Search This Blog

Saturday, June 02, 2012

மெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் - ஞாநி

 
ஒரு சொல் சமயங்களில் ஒரு புதிய உலகத்தையே நமக்குத் திறந்துவிட்டு விடும் என்பதை இந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உணர்ந்தேன்.நூலகத்தில் நுழைந்ததுமே தரை தளத்தில் நாமே கொண்டு வரும் நூல்களைப் படிப்பதற்கான அறைக்குப் பக்கத்து அறையின் சுவரில் ‘மெப்புலக் கூவலர் அறை’ என்று போட்டிருந்தது.என் தமிழ் சிற்றறிவுக்கு அதன் பொருள் சுத்தமாக விளங்கவில்லை. எனவே அந்த அறைக்குள் நுழைந்து முதலில் கண்ணில் பட்டவரிடம் அதற்குப் பொருள் கேட்டேன். பொருள் சொன்ன அவர் கண்ணில் நான் படவில்லை. காரணம் அவர் கண் பார்வையற்றவர். மெய்ப்புலம் என்றால் ‘ஃபிஸிக்கலி’ என்றும் கூவலர் என்றால் ‘சேலஞ்ச்ட்’ என்றும் பொருளாம்.பொதுவாக ஒரு நூலகத்தில் எல்லா ‘ஃபிஸிக்கலி சேலஞ்ச்ட்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பெரிதாக நிறைய தனி வசதிகள் தேவைப்படாது. காது கேளாதோர், வாய் பேசாதோர், கை கால் முடமுற்றோர் எல்லாருமே பார்வையுடையவர்கள் என்பதால் நூல்களை எடுத்துப் படித்துவிட முடியும். ஆனால் பார்வை யற்றோருக்கு யாராவது படித்துக் காட்ட வேண்டும். அல்லது அது ஆடியோ புத்தக வடிவில் இருக்க வேண்டும். அல்லது தடவிப் படிக்கும் வடிவமான பிரெலியில் அச்சிட்ட நூலாக இருக்க வேண்டும்.பிரெலியில் நூல்களை அச்சிடுவது பெரிய தொழில்நுட்பம் அல்ல என்றாலும் அதில் வேறு சிக்கல் உள்ளது. சாதாரணமாக 100 பக்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தை பிரெலி முறையில் அச்சிட்டால் ஆயிரம் பக்கமாகி விடும். தனி நபர்கள் விலை கொடுத்து வீட்டில் வாங்கி வைத்துப் பயன்படுத்தவும் முடியாது. கல்லூரி, பல்கலைக் கழக நூலகங்கள் மட்டுமே அந்த நூல்களை வாங்கி வைத்தால்தான் உண்டு. இந்த நூல்களில் பெரும்பாலானவை பாட நூல்கள். அறிவியல் நூல்களில் வரை படங்களைக் கூட பிரெலியில் தந்திருக்கிறார்கள்.
 
 
தமிழ்நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் பிரெலி நூல்களைத் தயாரித்து இப்படி நூலகங்களுக்கு அளிக்கின்றன. சென்னையில் ஒர்த் டிரஸ்ட், கிறிஸ்டியன் பவுண்டேஷன் ஃபார் ப்ளைன்ட், இண்டியன் அசோசியேஷன் ஃபார் பிளைண்ட், சி.டி.எஸ் நிறுவன ஆதரவில் நடக்கும் தேர்ட் ஐ டிரஸ்ட், கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா எனப் பல அமைப்புகள் பிரெல் புத்தகங்களைத் தயாரித்து வழங்குகின்றன. நேரடியாக ஆடியோ புத்தகங்களாக வெளியிடப்படுபவை மிகவும் குறைவு.இந்தச் சூழ்நிலையில் எழுத்திலிருந்து ஒலிக்கு மாற்றம் (‘டெக்ஸ்ட் டு சவுண்ட்’) செய்யும் நவீன தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு விட்டது. ‘ஈ ஸ்பீக்’ எனப்படும் பேச்சுக் கலப்பான் (‘சிந்தஸைசர்’) 2006ல் ஜோனாதன் டட்டிங்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் ஆங்கிலம் தவிர, ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் சிந்தஸைசரில் அளித்தார்.இன்னொரு பக்கம் பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஜேம்ஸ் தே(ஹ்) உருவாக்கினார். ‘நான் விஷுவல் டெஸ்க்டாப் ஆக்செஸ் டெக்னாலஜி’ (என்.வி.டி.ஏ.) எனப்படும் இதை உருவாக்க ஒரு குழுவுடன் 4 வருடம் உழைத்த ஜேம்சின் வயது 27. பிறவியிலேயே பார்வையற்றவர். இந்த வருடம் ஆஸ்திரேலியாவின் சிறந்த மனிதர் விருதுக்கு ஜேம்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.இந்த மென்பொருளை கணினியில் பதியத் தேவையில்லை. ஒரு யூ.எஸ்.பி. போர்ட் மூலமே இணைத்துப் பயன்படுத்தலாம்.
 
