Search This Blog

Wednesday, June 13, 2012

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்....

ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் 1854 முதல் தனியார் மருத்துவமனைகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதோடு மருந்துப் பொருட்கள் விற்பனையும் முறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் மருந்து விற்பனை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் காலனிய அரசு மேற்கொண்ட ஆரம்ப சுகாதார முயற்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்த எம்.யூ. முஸ்டாக், ''காலரா நோய் எப்படி உருவானது என்பதை ஆராய கர்னல் ஏசி சில்வர் தலைமையில் 1868-ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி, கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் மக்கள் திரளாகக் கூடுகிறார்கள். அங்கு அடிப்படை சுகாதார வசதி செய்வது இல்லை. திருவிழாக்களில் கலந்துகொள்ளும் மக்கள், பயணிகள், யாத்ரீகர்கள் வழியாகத்தான் காலரா பரவுகிறது. ஆகவே, பிரிட்டிஷ் அரசு திருவிழாக்களை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்றது அந்தக் கமிட்டி'' என்று, தனது கட்டுரையில் கூறி இருக்கிறார். 1880-களில் இந்தியா முழுவதும் இருந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 1,200. 40 லட்சம் பேருக்கும் மேலாக காலரா நோய் தாக்கியிருந்த சூழலில், 1,200 மருத்துவமனைகள் என்ன சேவை ஆற்றி இருக்கும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். 1902-ல் இந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்தது. அது வரையான 20 ஆண்டுகளில் காலரா நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிர் இழந்தனர்.


காலரா பாதிக்கப்பட்ட இடங்களில் சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவம் தெரிந்த உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படவில்லை. 1818-ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜ வைத்தியராக இருந்த ஹே, ஆங்கில மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்தாலும் காலராவைக் குணப்படுத்த முடியாது என்று சவால்விட்டார். அவர் கண் முன்னே, ஆயுர்வேத சிகிச்சை வழியாக பலர் காலராவில் இருந்த குணம் அடைந்தனர். ஆனாலும், அந்த சிகிச்சையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.வங்காளத்தில் மகேந்திர லால் சர்க்கார் என்ற ஹோமி​யோபதி மருத்துவர், ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல காலரா நோயாளிகளை தனது சிகிச்சை மூலம் பிழைக்கவைத்தார். அத்துடன், இந்தச் சிகிச்சை முறையை நாடெங்கும் அரசே அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பிரிட்டிஷ் அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அவரை அரசின் மருத்துவக் குழுவில் இருந்தும் நீக்கியது. நோய்த் தாக்குதல், தங்களது வணிகத்தைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, காலரா மற்றும் அம்மை நோய்களுக்கான தடுப்பு ஊசிகளை ஊர் ஊராகச் சென்று போடும் அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்காக தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தப் பணிக்கு 0.7 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டது. காலரா வந்த காலத்தில் மக்கள் ஊர்விட்டு ஊர் மாறி பிழைக்கப் போனார்கள். வழியில் நோய் தாக்கி இறந்தவர்கள் பலர். இவர்களைப்பற்றிய நினைவுகள் நாட்டுப்புறப் பாடல்களில் பதிவாகி உள்ளது. புலவர் இராசு தொகுத்துள்ள பஞ்சக் கும்மிகளில் ஒரு பாடல் காலராவைப்பற்றி குறிப்பிடுகிறது.

''கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால்
புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன
புடிச்சுமே காலரா போகும், எட்டுப் பேரில்
மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள்
சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன
சொகுசான மகராச மக்களுகளெல்லாம்
மழுங்களாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே
மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே
புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன
புண்ணிய மகராச மக்களுகளெல்லாம்
மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம்''

என்று, போதுமான உணவில்லாமல் கிடைத்ததைத் தின்று காலரா தாக்கி இறந்து போனவர்களை இந்தப் பாடல் பதிவு செய்துள்ளது. இந்தியா முழுவதுமே காலரா நோய்ப் பாதிப்பால் ஏராளமான மக்கள் ஊர்விட்டு ஊர் போய் இருக்கிறார்கள்.

