போட்டிக்குப் பிள்ளை பெறக்கூடாது என்று நமது கிராமங்களில் பெரியவர்கள்
சொல்லுவார்கள். ஆனால் இந்தப் பழமொழி பிஸினஸுக்கு எடுபடாது. மைக்ரோசாஃப்ட்,
ஆப்பிளின் ஐபேடுக்குப் போட்டியாக சர்ஃபேஸ் என்ற டேப்ளட் கணினியை
அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரையின் அளவு 10.6 அங்குலம். சினிமா
பார்ப்பதற்கு வசதியாக இக்கணினியைக் குத்தவைத்து உட்கார வைக்க முடியும்.
எளிதாகப் பிரிக்கக்கூடிய அட்டையும், அதன் மேல் தட்டச்சுப் பலகையும் உள்ளது.
ஐபேடு போலவே மிக மெல்லிய தேகம் கொண்டது. விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டத்தில்
இயங்கக்கூடியது. இதை வெளியிட்டுப் பேசிய மைக்ரோசாஃப்டின் முதன்மைச் செயல்
அதிகாரி ஸ்டீவன் பால்மர், எங்கள் நிறுவனத்தின் நீண்ட நாளைய
கனவு இது. இந்த மாதிரி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கணினியை வெளியிட
வேண்டும் என்றிருந்தோம். அதன் செயல்வடிவம் இன்று ஏற்பட்டுள்ளது," என்று
கூறினார்.
ஆனால் அறிஞர்கள் கூறுகையில், மைக்ரோசாஃப்ட்டுக்கு இந்த மாதிரி புதிய
தொழில்நுட்பத்துடன் வெளியிட வேண்டும் என்பது மிக அவசியத் தேவையாகும்.
இல்லையெனில் ஆப்பிள் போன்ற எதிரிகளிடம் முழுவதும் அடிவாங்கியிருப்பார்கள்,"
என்கிறார்கள்.
ஐபேட் ஏற்கெனவே மடிக்கணினி, மேசை கணினிக்கெல்லாம் பெரிய சவாலாக இருந்து
வருகிறது. சர்ஃபேஸ் முதலில் 32 ஜீபி அல்லது 64 ஜீபி சேமிப்புத் திறனுடன்
வெளிவர இருக்கிறது. இதன் ஆரம்ப விலை 1000 அமெரிக்க டாலர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தட்டச்சுப் பலகை ஆப்பிளின் ஐபேடுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதேபோல் இந்தக் கணினியை விற்பதற்கு ஆப்பிளின் வியாபார யுக்தி வழியிலேயே
மைக்ரோசாஃப்ட்டும் களம் இறங்கியிருக்கிறது. இக்கணினி கண்ட கண்ட கடைகள்,
இணையதளங்களில் எல்லாம்
கிடைக்காதாம். மைக்ரோசாஃப்டின் பிரத்யேகக் கடைகளில் மட்டும்தான்
ஆரம்பத்தில் கிடைக்க இருக்கிறதாம். இதற்காக 20 ஸ்டோர்களை மைக்ரோசாஃப்ட்
நிறுவனம் புதிதாகத் திறக்க இருக்கிறது.
இதன் விலை, வேலை செய்யும் விதம், சூழல் அமைப்பு என எல்லாவற்றையும்
பார்த்துவிட்டுத்தான் கருத்துத் தெரிவிக்க முடியும். அதுவரை
பொறுத்திருப்போம்" என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நாமும் நமது விரல்களைக் குறுக்கிட்டுக் காத்திருக்கலாம்!
No comments:
Post a Comment