 
டட்டிங்டனும் ஜேம்சும் அளித்திருக்கும் தொழில்நுட்பத்தை, பார்வையற்ற தமிழர்கள் பயன்படுத்தும் விதத்தில் செம்மைப்படுத்துவதில், தமிழகத்தில் கோவையில் பிறந்து வளர்ந்து படித்த ஒரு பார்வையற்றவர் தொடர்ந்து பங்காற்றி வருகிறார்.அவர் பெயர் டி.டி. தினகர். தற்போது 43 வயதாகும் தினகரின் வாழ்க்கையே பெரும் போராட்டம்தான். இந்தியாவிலேயே முதன்முறையாக 2002ல் ஐ.ஏ.எஸ். தேறிய பார்வையற்றவர் தினகர். ஆனால் அவருக்கு ஐ.ஏ.எஸ் பதவி எதுவும் தரப்படவில்லை. அவருக்கு அடுத்த நிலையில் தேறியவர்களுக்கெல்லாம் தரப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துப் போராடினார் தினகர். வழக்கின் இறுதியில் 2007ல் பார்வையற்றவர்களுக்கான ஐ.ஏ.எஸ். பதவிகள் எவை என்று இன்னமும் வரையறுக்கப்படவில்லை என்று அரசு தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ரயில்வே துறையில் மனிதவளப் பிரிவில் அதிகாரி வேலை தரப்பட்டது.தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் தினகர் எழுத்தை ஒலியாக்கும் தொழில்நுட்பத்தில், ஒலியின் தன்மையை மேம்படுத்த தொடர்ந்து உதவி வருகிறார். முன்னர் 20 என்று அச்சிட்டிருந்தால் அதை சிந்தஸைசர் ‘இரண்டு பூஜ்யம்’ என்று படிக்கும். அதை ‘இருபது’ என்று உச்சரிக்க வேண்டும்; ப எழுத்துக்கு முன்னால் ஃ இருந்தால் அதை ஆங்கில ஊ ஒலியில் உச்சரிக்க வேண்டும் என்பது போன்ற நுட்பமான முக்கியமான பல திருத்தங்களை தினகர் கொண்டு வந்தார். 
 
இதன் விளைவாக இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருக்கும் மெய்ப்புலக் கூவலர் அறை என்று பலகையிலும் பிரெயில் செக்ஷன் என்று பேச்சிலும் கூறப்படும் பகுதியில், மகிழ்ச்சி ததும்பும் பல பார்வையற்றோர் முகங்களை என்னால் பார்க்க முடிந்தது.அவர்கள் எல்லாரும் கணினிகள் முன்பு அமர்ந்து தாம் விரும்பும் தமிழ் நூல்களை திரைவாசிப்பான் எனப்படும் ஸ்க்ரீன் ரீடர் உதவியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் பெரும்பாலான பார்வையற்ற மாணவர்கள் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிப்பது தமிழ் இலக்கியப் பாடம்தான். (ஏன் இதர பாடங்களில் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தனியே ஆய்வுக்குரியது.)அண்ணா நூலகத்தில் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் இப்போது ஒலி வடிவில் அவர்களுக்குக் கிடைக்கின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் நான் எழுதும் ‘ஓ’ பக்கம் வரை அவர்கள் ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளமுடியும்.அதற்குக் காரணம் இவையெல்லாம் யூனிகோட் எழுத்துரு வடிவில் இருப்பது தான். அந்த வடிவில் இருந்தால்தான், என்.வி.டி.ஏ தொழில் நுட்பத்தால் அதை ஒலியாக மாற்றிக் கொள்ள முடியும்.சில பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை யூனிகோட் வடிவில் கொடுத்து உதவி வருகிறார்கள். இன்று பார்வையற்றோருக்கு மிக முக்கியமான தேவை அரசு தன் எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளையும் இணையதளங்களையும் தமிழில் யூனிகோட் வடிவில் வெளியிட வேண்டும் என்பதாகும். அப்படி அரசு செய்துவிட்டால், மற்றவர் படித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், கணினியில் ஒலி வடிவில் அவற்றைக் கேட்டுவிடமுடியும்.
 