சத்யஜித் ரே 1973-ல் எடுத்த 'அஷானி சங்கேத்’ என்ற திரைப்படத்தின் மையக்கரு, வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சமும் காலராவும் பற்றியதுதான். பிரபல வங்காள நாவலாசிரியர் விபூதிபூஷன் பானர்ஜியால் எழுதப்பட்ட நாவலை மையமாகக்கொண்டு, சத்யஜித்ரே இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். படத்தில், ஒரு கிராமத்தில் காலரா பரவுவதைத் தடுக்கும்படி பூஜை செய்ய கங்காசரண் என்ற புரோகிதரைக் கோயிலுக்கு அழைத்துப்போகிறார்கள். அவர், தனக்குப் போதுமான தானியமும் மனைவிக்குப் பட்டுப் புடைவையும் சன்மானமாகக் கேட்கிறார். பூஜை செய்து காலராவை விரட்டிவிட முடியாது என்று அவன் மனைவி வெளிப்படையாகச் சொல்கிறாள். ஆனால், அது மதநம்பிக்கை என்று மறுக்கிறான் கணவன். இப்படி, காலரா வராமல் தடுக்க கோயில்களுக்குப் பலிகொடுப்பது பிராயச்சித்தம் செய்வது போன்றவை இந்தியா முழுவதும் நடந்து இருக்கின்றன.காலனிய அரசின் செயற்கைப் பஞ்சம், காலராவை உருவாக்கியது என்றால் அவர்களின் காமப் பசி உண்டாக்கியது சிஃபிலிஸ் எனும் பரங்கிப் புண். இது முறைகேடான பாலுறவின் காரணமாக ஏற்படுவது. இதனால், ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பில் கொப்புளங்களும், சீழ் பிடித்த கட்டியும் தோன்றி மரண வேதனை ஏற்படுத்தும். சிஃபிலிஸ் போலவே கோனாரியா என்ற வெட்டை நோயும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த அத்தனை நாடுகளிலும், ராணுவ வீரர்களாலும் பிரிட்டிஷ் அதிகாரிகளாலும் பரவின.1823-ம் ஆண்டு முதல் 1860-ம் ஆண்டு வரை, இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ் ராணுவத்தினரில் 33 சதவீதம் பேர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதாவது, பெங்கால் ரெஜிமென்டில் மட்டும் 1,000 பேருக்கு 522 பேர் சிஃபிலிஸ் நோய் தாக்கப்பட்டு இருந்தனர். இது, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பிய ராணுவ வீரர்கள் வழியாக அங்கும் வேகமாகப் பரவியது.1830-களில் இங்கிலாந்தில் 3 லட்சத்து 68 ஆயிரம் வேசிகள் இருந்து இருக்கின்றனர். இதில் லண்டன் நகரில் மட்டும் 29,572 பெண்கள் பேர் பாலியல் தொழில் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 1864-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிச் சிறை போன்ற கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ராணுவ வீரர்கள் முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக் கூடாது. கப்பல் பயணத்துக்கு முன், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.இந்தச் சட்டம் அனைத்து பிரிட்டிஷ் காலனிய நாடுகளிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்தியா​வுக்கு ராணுவப் பணியாற்ற வந்த பிரிட்டிஷ் வீரர்களில் பெரும்பான்மையினர் நடுத்தரக் குடும்பத்​தை சேர்ந்தவர்கள். குடும்பத்தைப் பிரிந்து இந்தியாவில் இருந்த அவர்கள் இங்கு வேசிகளுடனும், வேலைக்​காரிகள், அடிநிலைப் பெண்களுடனும் தொடர்ந்து பாலுறவு அனுபவித்து வந்தனர்.

