித்தால், அது உங்களுக்கான மக்கள் ஆதரவு அல்ல; கருணாநிதிக்கும் அவரது குடும்பம் சார்ந்த தி.மு.க ஆட்சிக்கும் எதிராக எழுந்த மக்கள் எழுச்சி மட்டுமே அது. அந்த எதிர்ப்புக்கு வடிவம் தர வேறொரு பெரும் கட்சியும் பெரும் தலைவரும் இல்லாததாலேயே, உங்களுக்கு அது வாய்ப்பாக மாறுகிறது.அப்படியானால், கடந்த முறைகளில் நீங்கள் ஏன் வாய்ப்பை இழந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்ப்பது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.

கருணாநிதிக்கு குடும்பம் தான் பலம், பலவீனம்; உங்களுக்கென்று குடும்பம் இல்லாதிருப்பதுதான் உங்கள் பலம், பலவீனம் இரண்டுமே. குடும்பம் இல்லாததால், அதற்கென்று ஊழல் செய்யும் அவசியம் உங்களுக்கில்லை என்பது பலம். ஆனால் தனி வாழ்க்கையின் வெறுமையை அனுபவித்தாக வேண்டிய கட்டாயம் ஒரு வருத்தத்துக்குரிய நிலைமைதான்.அன்றாட வாழ்க்கையில் இந்த வெறுமையைப் போக்கவும், உங்கள் தனி வாழ்க்கையைச் சீராகச் செலுத்தவும் உதவிட ஒரு நல்ல நண்பராக, உங்கள் வார்த்தைகளில் உடன் பிறவா சகோதரியாக ஒரு சசிகலா அமைந்தது உங்களுக்கு நல்ல விஷயம்தான். ஆனால் அதே சசிகலாவாலும், சசிகலாவுக்கும் அவரது ரத்த உறவுகளுக்கும் நீங்கள் காட்டி வந்த சலுகைகளாலும்தான் நீங்கள் கடந்த முறைகளிலெல்லாம் மக்களின் ஆதரவைப் பறிகொடுத்தீர்கள்.


 எனவே இந்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், என் வேண்டுகோள் இதுதான். தயவுசெய்து சசிகலாவை துணை முதலமைச்சராக்குங்கள். உங்களுக்கு அரசியலில் துணைபுரியும் அவரது சொந்தங்களை அமைச்சர்களாக்குங்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களே நேரடியாக மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது நீங்கள் அவர்களுடைய முகமூடியாக, கேடயமாக இருக்கும் சிக்கலில் சிக்கியிருக்கிறீர்கள்.

ஒரு ஸ்டாலினையோ, ஒரு அழகிரியையோ, ஒரு கனிமொழியையோ நாங்களும், ஏன் நீங்களும் விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் ஒரே அடிப்படை அவர்கள் பகிரங்கமாக அரசியலில் ஆட்சியில் இயங்கியதால்தான். சசிகலா குடும்பத்தினரும் அதேபோல இயங்குவதுதான் சரியானது.  சிறப்பாக இயங்கினால் பாராட்டவும் தவறுகள் செய்தால் தட்டிக் கேட்கவும் எங்களுக்கு - மக்களுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் திரை மறைவு அதிகாரத்தை அவர்களுக்கு நீங்கள் தரலாகாது. அப்படித் தருவது உங்களுக்கும் ஆபத்தானது என்பதே கடந்த கால வரலாறு. பகிரங்கமாக வரச் சொல்லுங்கள். இல்லையேல் அரசியல் அதிகாரத்திலிருந்து விலக்கி வையுங்கள்.

எத்தனையோ கோளாறுகள் இருந்தபோதும் கருணாநிதியின் பலம் என்பது அவர் மீடியாவை சந்திக்கவும் பதிலளிக்கவும் (அது எத்தனை மழுப்பலானபோதும்) தவிர்த்ததே இல்லை. இதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் (மழுப்புவதை அல்ல.) வாரா வாரம் மீடியாவைச் சந்தியுங்கள். உங்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்கும் இரும்புத் திரையால் இழப்பு உங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்குத்தான்.  கருணாநிதிக்கு இல்லாத ஒரு பெரும் செல்வாக்கு கட்சிக்குள் எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் எப்போதும் இருந்து வருகிறது. நீங்கள் யாரையும் வேட்பாளராக்கலாம், அமைச்சராக்கலாம். இந்த விசித்திர செல்வாக்கைப் பயன்படுத்தி, தகுதியானவர்களை அந்தந்தப் பொறுப்புகளுக்கு நியமியுங்கள். பகிரங்கமான நிர்வாகம், பகிரங்கமான அரசியல், பகிரங்கமான வாழ்க்கை முறை இவைதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.