இந்த என்.வி.டி.ஏ தொழில்நுட்பமும் கணினிகளும் அண்ணா நூலகத்தில் மட்டும்தான் இருக்கமுடியும் என்பதில்லை. தமிழகத்தின் எல்லா பெரிய நூலகங்களிலும் அரசு கொஞ்சம் பணம் ஒதுக்கினாலே வைத்துவிடலாம்.இப்போதே ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அனைத்துத் துறைகளிலும் இவை இருக்க முடியும். ஏனென்றால் யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மான்யக் குழு வருடந்தோறும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகளைச் செய்வதற்கென்றே கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சிறப்பு நிதியை ஹெப்ஃபென் என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்குகிறது. ஆனால் தமிழகக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதை சரியாகவோ முழுமையாகவோ பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. பார்வையற்றவர்கள் இன்னொருவரை சார்ந்திருக்காமல் விடுதலை செய்யும் கணினி தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து அந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பத்திரிகைகள் தங்கள் இணைய தளங்களை முற்றிலும் யூனிகோட் முறைக்கு மாற்றியமைத்தால், பார்வையற்றவர் எளிதாக அவற்றை ஒலிமாற்றம் செய்து படிக்க இயலும். அரசோ தனியார் அமைப்புகளோ தமிழில் யூனிகோட் முறைக்கு முற்றாக மாறுவது என்பது கடினமான வேலையே அல்ல.இவற்றுக்குப் பொறுப்பான அரசு அதிகாரிகளும் ஊடக அலுவலர்களும் ஒரு முறை அண்ணா நூலகத்தின் மெய்ப்புலக் கூவலர் அறைக்குச் சென்று பார்த்தால், அங்கே இருக்கும் இளம் பார்வையற்ற மாணவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கண்டால், அதே மகிழ்ச்சியை அதே உற்சாகத்தை தமிழகம் எங்கும் இருக்கும், எல்லா பார்வையற்ற மாணவர் முகங்களிலும் ஏற்படுத்த தேவைப்படுவதெல்லாம், தங்களின் ஒரு கையெழுத்துதான் என்பதை உணர்வார்கள்.
 
ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியனாகிப் பெரும் சாதனை படைத்திருக்கும் ஆனந்துக்குத்தான் இ.வா.பூ. விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா தரலாமென்று முடிவெடுத்தால் நிச்சயம் ஆனந்துக்குத் தரலாம். எனக்கு இரண்டு சந்தேகங்கள்: இந்தியாவின் அடுத்த ஆனந்த்கள் யார்? அவர்களை உருவாக்க ஏதாவது உருப்படியாக நடக்கிறதா? அப்புறம் ஏன் இந்த செஸ் ஆட்டக்காரர்கள் கேமில் ஜெயித்ததும், சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கத்தி கொண்டு அறையைச் சுற்றி ஓடுவதே இல்லை?!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணிக்கும் வங்காளிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேப்டன் முதல் ஓனர் வரை வங்காளி இல்லை. அது மாநில கிரிக்கெட் அணியும் இல்லை. தனியார் வர்த்தக அணி. இதில் மம்தாவுக்கு எப்படி வங்காளப் பெருமை கிட்டமுடியும்? அணியின் பெயரில் கொல்கத்தா என்றிருந்தால் போதுமா? நான் கூட கொல்கத்தா டுபாக்கூர் என்று ஒரு படைப்பை எழுதியிருக்கிறேன். அதற்கு லொள்ளு என்ற சிற்றிதழ் பரிசு கொடுத்திருக்கிறது. மம்தா எனக்கும் ஒரு பத்து பவுன் சங்கிலி போடுவாரா?சென்னையில் மட்டும் ஐந்தே மாதங்களில் கணவர்கள் மது குடித்துவிட்டு மனைவியரை அடிக்கும் வழக்குகள் 675 பதிவாகியிருக்கின்றன. புகார் வரை வராதவை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்கின்றனர் சமூகப் பணியாளர்கள்.

No comments:

Post a Comment