அதன் காரணமாக, அந்தப் பெண்களுக்கு சிஃபிலிஸ் நோய் ஏற்பட்டது. சில வேளைகளில் அவர்கள் வழியாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நோய்க்கூறுகள் இருந்தன. 1846-ல் ஒரு வயதுக்குள் உட்பட்ட குழந்தைகளில் பலர் சிஃபிலிஸ் நோயின் அறிகுறியால் இறந்துபோய் இருக்கிறார்கள். தேயிலைத்தோட்டங்களில் கூலியாக வேலை செய்த பெண்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீட்டு வேலைக்காரப் பெண்கள், சந்தைகளில் சிறு வணிகம் செய்யும் பெண்கள் எனப் பலரை பிரிட்டிஷ் அதிகாரிகளும் ராணுவ வீரர்களும், மிரட்டியும் மயக்கியும் வன்புணர்ச்சி செய்து, அவர்களுக்கு சிஃபிலிஸ் நோயைப் பரப்பி இருக்கிறார்கள்.தொற்றுநோய் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் நோய் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தனி மருத்துவ முகாம்​களில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ்காரர்களோடு தொடர்புள்ள வேசிகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் வேறு எந்த இந்தியருடனும் உடலுறவு கொள்ளக் கூடாது என்று மிரட்டப்பட்டனர். அவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது. அதுதான், சிவப்பு விளக்குப் பகுதி எனப்படும் லால் பஜார்.தான் விரும்பும் எந்தப் பெண்ணையும் எளிதாக அடைந்து​கொள்ள இந்தச் சட்டம் பிரிட்டிஷ்​காரர்​களுக்கு வழி காட்டியது. அது என்னவென்றால், பொது மகளிர் என்று யாரையும் குற்றம் சாட்டி அவர்​களை மருத்துவ முகாமுக்குக் கொண்டுபோய் விடலாம். புகார் கொடுத்தது யார் என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இதைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் அதிகாரிகள், குடும்பப் பெண்கள் பலரை வன்புணர்ச்சி செய்து இருக்கின்றனர்.தொற்றுநோய் தடுப்புச் சட்டம் இங்கிலாந்தில் உருவாக்கிய விளைவுகளைவிட, இந்தியப் பெண்களை அதிலும் குறிப்பாக நடனம், இசை என்று வாழ்ந்த பெண்களை ஒடுக்கியதே அதிகம். இவர்களை, நோயை உண்டாக்கும் கிருமிகள் என்று வகைப்படுத்தி கட்டாய மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு.பிரிட்டிஷ் ராணுவத்தினர் இடையே சிஃபி​லிஸ் நோய்த் தாக்கம் பற்றி ஆராய்ந்துள்ள மார்க்ரெட், ''பிரிட்டிஷ் ராணுவத்தின் முக்கியப் பிரச்னை உணவும் உடலுறவுமே. உணவு அபரிமிதமாகக் கிடைத்தது. ஆனால், பெண்கள்...? அதை ராணுவ வீரர்கள் தாங்களேதான் தேடிக்​கொள்ள வேண்டும். இந்தியப் பெண்களைத் திரு​மணம் செய்துகொள்வதை விட, ஆசை நாயகியாக வைத்துக்கொள்வது அல்லது பணம் கொடுத்துவிட்டு பாலியல் இன்பம் அனுபவிப்பதையே ராணுவத்தினர் விரும்பினர்.

ராணுவ முகாம்கள் இருந்த எல்லா ஊர்களிலும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. மிதமிஞ்சிய காமம், முறைகேடான உடலுறவு இரண்டுமே இந்த நோய் உருவாக முக்கியக் காரணமாக இருந்தது. சிஃபிலிஸ் பயங்கரத்தால், இந்தியாவில் உள்ள வேசிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார்கள். பதிவு செய்யப்பட்ட முதல் நிலைப் பெண்கள் வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே உரியவர்கள். இரண்டாம் நிலை வேசிகள், கீழ்நிலைப் பிரிவினர். இவர்களுடன் ராணுவ வீரர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. முதல் நிலைப் பெண்கள் இந்தியர்களுடன் உடலுறவு கொண்டால், இரண்டு ரூபாய் அபராதமும் கசையடியும் தண்டனை. ராணுவக் குடியிருப்புத் தோட்டத்துப் புல்லை வெட்டுவதற்குக்கூட முதல் நிலைப் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.உலகையே குலுக்கிய இந்த இரண்டு நோய்களும் இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டன. ஆனால், இந்தியா மீது உருவான பொய்க் குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது. இந்தியா ஒரு போதும் நோய்க்கிடங்காக இருந்து இல்லை. அதை நோய்க்கிடங்காக மாற்றியவர்கள் பிரிட்டிஷ், டச்சு, போர்த்துகீசியர், டேனிஷ் போன்ற வந்தேறிகள்தான். இயற்கையாகவே இந்தியாவில் இருந்த மருத்துவ முறைகள், உணவுப் பழக்க வழக்கம், சீதோஷ்ண நிலையைத் தாங்கும் உடல்நலம் யாவும் இந்த 200 ஆண்டுகளில் முற்றிலும் மாறிப்போய் இருக்கிறது. அதுதான் காலனிய ஆதிக்கத்தின் மீள முடியாத பாதிப்பு.காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்க் கிருமிகளை இந்தியாவில் விதைத்தவர்கள் அவர்கள்தான். நாம் அதன் விளைவுகளை எதிர்கொண்டு, உயிர்ப் பலியாகியும் இன்றும் அதே தவறுக்கு இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்!



No comments:

Post a Comment