 முக்கியமாக ஒரு வேண்டுகோள். கருணாநிதி ஆட்சியில் செய்யப்பட்டவை என்பதற்காக நல்ல திட்டங்களையெல்லாம் முடக்காதீர்கள். அவற்றைத் தொடர்ந்து நடத்துங்கள். மேம்படுத்துங்கள். அதிகபட்சம் பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒருவேளை தி.மு.க.வே மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது முக்கியமானது. ரிப்வான் விங்கிள் போல அடுத்த ஐந்தாண்டுகள் தூங்கி எழுந்து தேர்தல் நேரத்தில் வந்தீர்களானால், கட்சியே காணாமல் போயிருக்கும். உண்மையில் 2011 தேர்தல் தி.மு.க.வுக்கு மட்டும் வாழ்வா சாவா தேர்தல் அல்ல. உங்கள் கட்சிக்கும்தான். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் எழுபதை எட்டிப் பிடிப்பீர்கள். இதர கட்சிகளிலெல்லாம் இளைய தலைமுறைத் தலைவர்கள் அதிகமாகியிருப்பார்கள். எம்.ஜி. ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தபோது நீங்கள் பதிலாகக் கிடைத்தீர்கள். உங்களுக்கு அடுத்து யார் என்றால் யாரும் இல்லை, சசிகலாதான் என்றால் அ.தி.மு.கவை வேகமாக அழிக்க அதைவிட சிறந்த வழி இல்லை.  


எம்.ஜி.ஆர்., அ.தி.மு.கவை உருவாக்கியபோது என்ன சூழல் இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அண்ணா உருவாக்கிய லட்சியத்திலிருந்து தி.மு.க விலகிய சமயத்தில் காமராஜர் அதை அம்பலப்படுத்தினார். எம்.ஜி.ஆர் எச்சரிக்கை மணி அடித்தார். மீண்டும் தடமேறும் இயக்கம் என்ற நம்பிக்கையே அன்றைய இளைஞர்கள் பலரை எம்.ஜி ஆரை நோக்கி ஈர்த்தது. தொடர்ந்து அ.தி.மு.க அவர் தலைமையிலும் உங்கள் தலைமையிலும் தி.மு.கவைப் போலவே இன்னொரு தடம் புரண்ட இயக்கமாகவே இருந்து வருகிறது.
தமிழ்நாட்டின் இதர அரசியல் தலைவர்கள் யாரும் விரும்பாமல் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் அல்ல.

நீங்கள் ஒருவர்தான் விருப்பமில்லாமல் இதற்குள் வர நேரிட்டவர். எனவே அரசியலில் எதிர்க் கட்சியாகவும் சரியாகப் பணியாற்ற விரும்பாவிட்டால் அந்த இடத்தை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்ய நீங்கள் போய்க் கொண்டே இருக்கலாம். 


வாழ்க்கை சிலருக்கு அவர்கள் விரும்புவதையே செய்ய, தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கருணாநிதி. வேறு சிலருக்கு அவர்கள் விரும்பாவிட்டாலும் ஒன்றில் ஈடுபட்டாகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்கிறது. அம்மாவின் கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்தீர்கள். எம்.ஜி.ஆரின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தீர்கள்.


இந்த முறை ஜெயித்தாலும் தோற்றாலும் ஒன்றை நீங்கள் நினைவில் வையுங்கள். இதுதான் உங்களுக்கும் கடைசி வாய்ப்பு. அரசியல் பெரிதாக மாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் விரும்புவதை வாழ்க்கையில் செய்யக் கிடைத்த வாய்ப்பாக இந்த முறையைப் பயன்படுத்துங்கள். 


அன்புடன்


ஞாநி


இந்த வாரப் பூச்செண்டு




தாதா சாகிப் பால்கே விருது பெற்ற இரண்டாவது தமிழர் இயக்குனர் கே.பாலசந்தருக்கு இ.வா.பூ. சினிமா என்பது இயக்குனரின் மீடியம்தான், நட்சத்திர நடிகர்களின் மீடியம் அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்த முன்னோடி கே.பி. என்பதே அவரது சாதனை.

2 comments:

  1. யோவ் ஞானி, அண்ணாவாம், லட்சியத்தோட கட்சி ஆரம்பிச்சாராம், அதைக் காப்பாத்தனுமாம். அந்த ஆள் வந்ததுக்கப்புறம் தான் தமிழ்நாடே உருப்படாமப் போச்சு. ஏன்டா இன்னும் அவனையே தூக்கிப் புடிச்சு கிட்டு இருக்கீங்க. அவன் தமிழ் நாட்டுக்காக என்னத்தை கிழிச்சான்ன்னு யாராச்சும் சொல்லுங்கடா? இந்தக் கருணாநிதி போன்ற களவாணிகளை கொண்டாந்துவிட்டுவிட்டு மூக்குப் பொடியை ஏத்திகிட்டு, கொஞ்சம் நடிகைகளுடன் கும்மாளம் போட்டுவிட்டு அவன் போட்டான், இங்கே இருந்து தினமும் சாவறது நாமதானேடா? திருந்தித் தொலைங்கடா.

    ReplyDelete
  2. இந்தக் கடிதத்தை படித்துவிட்டு தமிழ் நாட்டு மக்கள் அழாமல் இருந்தால் சரிதான் .

    ReplyDelete